நெப்போலியன் அப்படி தீடீரென சாயவும், ஆர்கலிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் முகம் பார்க்க அவனது கண் மட்டுமே அவளுக்குக் காண கிடைக்க, அதுவும் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான் என்று புரிய, அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அவன் ஆண்.. இவள் பெண் என்ற பேதமெல்லாம் அவளுக்கு அப்போது தோன்றவில்லை. ஒருவித அதிர்வு இருந்தாலும் அது அப்போதே விலகிவிட, துன்பத்தில் தோள் கொடுப்பது போலவே தான் அவளுக்கு இருந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒற்றைத் தோளில் அவன் தலை வைத்துப் படுத்திருக்க, இவளால் அசையவே முடியவில்லை. விலகவும் இல்லை. அதற்கு விழையவுமில்லை.
கொஞ்சம் அசைந்தாலும் அவன் தூக்கம் கெட்டு விடும். இன்னும் அவன் காலையில் இருந்து சாப்பிட வேறு இல்லை. இரவினில் முழித்து பதறி இருப்பான். இப்போதாவது நிம்மதியாக உறங்கட்டும் என்று விட்டு விட்டாள். ஒரு முக்கால் மணி நேரம் சென்றிருக்கும்.ஆர்கலியின் செல்பேசி சத்தமிட, இவள் அதை எடுப்பதற்குள் நெப்போலியன் முழித்து விட்டான்.
அவள் தோளில் இருந்தே கடினப்பட்டு கண்விழித்தவனுக்கு கண்ணெல்லாம் எரிச்சலாக இருக்க, எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை. நன்றாக கண்விழித்து பார்க்க அப்போதுதான் தான் ஆர்கலியின் மீது சாய்ந்திருக்கிறோம் என்று உறைக்க,
“ஹே…! நா…தெரியாம…” என்றவன் விலகி ஒரு நாற்காலி இடைவெளி விட்டு அமர்ந்தான். இவளோ “பரவாயில்ல…” என்று சொல்ல, அவன் இதே தெளிவாய் இருந்திருந்தால் எதாவது பேசியிருப்பான்.
இப்போது ஒன்றுமே ஓடவில்லை. அப்படியே கண்மூடியவனுக்கு நீண்ட உறக்கம் தடைபட்டதால் தலை வேறு பயங்கர வலியெடுக்க அப்படியே தலையைப் பிடித்தபடி உட்கார்ந்திருக்க, சிறிது நேரத்தில் மாஸ்கோ வந்து சேர்ந்தான். மாஸ்கோ வரவும் அவனிடம் வீட்டின் சாவி வாங்கி கொண்டு நெப்போலியன்
“வா…. நானே உன்னை விட்டுடுறேன்…” என்று சொல்ல, ஆர்கலியும் அவனுடன் காரில் போக, முதன்முறையாக பேச்சற்ற பயணம் அவன் வாழ்வில். அவன் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன்,
“பார்த்து வீட்டுக்குப் போ..” என்று சொல்ல “நான் போறேன்….நீ முதல்ல உள்ள போ..” என்று சொல்லி அவன் கதவைத் திறக்க, அவன் பின் இவள் நிற்க
“என்ன நீ மாணிக்கம் தேடுவார்…சீ க்கிரம் வீட்டுக்குப் போ.. இருட்டிடுச்சு…” என்று சொல்லி விட்டு உள்ளே புக
இவளோ “ப்ர்ஸ்ட் டைம் உன் வீட்டுக்கு வரேன்… வான்னு சொல்ல மாட்ட ஓகே… ஆனா போ போன்னு ஏன் விரட்டுற…. ஜஸ்ட் ஒரு டீ போட்டுத் தந்துட்டுப் போறேன் உனக்கு..” என்று சொல்ல,
“இல்ல…. அதெல்லாம் வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்… இன்னொரு நாள் நீ வா..” என்று அவன் மறுத்து பேச “நைட்ல இருந்து ஹாஸ்பிட்டல்ல இருந்த…. முதல்ல போய் குளி…. இந்த த்ரீ போர்த் பேண்டை மாத்து… ஹாஸ்பிட்டல்ல நீ தலையைப் பிடிச்சதைப் பார்த்தேன் நான்… நீயே டயர்ட்ல இருப்ப… இப்ப போய் உனக்கு எதாவது சமைச்சு சாப்பிட முடியுமா…. உனக்கு என்ன வேணும் சொல்லு டீயா காபியா…?” என்று அவள் ரொம்பவும் கட்டாயப்படுத்த, இப்போது மறுக்க மனமும் இல்லை. அதில் பலமும் இல்லை.
“டீ..” என்றவன் அவன் அறைக்குள் புகுந்து கொள்ள, இவள் கிச்சனுக்குள் சென்று சூடாய் அவனுக்கு டீ போட்டு எடுத்து வந்தாள்.
அறைக்குள் புகுந்தவனோ கட்டிலில் உட்கார்ந்து தலையைப் பிடித்துக் கொண்டு சத்தமில்லாமல் அழுகையில் கரைந்தான். டீ போட்டு விட்டு நடுகூடத்தில் வந்து நின்றவளுக்கு அந்த நிசப்த நிலையில் அவன் அழுகை அப்பட்டமாகக் கேட்டு விட, “ஹலோ டீ ரெடி… வெளியே வா..” என்று அறை வாசலில் நின்று சத்தம் போட
“நான் குளிச்சிட்டு குடிக்கிறேன்…. நீ போ..” என்றவனின் குரல் சரியில்லாமல் இருக்க, அதை சரிவர புரிந்தவளும், “எப்பா எனக்குப் போகத் தெரியும்…. டீ ஆறிடும்.. முதல்ல அதை குடிச்சிட்டு போய் குளி…” என்று சொல்ல,
அவனுக்கு எரிச்சலாக வந்தது. தனிமை அதன் தாளாமையும் இருக்க, இவள் வேறு நச்சரிக்க கோபமாக வந்தது.
“என்ன வேணும்… உனக்கு..” என்று எரிச்சலாக கதவைத் திறக்க, “அழுதியா…உன் அப்பாவுக்கு சரியா போயிடும்… டோண்ட் வொரி..” என்று இவள் அவன் முகம் கண்டு சரியாக சொல்ல அவன் அகத்தே ஒரு ஆழ்ந்த அமைதி.
அவளது இந்த கரிசனத்தின் காரணம் அவனுக்கு விளங்கவில்லை. அவள் விளக்கவுமில்லை. அவள் இப்படி செய்ய காரணமுண்டு… ஆனால் கண்டிப்பாக அதற்கு காதலோ நட்போ காரணம் அல்ல…!! அன்பு காட்டுவது எளிதுதான்… ஆனால் அதற்குப் பெயரிடுவது அரிது. அதிலும் ஆண் பெண் அன்புக்கு பெயரிடுவது அபத்தங்களையும் ஆபத்துகளையும் கொண்டது. நெப்போலியனுக்கும் ஆர்கலியைப் போல் அப்பா என்ற உறவுதானே அகிலத்தில் சகலமாய் இருக்கிறது.
அதுதான் அவன்பால் அவளை அன்பால் இணைத்தது. அவனிடம் இரங்கி இரக்கம் கொள்ளவும் வைத்தது. அந்த அமைதியில் மீண்டும் கண் கலங்கி விட, முகத்தை வேறு பக்கம் திருப்பியவன், “டீயைக் கொடு…” என்றவனின் குரல் கம்மியிருக்க
“டீ இங்க இருக்கு..” என்று ஸோபாவின் அருகில் அவள் காட்ட அவன் ஸோபாவில் உட்கார்ந்து டீயை எடுத்தவன், “உனக்கு..?” என்று கேட்க
“எனக்கு டீ காபி குடிக்கிற பழக்கமில்ல…” என்றாள்.
அவன் அமைதியாக டீயைக் குடிக்க, அதற்குள் ரஞ்சித் கையில் ஒரு பையோடு அவன் வீட்டு வாசலில் நிற்க, “வாடா… ரஞ்சி..”என்று ஆர்கலி குரல் கொடுக்க, உள்ளே வந்தவன் நெப்போலியனிடம் ஆறுதலாக “அண்ணா அப்பா நல்லா ஆகிடுவார்ண்ணா..” என்று சொல்ல, அவனைப் பார்த்து லேசாய்ப் புன்னகைத்தவன்,
“டீ குடிடா..” என்று சொல்ல “இல்லண்ணா…. இப்போதான் குடிச்சேன்..” என்று சொல்லி ஆர்கலியிடம் பையை நீட்ட, அவள் அதில் இருந்து டிபன் பாக்ஸூகளை வெளியே எடுக்க,
“என்னதிது..?” என்றான் நெப்போலியன்.
“சாப்பாடு மணி ஏழாகுது… காலையில இருந்து சாப்பிடல நீ…. ஹோட்டல்ல சாப்பிட்டா ஒத்துக்காது… அதான் எங்க வீட்ல இருந்து இவனை எடுத்துட்டு வர சொன்னேன்…”
“ஆமாண்ணா…. பெரியப்பா வேற நீங்க சாப்பிடலன்னு கவலைப்பட்டாங்க… சாப்பிடுங்கண்ணா..” என்று ரஞ்சித்தும் மல்லுக்கட்ட, “குளிச்சிட்டு வரேன்..” என்று எழுந்து போனான்.
“நீ கிளம்புடா…. இவன் சாப்பிடதும் நான் வரேன்..” என்று ஆர்கலி ரஞ்சியிடம் சொல்ல, “இல்லக்கா…. நீ தனியா இருப்ப… நான் கூட இருக்கேன்…” என்று சொல்லி ரஞ்சித் கிளம்பாமல் இருக்க,
“இங்க என்னடா பயம்…? ஷாலு, காயு, அப்பா தனியா இருப்பாங்க… ஆண்டாள் வீட்ல வேற யாருமில்ல.. நீ கிளம்பு…” என்று சொல்ல, “அதெல்லாம் அங்க பெரியப்பா இருக்காங்க…. ஒன்னும் பயமில்லக்கா.. நீ சும்மா இரு…” என்று அதட்டியவன் அங்கேயே உட்கார்ந்து போனை பார்க்க ஆரம்பித்தான்.
ரஞ்சித் எப்போதுமே இப்படி தான். அவன் உடன் பிறக்காவிட்டாலும் ஆர்கலி தானே அவனுக்கு அக்கா. காயத்ரி ஷாலினி எல்லாம் பிறப்பதற்கு முன் அவர்கள் இருவரும் தான் எப்போதும் ஒன்றாய் இருப்பார்கள். பழவேற்காட்டில் கூட ரஞ்சித் மட்டும் உடன் சென்றிருந்தால் ஆர்கலியைத் தனியே எல்லாம் விட்டிருக்க மாட்டான். எப்போதும் அவன் பார்வை பாதுகாப்பாக உடன்பிறந்தோரைக் கவனித்துக் கொண்டே இருக்கும். இப்போதும் அப்படியே இருக்க, சிறிது நேரத்தில் அவனுக்குக் காயத்ரியிடம் இருந்து போன்.
“அண்ணா… எனக்கு பிரிண்ட் அவுட்ஸ் எடுக்கனும்.. பைண்ட் பண்ணனும்… சீக்கிரம் வா..” என்று அழைக்க “ஒரு ஹால்ஃப் அன் ஹவர் ஆகும்.. வெயிட் பண்ணு…” என்றான்.
“ப்ச்… எனக்கு நாளைக்கே சப்மிட் செய்யனும்… அலைன்மெண்ட்லாம் செக் பண்ணி பிரிண்ட் எடுக்க டைம் ஆகும்… டைம் வேற ஏழுக்கு மேல ஆச்சு… கடையில கூட்டமா வேற இருக்கும்… நீ வரலன்னா நானே போறேன்..” என்று காயத்ரி சொல்ல
“சரி வரேன்.. இரு..” என்றவன் ஆர்கலியைப் பார்க்க “போயிட்டு வா… தனியா அனுப்ப வேண்டாம்..” என்று சொல்ல “நீ சீக்கிரம் வீட்டுக்குப் போ க்கா…” என்று சொல்லி விட்டு அவன் வீட்டிற்கு சென்றான்.
குளித்து முடிக்கவும் தான் நெப்போலியனுக்கு ஒரு தெளிவு பிறக்க, சட்டை பேண்ட் அணிந்தவன் அவர்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் அந்த ஆஞ்சநேயர் சிலையின் முன் நின்று,
“என் வரதனுக்கு ஒன்னும் ஆக கூடாது ஆஞ்சநேயா…. அவரை நல்லபடியா வைச்சிக்கோ… உன்னைத் தான் நம்புறேன்…” என்று உருகி வேண்டினான்.
கண் திறந்தவனின் கண்ணில் மெல்லிய நீர்க்கோடாய் இருக்க, அவனைப் பார்த்த ஆர்கலி, “அதான் அங்கிள் நல்லா ஆகிட்டாரே… நீ கவலைப்பட்டு அவரை டென்ஷன் செய்யாத…” என்று சொல்ல,
“அதெல்லாம் பயம் வேண்டாம்…. உனக்கு டவுட்னா டாக்டர்.ஷ்யாம் கிட்ட கேளு… டாக்டருக்கு நல்லா தெளிவா தெரியும்…” என்று சொல்ல, “ச்சே.. டென்ஷன்ல நான் மறந்துட்டேன்..” என்றவன் உடனடியாக ஷ்யாமிற்கு அழைத்து அனைத்தையும் சொல்ல, அவன் நண்பனுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லி,
“இந்த நேரம் பார்த்து அப்பா, அம்மா ஊர்ல இல்லையே டா… நான் வேணும்னா நைட் கிளம்பி வரவா..?” என்று கேட்க,
“இல்லடா ஷ்யாம்… நீ ஃபீரியா இருக்கப்பா வா… அதான் ஒன்னு இரண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க சொல்றியே… பார்த்துக்கலாம்…” என்றவனுக்கு இப்போது நம்பிக்கை மீண்டிருக்க, புன்னகையோடு ஆர்கலியைப் பார்த்தவன்,
“தேங்க்ஸ்… மாஸ்கோ சொன்னான் நீ தான் பணம் கட்டினன்னு… எனக்கு நேத்து ஒன்னுமே புரியல…” என்று சொல்ல “அது இருக்கட்டும் முதல்ல சாப்பிடு..” என்றாள்.
“ம்ம் வரேன்…. நான் இந்த ஹாஸ்பிட்டல் விஷயமெல்லாம் முடிஞ்சதும் உனக்கு செட்டில் பண்றேன்…”
அவன் சாப்பாட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு உட்கார்ந்தவன், சாதத்தைப் பார்க்க, மிகவும் சூடாக இருக்க, இப்போதுதான் வடித்ததுப் போல் இருக்க, “என்ன எல்லாம் சூடா இருக்கு…?” என்று கேட்க
“எல்லாம் சூடு பண்ணி எடுத்துட்டு வந்தான்… சாதம் சூடா காயத்ரியை வைக்க சொன்னேன்…. மதியம் வைச்சது ஆறியிருக்கும்…. நீ வேற காலையில் இருந்து பட்டினி இல்ல… அதான்..” என்று சொல்ல, “நீ மாணிக்கம் மாதிரியே இருக்க…” என்றான் புன்னகையோடு,
“அட நான் எங்கப்பா அளவுக்கு நல்லவ இல்ல…. நான் எங்க தாத்தா மாதிரி…” என்றாள் பெருமையாக.
அவனுக்கு அசைவமின்றி இறங்காது. முட்டையாவது வேண்டும். சனிக்கிழமை மட்டுமே அவன் சைவப்பிராணியாக இருப்பான். ஆனால் இன்று அத்தனையும் தலைகீழ். இருந்த பசிக்கு சீக்கிரமாகவே சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிக்கவும், பாத்திரங்களை அடுக்கியவள்,
“சரி.. நான் கிளம்புறேன்… எதாவது வேணும்னா அப்பாவுக்குக் கூப்பிடு… இப்ப சாப்பிட்டதோட இருக்காத….. நைட் கொஞ்சம் சாப்பிடு..” என்று அவள் வீட்டிற்குக் கிளம்ப, இவன் பீரோவைத் திறந்து தேவையான பணம், அவன் கார்ட் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி காரில் சென்றான்.
அடுத்த நாளே வரதராஜனுக்கு ஆஞ்சியோ செய்யப்பட, இரண்டு நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த வார இறுதியில் ஷ்யாம் பெங்களூரில் இருந்து வந்தவன், வரதனின் ரீப்போர்ட்ஸ் எல்லாம் வாங்கிப் பார்த்தான். கொலஸ்ட்ரால் மட்டும் அதிகமாக இருப்பதாகவும் இனி கொழுப்பு சத்துள்ள பொருட்களைத் தொட வேண்டாம் என்று சொல்ல,
“நீயே எதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டு போய்டு டா… என்ன சாப்பிடனும்னு சொல்லு… இனியொரு தடவ இப்படி ஆகக் கூடாது…” என்று நெப்போலியன் சொல்ல, ஷ்யாமும் டயட் சார்ட் கொடுத்து விட்டு,
“சாப்பாடு பழக்கம் சரியா இருந்தாலே போதும் மச்சான்… அண்ட் இனிமே நோ தண்ணி…. கண்டிப்பா கூடாது…” என்று அழுத்திச் சொல்ல “டேய் அவரை விட எனக்கு எதுவும் பெருசில்ல…. நான் பார்த்துக்கிறேன்…” என்றான் புரிந்தவனாக.
“அப்புறம் அடிக்கடி செக்-அப் கூட்டிட்டு போடா… பிபி சுகர் எல்லாம் கன்ட்ரோலா இருக்கனும்… இப்ப எல்லாம் நார்மல் தான்.. இருந்தாலும் பார்த்துக்கோ..” என்றான் மருத்துவனாக.
இதையெல்லாம் பார்த்த வரதனுக்கு தன் மேல் மகனுக்கு எத்தனைப் பிரியம் என்று பூரித்து தான் போனார். எல்லாம் ஒரு வாரத்துக்கு தான். அதற்கு மேல் அவன் தொல்லையை அவரால் தாங்க முடியவில்லை. மனிதர் நொந்து போனார். பதினைந்து நாள் வரை அவரை வீட்டை விட்டு நகர விடவில்லை அவன். அவன் கடையைப் பார்த்துக் கொள்ள மாஸ்கோவை அவரின் துணைக்கு வைத்தான். இப்படியே ஒரு மாதம் ஓட, அன்று மதிய சாப்பாட்டைக் கடைக்கு எடுத்து வந்திருந்தான் நெப்போலியன்.
மாணிக்கம், மாஸ்கோ எல்லாம் உடனிருக்க, ஆளுக்கு ஒரு தட்டைக் கொடுத்து சாப்பாட்டைப் பரிமாறியவன், வரதனுக்கும் பரிமாற, அவரோ சாப்பாட்டுத் தட்டைக் கையில் வாங்காமல்,
“நீ என்ன ரொம்ப இம்சை பண்றடா..” என்றார் கோபமாக.
“நீ ஹாஸ்பிட்டல் போய் படுத்துட்டு என்னை பண்ணினியா அப்படியா..?” இவன் நக்கலாகக் கேட்க,
“டேய்…. கறி தான் கண்ணுல காட்ட மாட்ற… என் நாக்கே செத்துப் போச்சு டா… நெத்திலி கருவாடு போட்டு குழம்பு வைடா…. இல்ல வாங்கிக் கொடு… நானே வைச்சுக்கிறேன்..” என்று கெஞ்ச
“வேண்டாம்டா தகப்பா… வாய்ல நல்லா வந்துடும் கறியே இல்லன்னு சொல்றேன். காஞ்ச கருவாட்டுல எவ்வளவு உப்பு….? அதான் உன் பிபியை ஏத்தி விடும்… ஒழுங்கா இந்த சாம்பார் சாதம் சாப்பிடுறியா இல்ல… நாளையில இருந்து ரசம் தான் ஊத்துவேன்…” என்றான் கடுப்பாக.
“உங்க நல்லதுக்குத்தான அவன் சொல்றான்… அன்னிக்கு அவன் பதறினது எங்களுக்குத் தான் தெரியும்…. சாப்பிடுங்க வரதன்..” என்று மாணிக்கம் நெப்போலியனுக்கு ஆதரவாகப் பேச
“அட போங்க மாணிக்கம்.. நானும் இந்த வாரம் செய்வான்.. அடுத்த வாரம் செய்வான்னு பொறுத்து பார்க்கிறேன்… நான் தான் இவன் கொடுக்கிற மாத்திரையெல்லாம் தினமும் சரியாப் போடுறேனே… இந்த வாரம் முதல்ல கீரை கடைஞ்சான்…. அப்புறம் காரக்குழம்புனான்.. அடுத்த நாளே அதுக்கு பெயரை மாத்தி புளிக்குழம்புன்னு சொல்றான்… ப்ராடு பய…. சரி இன்னிக்கு புதன் கிழமையாச்சேன்னே புள்ள நாக்குக்கு ருசியா எதாவது செய்வான்னு பார்த்தா சாம்பார் சாதம் தரான்..” என்று குழந்தை மாதிரி புலம்ப,
“உனக்கு இப்ப என்ன வேணும்…?” என்று கடுப்பில் நெப்போலியன் கத்த, “ஒரு ஆம்லேட்டாவது போட்டு தாடா… சாம்பார் கோவக்காய் பொறியல்…. என்னால முடியல…டா…” என்றார் பாவமாக.
காரம் சாரமாகவே சாப்பிட்டு வளர்ந்தவர். வயது காலத்தில் சரி, வயதான பின்னும் அவர் உணவு வழக்கங்களை மாற்றவில்லை. நெப்போலியன் அவன் வயதிற்கு சாப்பிடுவதை இவருமே சாப்பிட உள்ளம் வேண்டுமானால் இளமையாக இருக்கலாம் ஆனால் உடல்…?? அது மாய்வதற்கு முன் தேய்வது இயல்பு தானே…? இயற்கையும் கூட…!
“ஆம்லேட் என்ன…? ஆட்டுக்கறி பாயாவே சாப்பிடு… என் உயிரை எடுக்கலாம்…” என்றான் கோபமாக.
“டேய்… இப்ப என்னடா சாம்பார் சாதம் சாப்பிடனும்.. அவ்வளவு தானே..?” என்றவர் சாப்பிடத் துவங்க, “அவனுக்கு வக்காலத்து வாங்குறீங்களே மாணிக்கம்… நான் தான் கொழுப்பு வைக்கும்னு சாப்பிடக் கூடாது.. இவன் சின்னப்பையன் தானே..? இவன் சாப்பிட்டா என்ன…?” என்று கேட்டார்.
வரதராஜன் அசைவம் சாப்பிடவில்லை எனும்போது அவனால் மட்டுமே எப்படி சாப்பிட முடியும்..? அவன் உணவுப் பிரியன் தான். ஆனால் அதை விட ஏன் உலகில் இருக்கும் அத்தனையும் விட அவன் அவருக்குப் பிரியமானவர் ஆயிற்றே..! அவர் சாப்பிடும் உணவுகளையே இவனும் சாப்பிட்டான். அதுதான் வரதராஜனுக்குப் பொறுக்கவில்லை. அவருக்காக அவனும், அவனுக்காக அவரும் யோசிக்க, இதைக் கேட்டு மாணிக்கமோ ,
“ஏன் நீ சாப்பிட மாட்டேங்கிற…?” என்று கேட்க, “இருக்கறது இரண்டு பேர்… எனக்கு ஒரு சமையல்.. இவருக்கு ஒன்னுன்னா செய்ய முடியும்…. அதான்…” என்றான் விட்டேற்றியாக.
“அப்போ ஹோட்டல்ல சாப்பிடுடா..” என்றார் வரதன்.
“இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்டு மாத்திரை போடுற நீ… அரை மணி நேரம் கழிச்சு வீட்டுக்குப் போய் தூங்குற… நீ ஓடி கிழிச்சதெல்லாம் போதும்…. எனக்கு எப்ப சாப்பிட ஆசையா இருக்கோ அப்போ சாப்பிட்டுப்பேன்..” என்றவன் வலது கையை எடுத்து வாயில் வைத்து ‘வாயை மூடு’ என்றான் சைகையில்.
நெப்போலியன் சாப்பிட்டு முடித்தவன் வேலையாக வெளியே கிளம்ப, வரதராஜன் வருத்தமெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆர்கலிக்கு இப்பொதெல்லாம் அன்று விடுமுறை தானே. மதியம் சமையலுக்கு அவள் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருக்க, காயத்ரி பூண்டு உரித்தாள்.
“ஹே..! காயு.. நான் மதிய சமையலுக்கு உன்னை உரிக்க சொன்னேன்.. நைட்டுக்கோ நாளைக்கோ இல்ல… சீக்கிரம் செய்” என்று சொல்ல, “எனக்கு ஸ்லோவா தான் வருதுக்கா…நீ ஈசியா எதாவது வேலை கொடு…” என்று கேட்க
“ஒரு மணிக்கு வா… சாப்பிடலாம் எங்கிட்ட அதை தவிர ஈசியா எந்த வேலையுமில்ல..” என்று கிண்டல் செய்ய “ஹாஹா… அதையெல்லாம் காயு ஸ்பீடா செய்வா…” என்றாள் ஷாலினி.
இவர்கள் பேசும்போதே ரஞ்சித் கடைக்குச் சென்றவன் கறி வாங்கி வந்திருக்க, அதன் அளவு அதிகமாக இருக்க, “என்ன டா…. கறி ஒரு கிலோ மேல இருக்கும் போல..” என்று ஆர்கலி கேட்க “ஆமாக்கா… பெரியப்பா தான்… ஒன்றரை கிலோ வாங்க சொன்னாங்க…” என்று சொல்ல, ஆர்கலி அப்பாவிடம் கேட்க
“ஆமாடா ஆரு.. அது நம்ம வீரா இருக்கான்ல… அவன் இப்ப நான் வெஜ் சாப்பிடுறதே இல்லையாம்… வரதன் என்ன சாப்பிடுறாரோ அதான் சாப்பிடுறான். வரதன் ரொம்ப ஃபீல் பண்ணார்டா… எனக்காக இவனும் எதுவும் சாப்பிடுறதில்லன்னு.. ஹோட்டல்ல சாப்பிடுனாலும் கேட்க மாட்றான்.. ரொம்ப பாசம் டா அவன்… அதான் அவங்களுக்கும் கொஞ்சம் சேர்த்து செய்டா…” என்று சொல்ல,
“ஏன்ப்பா… அவன் அவங்கப்பா சாப்பிடலன்னு தான் சாப்பிடாம இருக்கான். இப்போ அவனுக்கு மட்டும் கொடுத்தா எப்படி சாப்பிடுவான்… மட்டன்லாம் அங்கிளுக்குக் கொடுக்க கூடாதுப்பா….” என்றாள்.
“அது வேறயாம்மா..?” என்று அவர் யோசிக்க, “ரஞ்சி…. இங்க வா…. அரை கிலோ மீன் வாங்கிட்டு வா…” என்று சொல்லி பணம் கொடுத்து அனுப்பினாள்.
“என்னடா.. கறி மீன் இரண்டு செய்ய முடியுமா….உன்னால…?”
“செஞ்சிடுவேன்ப்பா.. இருந்தாலும் அவன் ஓவர் பாசம் தான்… அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல பார்த்தேனே…” என்றாள் சிரிப்போடு.
மாணிக்கமோ, “கிண்டலா பண்ற… நீ..” என்று மகளின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி விட்டு செல்ல, ஆர்கலி சமைக்கத் துவங்கினாள்.
ஒரு மணிக்கெல்லாம் சமைத்து முடித்தவள் எல்லாவற்றையும் டிபன் கேரியரில் வைத்து அடுக்கி ரஞ்சித்திடம் கொடுத்து அனுப்பினாள். ரஞ்சித் போய் ஐந்து நிமிடத்தில் அவனிடம் இருந்து போன்.
“அக்கா…. இந்த அண்ணா வாங்கிக்க மாட்றாங்க… வேண்டாம்னு சொல்றாங்க…” என்றான்.
“அப்பா…. இந்தாங்க…. அவன் வாங்க மாட்றானாம்…. நீங்க தானே சமைக்க சொன்னீங்க.. அவன் திருப்பி அனுப்பினா அவ்வளவு தான்…” என்று மிரட்டலாக சொல்ல, போனை வாங்கிய மாணிக்கம்,
“என்ன வீரா நீ….? நீ எனக்காக எதாவது கொண்டு வந்தா சாப்பிடுறேன் தானே…? உனக்காக நான் ஆசையா கொடுத்து விட்டா இப்படி பண்றியே….” என்று வருத்தமாகப் பேச “இல்ல மாணிக்கம்… வேண்டாம்…” அவன் மறுக்க, இவரோ மல்லுக்கட்டினார்.
“இங்க பாரு வீரா… எனக்காக சாப்பிடு… உங்கப்பாவும் நீ அவருக்காக சாப்பிடாம இருக்கன்னு ஃபீல் பண்ணினார் தெரியும்… உங்கப்பாவுக்கும் சேர்த்து தான் கொடுத்திருக்கு… அவருக்கு சாம்பார் ரசம்னு ஊத்தாம.. இன்னிக்கு அவருக்குப் பிடிச்ச மாதிரி சாப்பிட கொடு… ஒரு வேளை சாப்பிட்டா ஒன்னும் ஆகாது..”
ஆர்கலி போனை அவரிடமிருந்து வாங்கியவள் “இங்க பார்…. அளவா சாப்பிட்டா எதுவும் ஆபத்தில்ல… நான் அங்கிளுக்காக ஸ்பெஷலா மீன் குழம்பு கொடுத்திருக்கேன்.. நீ மட்டன் சாப்பிடு.. அவருக்கு மீன் கொடு… சொல்லப்போனா மீன் ரொம்ப நல்லதும் கூட…” என்று சொல்ல, அவர் சாப்பிடாமல் எப்படி தான் மட்டும் சாப்பிட முடியுமென்று எண்ணத்தில் தான் அவன் மறுத்ததே. இப்போது அவருக்கும் இருக்கிறதென்பதால்,
“அப்படியா…” என்று கேட்டுக் கொண்டவன் “தேங்க்ஸ்…” என்று சொல்லி வைத்து விட்டு, ரஞ்சித்திடம் சாப்பாட்டை வாங்கிக் கொண்டான்.
“என்னப்பா எனக்கு தேங்க்ஸ் சொல்ற..” என்று ஆர்கலி வாடிப் போய்க் கேட்க, “இல்லடா…. எனக்கு செய்றது வேறடா…. நான் கேட்டேன்னு அவனுக்கு செஞ்ச…. நீயா அவங்கப்பாவுக்கும் செஞ்ச இல்ல… அதுக்காக ஆரு…” என்றார்.
மாணிக்கம் இப்படி சொல்ல மகள் புன்னகைத்தாள். அடுத்த நாள் ஆர்கலி காலையிலேயே மாணிக்கத்திடம், “அப்பா….நான் வரதன் அங்கிள் வீட்டுக்குப் போய் வாடகைக் கொடுத்துடுறேன்பா… அவர் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனப்போ பார்த்தேன்.. அப்புறம் பார்க்கவே இல்லை…. இன்னிக்குப் பார்த்துட்டு அப்படியே ஆபிஸ் போறேன்..” என்றாள்.
அவர்களிடம் வேலைக்குச் சேர்ந்த பின் வாடகையை மாணிக்கம் தான் கொடுப்பார். வரதராஜன் ஆஞ்சியோ முடிந்து வரவும் கற்பகம் குடும்பத்தோடு வந்துவிட அவர்களே நன்றாகப் பார்த்துக் கொண்டனர். இன்று போய் பார்த்து வரலாம் என்று அவர்கள் வீட்டிற்குப் போனாள். வரதராஜன் சாமி கும்பிட்டுக் கொண்டு இருக்க, நெப்போலியன் அப்போதுதான் எழுந்தவன், டீவியில் பாட்டு சேனலைப் போட்டான்
இவள் வாசலில் நின்று சத்தமிட, அவர்களுக்கு கேட்கவே இல்லை. அதுவும் நெப்போலியன் பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்திருக்க, இவளாகவே உள்ளே போக, ஒரு பக்கம் வரதராஜன் கண்மூடி கடவுளை வணங்க, நெப்போலியனோ,
‘சொடக்கு மேல சொடக்குப் போடுது..
என் விரலு வந்து…
நடுத்தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்குப் போடுது…’ என்று பாடல் ஓட, இவனும் பாடியபடியே ஸோபாவில் உட்கார்ந்திருந்தவன், ஷண நேரத்தில் ஸோபாவின் மீதே ஏறி நின்று ஒரு குத்தாட்டம் போட, இதையெல்லாம் கண்டவள் வாய் விட்டு சிரிக்க, அப்போதுதான் அப்பா மகனின் பார்வை இவள் பக்கம் திரும்பியது.