பிரிவு என்பது தூரங்களை மட்டும் நீளமாக்கிடாது. பிரியங்களையும் தான். பிரிவில் தான் பிரியம் பெரிதாகும், புரிதல் விரிதலாகும்..! பிரியங்களின் நீளம் நீண்டிட, முன்பை விட நெப்போலியனை அதிகமாக விரும்பினாள் ஆர்கலி. அவனுக்கான தேடல் காதலாகி அந்த காதல் மீகி அவனை மனதால் அதிகம் தேட, அவள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது.
இரண்டு மாதத்திற்குள் முடிய வேண்டிய ப்ராஜக்ட் தள்ளி போய் நான்கு மாதங்கள் ஆனது. அதனால் இன்னும் இன்னும் காதலும் காதலின் தேடலும் அதிகமாகி இருக்க, எப்போது அவனை காண்போம் என கண்கள் தவமிருக்க,அப்போதுதான் ஆர்கலி இந்தியாவில் வந்து இறங்கினாள்.
ஏர்ப்போர்ட்டில் அவனைத் தேடி கண்கள் சூழல, அவனது அலைப்பேசிக்கு அழைக்க அவன் எடுக்கவே இல்லை. ரஞ்சித் அவளுக்கு கால் செய்ய,
“அக்கா..! நான் வந்திருக்கேன்… உனக்கு நேரா இருக்கேன் பாரு.” என்று ரஞ்சித்தின் குரல் கேட்டு பார்த்தவள் அவனருகே லக்கேஜோடு போக,
“அக்கா மாமாவுக்கு வேலை இருக்காம். அதான் என்னை அனுப்பினாங்க..” என்று சொல்லி அவளிடம் இருந்து ட்ராலியை வாங்கித் தள்ள,
“நீஎப்போ வந்த… நீ வரன்னு சொல்லவே இல்ல..” என்றாள் ஏமாற்றத்துடன்.
“இன்னிக்கு லீவ்ல அதான் நேத்து நைட்டே வந்துட்டேன்… மாமா தான்நாளைக்கு எனக்கு வேலை இருக்கு.. நீ போய் அக்காவை பிக் அப் பண்ணிட்டு வான்னு சொன்னார்..” என்றவன் ஆர்கலி முகத்தைப் பார்க்க, அவளது ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிய,
“ம்ம் பரவாயில்ல விடு.. ஏதோ முக்கியமான வேலை போல…” என்று தனக்குத் தானே சமாதானம் சொன்னாள்.
பேச்சு மட்டுமே அப்படி. ஆனால் பேரலை மனதினை தாக்கியது. என்னை விட அவனுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை என்று. ஆர்கலிக்கு சின்னவயதில் இருந்தே எதிர்ப்பார்ப்பென்பதே கிடையாது. என்ன கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வது மட்டுமே அவள் பழக்கம், பண்பு எல்லாம். ஆனால் நெப்போலியன் மட்டுமே அதில் விதிவிலக்கு. இத்தனை நாள் விலகல் இன்னும் அவன் மீதான் அன்பை, பாசத்தை அதிகரிக்க செய்திருக்க, அவனை அணைத்துக் கொண்டு
“பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டான்னு ஸ்டேட்டஸா போடுற….” என்று அடிக்க வேண்டும் என்று ஆசையோடு வந்தாள்.
ஆம்…! உண்மையில் அப்படியே வாட்ஸப்பில் அவன் ஸ்டேட்டஸ் போட்டிருக்க, அவனது குறும்பில் அவளுக்கு சிரிக்கவே தோன்றியது. அவன் போன் செய்து சொல்லி இருந்தால் கூட மனம் ஆற்றுப்பட்டிருக்குமோ என்னமோ. அவன் அதையும் செய்யாமல் போக அகம் உலைக்களமாக உருமாறி, உறுகோபம் உருவாகியது.
அவரிடம் பேசியவள் பின் ரஞ்சித்திடம், “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… நான் ஈவினிங் வரேன்டா…” என சொல்லிவிட்டாள்.
அவன் போனதும், “எங்க மாமா உங்க புள்ள..? போன் பண்ணினா எடுக்க மாட்றார்..” என்றாள் கோபத்துடன்.
“அவன் நிறைய வேலை பண்றான்மா… ஏதோ முக்கியமான வேலைன்னு சொன்னான் என்னன்னு சொல்லவே இல்ல… வந்துடுவான் கண்ணு நீ சாப்பிட்டு தூங்கும்மா..” என்று சொல்ல அவர் சொன்னபடி சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்தாள்.
மீண்டும் மீண்டும் அவள் மனம் கேளாமல் அவனுக்கு அழைக்க, அவன் எடுக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் அவள் உறங்கிவிட மாலையில் தான் எழுந்தாள். எழுந்தவுடன் அவனுக்கு அழைக்க,அப்போதும் அவன் எடுக்கவே இல்லை. மீண்டும் ஒரு முறை அழைத்துப் பார்க்க, எடுத்தவன்,
“நான் அப்புறமா பேசுறேன் ஆரு…” என்று அவன் மெதுவாக சொல்ல, “உன்னால அழைக்க கூட வர முடியாதா…? போன் பண்ணினா எடுத்து பேசக்கூட முடியாத அளவுக்கு நான் முக்கியமில்லாம போய்ட்டேனா..?எங்க இருக்க நீ..?அப்படி என்ன வேலை பண்ற நீ..?” என்று கத்த
அவனுக்கும் கோபம் வர, “ஹே..! சும்மா உயிரை வாங்காம போனை வைடி..” என்று கத்தி காலை கட் செய்ய,கோபத்தில் போனைஅப்படியே விட்டுவிட்டு குளித்து உடைமாற்றி அப்பா வீட்டிற்குப் போனாள்.
முதல் முறை அவள் அமெரிக்கா போய் வந்த போது அவனே வந்து அழைத்து சென்றது. இருவரும் காபி அருந்தியது, கதை பேசியது. காதல் பேசியதெல்லாம் நினைக்க நினைக்க இன்றைய அவனின் உதாசினம் அவளது உள்ளத்தை கிழித்தது.
‘எதுவும் சொல்றது இல்ல… ஆனா கேள்வி கேட்டா எரிஞ்சு விழுறது.’ என்று மனதுக்குள் அவனை திட்டித் தாளித்தாள்.
சமாதானம் சொல்லிக்கொண்டாலும் என்னவோ சமனாகவே இல்லை மனம். இது அவள் குணமே இல்லை. இரண்டு மாத பிரிவு நான்கு மாதமாய் நீண்டது. மனதிற்குள் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்போடு வந்திறங்கி, அது எல்லாம் ஏமாற்றமாகிப் போனது. இப்போது பேசும்போதும் அவனது உதாசீனம் எல்லாம் அவளை கஷ்டப்படுத்த,
இன்று அவன் சமாதானம் செய்ய வரட்டும். என்ன சொன்னாலும் அவனை விட கூடாது என்று விடாப்பிடியாக நினைத்திருக்க, அவனோ சமாதானம் கூட செய்யாமல் போக, அதில் இன்னும் காயப்பட்டாள் ஆர்கலி.
அப்பா, காயத்ரி, ஷாலினி, ரஞ்சித் என அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தாலும் மனம் நெப்போலியனைத் தேடி கொண்டிருக்க,அவனோ ஏழு மணிக்கு தான் வீட்டிற்கே வந்தான். வந்தவுடனே,
“ப்பா… எனக்குப் பசிக்குது…” என்று கத்த“ஏன்டா விடிஞ்சதுமே சொல்லாம கொள்ளாம போன. மருமகளையும் அழைக்க போகல. நாலு மாசம் கழிச்சு வந்த பொண்ணை சமாதானம் செய்யாம பசிக்குதுன்ற… ஆர்கலி முகமே வாடி போச்சு தெரியுமா..?” என்று வரதன் திட்ட
“நான் என்ன அப்படியே வா விட்டேன் அவளை… பத்திரமா அவ தம்பிக்கூட அனுப்பிவைச்சேன்தானே? காலையில இருந்து நான் சாப்பிடல… இப்ப சாப்பிடவா இல்லை அப்படியே போய் அவளை சமாதானம் செய்யவா..?” என்று கோபத்தோடு நெப்போலியனும் பேசிட
அவன் சாப்பிடவில்லை என்றதும் உடனே அவர் சாப்பாடு எடுத்து வைக்க, வேக வேகமாக உண்டு முடித்தவன், அவனையே பார்த்துக் கொண்டு இருந்த வரதராஜனிடம்,
“என்ன பார்க்குற உன் மருமகளை எல்லாம் வெறும் வயித்தோட சமாளிக்க முடியாது. அதான்…” என்றபடி எழுந்து கொண்டவன் குளித்துவிட்டு கிளம்புகையில் தான் ஆர்கலியை எப்படி சமாளிக்க என்ற எண்ணம் எழ, அவளை வெகு நாட்கள் கழித்து பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பு வேறு அவனைத் தொற்றிக் கொள்ள, நிச்சயம் அவள் கோபப்படுவாள், அடித்தாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தான்.
அவனுக்கும் ஆர்கலியை அழைத்து வர ஆசைதான். ஆனால் என்ன முன்பு போல் ஏனோ தானோ என்று வாழவில்லை. ஒரு ஏற்றம் உருவாக வேண்டும் என்று எற்றம் கொண்டிருக்க, அதற்காக தன்னுடையை மொத்த உழைப்பையும் போட்டான். எப்படியாவது பெயர் சொல்லும்படி ஒரு முன்னேற்றம் என்பதே முதல் எண்ணமாக இருக்க, முழு முயற்சி மட்டுமே.
ஆர்கலிக்குத் தான் எந்தவிதத்திலும் குறைந்தவனாக இருக்க கூடாதென்பது மனதில் திண்ணமாக இருக்க, இனிமேல் எல்லாம் அவனால் படிக்க முடியாது என்று அவனுக்கே தெரியும். அதில் விருப்பமும் இல்லை. ஆனால் இவையாவும் நிச்சயம் அவனுக்கு அவள் படித்திருக்கிறாள் என்பதால் வந்த தாழ்வெண்ணம் இல்லை அது. அவன் படிக்கவில்லையே என்பதினால் வந்த ஒன்று.
தன்னால் அவள் யார் முன்னும் கீழிறிங்கி விட கூடாதெனநினைத்தான். அவன் மனைவிக்குதன்னால் பெருமை மட்டுமே வர வேண்டும் என நினைத்தான். எகோ ப்ரண்ட்லியான பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கி இருந்தான். இது திருமணம் முடிந்த பின்னே ஆரம்பித்த ஒன்றானாலும் பெரிய முதலீடும் இல்லை பெரிய வளர்ச்சியுமில்லை. ஆனால் லாபகரமாக ஓட,
பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள், கைவினைப் பொருட்கள், பைகள் என்று பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக அது ஒரு பக்கம் வளர, பெரிதினும் பெரிதாக அவன் மனம் கேட்க அவனுக்கு எப்போதுமே ஆட்டோமொபைல்ஸீல் ஆர்வம் அதிகம்.
அதனால் அதற்கான மோட்டார்ஸ், எஞ்சீன்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தின் டீலர்ஷிப்காக அலைந்து கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் அதை தயாரிக்கும் நிறுவனம் அமைக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்க, அவனுக்கு உண்ண கூட நேரமில்லை.
வட்டிக்குக் கொடுப்பதை மொத்தமாக நிறுத்திவிட்டான். இவன் தொழில் செய்யப் போகிறேன் என்றதும் வரதனும் பணம் எவ்வளவு ஆகுமென கேட்டு ட்ராவல்ஸின் கார்களை விற்க சொல்ல, அதற்கு அவனுக்கு மனமில்லை.
‘வரதன் ட்ராவல்ஸ்…’ அவர்களின் அடையாளம். முதன்முதலில் அவர்கள் இடத்தில் வந்த ட்ராவல்ஸ்நிறுவனம் அதுவே. இப்போது ஓலா, உபேர் என நிறைய வந்தாலும் அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் இருக்க, அதுவும் நன்றாகப் போக, அதை விற்க மனம் வரவில்லை.
பணம் பற்றாக்குறையாக வேறு இருந்தது. அதுவும் ஆர்கலி ஊரில் இல்லாத நான்கு மாதங்களில் அவனுக்கு உழைப்பே மூச்சாக..! பேச்சாக.. இருக்க, எல்லா வகையிலும் அவனை ஊக்குவித்தவர் தியாகராஜன். ஷ்யாமின் அப்பா.
அவர் ஆடிட்டராக இருக்கும் பெரிய கார் நிறுவனங்களில் இவனை அறிமுகம் செய்து வைப்பது செக்யூரிட்டி கையெழுத்திடுவது என எல்லாம் செய்து கொடுத்தார். அவர் சி.ஏ ஆவதற்குள் திருமணம் முடிந்து விட, பெரிதும் அல்லல்பட்டகாலத்தில் வரதன்நிறைய உதவிகள் செய்திருக்கிறார். அதனால் நெப்போலியன் மீது தனி பாசம் தியாகுவிற்கு. எப்போதும் அவனிடம்,
“டேய் இப்படி இருக்காத. படிக்கலன்னா பரவாயில்ல பிஸினஸ் பண்ணுடா… உனக்குன்னு ஒரு பெயர் வேணும்டா…” என்று சொல்லிக் கொண்டே இருந்த போதிலும் அப்போதெல்லாம் அவனுக்கு பெரிதாக அதில் ஆர்வமில்லை. தேவையுமில்லை. அதனால் அவருக்குப் பயந்து அவர் பக்கமே போகாமல் இருப்பான்.
இப்போது இன்னும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வந்த பின் தியாகராஜனிடம் தான் போய் நின்றான். அவனுக்காக பேங்கில் லோன் வாங்கித் தந்தது எல்லாம் அவர்தான். பணம் இருந்தாலும் அப்போதுதான் ஆர்கலிக்காக முழு பணம் கொட்டி ஜீப் வாங்கி இருந்தான். ஷோரூம்காக ஏற்கனவே இருந்த இடமொன்றை ரெனோவேட் செய்து வாங்கி இருந்தான். வரதனுக்கும்மாணிக்கத்திற்கும் அவனது பாக்கு மட்டை தொழில் மட்டுமே தெரியும். இதையெல்லாம் முடித்த பின் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான்.
நினைவில் இருந்து கலைந்தவன்,வரதனிடம் “நான் போய் ஆருவை அழைச்சிட்டு வரேன்..” என்று மாமனார் வீடு நோக்கி போனான்.