“உனக்கு எத்தனை தடவ சொல்றது… மாமாவை பெயர் சொல்லிக் கூப்பிடாத அவன் நம்மளை அப்படியே கவனிக்கிறான்…” என்று ஆர்கலி நெப்போலியனின் கன்னத்தைக் கிள்ளியவாறே சொல்ல
“அடப்பாவி மகனே… அவ்வளவு அவசரமா அதை தான் சொன்னானா…?” என்று கேட்க
“ஆமா இன்னொரு தடவ இப்படி அவன் வந்து சொன்னான்… உன்னை பிச்சிடுவேன் நான்…” என்றாள் கோபமாக.
“ஏன் டி எனக்கு ஒரு டவுட் கேட்கவா…?”
“என்ன…?”
“இல்ல காயு எல்லாம் உன் மாமா மகனை வாங்க போங்கன்னுமரியாதையா பேசுறா… நீ என்னை வா போன்னு பேசுறியே இதை நம்ம மகன் கவனிக்க மாட்டானா..?” என்று கேட்டுவிட்டு அவளை கெத்தாகப் பார்க்க,
“அவ எவ்வளவு மரியாதையா அவனை கூப்பிடுவான்னு எனக்குத் தெரியும்… அதை விடு நீ என்னை வாங்க போங்கன்னா சொல்ற இல்லை தானே வா போன்னு தானே பேசுற…. இத்தனைக்கும் நான் அவன் முன்னாடி உன்னை டா போட்டுக் கூட பேச மாட்டேன்….”
“இப்போ நான் மட்டும் உன்னை மரியாதைக்காக வாங்க போங்க பேசி… நீ வா போன்னு பேசினா… என் பையன் சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க தான் மரியாதை கொடுக்கனும் அப்படின்னு நினைச்சு வளருவான்… பசங்க எப்படி வேணும்னாலும் பேசலாம். அப்படின்னு அவனுக்கு ஒரு நினைப்பு வந்துடும்… நம்ம இரண்டு பேரும் சரிபாதின்றப்ப பேசுறதும் அப்படியே இருக்கட்டும்… நம்ம எப்படி நடக்கிறோமோ… அப்படி தான் அவனும் நாளைக்கு நடப்பான்…”
“அப்போ சொல்லிக் கொடுக்க வேண்டாம்…வாழ்ந்து காட்டனும்னு சொல்ற….”
“ஆமா அதேதான்….”
“அப்போ பாரு உங்கூட நான் வாழ்ற வாழ்க்கையில, என் பசங்க நாளைக்கு எப்படி வாழ்றங்கன்னு…” என்றான் காதலினும் காதலாக.
“அப்புறம் நம்ம ஷாலு பாப்பாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு…”
“அப்படியா சூப்பர் சொல்லு. அவளுக்கும் இருபத்தைஞ்சு ஆகப்போகுது…. மாப்பிள்ளை என்ன பண்றாங்க…?” என்று அவன் முகம் பார்த்து ஆர்வத்தோடு கேட்க
“அவனும் டாக்டர் தான்..”
“எந்த ஹாஸ்பிட்டல். எந்த ஊர்… உனக்கு எப்படி தெரியும்..?”
“நம்மஷாலு வேலைப் பார்க்கிற ஹாஸ்பிட்டல் தான்… இதே ஊர் தான்.”
“அப்படியா என்ன பெயர் சொல்லு..நான் ஷாலுகிட்டையே கேட்கிறேன்?”
“டாக்டர்.ஷ்யாம்…” என்றதும் அவளுக்கு முதலில் புரியவில்லை.
புரிந்தவுடன், “என்னது அவனா.. உன் ப்ரண்டை சொல்றியா நீ..?” என்று அவள் கடுப்பில் பார்த்தாள்.
ஷாலினி இப்போது காஞ்சிபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைப் பார்க்க,அ தில் தான் ஷ்யாமும் வேலைப் பார்க்கிறான். அவளுக்காகவே பெங்களூரை விட்டு அவன் வந்ததும் கூட..!
“ஆமா டி.. அவனுக்கென்ன குறைச்சல்…?”
“என்ன குறைச்சலா… அவன் ஷாலுவை விட ஏழெட்டு வருஷம் பெரியவன்…. அதெல்லாம் சரிவராது…” என்றிட
“என்ன சரிவராது… அவன் கல்யாணம் செய்யாம இருக்க காரணமே ஷாலு தான்… அவனுக்கு ஷாலினியை ரொம்ப பிடிச்சுருக்காம்….” என்று சொல்ல
“என்ன சொல்ற நீ… அவ இங்க வந்தப்போ அவ ஸ்கூல் போன குழந்தை… அவன் அப்பவே டாக்டர். அப்போ என் தங்கச்சியை அப்படித்தான் பார்த்தானா… நான் அவனை என்னமோ நினைச்சா இப்படியா…?” என்று பேச
“நிறுத்து நிறுத்து… அவன் அவ காலேஜ் போன அப்புறம் நம்ம காயத்ரி கல்யாணத்துல பார்த்த பின்னாடில இருந்துதான் பிடிச்சிருக்கு சொன்னான். ரொம்ப நல்ல பையன் டி… நான் அவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன் என் செல்லமில்ல…” என்று அவளது கன்னத்தைக் கிள்ளி கொஞ்ச,
“உனக்காகவெல்லாம் பார்க்க முடியாது. முதல்ல ஷாலுக்கிட்ட பேசுறேன்..” என்றதும்
“இப்பவே பேசு…” என்றான்.
“ஏன்…. நாளைக்குப் பேசுறேன்…. என்ன அவசரம்.?”
“அவனுக்கு ஏற்கனவே முப்பதுக்கு மேல வயசாச்சு டி… கற்பஸ் புலம்புது முடிஞ்சா அடுத்த மூகூர்த்தம்ல கல்யாணம் வைச்சிடலாம். அப்படி தான் இருக்கு நிலைமை. சீக்கிரம் பேசுடி மார்கழி..” என்று அவன் நண்பனுக்காக கெஞ்ச
ஷாலினிக்கு அழைத்தவள், “ஷாலு டாக்டர்.ஷ்யாம் எப்படி டா..?” என்று கேட்க
“ஏன்கா தீடீர்னு… மாமாவுக்கே அவரைப் பத்தி தெரியுமே…” என்றாள்.
“உங்க மாமா ப்ரண்டை பத்தி நல்லா தானே சொல்வார். என் ப்ரண்ட் ஒருத்தங்க சிஸ்டருக்கு அவரைப் பார்க்க கேட்கிறாங்க…அதான் கொஞ்சம் சொல்லுடா..”
“அவர் நல்ல டாக்டர் கா… பேஷண்ட்ஸ்ட நல்லா அன்பா பேசுவார். அவருக்குப் பர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ் பேஷன்ட்ஸ் தான்…. சாப்பிடாம கூட வேலை பண்ணுவார்..” என்று சொல்ல
“ஷாலு நான் என்ன ஹாஸ்பிட்டல்ல வேலைக்கா அவரைப் பத்திக் கேட்கிறேன்… அலையன்ஸ்க்காக கேட்கிறேன்டா…. அவர் ஜெனரலா எப்படி சொல்லு…”
“நல்ல ப்ரண்ட்லி ஹெல்பிங் ஜோவியல்…” என்றதும்“அப்போ அவங்க்கிட்ட நல்லவிதமா சொல்லவா..?” என்று கேட்க
“சொல்லிடுக் கா…” என்றதும் தான் ஆர்கலிக்கு நிம்மதியாக இருந்தது.
அடுத்த மூன்றே மாதங்களில் ஷாலினி மிஸஸ்.ஷாலினி ஷ்யாமாக மாறி இருந்தாள்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு…………….
வெளியே நல்ல மழை, ஆர்கலி கிச்சனில் நின்று பஜ்ஜி செய்து, சட்னி வைத்தவள், அங்கிருந்தே,
“மாமா அவருக்குப் போன் பண்ணினீங்களா…? மழை எப்படி கொட்டுது பாருங்க… அவனுக்குப் பரவாயில்ல சகிக்கும் மைத்திக்கும் யாராவது ஒருத்திக்குசளி பிடிச்சா இன்னொருத்திக்கும் வந்திடும். அப்புறம் நம்மள படுத்தி எடுப்பாங்க…” என்றவளிடம்
பேரக்குழந்தைகளைக் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்தார். நெப்போலியனிடம் ஏதோ பேசியபடி அவனது ஒன்பது வயது மகன் நரசிம்மன் வர, வரதனின் இரண்டு கைகளையும் ஆளுக்கு ஒன்றாகப் பற்றியபடி,ஒரு பக்கம் சாகரி, இன்னொரு பக்கம் மைத்ரி.
அவரின் செல்ல தங்ககுட்டிகள்“பெரிய தங்கம்… சின்ன தங்கம்… வாங்க.. முதல்ல போய் டிரஸ் மாத்திடலாம்… கொஞ்சம் நனைஞ்சுட்டீங்க…” என்றவர் அப்பாவோடு வரும் பேரனைப் பார்த்து,
“சிங்கக்குட்டி நீயும் வாடா…. உங்கப்பனுக்கு அறிவே இல்ல பிள்ளைங்களை அழைச்சிட்டுப் போகும்போது பொறுப்பா வரனுமேன்னு. மழை வந்தா உடனே வர வேண்டியதுதானே..?” என்று பேரப்பிள்ளைகளை அறைக்குள் அவர் அழைத்து செல்ல
“அப்பா வர வர அதுங்களைப் பார்த்துட்டு நீ என்னைக் கண்டுக்க மாட்டேங்கிற. பார்த்துக்கிறேன் உன்னை..” என்று அவன் கத்த,
“நீ மட்டும் என்னவாம்…?” என்று ஆர்கலி கிச்சனில் இருந்து குரல் கொடுக்க“மார்கழி..!” என்று சத்தம் போட்டுக் கொண்டு அவளிடம் செல்ல,
“தயவு செஞ்சு அப்படி கூப்பிடாத உன் பசங்க அம்மா உனக்கு இரண்டு பெயரா அப்படின்னு கேட்டு என்னை ஒருவழி பண்ணிட்டாங்க…”
“ஹாஹா…! சரி… என்ன நான் உன்னைக் கவனிக்கல…” என்று அவளைப் பார்த்துக் கேட்க,“எனக்காக வாங்கின ஜீப்ல என்னை விட்டுட்டு உன் புள்ளைங்களை மட்டும் கூட்டிட்டு சுத்துற நீ..” என்று அவள் சொல்ல,
“உன்னை சுத்தனும் அவ்வளவுதானே?” என்றவன் உடனே அவளைத் தூக்கி சுற்றி, “அச்சோ விடு கீழ…. எனக்குத்தலை சுத்துது…” என்று பதற, “ஹா ஹா..” என்றபடி மெல்லமாக அவளை இறக்கி விட்டவன்,
“நீதானடி எனக்கு வேலை இருக்கு பசங்களை கூட்டிட்டுப் போன்னு சொன்ன…” என்றவன்,“என்ன சட்னி வைச்சிருக்க…?” என்று பார்வையை ஓட்டினான்.
“காரச் சட்னி…” என்றதும்
“உனக்குத் தேங்காய்ச் சட்னி தானே பிடிக்கும்…” என்றிட“உனக்கு மாமாவுக்கு பசங்களுக்கு எல்லாம் அதானே பிடிக்கும். என் ஒருத்திக்காக தனியா செய்வேனா…” என்றவள்
“எனக்கு எண்ணெய்ல நின்னது கசகசன்னு இருக்கு… போய் குளிச்சிட்டு வரேன்…” என்று சொல்லி குளித்து விட்டு வர, அதற்குள் வள்ளியும் மாணிக்கமும் வந்திருக்க,அனைவரும் முற்றத்தை சுற்றி, வானிலிருந்து விழும் மழைத்துளிகளைப் பார்த்தவாறே ஆளுக்கு ஒரு பேரக்குழந்தையை மடியில் வைத்திருந்தனர்.
வரதன் மேல் எப்பவும் போல் சிம்மா உட்கார்ந்திருக்க, வள்ளி மீது மைத்ரியும் மாணிக்கத்தின் மீது சாகரியும் உட்கார்ந்திருந்தனர். எல்லாருக்கும் சிம்மா காகித கப்பல் செய்து கொடுக்க,அதை தண்ணீரில் விட்டபடி விளையாடி, எங்கும் காகிதங்கள் சிதறிக்கிடந்தன.
குளித்து விட்டு ஆர்கலி வர, அவளுக்காக அறையில் காத்திருந்தவன் அவள் வந்ததும், அவள் மீது பேப்பர் ராக்கெட்டைத் தூக்கிப் போட தீடீரென தன் மேல் ஏதோ விழவும் பயந்தவள் ,
“ஏன் இப்படி பண்ற….” என்றபடி அவனை நெருங்கி தோளில் அடிக்க, அவளை ஒரு கையால் வளைத்துக் கொண்டவன்,
“ஹாஹா சிம்பா செஞ்சுட்டுஇருந்தான். அதான் எனக்கும் ஆசையா இருந்துச்சு உன் மேல ராக்கெட் விடனும்னு…” என்று சொல்ல
“அவன் இருக்கானே… பேப்பரா ஆக்கி வைச்சிருப்பான். ஒழுங்கா க்ளீன் பண்ணலன்னா தான் இருக்கு அவனுக்கு…” என்று அவள் பேச,
அவள் முகத்தை மென்மையாக வருடியவன், “விடுடி பசங்கன்னா அப்படி தான் இருப்பாங்க…” என்று சொல்ல“நீஇப்படி இருந்தே ரொம்ப நாளாச்சு….” என்றாள் ஏக்கம் நிரம்பிய குரலில், உண்மையும் அதுதான்.
நெப்போலியன் தொழிலில் இறங்கிவிட, முன்பு போல் அவனிடம் விளையாட்டுத்தனமெல்லாம் இல்லை. அதுவும் மூன்று குழந்தைகள் இருக்க, மிகவும் பொறுப்பாக மாறி இருந்தான். ஆர்கலியோ வேலையை விட்டு இருந்தாள். அப்போதும் அவளுக்கு வேலைகள் சரியாகவே இருந்தன. மூன்று குழந்தைகளை சமாளிக்க பெரும்பாடாக இருந்தது. ஆனால் அதை விரும்பியே செய்தாள்.
அதுவும் இரட்டையர்கள் வால்தனமெல்லாம் அவர்களை போலவே இரட்டிப்பு தான்.
“எப்படி இப்படி கட்டிப்பிடிச்சா..?” என்று அவளை மொத்தமாக அணைத்தபடி கேட்க,“ப்ச் அதில்ல இப்படி வீட்ல இருந்து அடிக்கடி இப்படி குழந்தைகளை வெளியே அழைச்சிட்டு போ… உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க…” என்றாள்.
“அப்போ நீ ?” என்று அவன் கேள்வியாகப் பார்க்க
“எனக்கு வெளியே எல்லாம் சுத்த வேண்டாம்… இப்படிநீ சுத்திகிட்டாலே போதும்..” என்று சொல்ல,
“சுத்தினா மட்டும் எனக்குப் போதாது…” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட, அவளும் பதிலுக்கு இன்னொரு கன்னம் காட்ட, அவனும் சளைக்காது முத்தமிட
அதற்குள், “ப்ப்பா…” என்ற அழுகையோடு அவர்கள் மகள் மைத்ரி வர,“என்னடா என் குட்டி தங்கம் அழறாங்க…” என்றபடி மைத்ரியைநெப்போலியன் தூக்கிக் கொள்ள,
“என்னாச்சு குட்டிம்மா ஏன் அழற..” என்று நான்கு வயது மைத்ரியிடம் ஆர்கலி கேட்க“ம்மா சாக்கி என்னோட போத்டை கவுத்துட்டா..” என்று அழ,
“பட்டுமா இங்க வா…” என்று ஆர்கலி சத்தம் கொடுக்க“ம்மா… நான் எதுமே பண்ணல அண்ணாவை கேளுங்க…” என்று சாகரி சிம்மாவைக் காட்ட,
“ஆமாமா….! சகியோட போட் காத்துல மைத்தி போட்டை இடிச்சதுல அது விழுந்துடுச்சு. அதுக்குப் போய் இவ அழற…” என்று சிம்மன் சாட்சி சொல்ல
“என் போத் பக்கம் ஏன் அவ போத் வந்துது?” என்று மைத்ரி அழ,“அழாதடா…!” என்றுநெப்போலியன் கண்களைத் துடைத்து மகளின் கன்னத்தில் முத்தம் வைக்க,
“ப்பா நானு…” என்று சாகரி அப்பாவைப் பார்க்க, “உனக்கும் தான்டா…” என்று குனிந்து சாகரிக்கும் முத்தம் வைக்க,
“அப்பா நான் தான் பர்ஸ்ட் பாய்..” என்று சிம்மா கேட்டான்.
“சிம்பா அப்படி சொல்லாத சொல்லியிருக்கேன்ல..” என்று ஆர்கலி அதட்டியவள்,மகனைத் தன்னோடு அணைத்து,
“என் சிம்மாவுக்கு அம்மாவோட கிஸ்…” என்று முத்தம் வைக்க,
இதையெல்லாம்பார்க்க அவ்வளவு லாளிதமாக இருக்க, “தங்கங்களா சிங்கக்குட்டி ஓடி வாங்க….” என்று வரதன் குரல் கொடுக்க,
“தாத்தா கூப்பிடுறாங்கல்ல போங்க…. அம்மா உங்களுக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்..” என்று அவள் கிச்சனுக்குள் போக, பின்னாலேயே நெப்போலியனும் வர,
பார்த்தால் அவளுக்குப் பிடித்த தேங்காய் சட்னியும் இருக்க, “நீ செஞ்சியா இல்ல அம்மாவா..?” என்று ஆர்கலி கேட்க
“நான் தான் எல்லாருக்கும் நீ செய்ற… உனக்கு நான் செய்றேன்…” என்று காதலாக சொல்ல,
அவனுடனான வாழ்வு கொடுத்த மகிழ்வில் முகம் பிரகாசிக்க, அவனுடன் இணைந்தபடி பிள்ளைகளுக்கு அருகே வந்து உட்கார்ந்தாள்.
“நான் அப்பாக்கிட்ட..” என்று சாகரி சொல்லி விட்டு மாணிக்கத்திடம் இருந்து எழுந்துநெப்போலியனின் மடி மீது உட்கார,
“நானும் அப்பா மேல..” என்று மைத்ரியும் ஏறிக்கொள்ள
“நான் தாத்தா கூட…” என்றபடி சிம்மா வரதன் மேல் உட்கார்ந்து கொண்டு, ஆர்கலி தந்த பஜ்ஜியை சாப்பிட
“ஆரும்மா நீ வந்து அப்பாக்கிட்ட உட்கார்…” என்று சொல்ல, ஆர்கலி தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் உட்கார, அருகே கணவன், மாமனார், கண் நிறைந்த பிள்ளைகள் என அவளுக்கு நிறைந்த நிறைவு தான்.
அதே மன நிலையுடனும் மனம் கொண்ட காதலோடும் கணவனைக் காண, அவளைப் போலவே காதலினும் காதலாக கண் நோக்கினான் அவன்.
அங்கு ஆகாய மழை மட்டுமில்லை… அன்பின் மழையும் கூட..!! காலம் போனாலும் அவர்கள் காதல் மீகியது. காதலினும் காதலாகியது