சந்தனபாண்டியன் அந்த ஊரின் மிகப்பெரிய செல்வந்தர், விவசாயம், அது சம்பந்தப்பட்ட வியாபாரம், ஆலை என எல்லாம் வைத்திருக்கிறார், அரசியலிலும் ஈடுபடுகிறார், கூடவே ஜாதி நம்பிக்கை கொண்டவரும் ஆவார். அந்த ஊர் சம்பந்தபட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியஸ்தர்களுள் அவரும் ஒருவர். அவருடைய மூத்த மகன் ராஜ் அவரை பின்பற்றியே வளர்ந்தவன், கூடவே முரடனும் ஆவான். அவனின் தங்கை தான் ரோஹிணி, அவளின் புகைப்படத்தை பார்த்து தான் அவர்களின் தாய் சாந்தி அழுதுக் கொண்டிருந்தார்.
பக்கத்தில் இருந்த சந்தானபாண்டியன், “ஏன் இப்போ அழுற அவ இப்ப நம்ம கூட இல்ல, அவளை பாத்து பாத்து வளத்து கேட்டது எல்லாம் செஞ்சி கொடுத்த நம்மள ஒரு சின்ன பொண்ணுகிட்ட முன்னாடி தலை குனியும்படி செஞ்சிட்டு போய்ட்டா, அவ ஃபோட்டோவ வச்சி அழுதுகிட்டு இருக்க” என்று ஆதங்கமாக சொன்னார்.
“அவ என்ன செஞ்சா என்ன, அவளை நான் பெத்துட்டேனே அவளை நினைச்சா அழுகை வருது” என்று மறுபடியும் அழுதவரை பார்த்து எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் சந்தனாபாண்டியன் அறையை விட்டு வெளியேறினார்.
அந்த கால பெரிய வீடு, திண்ணையில் ராஜ் சிலரை நிற்க வைத்து பேசிக் கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருக்க, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பணியாளை கூப்பிட்டு, “டேய் முருகா வந்தவங்களுக்கு உக்கார சேர் எடுத்து போட மாட்டியா” என்று அதட்டினார். அவனுக்கு தெரியும் இது வெத்து வார்த்தை தான் என்று, ஆனாலும் “இதோ எடுத்துட்டு வர்றேன் ஐயா” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
வந்தவர்களும் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “சேர் எல்லாம் இருக்கட்டும் ஐயா… விவசாயம் பாக்க மழை இல்ல, போர் போட்டும் தண்ணி அவ்வளவா கிடைக்க மாட்டேங்குது, உங்க நிலம் எப்படி மெது மெதுவா காஞ்சிப் போகுதோ அதே மாதிரி இப்ப அதை சுத்தி இருக்குற எங்க நிலமும் எங்கள ஏமாத்துது ஐயா, உங்களுக்கு வேற வியாபாரம் தெரியும் ஆனா நாங்க அப்படி இல்லையே இதுக்கு எதும் வழி தெரிஞ்சா சொல்லுங்க ஐயா”
“எதுக்கு இப்போ கஷ்டபடுறீங்க, நிலத்தை என்கிட்ட வித்துறுங்க சரியான விலைக்கு நான் வாங்கிக்குறேன்” என்று தெனாவட்டாக கூறினான் ராஜ்.
“இன்னுமே அங்க ஃபேக்டரி கட்டுற எண்ணத்தை நீ விடலையா ராஜ், உனக்கு எத்தனை தடவை சொல்றது அது வேண்டாம்னு” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டார், பாண்டியன்.
அவன் அவரை கண்டுகொள்ளவில்லை, “என்ன சொல்றீங்க” என்று வந்தவர்களை பார்த்து உருமினான்.
“ஐயா நாங்க கொடுத்தாலும் நடுவுல செத்து போன அழகப்பனோட 8 ஏக்கர் நிலத்தை எப்படி வாங்குவீங்க… அவர் பொண்ணு மீனாட்சி இப்போ எங்க இருக்கான்னு கூட தெரியாது, அப்படியே தெரிஞ்சாலும் அவ நிலத்தை தருவாளா… நாம அவளை அசிங்கப்படுத்தி அவ அப்பா சவத்தை பாக்க விடாம பண்ணதுக்கு அவள் ஊருக்கே மண்ணை வாரி இரச்சி சாபம் விட்டுட்டு போனாள் அதுதானான்னு தெரியலை ஆனா அப்போ இருந்து விளைச்சல் சரியா இல்லை”
“தெரியுதுல்ல அப்பறம் எதுக்கு அதுக்கு காரணமானவங்க முன்னாடியே இப்படி யோசனை கேட்டுட்டு நிக்குரீங்க, இந்த வீட்டுக்கு வாரிசு இல்லாதப்பவே தெரிய வேண்டாமா இவங்களால தனக்கு வந்ததையே காப்பாத்திக்க முடியாதுன்னு… போங்கையா போய் வேற வழி இருந்தா பாருங்க, முடிஞ்சா மீனாகிட்ட மன்னிப்பு கேட்டு பாவத்தை போக்குங்க” என்று ஆற்றாமையில் கத்தினாள், அங்கு வந்த ராஜின் மனைவி பிரேமா.
அனைவரும் அவளை அதிர்ச்சியில் பார்க்க, ராஜ் அவளை ஓங்கி அறைந்து, “உன்ன யாரு இங்க வர சொன்னது” என்றபடி தர தரவென உள்ளே இழுத்து சென்றான்.
சந்தனபாண்டியனோ, “இங்க நடந்தது யாருக்கும் தெரிய கூடாது” என்று அழுத்தமாக சொல்ல, அவர்களும் தலையாட்டினர்.
சென்னை நகரம்
காலையில் மீனா சகஜமாக மாறி இருந்தாள், அதனால் தான் காலையில் வழக்கமாக நடக்கும் அனைத்து சம்பவங்களும் அச்சு பிசகாமல் நடந்தது. ஹெப்சி எப்போதும் போல ஒவ்வொன்றிற்கும் சண்டித்தனம் பண்ண மீனா ஹை பிட்சில் கத்தி அவளை சமாளித்துக் கொண்டிருந்தாள். ஜேக்கப் தலை சீவியபடி இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தான். அவள் குழந்தையை கவனிக்கும் போது ஒருபோதும் அருகில் செல்ல மாட்டான், எப்போதாவது ஹெப்சி சேட்டைகளை பொறுக்க முடியாமல் தன்னை மீறி திட்டினால் அதற்கும் மகளுக்காக வக்காலத்து வாங்குவாள், மீனா. அப்போது அவள் மீது வரும் கோபத்தில் வார்த்தையை விட்டுவிடக் கூடாது என்று அவன் தான் தன்னை அடக்கிக் கொள்ள பெரும்பாடு படுவான். அதனாலே வீட்டில் அவர்களுக்கு இடையில் என்ன நடந்தாலும் அவளாச்சு பாப்பாவாச்சு என்று தன் வேலையை பார்ப்பான்.
அவன் சாப்பிட டேபிளில் அமரும் போது, மீனா சாப்பிட்டு கொண்டே மகளுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அவன் அவனுக்கு எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்க
“நீ எப்ப வேலை முடிஞ்சி வீட்டுக்கு வருவ… இல்ல லேட் ஆகும்ன்னா எதிர் வீட்டு பாட்டிகிட்ட நீ வரும் வர ஹெப்சிய பாத்துக்க சொல்லனும், எனக்கு நேத்து மாதிரி இன்னைக்கும் நாளைக்கும் வொர்க் லோட் அதிகம், எங்க வார்டு ல கூட வேலை பாக்குற ரெண்டு பேர் அவசரமா லீவுல போயிருக்காங்க, மேனேஜ்மென்ட் எங்களுக்குள்ளே அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்லி படுத்துறாங்க அதான் என்னால சீக்கிரம் வர முடியாது. உனக்கு எப்ப வேலை முடியும்”
“ஏற்கனவே சொண்ணல்ல நான் வந்துடுவேன்… இப்ப எங்க ஐடி ஆபீஸ் நார்மல்ல தான் போகுது சோ ஒரு ஹாஃப் டே லீவ் போட்டுட்டு உங்க மாமாவை மீட் பண்ணிட்டு அப்படியே ஹெப்சியையும் வெல்கம் பன்னிக்குறேன்” என்று சிரித்தான், அவன் சிரிப்பை ஆழ்ந்து பார்த்தவள், அதில் ஏதோ தவறு தென்பட, உடனே அவள் முகம் மாறியது, “நீ அவர்கிட்ட பேச வேண்டாம், ஏதோ நேத்து தெரியாம உளறிட்டேன், நீ அதை மறந்துரு” என்றாள் சாதாரணமாக.
“மறந்துரவா… நேத்து அவ்வளவு வருத்த பட்ட, உன் மாமாவ கன்வின்ஸ் பண்ணனும்னு சொன்ன தானே…இப்ப இப்படி சொல்ற உன் மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க, ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுற” என்று கண்ணை சுருக்கி கோபத்துடன் பேசினான்.
“யாரையும் கண்வின்ஸ் பண்ண தேவை இல்ல, என்ன யாருக்கும் நிரூபிக்கனும்னு அவசியமில்லை… நேத்து இருந்த குற்றவுணர்ச்சி இப்ப இல்லை சோ வேண்டாம் விட்டுறு போதுமா” என்று என்றுமில்லா திருநாளாய் அவனிடம் கத்தி பேசினாள்.
“ஆனா எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு அது உனக்கு புரியல ஏன் இப்படி என்ன படுத்துற உன்ன புரிஞ்சிக்கவே முடியல” என்றவனின் குரலில் கவலையோடு கோபமும் கலந்து இருந்தது.
இதை பார்த்துக் கொண்டிருந்த ஹெப்சி கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள், ஆனாலும் அவளுக்கு இது புதிது தான் அவள் பெற்றோர் ஒருநாளும் இப்படி சண்டை போட்டு அவள் பார்த்தது இல்லை, இது கூட அவளுக்கு ஜாலியாக தான் இருந்தது.
“என்ன பிரச்சனை சொல்லுங்க நான் யாரு கரெக்ட் ன்னு சொல்றேன்” என்றாள் நடுநிலையாக. இருவரும் அவளை ஒரே நேரத்தில் பார்த்துவிட்டு அப்படியே ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தனர். அவர்களே அவர்களை மறந்த சிரிப்பு அது, இருவருக்கும் நடுவிலிருந்த ஹெப்சியை ஒருசேர முத்தமிட போக, இருவர் முகமும் அருகே வந்தது. அவர்கள் கண்கள் பார்த்து மூளை சுதாரித்து விலகுவதற்குள், ஹெப்சி கைதட்டி சிரித்தாள். இருவரும் அவளை பார்க்க, அவள், “நீங்க லவ் தான பண்றீங்க, எனக்கு தெரிஞ்சு போச்சு” என்று ஏதோ பெரிதாக கண்டுபிடித்தவள் போல வக்கணம் காட்டினாள்.
இருவருக்குமே சங்கடம் தான், உடனே விலகி, மீனா, “உனக்கு யாரு இதை எல்லாம் சொல்லி கொடுக்குறது”
“என் பிரெண்ட்ஸ் தான் சொல்லுவாங்க, அவங்க அப்பா அம்மா எல்லாம் இப்படி தான் ன்னு சொல்லுவாங்க சண்டை போடுவாங்க, சாரி கேப்பாங்க, கட்டிப்பிடிச்சுக்குவாங்க எல்லாம் சொல்லுவாங்க, அப்பறம் அவங்க எல்லாம் ஒண்ணா தான் தூங்குவாங்களாம், உங்க ரெண்டு பேர் நேம் பாத்துட்டே நீங்க கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பண்ணிருப்பீங்கன்னு சொல்றாங்க, அப்போ ஏன் நீங்க அவங்கள மாதிரி இல்ல, நாம மட்டும் ஏன் ஒன்னா ஒரே ரூம்ல இருக்க மாட்டேங்குறோம், இந்த கேள்வி தான் என் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு” என்று அவள் தலையை இருகைகளாலும் பற்றிக் கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டி காமெடியா செய்து அவள் பூ போல சிரித்தாள்.
அவள் சாதாரணமாக பேசிவிட்டாள், அதையும் மறந்து அவள் சிரிக்கவும் ஆரம்பித்தும விட்டாள். ஆனால் பெரியவர்களுக்கு தான் அவள் கேள்விகள் முள்ளாய் தைத்தது. ஜேக்கப்க்கு மகளின் மனநிலை நன்கு புரிந்தது, இல்லாததற்கு ஏங்குவது தானே மனித இயல்பு, அதே தான் அவளும் செய்கிறாள். என்னதான் அவர்கள் ஒரு குடும்பமாக காட்சியளித்ததாலும் மீனாவுக்கும் அவனுக்கும் இடையே ஆன மெல்லிய விலகலை வெளியே இருந்து பார்க்கும் சிலர் கூட கண்டுபிடித்து விடுகின்றனர். “புருஷன் பொண்டாட்டின்னு சொல்லிக்குறாங்க ஆனா ஒரு ஒட்டுதலே இல்லாம இருக்குறாங்க” என்று அவர்கள் செவிபடவே பேசி இருக்கின்றனர். அதை மீனாவிடம் நேரடியாக கேட்டும் இருக்கிறார்கள், அதனாலே அவள் அவன் ஊருக்கு வருவதே இல்லை. வெளியே இருப்பவர்களே கண்டுபிடித்திருக்க, உடனிருக்கும் ஹெப்சி பேசியதில் ஆசிர்யமில்லை. ஒரு குடும்பம் என்னும் பிணைப்பை தானே அவளும் நியாயமாக எதிர்பார்க்கிறாள்.
அவளை அப்படியே அனைத்து தூக்கியவன், அவள் கன்னத்தில் முத்தம் பதித்து, “என் பாப்பாக்கு என்ன வேணும் சொல்லுங்க ஸ்கூலுக்கு போற வழியில வாங்கித்தரேன். அப்பறம் ஏன் எல்லாரும் போல அம்மா அப்பா இருக்கணும் நாங்க டிஃபரண்ட்”
“ஏன் நீங்க டிஃபரன்ட்” என்று கேள்வி கேட்டாள் மகள்.
மீனா, “அவ இன்னும் கொஞ்சம் வளந்தா புரிஞ்சிப்பா, விடு ஜேக்கப்” என்றாள் பரிவாக.
“அதுவரை அவளுக்கு ஸ்ட்ரெஸ் தானே அதுக்கு என்ன பதில் சொல்ல போற… என் பொண்ணுக்காகவாவது இன்னைக்கு உன் மாமாவை மீட் பண்ணத்தான் போறேன் இனி எந்த போய் வாழ்க்கையையும் அவ உண்மைன்னு நம்ப அவசியமில்லை” என்றான் உறுதியாக.
அவளோ எங்கோ பார்த்தபடி, “ஒன்னும் தேவையில்லை நானும் என் பொண்ணுக்காக எல்லாத்துக்கும் ஒத்துக்குறேன், ஒரே ரூம்ல தூங்கலாம், இனி எதுவும் பொய்யா இருக்க வேண்டாம்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அறைக்குள் சென்று கதவை மூட, அவன் அந்த கதவை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.