நெப்போலியன் எந்தளவுக்கு இறங்கிப் பேசுகிறானோ இணக்கமாக இருக்கிறானோ அந்த அளவு கோபமும் கொள்பவன். ஆர்கலியை முதல் சந்திப்பிலேயே பிடிக்காவிட்டாலும் கூட மாணிக்கத்திற்காக மட்டுமே அவளுடன் சகஜமாகப் பேசினான். அதுவும் அவள் உடல் நலன் குன்றிய போது கொஞ்சமாக கரிசனம் அவள் மேல் கொள்ள, அதன் பின் அவள் பணத்தை திருப்பித் தந்த அவள் நிமிர்வு பிடித்திருக்க அவளிடம் கனிவாக நடந்து கொண்டான். அதற்காக அவள் முதல் பார்வையை, பேச்சை முற்றிலுமாக மறந்தான் என்றில்லை.
இன்று மீண்டும் அதே போல் பார்வையை பாவை பார்த்துவிட,அது அவனைக் கடுப்பாக்க, பதிலேதும் அவன் பேசாமல் நின்றான். மனத்தின் குணம் முற்றிலும் வேறானது. அன்பை காட்டவே நாம் அத்தனை யோசிப்போம்.
தெருவிலோ பொதுவிலோ ஒருவரை பார்த்து அரை நொடி புன்னகைக்கை ஆயிரம் முறை யோசிப்போம். ஆனால் அறியாமல் நம் காலை மிதித்தாலோ, தாண்டி சென்றாலோ ஆத்திரத்தைக் காட்ட அரை நொடி கூட யோசிக்க மாட்டோம். அன்பு காட்ட யோசிக்கும் பலர் ஆத்திரத்தைக் காட்ட யோசிப்பதில்லை. யோசித்தால் அதைக் காட்டும் வேலையும் இல்லையே..!
ஆர்கலியும் அப்படியே… முதன் முதலில் அவனிடம் கோபம் காட்ட கொஞ்சமும் யோசிக்காதவள் அவள். இப்போதும் அப்படியே..
அவன் பேசாமல் இருந்தால் இவள் பேசா மடந்தையாகிடுவாளா என்ன..?
“அது எப்படி எப்படி… அவன் குடிகாரன்னு நீ சொல்ற…. உன்ட்ட காசு இருந்து நீ குடிச்சா மட்டும் ரொம்ப யோக்யமா..?” என்று நக்கலாக கேட்க,
“உனக்கு என்ன பிரச்சனை… நான் ரவுடி பொறுக்கி குடிகாரன் போதுமா…?” என்றான் பொறுமை இழந்து பொறுமலோடு.
அவன் அப்படி பேச ஆர்கலிக்கு என்னவோ போல் ஆனது. அவள் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியதில்லை. முதன்முதலில் அவள் கண்ட பார்வையில் அவன் பரிமாணம் வேறு தான். ஆனால் இத்தனை மாதங்களாக அவள் அப்பா சொல்லி அவனைப் பற்றி அறிந்து இருக்கிறாள் தானே..? அன்று குடித்து இருந்த போதும் கண்ணியமாக அவளிடம் நடந்தவன் தானே..? அதிலும் பாதுகாப்பாய் பின் வந்தவன் வேறு.
இன்று கூட காரில் வரும்போதும் ஒரு நொடியும் இவளிடம் வராத அவன் பார்வை. தங்கைகளிடம் அவன் காட்டிய பரிவு, இத்தனைக்கும் மேலாக மாணிக்கத்திடம் அவன் நடந்து கொள்ளும் பாங்கு. அதுவும் அவன் காட்டும் அந்த பாசங்கற்ற பாங்கில் இவள் நெகிழ்ந்து தான் போனாள்.
மாணிக்கத்திடம் அவன் அதிக உரிமை எடுத்தாலும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவரை கவனித்துக் கொள்வதும், அவனுக்கும் அவன் தந்தைக்குமான அந்த ஒட்டுதல் எல்லாம் அவனை அவளுக்குப் பிடிக்க செய்தது. அப்படியானவன் இப்படி இங்கு ஒருவனிடம் சண்டை போடுவது பிடிக்காமல் தான் அவள் அப்படி கேட்டது. ஆனால் அவன் ‘பொறுக்கி’ என்ற வார்த்தையெல்லாம் பொறுமையிழந்து பயன்படுத்த அவளுக்கு வருத்தமாக இருக்க,
“ஏய் லூசா நீ….? உனக்குத் தப்பான பழக்கம் இருக்குன்னு சொன்னேன்… நீ தப்பானவன்னு சொன்னேனா… நம்ம மேல தப்பு வைச்சிட்டு அடுத்தவனைக் கேள்வி கேட்காதன்னு சொன்னேன். அதுக்கு எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற நீ..?” என்று ஆர்கலி பதிலுக்குக் கோபமாகப் பேச,
“இங்க பாரு உனக்கு உதவி செஞ்சேன்.. பணம் வேண்டாம்னு சொன்னேன்னு என்னைக் கர்ணன் நினைச்சியா நீ..? கடன்னு வந்துட்டா நான் வேற மாதிரி. அந்த பரதேசி ஆறு மாசமாச்சு பத்தாயிரம் வாங்கிட்டு என்னை டபாய்க்கிறான்…. அவங்கிட்ட கடன் வசூல் பண்ண நான் கார் எடுத்துட்டு இத்தனை கிலோமீட்டர் வருவேனா… அதான் இன்னிக்குப் பார்த்தேன் கேட்டேன். அதுல உனக்கென்ன வந்துச்சு. நான் என் காசுல குடிக்கிறேன்… அதுக்கு அவன் என்னைக் கேள்வி கேட்பானா..? கேட்டுப் பார்க்க சொல்லேன்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேச,
“எம்மா தாயே உனக்கு என்ன வேணும் இப்போ…” எரிச்சல் மிகுந்து நிலையில் அவன் கத்த, “இங்க பாரேன்… சும்மா இப்படி கோவப்பட்டு கத்துறதால எல்லாம் என்னை மிரட்டிப் பேசிடலாம்னு நினைக்காத…. நீ குடிக்கிறது மட்டுமில்லாம வயசானவங்களும் ஊத்திக் கொடுத்த அன்னைக்கு… அப்போ இருந்த டென்ஷன்ல நான் பேசல உன்னைக் கேட்கல…”
“உங்கப்பா அதுக்கு அப்புறம் குடிச்சாரா இல்ல தானே..? என்னைக் கேள்வி கேட்கிற வேலை எல்லாம் வைச்சுக்காத…” என்றான் ஒற்றை விரல் நீட்டி கோபமாக.
“இங்க பாரேன்.. அவன் குடிச்சான்னா எனக்குக் கடன் கொடுக்கனுமேன்னு கேட்டேன். அவனுக்கு குடும்பம் குழந்தை இருக்கு.. உங்கப்பாவுக்கு நீங்க இருக்கீங்க… எனக்கும் எங்கப்பனுக்கும் யாருமில்ல…. அதனால எங்க இஷ்டப்படி வாழ்றோம்….” என்று திமிராகப் பேசினான்.
அவனுக்கும் அவருக்கும் யாருமில்லை தான். ஆனாலு அவனுக்காக அவரும், அவருக்காக அவனும் வேண்டும் தானே..? அதை மறந்து அவன் மறுத்து பேச, அவன் இஷ்டம் என்று சொல்பவனிடம் வேறென்ன பேச ‘அட போடா…’ என்று தன் பார்வையை அவனிடம் இருந்து அலட்சியமாகத் திருப்பிக் கொண்டாள்.
அவள் கொஞ்சம் நடந்து தண்ணீர் இருக்கும் பகுதிக்கு வந்து கால்களில் முகம் பதித்து உட்கார்ந்து தூர கடலை ஈர விழியால் ரசித்தாள். நெய்தல் காற்று நெஞ்சம் நெகிழ்த்தியது. அகத்தின் நினைவுகள் அலையாய் எழும்ப, தாத்தாவின் ஞாபகம் அதிகமாக இருந்தது. யாரிடமும் அவளை விட்டுக்கொடுக்காத தாத்தா. அவள் அப்பத்தா கூட சில சமயம் மகனை விட்டுச் சென்ற மருமகளின் மேல் இருக்கும் கோபத்தில் எதாவது இவளைப் பேசிவிடுவார்.
ஆனால் தாத்தாவுக்கு எப்போதும் ஆர்கலி என்றால் செல்லம் தான். இடங்களும் பொருட்களுக்கும் வேண்டுமானால் உயிரில்லாமல் இருக்கலாம். ஆனால் அவை உயிரை தனக்குள் வைத்திருப்பவை. சில உயிரின் உணர்வை தங்களுக்குள் உள்ளடக்குபவை.
ஆர்கலிக்கு அப்படிதான் கடல் என்பது தாத்தாவிற்கும் அவளுக்குமான இடம். அதுவும் அவள் பெயரின் பொருளானதால் கடல் மீது அவளுக்கு கொஞ்சம் அலாதியான காதலும் கூட. இப்படி அவள் ரசித்து கரையை அதைத் தொடும் அலையை பார்த்திருக்க…
“ஷ்யாம் கூப்பிடுறான் வா டைம் ஆச்சு..” என்று சொல்லி ஆர்கலியின் முன்னே சென்று நெப்போலியன் நிற்க, அவளின் ஈர விழிகள் இவனுக்கு தப்பாமல் தெரிய, “ஏய்…என்னாச்சு…ஏன் அழற..?” என்று பதற
‘அட போடா..’ என்று அதே பார்வையைத் தந்தவள் எழுந்து கொள்ள, அவள் கண்ணீர் கன்னம் தொடக் கூட இல்லை, ஏன் கண்ணை விட்டு விழ கூட இல்லை. ஆனால் கண்கள் கலங்கி மட்டும் இருக்க, இவனுக்குக் கழுகு பார்வை தான் என்று நினைத்தவளுக்கு அப்போதுதான் அது தோன்றியது.
“ஆமா…. நீ உன் ப்ரண்ட்ஸ் கூட பேசிட்டு தானே இருந்த… அது எப்படி கரெக்டா நான் இங்க இருக்கேன்னு தேடி வந்த…?” என்று கேட்க, “பேசிட்டு இருந்தா… ஆள் போறது கூடவா தெரியாது…?” என்றான் அவன் இயல்பாக. அவன் தான் எதையும் உன்னிப்பாக கவனிப்பானே.
“ப்ச் இல்ல… நான் கற்பகம் ஆன்ட்டி கூட தான் நின்னேன்.. அவங்க கூட என்னை கவனிக்கல… ஆனா நீ..?” என்று அவள் இழுக்க,
“அவங்க கவனிக்கலன்னு எல்லாம் எனக்குத் தெரியாது… என் பார்வை எப்பவும் சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்கும்.. அப்ப தான் நீ இந்த பக்கம் வரவும்.. தனியா போய் வழி தெரியாம மாட்டிக்குவியேன்னு பின்னாடியே வந்தேன்..” என்று சொல்ல,
“ஓ… நல்ல அப்சர்விங் ஸ்கீல்ஸ் தான் உனக்கு..” என்றாள் பாராட்டாய்.
“உனக்கும் நல்ல நடிக்கிற திறமை… ஏன் அழுதன்னு கேட்டா உடனே ப்ளேட்டை மாத்திட்ட. பெரிய தில்லாலங்கடி நீ.. சரி ஏன் அழுத அதை சொல்லு..” என்றான் நக்கலாக.
“அது என் இஷ்டம்..” என்றாள் திமிராக.
உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் இருந்து உரைக்கும் அளவுக்கெல்லாம் அவனோடு பழகவில்லையே. யாருடனும் இல்லை என்பது வேறு கதை. ஆனால் அவனோ குறும்போடு குறுஞ்சிரிப்பும் சேர்ந்து கொள்ள,
“இரு… இரு.. நீ அழுதன்னு உங்கப்பா கிட்ட சொல்றேன்…” என்று விளையாட்டாக சொல்ல, ஆர்கலியோ சட்டை செய்யவே இல்லை.
மீண்டும் ஷ்யாம் போனில் அழைக்க, “வந்துட்டே இருக்கோம்டா….” என்று சொல்லி விட்டு “வா போலாம்..” என்று ஆர்கலியை அழைக்க,
“ஆமா… எப்படி ஷ்யாம் உனக்கு ப்ரண்டானார்..” என்று ஆர்கலி கேட்க, “அது எப்படி எப்படி ? என்னை வா போன்னு பேசுற என்னை விட ஷ்யாம் இரண்டு வயசு சின்னவன்… ஷ்யாம் அவர் இவரா..?” என்றான் கடுப்பாக.
“ஹாஹா… நீங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ்னதும் ஒரே ஏஜ்னு நினைச்சேன்… நீ சொல்லித்தான் ஷ்யாம் சின்னவர்னு தெரியுது..”
“தெரிஞ்சும் கூட அவன் அவர் தான்… நான் அவன் தான் இல்ல… என்ன இருந்தாலும் அவன் டாக்டர் இல்ல…” என்றான் ஒரு மாதிரியான குரலில்.