அக்கா… உனக்கு ஆபிஸ்ல இருந்து கால்..” என்று கீழிருந்து காயத்ரி சத்தம் போட,
“சரி… நான் போறேன் பை..” என்று சொல்லி ஆர்கலி இறங்கி போய்விட, நெப்போலியனும் கீழிறிங்கினான். அடுத்த வந்த இரண்டு நாட்கள் நன்றாகத்தான் போயின.
அன்று இரவு உணவுக்குப் பின் வரதராஜன் கீழே தூணில் சாய்ந்து உட்கார்ந்திருக்க, நெப்போலியன் அவர் மடி மீது படுத்து கொண்டு டீவி பார்த்தான். அவரின் கவனம் டீவியில் இல்லை என்றுணர்ந்தவன்,
“என்னாச்சு… ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்க, அவரோ,
“அதெல்லாம் நல்லா தான் இருக்கேன். நீ டீவியை பாருடா..” என்று சொல்ல, அடுத்தவரின் விழிக்கே விளக்கம் சொல்பவனுக்கு வளர்த்தவரின் மாற்றம் தெரியாதா என்ன..?
“இல்ல… இன்னிக்கு நீ சரியில்ல…. கடையில இருந்து சீக்கிரம் வந்துட்ட…. கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்லல… என்னாச்சு சொல்றியா இல்லையா..?” என்று எழுந்து உட்கார்ந்து கேட்க,
“போடா…” என்று அவர் எழுந்து கொள்ள, அவரைப் பின் தொடர்ந்து சென்றவன் மெத்தையில் அவரருகில் உட்கார்ந்து அவரது காலைப் பிடித்து இதமாக அழுத்தியவாறே, “என்னாச்சு சொல்லு..” என்று அவன் நச்சரிக்க,
“பாஸ்கர் இருக்கான்ல..”
“ஆமா… நம்ம பாஸ் மாமா… என்ன அவருக்கு..?”
“அவன் பொண்ணு அனிதாவை உனக்குக் கேட்டேன்… அவன் நீ படிக்கல அப்படி இப்படி சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டான்..” என்று அவர் சோகமாக சொல்ல,
அவனோ, “ஹா ஹா அவர் ஒத்துக்கிட்டா தான் ஆச்சரியப்படனும்… லூசாய்யா நீ… அந்த பொண்ணு படிச்சிருக்கு… வேலைக்குப் போவுது… என்னை எப்படி கட்டிக்க ஒத்துக்கும்… இருந்தாலும் என் மேல ரொம்ப பாசம் தான் உனக்கு… என்னை மாதிரி படிக்காத பொண்ணா பார்க்கறதன்னா பாரு… இதுக்கெல்லாம் பீலாகாத…” என்று சமாதானம் சொன்னான்.
அவர் மனம் சமனாகவில்லை. சஞ்சலமாகவே தான் இருந்தது.
“ச்சே…. உன்னைப் படிக்க வைச்சிருக்கனும்டா…. தப்பு பண்ணிட்டேன்…. அப்படி பண்ணிருந்தா கண்டவன்லாம் இப்படி பேசுவானா…?” என்றார் கோபமாக.
“யோவ்… இப்ப எனக்கு இருபத்தெட்டு வயசாகுது… இப்ப வந்து படிக்க வைச்சிருக்கலாம்னு ஃபீல் பண்ற…. விடுய்யா…. அப்போ நம்ம கிட்ட இப்படி காசு இல்ல… அன்னைக்கு என்ன வருமானமோ அதுல தான வாழ்ந்தோம்…. இப்ப என்ன படிக்கலன்னாலும் நம்ம தானே முதலாளி கால் கோடிக்கு கார் வைச்சிருக்கும்… ரோட்டேஷன்ல வேற பணம் விட்டிருக்கோம்…. கவலைப்படாதய்யா….”
“இங்க பாரு… நீ எனக்குப் பொண்ணு தேட ஆரம்பிச்ச அப்புறம் நல்ல கலகலன்னே இல்ல.. எப்ப பாரு சோகமா சுத்திட்டு கிடக்குற… நல்லா இல்ல சொல்லிட்டேன்… கவலையில்லாம கம்முனு படு..” என்று சொல்லி அவரைப் படுக்க வைத்து போர்வையைப் போத்தி விட்டு ஜன்னலை எல்லாம் திறந்து வைத்தான்.
அவனும் அருகில் வந்து படுக்க, “டேய்…..நான் உன்னை நல்லா வளர்த்திருக்கேனா டா..?” என்று கேட்க
“என்னாச்சுய்யா எனக்குத் தெரியாம சரக்கடிச்சியா என்ன..? சும்மா பேனாத்துற..” என்று அவர் உணர்வினை அவன் அலட்சியமாக கையாண்டான்.
அவன் அவரை சகஜமாக்க எண்ணி அப்படி பேச, அவனுக்கு மனிதர்களில் நுண்ணுர்வு புரியவில்லை. அவரின் கேள்விக்கு பின்னால் இருக்கும் வலி விளங்கவில்லை. அவன் விளங்கிக்கொள்ளவும் இல்லை.
“இல்ல…. உன்னைப் பெத்தவங்க இருந்திருந்தா உன்னை காலேஜுக்கு எல்லாம் அனுப்பி படிக்க வைச்சிருப்பாங்க இல்ல… இந்நேரம் நீயும் கோட் சூட் மாட்டிட்டு நல்ல வேலைக்குப் போயிருக்கலாமில்ல….” என்று அவர் புலம்ப,
“இப்படியே பேசிட்டு இரு. உன்னைக் கொல்லப் போறேன் நான்…. உன்னை தவிர என்னை யாரும் இப்படி நல்லா பார்த்திருக்க முடியாது… என்னைப் பெத்தவங்களா இருந்தாலும் சரி…. அப்புறம் யோவ் கோட் சூட் போட படிச்சிருக்கனுமா என்ன.. நாளைக்கே நம்ம அன்வர் பாய்கிட்ட போனா அழகா கோட் தச்சு கொடுத்திட போறார்.. அனத்தாம அமைதியா தூங்கு..” என்று சொல்லி அவர் மீது கை போட்டு அவன் உறங்கிட,
நிசர் நேரம், எங்கும் நிறைந்திருந்தது நிசப்தம். அதை கிழித்துக் கொண்டு வரதனின் அலறல்.
“டேய்…. என்னமோ பண்ணுதுடா..” அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கத்த, அவனோ தூக்க கலக்கத்தில், “சாப்பிட்டது செரிச்சிருக்காது.. தண்ணியைக் குடிச்சிட்டு தூங்கு…” என்று சொல்ல
“முடியலடா… .நெஞ்சு வலிக்கது..” என்று அவர் வலி தாங்காமல் முனக, பதறி எழுந்தவனுக்கு அவரது தோற்றம் கலங்க வைக்க, என்ன செய்வது என புரியவில்லை.
“யோவ்… என்ன பாரு… ஒண்ணுமில்ல கண்ணை மூடாத… எனக்குப் பயமாயிருக்கு..” என்று அவன் கலங்கி போய் கத்த, அவரோ அவன் மீதே அப்படியே சரிந்து விழுந்தார்.
அந்த நள்ளிரவில் என்ன செய்ய என்றே தெரியாமல் ஸ்தம்பித்து தான் போனான் நெப்போலியன். அதுவும் வரதன் சரியவும்,
“வரதா…….” என்று அலறியவன் அவரை கைகளில் தாங்கிக் கொண்டான். பதட்டமும் பயமும் அவனை பதம் பார்க்க, அவருக்கு ஒன்றும் ஆக கூடாதென்பதே ஒரே எண்ணமாக இருக்க, வேகமாக சென்று வெளியில் அவர்கள் வீட்டு ஷெட்டில் இருக்கும் காரை எடுத்தவன், அவரை தூக்கிக் கொண்டு காரில் வைத்து மருத்துவமனைக்குச் சென்றான்.
வீட்டைப் பூட்ட கூட தோன்றவில்லை. பயம்… பயம்…. எதையும் கற்பனை செய்ய கூட பயமாக இருந்தது. இந்த பார் சுழலுவதே பயத்தினால் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பயம். சிலருக்கு கடவுள் மீது. சிலருக்கு மனசாட்சி மீது. இப்படியான பயங்களில் தான் உலகம் இயங்குகிறது. ஆனால் அவனது பயம் அவனை இயங்கவிடவில்லை.
பயம் இயக்கவும் செய்யும்.. முடக்கவும் செய்யும்..!!
அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ய, இடையே நர்ஸ் வந்து அவரது மெடிக்கல் ஹிஸ்டரி கேட்க ஒன்றுமே அவனுக்குத் தெரியவில்லை. மிக மிக அவமானமாக உணர்ந்தான். தான் ஒரு நல்ல மகன் இல்லையோ என்ற எண்ணம் வேர் வரைக்கும் சென்று தாக்க தொய்ந்து அந்த நாற்காலியில் உட்கார்ந்தான்.
அவனின் பெயருக்கு ஏற்றார்போல் பெரும் வீரன் தான். தீரன் தான். ஆனால் எல்லாம் வரதராஜன் என்ற மனிதர் அவனுடன் இருக்கிறார் என்ற தைரியம் தான். அவரன்றி அவனில்லை. பயமும் தனிமையும் கொடிதினும் கொடிது. அது துணைத் தேடத் தூண்ட மாஸ்கோவிற்கு அழைத்தான்.
மணி இரண்டு என்பதெல்லாம் உரைக்கவில்லை. “என்ன அண்ணே….?” என்று அவன் தூக்க கலக்கத்தில் பேச
“டேய்.. வரதனுக்கு நெஞ்சு வலிடா…. நம்ம ராஜன் டாக்டர் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்… எனக்குப் பயமா இருக்குடா…. நீ வரியா…?” என்றான் பதட்டமான குரலில்.
அதுவரை இருந்த தூக்க கலக்கம் நொடியில் விலகிட மாஸ்கோ விரைந்து மருத்துவமனைக்கு வந்தான்.
“டேய்… எனக்குப் பயமா இருக்குடா….” என்று அவன் மாஸ்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு கலங்கி சொல்ல, மாஸ்கோவின் மனமும் வலித்தது. எப்போதுமே சிரித்து பேசுபவன் முதல் முறையாக கலங்குகிறான்.
அதுவும் ‘எவனாக இருந்தாலும் பார்த்துக்கலாம்’ என்று எப்போதும் தைரியமாகப் பேசும் அண்ணனா இப்படி என்று பார்த்திருந்தான் மாஸ்கோ. எவனாக இருந்தாலும் பார்ப்பவனுக்கும் கூட எமனாக இருந்தால் ஒரு பயம் வரத்தான் செய்யும். அதுவும் நம்மை விட நம்மை சார்ந்தவருக்குத் துன்பம் வருவது தான் துன்பத்திலும் துன்பம்.
வரதனுக்கு டெஸ்டுகள் எல்லாம் எடுக்க வேண்டி இருக்க,பணம் கட்டுமாறு நர்ஸ் வந்து சொல்ல, நெப்போலியன் தான் நிலையிழந்து இருந்தானே.
“அண்ணே.. பணம் கட்டனும்..” என்று மாஸ்கோ சொல்ல “வீட்ல இருக்கும்.. போய் எடுத்துட்டு வா” என்றான்.
மாஸ்கோவும் வீட்டிற்குப் போக, வீடே அப்படியே திறந்து கிடக்க, அவனுக்குப் பணம் எங்கிருக்கு என்று எப்படி தெரியும். ஒன்றுமே புரியவில்லை.
காலை ஐந்து மணி ஆகியிருக்க, மாஸ்கோவிற்கும் என்ன செய்வதென புரியாது கற்பகத்திடம் கேட்கலாம் என்று அவர் வீட்டிற்குப் போக, அவர் வீடு பூட்டி இருந்தது. இரண்டு நாள் முன் தான் ஊரில் விசேஷம் என்று குடும்பத்தோடு சென்றிருந்தார்கள். உடனே பக்கத்தில் இருக்கும் மாணிக்கத்தின் வீட்டிற்கு ஓடினான். ஆர்கலி தான் எழுந்திருந்தாள். அவள் சமையலில் ஈடுபட, இவன் வந்து சத்தம் போடவும்,
“என்ன மாஸ்கோ…. காலையில வந்திருக்க….?” என்றாள்.
“அக்கா…. ஐயாவுக்கு நெஞ்சு வலிக்கா. ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்.. பணம் கட்டனும்… அண்ணன் என்னை வீட்ல போய் எடுத்துட்டு வர சொன்னார்… ஆனா எனக்கு எதுவும் தெரியல… அதான் சார்ட்ட கேட்கலாம்னு..” அவன் பரபரப்பாக சொல்ல
“அச்சோ… நெஞ்சு வலியா..?” என்று அதிர்ந்தவள் அப்பாவை உடனே அழைத்தாள்.
அவர் அப்போதுதான் எழுந்து வர, இதைக் கேட்டதும், “எல்லாம் வரதனுக்குத் தானே மாஸ்கோ தெரியும்… சரி வா… போய் பார்க்கலாம்..” என்றபடி அவர் கிளம்ப,
அந்த காலை நேரத்தில் அப்பாவைத் தனியாக அனுப்ப மனமில்லை. அதே நேரம் அவளுக்கும் வீட்டில் வேலை இருக்க, “அப்பா… இந்தாங்க என்னோட கார்ட்…. எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க… என்ட்ட கேஷ் எதுவுமில்ல… முதல்ல அவசரத்துக்கு இதை யூஸ் பண்ணுங்க…” என்று சொல்லி தன் டெபிட் கார்டை தந்தாள்.
அடுத்து மாணிக்கவாசகம் மாஸ்கோவோடு மருத்துவமனைக்குச் செல்ல, ஆர்கலியும் வேலையெல்லாம் முடித்து விட்டு அப்பாவிற்கு அழைக்க “இன்னும் அவர் கண் திறக்கலடா…. ஸ்கேன்லாம் எடுத்துட்டு என்னனு பார்க்கனும் சொல்றாங்க.. இந்த வீரா தான் அப்படியே இடிஞ்சுப் போய் உட்கார்ந்திருக்கான்…” என்று சொல்ல, ஆர்கலிக்கும் வருத்தமாகத்தான் இருந்தது.
“நீங்க பார்த்துக்கோங்கப்பா…. எதாவது பணம் வேணும்னா எனக்குக் கால் பண்ணுங்க…. நான் ஈவினிங் வந்து பார்க்குறேன்..” என்றாள்.
அங்கு மாணிக்கத்தைக் கண்டதும் நெப்போலியன் இன்னும் உடைந்து போனான்.
“அவருக்கு ஒன்னுமாகாது தானே மாணிக்கம்… எனக்குப் பயமா இருக்கு…” என்றான் கலங்கிப் போய்.
“அதெல்லாம் ஆகாது வீரா… தைரியமா இரு…” என்று மாணிக்கம் தேற்ற, டாக்டர் வந்து வரதராஜனின் உடல் நிலை சீராக இருக்கிறது என்றும் சீஃப் டாக்டர் வந்த பின்னே என்ன மாதிரி சிகிச்சைத் தர வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும் என்று சொல்ல, அப்போதும் நெப்போலியன் தெளியவில்லை.
மாணிக்கத்தின் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு இருந்தான். இடையே மாணிக்கத்திற்கு மாஸ்கோ சாப்பாடு வாங்கி வந்து தர, நெப்போலியனை சாப்பிட சொல்ல, அவன் தண்ணீர் கூட அருந்தவில்லை.
“அவர் கண் முழிச்சு என்ன பார்க்கட்டும்டா… அவர் என்னை சாப்பிட சொல்லாம என்னைக்கு நான் சாப்பிட்டு இருக்கேன்…” என்றவனின் விழிகளில் நீர் தேங்கி நிற்க, என்ன சமாதானம் சொல்வதென்றே தெரியவில்லை.
மாணிக்கத்திற்கு பிபி உண்டு. அவர் சாப்பிடாமல் இருந்து அவர் எதாவது இழுத்துக் கொண்டால் மகள் சும்மா விட மாட்டாள் என்று தெரியும். ஆகையால் மாஸ்கோ வாங்கி வந்த உணவை சாப்பிட்டு விட்டு அங்கிருந்த ஃபார்மஸியில் தனக்குத் தேவையான மாத்திரையை வாங்கி மறக்காமல் போட்டுக் கொண்டார்.
மாலை மூன்று மணி போல் டாக்டர் வந்து மையோகார்டியல் இன்ஃபெக்ஷன் என்று கூற நெப்போலியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஹை கொலஸ்ட்ரால் என்றனர். அவனுக்கு அது எதுவும் தெரியவில்லை. வரதன் கண்முழித்து பேச வேண்டும் என்பது தான் அவன் எண்ணமாக இருக்க,
அடுத்த அரை மணி நேரத்தில் அவர் கண்முழித்து விட, பதறி போய் அறைக்குள் சென்றவனுக்கு அவர் உடல் சுற்றி இருந்த உபகரணங்களை எல்லாம் பார்க்க பார்க்க அதுவரை அடக்கி இருந்த அழுகைப் பெருகி வழிய,
“ஏன்யா… இப்படி பண்ணின…. எனக்கு எவ்வளவு பயமா இருந்துச்சு தெரியுமா…?” என்றான் அவர் கையைப் பற்றிக் கொண்டு அதில் முகம் புதைத்தவாறு.
அதுவரையில் அவன் உணர்வுகளை அடக்க சிரமம்பட்டு அது முடியாமல் முயன்ற வரையில் தன்னை அடக்கியவனுக்கு அவரிடம் சேரவும அவன் இடம் சேர்ந்த நிம்மதி. அவன் உடல் குலுங்க, மாஸ்கோ அருகில் நின்று,
“என்ன அண்ணே.. அழாதீங்க….” என்று அவன் தோளைத் தொட, “போடா…” என்று அவனை உதறியவன் அழுகையை விடவில்லை.
“வீராவுக்கு உங்க மேல எவ்வளவு பாசம்… தெரியுமா வரதன்…” என்று பெருமையாகவும் நெகிழ்வாகவும் மாணிக்கம் பேச, வரதராஜனுக்கு அவனை நினைத்து சந்தோஷமாக இருக்க, அவன் அழுவது தாங்கவில்லை.
“டேய் வளர்ந்தவனே… அதான் ஒன்னுமில்லையே எனக்கு… கண்முழிச்சிட்டேனே.. அழாதடா உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பார்க்காம எல்லாம் நான் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன் டா மவனே…” என்று அவர் அவன் தலையை வருட
எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ அவனுக்குத் தெரியவில்லை. அதுவரை அழுகையில் இருந்தவன் ஆத்திரத்காரனானான். தான் உட்கார்ந்திருந்த ஸ்டூலை விட்டு அவ்வளவு வேகமாக எழுந்தவன்,
“உன்னைக் கொன்னுடுவேன் நான்.. இனிமே கல்யாணம் கண்றாவின்னு பேச்சை எடுத்தா அவ்வளவுதான்யா… என்னைக்கு இந்த பேச்சை எடுத்தியோ அன்னிலிருந்து நீ சரியில்ல…. ஓவரா யோசிச்சு என்னைக் கஷ்டப்படுத்தி இன்னிக்கு இங்க வந்து படுத்துட்டு இருக்க…” என்று கத்தினான்.
“அய்யோ.. என்ன இது இப்படி கத்துற… அமைதியா இரு..” என்று மாணிக்கம் அதட்ட, பேசாமல் நின்றான். ஆனால் கோபம் மட்டும் மட்டுப்படவில்லை. மடை தாண்ட காத்திருந்தது.
“சரி நீங்க பேசுங்க… நாங்க வெளியே இருக்கோம்…” என்று சொல்லி மாணிக்கம் மாஸ்கோவோடு வெளியே போக, “டேய்….வா டா… இங்க..” என்று அவனை அருகில் அழைத்த வரதன், “உட்கார்..” என்று அதட்ட
உட்கார்ந்தவனின் தோற்றத்தைப் பார்த்தார். விழிகளில் செவ்வானமாக இருக்க, அதில் கார்மழை போல் கண்ணீர் துளிகள் தேங்கி நிற்க, முகமெல்லாம் கோபத்தில் சிவந்து இருக்க, அப்படி ஒரு வாட்டம் அவன் முகத்தில். வார்த்தையால் சொல்ல முடியா ஒரு உணர்வு.
“என்னடா நைட்டெல்லாம் தூங்கலையா…?” என்று வரதன் மெதுவாய்க் கேட்க “யோவ்… நீயெல்லாம் மனுஷன்தானே…. உனக்கு இப்படி இருக்கும்போது எப்படி நான் தூங்குவேன்..” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
அவருக்கோ அவன் பாசம் அதில் பிடிபட, “என் மேல அவ்வளவு பாசமா…?” என்றார் கண்ணீல் நீர் நிறைய. அவர் அருகில் உட்கார்ந்து அவர் கையை வருடியவன்,
“முதன்முதல்ல உன்னை மார்க்கெட்ல பார்த்தப்போ முழிச்சிட்டு இருந்தேனே… ஊர் தெரியாம.. பெயர் சொல்ல தெரியாம…. பாஷை தெரியாம அப்படி இருந்தேன்யா… இன்னிக்கு நான்…. நீ இல்லன்னா எனக்கு ஒன்னுமே இல்ல… என்னை விட்டு போயிடாத… செத்துடுவேன் நான்..” என்றான் வலியோடு.
வலி வேறு வார்த்தை வேறு தான். ஆனால் சில நேரங்களில் வார்த்தைகளும் வலிக்கும். சில வார்த்தைகள் வலியைக் குறைக்கும். சில வலியை பிரதிபலிக்கும். அப்படி அவன் வலியின் பிரதிபலிப்பாய்ப் பிறந்த வார்த்தைகள் அவை.
“ச்சே…. என்ன பேசுற நீ… எனக்கு வயசாச்சு… நீ வாழ வேண்டிய பையன்.. இப்படியெல்லாம் பேசாத….” என்றவர் “சாப்டியா…?” என்று வாஞ்சையாகக் கேட்க
அவன் கொண்ட வலியெல்லாம் மொழியாக அல்லாமல் விழியின் நீராய் பிறப்பெடுக்க, அவன் கண்ணீர் அவன் கன்னம் நனைக்க, “நீ கேட்காம எப்போ நான் சாப்பிட்டிருக்கேன்…” என்றான் கரகரப்பாக.
உண்மைதான். அவரோடு தான் எப்போதும் சாப்பிடுவான். இல்லாவிடின் அவர் சாப்பிடுடா என்று சொல்ல வேண்டும். நேரிலோ போனிலோ அப்போதுதான் அவன் சாப்பிடுவான்.
“ஏன் டா…. காலையில இருந்து சாப்பிடாமயா இருக்க…? போய் முதல்ல சாப்பிடு..” என்று சொல்ல “இல்ல.. பெரிய டாக்டர் நாலு மணிக்கு வருவார்…. அவர் வரட்டும்… அப்புறம் சாப்பிடுறேன்..” என்று சொல்ல,
“ஏன்டா… அவர் வந்தா ஹாஸ்பிட்டல்ல சமைக்கப் போறாரு…” என்று வரதன் அவனை சகஜமாக்க கிண்டல் செய்ய,
“ஹாஸ்பிட்டல்ல பெட்ல இருக்கியேன்னு பார்க்குறேன்… இல்லன்னா நீ சொன்ன இந்த மொக்கை ஜோக்குக்கு உன்னை பின்னியெடுத்துருப்பேன்…” என்றான் கடுப்பாக.
அதற்குள் நர்ஸ் உள்ளே வந்து வரதனுக்கு ஊசி வழியாக மருந்து செலுத்த, சிறிது நேரத்தில் அவர் கண்ணயர்ந்துவிட, ஐந்து மணிக்கு தான் கார்டியாலிஜிஸ்ட் வர, அவர் வரதனை சோதித்து பார்த்து, ரீபோர்ட்ஸ் எல்லாம் செக் செய்து மைகார்டியல் இன்ஃபெக்ஷன் என்று சொல்லி ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று சொல்ல, நெப்போலியனுக்கு ஆஞ்சியோ என்றதும் இன்னும் பயம் பிடித்துக் கொண்டது.
அவனுக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. அவனைப் பொருத்தவரையில் எது செய்தாலும் வரதனுக்கு வலி இருக்க கூடாது. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே. அவன் அப்படியே நாற்காலியில் உட்கார, அருகில் மாணிக்கமும் மாஸ்கோவும். வேலை முடிந்து ஆறு மணி போல் ஆர்கலி மாணிக்கத்திடம் போனில் விசாரித்து விட்டு மருத்துவமனைக்கு வந்தாள்.
இவள் போன நேரம், மாஸ்கோ நெப்போலியனிடம் “அண்ணே சாப்பிடுங்கண்ணே.. அதான் ஐயா கண்முழிச்சு உங்களைப் பார்த்தார் தானே… பேசினார் தானே..? முகமே ஒரு மாதிரி இருக்குண்ணே… வீட்டுக்குப் போயிட்டு வாங்கண்ணே.. நான் இருக்கேன் அதுவரைக்கும்..” என்று சொல்ல அவனோ அமைதியாக இருந்தான்.
கொஞ்சமாவது அவரது உடல் நிலையில் தான் அக்கறை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமோ என்ற கவலை அவனை உள்ளும் புறமும் உறுத்த,மனதினுள் மருகினான்.
மாணிக்கமும், “அதான் நாங்க இருக்கோம்னு சொல்றோம்ல வீரா..போய் வீட்ல குளிச்சிட்டு சாப்பிட்டு வா… உங்கப்பா கண்முழிச்சு உன்னை இப்படி பார்த்தா திட்டுவார்…. போப்பா..” என்று மல்லுக்கட்ட, அவன் அசையவில்லை.
பிடிவாதமாக அப்படியே இருந்தான். ஆர்கலி வந்தவள் அப்பாவின் அருகில் வந்து, “அங்கிளுக்கு இப்படி எப்படிப்பா இருக்கு..?” என்று விசாரிக்க
“கண்முழிச்சு பேசினார்மா. பயப்பட ஒன்னுமில்ல சொல்லிட்டாங்க… கார்டியாலஜிஸ்ட் பார்த்துட்டு ஆஞ்சியோ செய்யனும்னு சொல்லி இருக்கார்… இவன் என்னடான்னா காலையில இருந்து தண்ணி கூட குடிக்காம உட்கார்ந்து இருக்கான்… சொன்னா கேட்க மாட்றான்…” என்று சொல்ல,
“அப்பாவுக்கு இப்படி இருக்கப்ப சாப்பிட கஷ்டம்தான். ஆனால் அவரைப் பார்க்கவாச்சும் நீ நல்லா தெம்பா இருக்கனும் தானே…. அங்கிளுக்கு எதுவும் ஆகாது.. ஆஞ்சியோ எல்லாம் சிம்பிள் தான்… பயப்பட வேண்டாம்..” என்று ஆறுதலாக சொல்ல, அவன் நிலை அசையா அழுத்த நிலையே..!
அப்பாவைப் பார்த்தவள் அவர் மிகுந்த சோர்வாக இருப்பதைக் கண்டாள். பின்னே காலையிலே இங்கு வந்துவிட்டாரே. சிறிது நேரம் யோசித்தவள்,
“அப்பா… நீங்க மாஸ்கோவோட வீட்டுக்குப் போங்க.. மாஸ்கோ நீ வீட்டுக்குப் போயிட்டு ப்ரஷ் ஆகிட்டு வா… நான் அதுவரைக்கும் கூட இருக்கேன்… நீ வந்ததும் உங்கண்ணன் வீட்டுக்குப் போய் ப்ரஷ் ஆகட்டும். சரியா..?” என்று கேட்க, அவனுக்கும் அவள் யோசனை சரியாகப்பட, “சரிக்கா..” என்றான்.
“நீயே இப்ப தானேடா ஆபிஸ்ல இருந்து வந்த… நான் இருக்கேன்.. மாஸ்கோ கூட இவனும் போகட்டும்… அப்புறம் நான் வீட்டுக்கு வரேன்..” என்று சொல்ல
“வேண்டாம்ப்பா.. நீங்க வீட்டுக்குப் போங்க.. நான் பார்த்துக்கிறேன்….” என்று கட்டாயப்படுத்த அவரும் மாஸ்கோவும் வீட்டிற்குப் போனார்கள்.
நெப்போலியனோ எப்போதும் பேசுபவன் இப்போது அமைதியாகி சுவரில் தலைசாய்த்து கண்மூடி இருந்தான். ஆர்கலிக்கு அவனை அப்படி பார்க்க பாவமாக இருந்தது. அமைதியாக அவன் அருகில் உட்கார்ந்து கொள்ள, சிறிது நேரத்தில் அவள் இடது தோளில் தூக்க கலக்கத்தில் சாய்ந்தான் நெப்போலியன். இரவெல்லாம் உறங்காதது, உண்ணாதது என்று சோர்வு அவனைத் தாக்க, உறக்கத்தில் அவள் மேல் தன்னையுமறியாது சாய்ந்துவிட, ஆர்கலிக்குத் தட்டி விடவோ தடுக்கவோ தோன்றவில்லை.