அவளது ஐந்து ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. இதன் பிறகு அவளுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வேறு அதிகமிருக்க, வாய்ப்பு வரவும் அதனைப் பற்றிக்கொண்டாள். அது மட்டுமில்லாமல் நெப்போலியனிற்கும் அவளுக்குமான உறவில் எதுவும் முன்னேறவில்லை. எப்போதுமே முதலடி வைக்க இவள் மனம் இடம் கொடுக்கா நிலையில், இந்த பிரிவானது அவனுக்குத் தன்னை உணர்த்திடுமா என்று எதிர்ப்பார்த்தாள்.
கொஞ்சமாவது அவனது ஈகோவை அவன் கடக்க வேண்டும் என்று நினைத்தவள் கண்டங்கள் கடக்க முடிவு செய்தாள். ஆர்கலியை வழியனுப்ப மொத்த குடும்பமும் வந்திருந்தனர். மாணிக்கம், வள்ளி, ரஞ்சித், காயத்ரி, ஷாலினி என எல்லாருமே.
விமான நிலையத்தில் ரவியும் ரத்னாவும் கூட வந்து இவர்களுக்காகக் காத்திருக்க, நெப்போலியன் இவர்களை விட்டு தள்ளி ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டான். வெளியே இயல்பாக இருந்தாலும் இன்னும் சிறிது நேரத்தில் ஆர்கலி அவனை விட்டு வெகு தூரம் போய்விடுவாள் என்ற எண்ணம் அவனை உள்ளுக்குள் புரள செய்ய, அவளுடனான தனிமைப் பொழுதினை அகம் அதிகமாக எதிர் நோக்க என்ன செய்வதென தெரியாமல்.
அதற்கு முயலாமல் அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தான். தூரத்தில் இருந்தாலும் அவன் விழிகளுக்குள் விரும்பியவளை விருப்பமாகப் பார்த்திருந்தான். ரவிவர்மனைக் கண்டதும்,
“ஏய் என்னடா எங்களுக்கு முன்னாடியே வந்துட்ட…” என்று அவளாகப் போய் முகம் மலர பேசி சிரிக்க, அவள் புன்னகைப் பிடித்தாலும், அதன் காரணம் பிடிக்கவில்லை.
ரவிவர்மனிடம் அவள் தானாகச் சென்று பேசியது மனதில் என்னவோ செய்ய, முறைத்தபடி உட்கார்ந்திருந்தான்நெப்போலியன். என்னவோ தோற்றதாக ஒரு தோற்றம். எதிர்ப்பார்ப்போ மங்கையிடம் மாற்றம்.
அவள் ரவிவர்மனை எப்படி நடத்துவாள் என்று கண்கூடாக கண்டவன். இன்று அவனிடம் நன்றாகப் பேசுபவள் தன்னை ஒதுக்கி விட்டாளே. அவனுடன் மகிழ்வாகப் பேசுகிறாளே என்று ஒருவித ஒவ்வாமையில் இருந்தான்.
‘நான் இல்லன்னை இவனெல்லாம் வந்திருப்பானா… என்னால் தானே இவர்கள் வந்தார்கள். அன்று இவர்களை சேர்த்ததற்குத் தான் என்னிடம் அப்படி சீறினாள்.. இவனிடம் இப்போது சிரித்து பேசுகிறாள்…’ என்ற எண்ணம் தீயாய் தகிக்க செய்யஅவள் அவனிடம் வரும் நொடிக்காக காத்திருந்தான்.
அங்கு ஆர்கலியிடம் ரவியோ, “ஆரு… அங்க உன்னை பிக் அப் பண்ண என்னோட ப்ரண்ட்ஸ் வந்துடுவாங்க… ஒன்னும் பயமில்ல..” என்றுசொல்ல,
“ஓவரா பண்ணாதடி… நல்லா எஞ்சாய் பண்ணு… புது எக்ஸ்பிரியன்ஸ்… பெஸ்ட் ஆஃப் லக்…” என்றவன், கொஞ்சம் தயங்கி,
“நான் ஒன்னு சொன்னா கோச்சுக்காத ஃப்ர்ஸ்ட்டைம் அப்ராட் போற.. அத்தைக்கிட்ட சொல்லிட்டு போ… பிடிக்கலன்னா வேண்டாம்… அதுக்காக எதுவும் பேசிடாத.. என்னால தாங்க முடியாது..” என்றான் அவள் பேச்சைத் தாங்க முடியாதவனாக, அதற்குப் பயந்தவனாக.
ஆர்கலிக்கு அதுவரை இருந்த நிலை மாறி ஒரு இறுக்கம் வந்தது. ரவியைக் காயப்படுத்த மனம் வரவில்லை. ஆனால் காயப்பட்ட நினைவுகள் மனதினில் வந்து போனது. எத்தனையோ முறை வாசலில் அம்மா வந்துவிட்டாரா என்று பார்த்த கணங்கள், வாழ்வின்முக்கியமான நொடிகளில் தாயின் நினைவு அவளுக்கு வராமல் இருந்ததேஇல்லை.
இத்தனைக்கும் அவள் அப்போது ஆறு வயது சிறுமி தான். எப்போதும் தாத்தாவின் செல்லப்பேத்தியாக அவருடன் சுற்றுவதில் தான் அவளது பொழுதே போகும். ஆனால் இரவானால் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் படுத்துக்கொண்டு தாயின் நெஞ்சில் முகம் புதைத்து தந்தை மீது கால் போட்ட உறங்கிய இரவுகள் இன்னும் அதன் ஈரம் காயாமல் நினைவில் மாறாமல் மனதில் உலா வர, உள்ளுக்குள் உடைந்தாள்.
ஆனால் வள்ளி வீட்டிற்கு வந்த இத்தனை மாதங்கள் அவர் முகம் கூட ஆர்கலி பார்க்க மாட்டாள். முற்றிலுமாக ஒரு நிராகரிப்பு. அவள் கண்கள் கலக்கத்தில் கலங்கி இருக்க,
“ஸாரிடி…” என்றான் ரவிவர்மன்.
“இட்ஸ் ஓகே…ரவி..” என்றாள் அமைதியாக.
அத்துடன் ரவி அவளிடம் வேறு பேச, ரத்னாவும் வந்து இணைய, அவளது மௌனத்துக்கு அவன் மொழி தர,
“அவ பேசுறது எனக்குப் புரியுது… நீ போ..” என்று ரவியை விரட்டியவள் ரத்னா பேசுவதை ஆவலாக ரசித்திருக்க, ரவி போன பின் தான் நெப்போலியனின் அகம் முகம் இரண்டும் இயல்பாக மூச்சு விட, ஆர்கலியை ரசித்திருந்தான்.
ஹூடியெல்லாம் அணிந்து ஜீன்ஸ் சிறிய டாப் என அவள் தோற்றத்தில் முதன் முறையாக வசீகரிக்கப்பட்டான். என்னவோ அவளைக் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் வர, தன்னையும் தன் எண்ணத்தையும் அடக்கி உட்கார்ந்திருந்தான். இன்னும் சற்று நேரத்தில் அவள் போர்டிங் பாஸ் வாங்கி விட்டு உள்ளே செல்ல வேண்டும் என்பதால்,
அப்பா, தங்கைகளிடம் எல்லாம் விடைப்பெற்றவள் தனியேரஞ்சித்திடம், “நீநல்லா பார்த்துப்ப தெரியும்… இருந்தாலும் சொல்றேன் இவளுங்க எதாவது பண்ணினாலும்ரொம்ப திட்டாதடா… பார்த்துக்கோ..” என்றாள்.
ஆர்கலிக்குப் பிரிவுத் துயர் எல்லாம் பெரிதாக இல்லை தான் எனினும் மனதில் லேசாக ஒரு பாரம். அவள் கல்லூரிக்கு நாலு ஆண்டுகள் அதன் பின் வேலைக்கு நாலு ஆண்டுகள் என்று தனியே இருந்தவள் தான். ஆனால் அப்போதெல்லாம் அவளுக்கென்று ஆத்தா, தாத்தா, சித்தப்பா, சித்தி என்று பெரிய குடும்பம் இருந்தது. இப்போது நிலைமை வேறாக இருக்க, கண்கள் கூட ரஞ்சித்திடம் பேசுகையில்லேசாய் கலங்கி விட,
“என்னக்கா..நீ..?” என்று அவள் கை பிடித்தவன்
“நான் இன்னும் கொஞ்ச நாள்ல வேலைக்குப் போக போறேன்… இன்னும் சின்ன பையன் இல்ல நான்…. நான் எல்லாரையும் நல்லா பார்த்துக்கிறேன்கா. உன்னோட ரொம்ப நாள் ஆசை இது…ச ந்தோஷமா போய்ட்டு வா… உன் உடம்பைப் பார்த்துக்கோ…. ஒழுங்கா சாப்பிடு… காசு செலவாகும்னு எல்லாம் பார்க்காத….”
“உனக்கு ஒன்னு சொல்லவா சம்பாரிச்சுட்டு லைஃபை எஞ்சாய் செய்யனும் நினைக்கிறதெல்லாம் முட்டாள்தனம். எத்தனை கோடி இருந்தாலும் வயசான காலத்துல என்ன செய்ய முடியும்.. வயசு இருக்கும்போதே எஞ்சாய் பண்ணிடனும்கா…” என்றான் பெரிய மனிதனாக.
ஆம் பெற்றோரின் திடீர் மரணம் அவனை அவ்வளவு யோசிக்க வைத்திருந்தது. நாளை என்ற ஒன்றெல்லாம் நிரந்தரமே இல்லை என்பதாக. அவனது வலிகளோ வடுக்களோ எதுவோ வார்த்தைகளாக வர, அது ஆர்கலிக்குப் புரிய, தம்பியைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.
அது போல் ஒரு அணைப்பில் தான் இருக்க வேண்டும். அவ்வணைப்பு இறுக்கமாகஇருக்க வேண்டும் என்ற ஆவல் நெப்போலியனுக்குள் பெருகிட, காதலால் கனிந்து அவளைப் பார்த்திட, அவள் ஸ்பரிசம் வேண்டும் போல் தோன்றியது. அவள் கை பற்றியது எல்லாம்கோபத்தில்தான். கொஞ்சலாகப் பற்றிய நினைவே இல்லை.
இப்போது அது வேண்டும் போல தோன்ற, தன்னிடம் வருவாளா என்றுதான் பார்த்தான். ரஞ்சித்திடம் பேசியவள் இவனைநோக்கி வரவும்,நோக்கம் நிறைவேறி விட்டதோ என்று அகமெல்லாம்ஆனந்த அருவி பொழிய ஆர்கலியை கண்டிட, அவனருகில் வந்தவள் பேசவே இல்லை.
அவன் விழிகளில் தெரிந்த காதல், அந்த பார்வையில் நிச்சயம் தடுமாறினாள் தான் தத்தை. ஆனால் அவனைக் கண்டதே போதும் என நினைத்தவள் முடிவிலிருந்து மாறவே இல்லை. நெப்போலியனுக்கோ அவள் எதாவது பேசிட மாட்டாளா என்று நெஞ்சம் தவித்தது. தித்தித்திப்பாய் சில மொழி எதிர்ப்பார்த்தவனை தீயில் தள்ளியது போல், அவளோ அவன் அருகில் இருந்த காபி ஷாப்பில்,
“ஒன் ப்ளாக் காபி..” என்றாள்.
அவள் பின்னேயே ரவியும் வர, அவனும் மற்றவர்களுக்கு சேர்த்து ஆர்டர் செய்ய, அடுத்த அரை மணி நேரத்தில் ஆர்கலி போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கி வீட்டினரிடம் விடைப்பெற்று உள்ளே சென்றிருந்தாள்.
அவள் சொல்லாமல் சென்றுவிட்டாள் என்பதை நெப்போலியனால் தாங்கவே முடியவில்லை. அவனது நம்பிக்கையின் நங்கூரம் ஆட்டம் கண்டுவிட, காய்ந்தான். அப்படியே எல்லாம் நின்று போன உணர்வு..!
உணர்வற்ற ஒரு உணர்வில் அவனுள்ளம். கோபம்ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் என்று போட்டி போட… எப்படி அவள் சொல்லாமல் போகலாம் என்று கோபம் வந்ததே தவிர, அவளிடம் தானே போய் சொல்லி இருக்கலாம் என்று மட்டும் கொஞ்சம் கூட தோன்றவே இல்லை.
ஆர்கலிக்கு நிலை வேறு. சொல்லிவிட்டிருக்கலாமோ என்று மனது பாரமாகத் தொடங்கியது. ஆனாலும் சுயமரியாதை விடவில்லை. எப்போதும் தானே சென்றால் அவனிடம் மரியாதை கிடைக்காது என்பது புரிய, அதை செய்யவில்லை.
அதுவும் அவன் கண்களில் தென்பட்ட அதிர்வு, கோபம் என அவனுணர்வுகளை உணர்ந்தாலும் கூட, எதுவும் செய்யவிலா நிலை. ஒவ்வொரு முறையும் இறங்கி செல்லும் வாழ்க்கையை கல்யாணத்திற்குப் பிறகான சண்டைகளை எல்லாம் அவளால் நினைக்க முடியவில்லை. அவளுக்குக் கண்டிப்பாக ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும்.
வேர் அவனாக இருக்க, வேறெதுவுமே அவளால் யோசிக்க முடியவில்லை. இந்த விலகல் கண்டிப்பாகத் தேவை. விலகாவிட்டால் விட்டுப்போக நேரிடும். விலகல் அவனிடம் விசாலத்தைக் கொண்டு வருமா? இல்லை விரிசலைக் கொண்டு வருமா என தெரியாத போதிலும், அதை செய்யத் துணிந்தாள் ஆர்கலி.
எல்லோரும் மீண்டும் காரில் ஏற வர, நெப்போலியன் ஸ்டியரிங்கில் தலை வைத்து உட்கார்ந்திருக்க, “என்னாச்சு வீரா..?” என்று மாணிக்கம் கேட்க
“ஒண்ணுமில்ல தலைவலி… நீங்க வண்டியில ஏறுங்க…” என்று காரின் கதவைத் திறந்துவிட
“ரஞ்சித்… நீ ஒரு காபி வாங்கிட்டு வா அண்ணனுக்கு தலைவலியாம்..” என்று சொல்லவும், “அதெல்லாம் வேண்டாம்..” என அவன் மறுத்தாலும் வாங்கிக்கொடுத்து அவன் குடித்த பின்னே வண்டியை எடுக்க விட்டார்கள்.
அவர்களை காஞ்சிபுரத்தில் விட்டவன் வீடு செல்லாது மீண்டும் நெடுஞ்சாலையில் காரை விட்டான். ஷ்யாமிற்கு அழைத்தவன்,
“என்னமோ பெருசா சொன்னியேடா… அவ இப்படி அப்படின்னு..”
“என்னாச்சுன்னு சொல்லுடா மச்சான்..” என்ற ஷ்யாமின் குரல் வேலை நிமித்தமாக சோர்வில் ஒலிக்க
“என்ன ஆகனும் இன்னும்…? ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டாடா…. என் பக்கத்துல வந்தும் கூட எதுவுமே பேசல என்னால தாங்கவே முடியல…” என்றான் அவ்வளவு வருத்தத்துடன்.
“இன்னும் மூணு மாசம் அவளை பார்க்க முடியாது… முன்னாடி நினைச்சா பார்த்திடலாம்… அவளுக்குக் காதல் கண்றாவின்னு எதுவுமே இல்ல… ச்சே… என்னை இப்படியெல்லாம் யாரும் செஞ்சதே இல்லடா… மொத்தமா செஞ்சுட்டா டா…. எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு… நான் யார்கிட்ட சொல்வேன்..” என்றான் அவளது பிரிவைத் தாங்கமாட்டாதவனாக.
ஷ்யாமிற்கு நெப்போலியனின் நிலை புரிந்தது. இதுவரையில் இது போன்ற உணர்வு எல்லாம் அவனுக்கு வந்தது இல்லை. ஷ்யாமிற்கு நண்பனைத் திட்டவும் மனமில்லை.
“விடுடா…! மூணு மாசத்துல வந்துடுவாங்க… அப்புறம் பேசிக்கலாம்..” என்று சொல்ல“ம்ம்…” என்று விட்டு வைத்துவிட்டான்.
இரவு பன்னிரெண்டு தாண்டியும் நெப்போலியன் வீட்டிற்கு வரவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. வரதராஜனுக்குக் கவலைத் தாங்காமல் மாணிக்கத்திடம் அழைத்துக் கேட்க, அவருக்கும் தெரியவில்லை. அந்த நேரத்திலும் மாஸ்கோவை விட்டு ஏரியா முழுவதும் தேட சொல்ல, அவனை எங்கேயும் காணவில்லை.
நேரம் ஆக ஆக வரதனின் பயம் அதிகமானது. குடித்துவிட்டு எங்காவது விழுந்துவிட்டானோ என்ற யோசனை வர, மனிதரின் உடலில் விதிர்விதிர்த்தது. கவலையோடு போனும் கையுமாக வாசலிலேயே அவனுக்குக்காகக் காத்திருந்தார்.