வள்ளி மகளுக்காக பலகாரம் கொடுப்பது, கஷாயம் கொடுப்பது என்று எல்லாம் செய்வார். ஆனால் அவர் எவ்வளவு பேசினாலும் ஆர்கலியிடம் இருந்து ஒருவார்த்தை வராது. அவர் செய்வதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு நாள் நெப்போலியனிடம் கூட ,
“அவங்க செய்றதெல்லாம் பார்த்துட்டுநான் பேசாம இருக்கும்போது எனக்கு என்னமோ கஷ்டமா இருக்கு. இப்ப நான் என்ன செஞ்சாலும் சொன்னாலும் கண்டுக்காம எல்லாம் பண்ண தெரியுது தானே அவங்களுக்கு… அப்படி அவங்க அப்பாவை எதிர்த்துட்டு வர வேண்டியதுதானே?” என்று அவனிடம் கேட்க
“முடிஞ்சது முடிஞ்சிப்போச்சு அவங்க உன்னை மாதிரி தைரியம் இல்ல போதுமா… உன் தாத்தா பக்கா கிரிமினல், குடும்பம் பிஸினஸ்னு எல்லாம் அப்படிதான் இருந்திருக்கான்…. இப்போ ஏன் அதையெல்லாம் நினைக்கிற விட்டுடு… நாங்க யாரும் உன்னைப் பேசுன்னு சொல்ல மாட்டோம் எல்லாம் உன் இஷ்டம் தான்…” என்று சமாதானம் செய்திருந்தான்.
அவள் பாத்ரூம் போக வேண்டி கால்களை மெதுவாக எடுக்க முயல,அந்த அசைவில் அவர் விழித்து விட,
“என்ன டா ஆரு என்னாச்சு..?” என்று அவர் பதற, “ஒன்னுமில்ல பாத்ரூம் போகனும்…” என்று சொல்லி எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்தவள்,
“உங்க மாப்பிள்ளை போன் பண்ணி வர சொன்னாரா…?” என்று கேட்க“ஆமாடா உனக்குக் கால் வலின்னு சொன்னார் அதான் வந்தேன் …”
“காயு தனியா இருப்பாளே”
“அப்பா இருக்கார்டா… மாப்பிள்ளை வந்து என்னை அழைச்சிட்டு வந்தார்…” என்று சொல்ல அமைதியாக கட்டிலில் வந்து படுத்தவள்,
“என்ன பார்க்குறீங்க தூங்குங்க…..” என்று சொல்லி அவருக்கு முகம் காட்டாது படுத்தவளுக்கு சின்ன வயதில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே உறங்கும் நினைவில் விழி கசிய, அந்த பக்கம் வள்ளிக்கோ மகள் தன்னிடம் பேசிய உணர்வில் விழிகள் வெள்ளமாய் பொழிந்தன.
அடுத்த நாள் அவர் போனதும், “என்ன நீ உன் அப்பா கூட தூங்க, என்னை அவங்க கூட தள்ளி விட்டியா…?” என்று ஆர்கலி வம்பிழுக்க,
“அப்போ அன்னிக்கு ஒரு நாள் நீ கால் அமுக்கல, அவங்க தான் பிடிச்சு விட்டு இருக்காங்க… இதுல நான் அன்னிக்கு அதுக்காக ஒரு கிஸ் வேற கொடுத்தேன்…” என்று அவள் முகம் சுழிக்க
“என்னடி ஓவரா பண்ற…. என்ன பெரிய கிஸ்… இப்பவே நீ கொடுத்ததை விட அதிகமா தரேன்…” என்று அவன் கண்ணடிக்க“போடா…!” என்றாள் செல்லமாக.
அடுத்த இரண்டு மாதங்களில் நெப்போலியனும் வரதனும் மகிழ்ச்சி கடலில் குதிக்கும் வண்ணமாக அவர்களின் வாரிசாக ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் ஆர்கலி.
நெப்போலியன், “என் சிங்கக்குட்டிக்கு ராஜா பெயர் தான் வைக்கனும்…” என்று சொல்லிவிட
“என்ன உன் பெயர் மாதிரியே வரலாறு உள்ள பெயரா இருக்கனுமா..?” என்று ஆர்கலி கிண்டல் செய்ய
“ஏன் டி இன்னமும் அதை சொல்ற… பாருய்யா உன்னால தான் இவ இன்னமும் என்னை கிண்டல் பண்றா..” என்று வரதனிடம் புகார் சொல்ல,
“அவன் கிடக்குறான் மா… என் பேரன் பெயர் நல்ல ராஜா பெயரா இருக்கனும்… அப்படி ஒன்னு யோசிச்சு சொல்லு …” என்று வரதனும் சொன்னார்.
அவர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்படி, அவர்கள் விரும்பியபடி குழந்தைக்கு, ‘நரசிம்ம வர்மன்’ என பெயரிட்டனர்.
அன்றுஆர்கலி தனது ஆறு மாத குழந்தையுடன் மாணிக்கத்தின் வீட்டில் இருந்தாள். அப்போதுதான் அவளும் காயத்ரியும் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு விட்டு வந்திருக்க, வள்ளி காய்கறி வாங்க கடைக்குப் போயிருக்க, மாணிக்கம் கடையில் இருக்க,ரவிவர்மன்குழந்தையைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.
“ஏய் ஆரு… பேபியை எங்கிட்ட கொடு..” என்று அவன் ஆசையாகக் கேட்க,“எங்க சிங்கக்குட்டி எல்லார்கிட்டையும் எல்லாம் வர மாட்டான்.. எங்கிட்ட தான் வருவான் மாமா…” என்று காயத்ரி சொல்ல,
“அதெல்லாம் சித்தப்பாக்கிட்ட வருவான்… என்னடா சிம்மா..?” என்று அவன் குழந்தை முன் நின்று கையை ஆட்ட, குழந்தையோ ஊசி போட்ட வலியில் இருக்க புது மனிதனைக் கண்டு அழ
“அச்சோ அழாத அழாதடா….” என்று ரவிவர்மன் சொன்னவன்,
“என்னடி ஆரு சின்ன வயசுலநீ கத்துற மாதிரியே கத்துறான்…” என்றான்.
“டேய் எல்லா குழந்தையும் சின்ன வயசுல கத்த தான்டா செய்யும்….” என்று ஆர்கலி குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே பேச“அது என்ன எங்க அக்காவை வாடி போடின்னு பேசுறீங்க மாமா?” என்று காயத்ரி பட்டென்று கேட்டுவிட
“என் அத்தைப் பொண்ணு நான் சொல்றேன் உனக்கென்னடி…?” என்று அவன் திருப்பிக் கேட்க,
“என்ன காயு நீ அவன் எப்பவும் அப்படிதானே பேசுவான் விடு…” என்று சொல்ல
“அய்யோ காயு… என்ன அவன் கிட்ட சண்டை போடுற நீ… ஊர்ல எல்லாம் அப்படி தானே பேசுவாங்க விடு..” என்றாள்
“அது என்ன கல்யாணம் ஆகிட்டா அவ எனக்கு அத்தைப் பொண்ணு இல்லையா…. அவளையும் அப்படி தான் சொல்வேன் உன்னையும் அப்படி தான் சொல்வேன்… போடி…” என்று அவன் காயத்ரியையும் வம்பு செய்ய,
“ஏன்டா இப்படி பண்ற குழந்தையை…?” என்றபடி வள்ளி கடைக்குப் போனவர் வர,“இதுவா குழந்தை குட்டி ஆட்டம் பாம்ப்…” என்றவனை காயத்ரி முறைக்க, ஆர்கலி அவளை அடக்கினாள்.
பேரன் பிறந்தது முதல் எல்லாம் பார்த்தவர் அவர் தான். தாயாக அவர் தவறவிட்ட கடமைகள் அனைத்தையும் மகள் தாயான போதுநிறைவேற்றினார். நரசிம்ம வர்மன் சிலரின் ஸ்பரிசத்துக்கு மட்டுமே பழகியிருந்தான். அம்மா, அப்பா, வரதன், வள்ளி, காயத்ரி இவர்கள் தூக்கினால் மட்டுமே அழ மாட்டான். வேறு யார் அருகில் வந்தாலும் வீறிட்டு அழுவான்.
“அத்தை உனக்காக தான் வெயிட் பண்ணினேன்… எனக்கு ஒரு டீ போட்டு கொடு டயர்டா இருக்கு. தாம்பரத்துல இருந்து டிரைவ் பண்ணிட்டு வந்தது..” என்று வள்ளியிடம் கேட்க, அவர் தன் மடியில் தூங்கும் பேரன் கொஞ்சம் அசைந்தாலும் முழித்துவிடுவானே என்று பார்க்க,
“ஏன்டா எங்கக்கிட்ட கேட்டா நாங்க போட்டுத் தர மாட்டோமா…?” என்ற ஆர்கலி காயத்ரியிடம்,
“அவங்களை பாப்பாவை வைச்சிக்க சொல்லு…. நான் டீ போடுறேன் நீயும் உள்ள வா…” என்று தங்கையிடம் சொல்ல,
ஆர்கலிக்கு அவர் என்னதான் எல்லாம் செய்தாலும் மனதில் அவர் மீதான வருத்தங்கள் மறையவில்லை. அதனால் முன்பு போல் அறவே பேசாது இருக்காமல் இப்படி ஜாடையாகப் பேசுவாள். டீ போட கிச்சனுள் புகுந்தவள், காயத்ரியை உள்ளே அழைத்து,
“என்ன டி அவன் பேசினா பதிலுக்குப் பதில் பேசுவியா… இது யார் உன் மாமா சொல்லிக் கொடுத்தாரா…?” என்று கேட்டாள்.
நெப்போலியனிடம் காயத்ரியும் ஷாலினியும் நல்ல நெருக்கம். உடன் பிறவாதவர்கள் இல்லாத குறையை அவர்கள் இருவரும் அவனுக்குத் தீர்த்து வைக்க, ரஞ்சித், ஆர்கலியை விட அவனிடம் நன்றாகவே மனம் விட்டு பேசுவார்கள். என்றோ பேச்சு வாக்கில் அவன் தான் சொல்லி இருக்க வேண்டும் என்று ஊகித்தவள் சரியாகக் கேட்க
“என்ன திட்டினா நான் மாமாக்கிட்ட சொல்லுவேன்…” என்று சொல்ல“ஹாஹா… சொல்லிக்கோ….” என்றவள் டீயைக் கொதிக்க விட்டு,
“அவன் உன்னை விட பெரியவன் அவன் சும்மா நம்மளை கிண்டல் பண்றான். எதிர்த்துப் பேசாம எதார்த்தமா எடுத்துக்கோ….” என்று புத்தி சொன்னவள்,
“இதை போய் அவன் கிட்ட கொடு…. நான் சாதம் வைக்கிறேன்…” என்றதும்“அவரென்ன மாப்பிள்ளையா நான் போய் கொடுக்க… போய் நீயே கொடக்கா” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ஆர்கலிக்கு சிரிப்பு வந்துவிட, அவளாகவே ரவிக்கு டீ கொண்டு போய் தந்தாள். காயத்ரி அப்படி சொன்னதும் அதை யோசித்த ஆர்கலி வீட்டினரிடம் பேசி, காயத்ரியும் சம்மதிக்க அடுத்த சில மாதங்களிலேயே காயத்ரி திருமதி.ரவிவர்மன் ஆனாள்.