“சாமி! இவங்க புருஷனுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை குடு சாமி!” என சத்தமாய் வேண்டியவனை கண் மூடி வேண்டிக் கொண்டிருந்த மல்லிகா நிமிர்ந்து முறைத்துப் பார்த்தார்.
“வேண்டாமா? இந்த புத்தியே போதுமா?” என அன்னையிடம் ஜெய் கேட்க, மீண்டும் கண்களை மூடி கைக்கூப்பி இறைவனிடம் வேண்டி நின்றார்.
“நல்லா வேண்டிக்கோங்க! ஆனா ரெண்டுல ஒன்னு தான்” என்று ஜெய் கூற,
“அபசகுனமா பேசி வைக்காத டா!” என முதுகில் போட்டார் மல்லிகா.
“சீக்கிரம் ம்மா! கிளினிக்கு லேட் ஆச்சுல்ல?” என்று ஜெய் கூற, பிரகாரத்தை சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.
அன்னையுடன் கோவிலுக்கு வந்திருந்தான் ஜெய்.
“ம்மா! ம்மா!” என்று அழைத்த ஜெய், “அங்கே பாருங்க! அந்த பொண்ணு தான் அன்னைக்கு நம்ம கிளினிக்ல வச்சே என்னை அறிவில்லனு சொன்னது” என்று கூற,
“அந்த பச்சை சாரியா?” என்றார்.
“ம்ம்! ஆமா!” அவனும் கூற,
“அழகா தான் இருக்கு” என்று மல்லிகா கூற,
“அந்தாளு கூட சேர்ந்து காதும் போயிடுச்சா உனக்கு? என்னைய திட்டுனான்னு சொல்றேன்.. அழகா இருக்கான்னு சொல்றிங்க” என்று கூற,
“நீ என்ன செஞ்சு வச்சியோ! உனக்காக எல்லாம் போய் சண்டை போட முடியாது.. என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சா அதான் சொன்னேன்” என்று விட,
“எனக்கு தேவை தான்.. உங்ககிட்ட சொன்னேன்ல” என்றவன்,
“பிரேமா சித்தி இருந்திருந்தால் நல்லா கேட்டு விட்ருப்பாங்க” என்றான்.
“வா டா போலாம்! அப்பா சாப்பிட வந்திருப்பாங்க” என்று கூறவும் சட்டமாய் அமர்ந்தான் ஜெய்.
“எனக்கு கூட பசிக்குது” என்று மல்லிகா கூற,
“சரியான ஏமாத்து வேலை ம்மா உங்களிது” என்றாலும் எழுந்திருந்தான்.
“என்னம்மா இன்னும் வரலையா அவங்க?” என்று வந்து ஜனனி அருகே அமர்ந்தாள் பிரியா.
“காணுமே டி! நீ ஏன் இவ்வளவு நேரம்? மாப்பிள்ளை எங்கே?” என்று மீனாட்சி கேட்க,
“என் மாமியார் கிளம்புற நேரம் பார்த்து ஏழரையை கூட்டிட்டாங்க.. இவரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டார்.. இழுத்துட்டு வர நேரம் ஆகிடுச்சு” என்றாள்.
“உன் புருஷன் குடுக்குற இடம் டி உனக்கு.. இல்லைனா மாமியாரன்ற மரியாதை இல்லாமல் பேசுவியா?” என்று மீனாட்சி கேட்க,
“மாமியாரா அவங்க ப்ரியாவை கேள்வி கேட்டா பரவாயில்லை அத்தை! என் அப்பாவோட ரெண்டாவது பொண்டாட்டியா என் பொண்டாட்டிகிட்ட வார்த்தையை விடறாங்க.. அது எனக்கே பிடிக்காதுன்றப்ப பிரியா மட்டும் என்ன பண்ணுவா?” என்று வந்து அமர்ந்தான் கதிரவன் மகிழினியுடன்.
“மகிம்மா! ஜேக்கிட்ட வாங்க!” என்று ஜனனி அழைக்கவும் மகிழினி அவளிடம் வந்து விட்டாள்.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் வரலையா? நேரமாச்சே! இருங்க நான் போன் பண்றேன்” என்று கதிரவன் மாப்பிள்ளை வீட்டினருக்கு அழைத்தான்.
“என்ன சொல்றாங்கங்க?” பிரியா கேட்க,
“அவங்க வரலையாம் பிரியா” என்றான் கவலையாய் கதிரவன்.
“என்னவாம்? வரலைனா ஒரு போன் பண்ணி சொல்ல கூட மாட்டாங்களாமா?” என்று பிரியா கோபம் காட்ட,
“ஏன் வரலையாம் மாப்பிள்ளை? என்ன சொன்னாங்க?” என்றார் மீனாட்சி.
“ஏதோ கிளம்புன நேரம் சகுனத் தடை வந்துச்சாம்..” என்று முழுதாய் கூறாமல் அவன் இழுக்க,
“ஏங்க அந்த தரகர்க்கு போன் பண்ணி அந்த வீட்டாளுங்க இனி எப்பவுமே வர வேண்டாம்னு சொல்லிடுங்க..” என்றாள் பிரியா கணவன் முகத்தை பார்த்தே முழுதாய் அறிந்து.
“முடிஞ்சதா? போலாமா? ஆபீஸ்ல பெர்மிஸ்ஸன் கேட்டது வேஸ்ட்டா போச்சு.. சரி பரவால்ல.. என் டார்லிங் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிக்கலாம்” என மகிழினியுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள் ஜனனி.
மீனாட்சியின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர் நால்வரும்.
“என்ன டி இது.. ஜனனிக்கு மட்டும் இவ்வளவு தடங்கல் வருது.. என்னவோ சரி இல்லைனு தோணுது” என்றார் மீனாட்சி மகள் பிரியாவிடம்.
“ம்மா! குல தெய்வ கோவிலுக்கு போய்ட்டு வந்தா நல்லது நடக்கும்னு சொல்லுவீங்க இல்லை.. நாம வேணா போய்ட்டு வரலாமா?” என மகள் கேட்க,
“ஆமா அத்தை! சாமி மேல பாரத்தை போட்டா எல்லாம் சரி ஆகிடும்” என்றான் கதிரவனும்.
“எனக்கு கூட தோணலை பாரு.. சரி அப்ப ஞாயிற்று கிழமை போய்ட்டு வந்திடலாம்.. அப்ப தான் எல்லாருக்கும் வசதி படும்” என்று மீனாட்சி கூற,
“ஆமா! திருச்சில இருக்குற குல தெய்வ கோவில் தானே? அப்ப சண்டே தான் சரியா இருக்கும்” என முடிவெடுத்தனர் அனைவரும்.
“பத்திரிக்கை வர்ற சனிக்கிழமை கைக்கு வந்திடுமாம்.. அடுத்த நாள் நம்ம கோவில்ல வச்சு பூஜை பண்ணிட்டு வந்திடலாமான்னு அப்பா கேட்டாங்க ஜெய்” என்று பிரேமா கூற,
மல்லிகா மட்டும் அமைதியாய் இருக்க, “நீங்க ஏன் ம்மா ஒன்னும் சொல்லல?” என்றான் ஜெய்.
“அம்மா இந்த கல்யாணமே வேண்டாம்னு அப்பாகிட்ட சொன்னாங்க ண்ணா” என்றாள் நிவி.
“வாவ்! இது எப்ப எப்படி நடந்துச்சு?” ஆச்சர்யதோடு புன்னகையுடன் ஜெய் கேட்க,
“சிரிக்காத டா ண்ணா! பெரியம்மா பாவம்.. பெரியப்பா ரொம்ப திட்டிட்டார்” என்றான் சூர்யா.
“இது தேவையா? நான் சொன்னேனா அந்த ஆளுகிட்ட எனக்காக பேசுங்கன்னு.. நான் தான் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டேனே? அப்புறம் என்ன உங்களுக்கு?” என்றான் அன்னை அருகே வந்து.
“இனி இந்த மாதிரி எதுவும் பண்ண வேண்டாம்.. சரி ஓகே அதை விடுங்க.. சண்டே எல்லாரும் பிரீ தானே? ட்ரிப்பை போட்டுடலாமா?” என ஜெய் கேட்க,
“அக்கா! அப்படியே ஒரு பொங்கலும் வச்சுடலாம்.. இவன் படிப்பை முடிச்சுட்டான்.. இவனுக்கும் அடுத்தடுத்து எல்லாம் நல்லாருக்கணும்னு வேண்டிருக்கேன்” என்று பிரேமா கூற,
“அதெல்லாம் வச்சுடலாம் பிரேமா!” என்றார் மல்லிகா.
“அப்ப சண்டே ஃபன் டே.. இல்ல?” என்ற நிவி சூர்யாவோடு ஹைஃபை அடித்துக் கொள்ள, தன் அறைக்கு வந்துவிட்டான் ஜெய்.
“ண்ணா!” என்று கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் ஜெய் கதவை திறக்க, சூர்யா தான் நின்றிருந்தான்.
“சொல்லு டா!” – ஜெய்.
“சும்மா தான் ண்ணா!” என்றவனைப் பார்த்த ஜெய் அறைக்குள் வர, சூர்யாவும் பின்னோடே வந்தான்.
“சொல்லு! ஏன் தொண்டைக்குள்ள வச்சுட்டு நிக்குற?” ஜெய் கேட்க,
“இல்ல! அதான் மல்லிகா ம்மாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க இல்ல? அப்ப நாம வேணா இந்த மேரேஜை ஸ்டாப் பண்ணிடலாமா?” என்று சூர்யா கேட்க,
“ஏன் டா இந்த கொலவெறி உனக்கு?” என்றான் ஜெய்.
“சீரியஸ்லி ண்ணா! நீ ஒரு ஜாலியான பர்சன்.. உனக்கு வரப் போற பொண்ணும் உன்னை மாதிரி இல்லைனாலும் அஞ்சலி மாதிரி இல்லாம இருந்தா நல்லாருக்குமோன்னு தோணுது அன்னைக்கு பார்த்துட்டு வந்ததுல இருந்து” என்றான்.
“லாயர்ன்றதை நீ ப்ரூப் பண்ண என் வாழ்க்கை தான் கிடைச்சுதா டா உனக்கு?” என ஜெய் கிண்டல் செய்ய,
“ப்ச்! ஐம் சீரியஸ் ண்ணா!” என்றான் சூர்யா.
“என்ன டா சீரியஸ்? இதே மாதிரி அன்னைக்கே அந்தாளுகிட்ட அண்ணா ஊர்ல இல்லாதப்ப ஏன் நிச்சயம் பண்றிங்கனு கேட்க உனக்கு தைரியம் இல்ல.. இன்னைக்கு அந்த பொண்ணு வேணாம்னு சொல்ல தோணின உன் பெரியம்மாக்கு அன்னைக்கு தோணல.. இப்ப நிச்சயத்தை பண்ணி வச்சுட்டு ஸ்டாப் பண்ணினா யார் பேர் அடி வாங்கும்? அந்தாளு பேர் மட்டும் இல்ல.. இந்த வீட்டுல இருக்க ஒவ்வொருத்தர் பேரும் தான்..” என்றவன்,
“அன்னைக்கு பார்த்தல்ல அவ பிகேவியர் என்னனு.. சும்மா விடுவாளா? ஈஸியா சொல்ற ஸ்டாப் பண்ணிடலாம்னு.. என் தலையில என்ன எழுதி இருக்குதோ அது தான் நடக்கும்.. போ! போய் வேலையைப் பாரு” என்றுவிட்டான் ஜெய்.
இப்பொழுதும் கூட மற்றவர்களுக்காக தான் திருமணத்தை ஏற்று கொள்கிறான் என புரிந்தது கனத்த மனதுடன் வெளியேறி இருந்தான் சூர்யா.
“என்ன அஞ்சலி! நீ சந்தோசமா இருக்குற மாதிரியே தெரியல.. உனக்கு புடிச்சிருக்குன்ற ஒவ் காரணத்துக்காக தானே இந்த கல்யாணமே நடக்குது” என்ற தந்தை குணசீலன் கேள்விக்கு வெறுமேனே பார்த்தாள் அஞ்சலி.
“சொல்லு டா! என்ன ப்ரோப்லேம்?” என மீண்டும் அவர் கேட்க,
“எல்லாம் உங்களால தான்.. அவ ஆசைப்பட்டான்னு அந்த பையனுக்கே சொல்லாம நிச்சயத்த நடத்தி வச்சீங்க.. இப்போ ரெண்டு பேருக்கும் முகம் குடுத்து பேசிக்க கூட முடியல.. நம்ம பொண்ணு வாழ்க்கைல நீங்களே தான் விளையாடிட்டிங்க” என்று கவலையாய் கூறினார் காஞ்சனா.
“என்ன டி உளறுற?” என மனைவியை குணசீலன் அதட்ட,
“உங்க பொண்ணை கேளுங்க! அந்த ஜெய் உங்க மிரட்டலுக்கு பயந்து வந்து பத்திரிக்கை பார்த்துட்டி வந்ததோட சரி.. கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு ஆசையா ஒரு நேரம் பார்க்க வரல.. ஏன்! உங்க மகளை கேளுங்க.. ஒரே ஒரு போன் பண்ணி இருப்பானா கேளுங்க?” என கேட்க,
“இப்ப என்ன தான் டி சொல்ல வர்ற?” என்றார் கணவர்.
“கல்யாணம் பேசி முடிச்சதுல இருந்து அவ நிம்மதியே இல்லாம இருக்கானு சொல்றேன்.. அதுக்கு ஜெய் காரணம் இல்ல.. நாம தான்னு சொல்றேன்” என்று கூற,
“ம்மா!” என நிறுத்தினாள் அஞ்சலி.
“என்ன டி? என்ன? உண்மை அதான? ஒரு முறை உனக்கு போன் பண்ணி இருப்பானா? இல்ல நீ தான் போன் பண்ணி இருப்பியா?” என்று மகளைக் கேட்க,
“வேற என்ன பண்ண சொல்ற? அவன் காலுல போய் விழ சொல்றியா?” என்றாள் அஞ்சலி கோபமாய்.
“பார்த்திங்களா! அவ தப்பு என்னனு அவளுக்கு இன்னும் புரியலை!” என்ற காஞ்சனா தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தார்.
தொடரும்..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.