அந்த இரவில் ஜேக்கப் அவன் உயிரை காத்துக்கொள்ள முள்ளுக்காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தான். அவனை யாரும் துரத்துகிறார்களா என்று பின்னால் திரும்பி பார்க்க, ராஜ் (ரோஹினி அண்ணன், சந்தனபாண்டியனின் மூத்த மகன்) மெல்ல ஓடும் ரயில் பெட்டியிலிருந்து அரிவாளுடன் கீழே குதித்தான். அதை பார்த்து இன்னும் பயந்த ஜேக்கப், முன்பை விட வேகமாக ஓடினான்.
ராஜ் உரத்த குரலில் கத்தினான், “டேய் நில்ரா… என் வீட்டு பொண்ணு மனசை கெடுத்துட்டு இப்போ உசுருக்கு பயந்து ஓடுறியா… நீ எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்” என்று கொஞ்சம் கூட நிலை தடுமாறாமல் ஜேக்கப்பை பின் தொடர்ந்தான்.
ஜேக்கப்பும் அதே ரயிலிலிருந்து தான் குதித்திருந்தான், ரயில் அடுத்த ஸ்டேஷனில் நிற்க போகிறது என்பதற்காக கொஞ்சம் தூரத்திலிருந்தே ரயில் மெதுவாக செல்ல, ராஜ் அவனை ரெயிலுக்குள் வைத்து பயமுறுத்த அவன் அங்கிருந்து வெளியே குதித்திருந்தான்.
இப்போது ஜேக்கப்க்கு ராஜ் அவனை உயிரோடு விடப் போவதில்லை என்று உறுதியாக தெரிந்தது, தெரியவில்லை இதுவே அவன் மூச்சுவிடும் கடைசி இரவாக கூட இருக்கும் என்று அவன் மனது வலிமை இழந்து கொண்டிருந்தது. அவனையும் மீறி அவன் கழுத்தில் போட்டிருந்த சிலுவை செயினை அவன் கை பற்றிக் கொண்டது.
அதே சமயம் ரயிலினுள், 3 பேர் ரோஹினியையும் மீனாவையும் காவலில் வைத்திருந்தனர். அதில் ஒருவர், “இங்க பாரு ரோஹினித்தா ஒழுங்கா அடுத்த ஸ்டேஷன்ல எங்க கூட இறங்கி வந்துரு. உன்ன நாளைக்கு பொண்ணு பாக்க வர்றாங்கன்னு சொன்ன உடனே அவன் கூட யாருக்கும் தெரியாம சென்னை கிளம்பிட்டேல்ல… அவன ஊருக்கு கூட்டிட்டு வந்த அன்னைக்கே ராஜ் இனம் கண்டுகிட்டான், இன்ன விஷியமாத்தான் இருக்கும்னு எல்லாரும் அரசல் புரசலா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதான் அப்பா ஊர் வாய அடைக்க உன்கிட்ட சம்மதம் கேட்காம மாப்புளை பாக்க வர சொன்னாங்க… ஆனா நீ அப்பா கௌரவத்தையும் யோசிக்காம ஊர் சொல்ற மாதிரி அதுதான்னு அவன் கூட ஓட பாக்குற…”
“ஐயோ… கல்யாணம் வேணாம்னு சொன்னா அதுக்கு ஜேக்கப் தான் காரணமா… யார் சொன்னா, ஊருக்காக எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, அதான் வீட்டைவிட்டு வந்தேன்… நீங்க ஏன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீங்க… அண்ணனை ஜேக்கப்ப விட்டுற சொல்லுங்க பிளீஸ் மாமா” என்று அழுதாள் ரோஹினி.
அவள் அருகிலிருந்த மீனா, “சத்தமா பேசாத, அதை கேட்டு இந்த பெட்டில அந்த கடைசில இருக்குற 2 பெரும் எந்துருச்சு வந்துற போறாங்க, அப்பறம் அவங்களையும் இவங்க ஏதாவது பண்ணிட போறாங்க” என்று சொல்லி முடிக்கவில்லை, அவள் கண்ணத்தில் பளார் என்று ஒருவன் அடித்தான். அவள் கண்கள் கலங்கிவிட்டது, வலியில் கத்த அவள் வாயை ஒருவன் பொத்தினான்.
“செல்லாட்டைக்கு வாய் பாத்தியா சித்தப்பு… நீ என்ன அவங்களோட கூட்டுக்களவானியா” என்றபடி மேலும் அவளை அவன் அடிக்க கை ஓங்க அவனை மற்றோருவன் பிடித்தான்.
“டேய்… வந்த வேலைய விட்டுட்டு அவளை அடிச்சுட்டு இருக்க… அமைதியா இருக்க தெரியாது, சத்தமில்லாமல் இருந்தாதான் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி போகமுடியும்” என்றார் மூவருள் பெரியவர்.
அங்கு அனைவரும் மீனாவின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்க, ரயிலும் வேறு ஏதோ ரயில் கடப்பதால் ஒரு தொலைதூரப் பகுதியில் நின்றிருந்தது, சட்டென ரோஹினி ரயிலிலிருந்து இறங்கிவிட்டாள். அந்த இருட்டில் ரோஹினியின் கண்களுக்கு தொலைவில் ஒரு சின்னக் கோவிலின் மின்விளக்கு மட்டும் தான் தெரிந்தது. அங்குதான் ஜேக்கப் சென்றிருக்க கூடும் என்று தோன்ற அந்த கோவிலை நோக்கி பயத்துடன் என்னவோ எல்லாம் நினைத்துக் கொண்டு ஓடினாள்.
மீனா சென்னையில் வேலைக்கு சேர்ந்து 6 மாதம் இருக்கும். ஜேக்கப், ரோஹினி, மீனாட்சி மூவரும் ஊர் முழுக்க சுத்தி திரிந்து களைத்திருந்த தருணம். மீனா வந்ததால் காதலர்களுக்கான தனிமை கிடைக்கவே இல்லை என்ற வருத்தம் இருவருக்குள்ளும் ஊடுருவி இருந்தது.
அன்று ஜேக்கப் ரோஹினி இருவரும் தனியாக வெளியே செல்வதற்காக வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தனர். மீனாவின் ஏன் என்ற கேள்விக்கு தலைவலி என்று ரோஹினி பொய் சொல்ல, அவளும் அதை நம்பி அவளுக்கு மாத்திரை கஷாயம் எல்லாம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்றிருந்தாள். அவள் சென்றதும் வீட்டுக்கு வந்த ஜேக்கப்புடன் ரோஹினியும் வெளியே சென்றுவிட்டு மீனா வருவதற்கு முன்பே வீடு திரும்பி இருந்தனர்.
“ஆனாலும் நீ மீனாவ பாத்து ரொம்ப தான் பயப்படுற… அவ வந்துடுவா வீட்டுக்கு சீக்கிரம் போணும்னு அவசரபடுத்தி நம்ம நேரத்தை என்ஜாய் பன்னவே விடமாட்டேங்குற… அப்படி என்ன சொல்லிடுவா அவ… அவ ஜஸ்ட் சின்னபொண்ணு” என்று ஜேக்கப் தன் வருத்தத்தை சொன்னான்.
அவன் அருகில் வந்து அமர்ந்த ரோஹினி, “எக்சாக்ட்லி, அதான் நானும் சொல்ல வர்றேன், அவ சின்னபொண்ணு, அவ நம்மள பாத்து கெட்டு போயிற கூடாதுல்ல ஆஸ் அ சிஸ்டர் எனக்கு அந்த பொறுப்பு இருக்கு” என்று சாதாரணமாக சொன்னாள்.
“நாம என்ன தப்பா பண்றோம் அவ கெட்டு போறதுக்கு… லவ் பண்ணி 3 வருஷம் ஆகுது உருப்படியா ஒரு கிஸ் கூட பண்ணது இல்லை” என்றான் எரிசல்லாக.
அவள் சொன்னதன் அர்த்தம் புரிய அவளை சட்டென திரும்பிப் பார்த்தான், அவளோ சிரித்துக் கொண்டே ஓடினாள். அவள் ஓட அவன் துரத்த, கடைசியில் விளையாட்டு விபரீதம் ஆனது தான் மிச்சம்.
அன்றிலிருந்து ஜேக்கப்பும் ரோஹினியும் கொஞ்சம் மன சஞ்சலத்திலேயே நாட்களை கடத்தினார்கள். எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருவருக்குமே வர, அதற்கு சந்தர்ப்பம் அமைவது போல் ராஜ்ஜின் திருமணமும் கூடி வந்தது. அந்த திருமணத்துக்கு ஜேக்கப்பை அழைத்துக் கொண்டு போய் தந்தைக்கு அறிமுகப்படுத்தி எப்படியாவது தந்தையிடம் நன்மதிப்பை பெற்று அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தோடு ஜேக்கப்புடன் சொந்த ஊருக்கு கிளம்பினாள் ரோஹினி. கூடவே மீனாவும் எதை பற்றியும் அறியாமல் தந்தையை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்துடன் 3 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
ரோஹினிக்கு அவள் அப்பா முன்பு போல் தான் சொல்வதர்க்கெல்லாம் தலையாட்டுவார் என்ற எண்ணம் எல்லாம் இல்லை, ஆனால் அவள் பக்கமிருக்கும் நியாயத்தை கொஞ்சம் காது கொடுத்து கேட்பார், அவளுக்கு ஜேக்கப்பை ஏன் பிடித்திருக்கிறது என்று கொஞ்சமேனும் யோசிப்பார் என்ற நம்பிக்கையில் தான் சென்றாள்.
ஆனால் அங்கு ஊரில் நிலைமை வேறாக இருந்தது, ராஜ் அடுத்த தலைமுறை ஜாதி வெறியனாக தலை தூக்கி இருந்தான், ஒரு ஜாதிக்கட்சியில் வேறு இணைந்து இருந்தான். சந்தனபாண்டியனுக்கும் மகன் செய்வது சரி என்ற நிலைபாடே இருந்தது, அது அவர் விதைத்த விதை அல்லவா அதில் எப்படி மாறுபடுவார். அதற்கும் மேலாக தனியார் கம்பனி ஒன்றுக்கு அந்த ஊரில் தொழிற்சாலையை நிறுவ நிலம் தேவைப்பட்டது, அதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணியை ஜாதிகட்சியால் அந்த ஊரில் செல்வாக்கு பெற்றிருந்த ராஜிடம் கொடுத்திருந்தனர். ராஜ் அதை மெது மெதுவாக ஊர் மக்களிடம் தெரியப்படுத்த, அவர்களுக்கு விவசாயத்தில் இருக்கும் கஷ்ட நஷ்டத்தை சொல்லி மூளை சலவை செய்து நிலத்தை வசப்படுத்த பார்த்துக் கொண்டிருந்த சமயம், அது விவசாயத்தையே உயிராக நேசிக்கும் அழகப்பனுக்கு தெரியவர, நேரடியாக எதிர்க்க தொடங்கினார். ராஜ் ஜாதி பாசம் சொல்லி யாரை தன் வசப்படுத்தினாலும் குறுக்க வந்து அதே ஜாதியை சேர்ந்த ஜாதியை மறுக்கும் அழகப்பன் அதை கெடுத்துக் கொண்டிருந்தார். இதனாலே ராஜுக்கு அழகப்பன் மேல் தீராத வன்மம் உருவானது, எப்படியாவது அந்த வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் வழியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இதே சமயம்தான் இராஜின் திருமணமும் வந்தது, அதற்கு ரோஹினி ஜேக்கப்போடு வந்தபோதே வீட்டில் யாருக்கும் அது பிடிக்கவில்லை, மகள் இதுவரை ஒரு பெண்ணை கூட தோழி என்று வீட்டுக்கு அழைத்து வராதபோது இப்போது ஒரு ஆணை அழைத்து வந்தால் சந்தேகம் வராதா என்ன? சந்தேகம் ஊர்ஜிதமாகும்படி இருவரின் நடவடிக்கையும் இருக்க, அதன் விளைவு, அவள் வீட்டு மக்கள் அவனை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. வீட்டில் சொந்தமெல்லாம் கூடி இருந்ததால் வெளிப்படையாக யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவர்கள் பார்வையே சொன்னது அவர்களுக்கு ரோஹினியின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று. ஆக அவர்கள் திட்டம் தோல்வியில் முடிய, நிச்சியம் ஜேக்கப் அவளுடைய காதலன் என்று தெரிந்தால் ராஜ் அவனை கொல்ல துணிவான் என்று புரிந்துகொண்ட ரோஹினி சீக்கிரம் அங்கிருந்து கிளம்ப நினைத்தாள். இங்கிருந்து கிளம்பினாள் போதும் வீட்டு தெரியாமல் பதிவு திருமணம் கூட செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்க, ஆனால் சந்தனபாண்டியனோ ராஜ் திருமணம் முடிந்த கையோடு ரோஹினியை பெண் பார்க்க வரும்படி ஒரு மாப்பிள்ளை குடும்பத்தை சொல்லிவிட்டு அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாள் ரோஹினியிடம் விஷயத்தை சொல்ல, அவள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினாள். ராஜ் அவளை அடக்கி வீட்டில் இருக்க வைத்து, ஜேக்கப்பை மட்டும் அங்கிருந்து போகும்படி பணித்தான். ஜேக்கப்பும் என்ன செய்வதென்று தெரியாமல் பெண் பார்க்க தானே வருகிறார்கள் ரோஹினி பிடிக்கவில்லை என்று சொன்னால் போய்விடுவார்கள் என்கிற நினைப்போடு கிளம்பிவிட்டான். அவனும் வேறு என்ன தான் செய்வான், ரோஹினி அவள் வீட்டை பற்றி சொன்னது ஒன்று இங்கு இருப்பவர்கள் நடந்து கொள்வது ஒன்றாக இருக்க, அவனுக்கு உண்மையில் எப்படி அந்த சூழ்நிலையை கையாள்வது என்றே தெரியவில்லை. அவர்கள் உறவை பற்றி சொல்லி, அவர்கள் விளையாட்டு விபரீதம் ஆனா கதையை எல்லாம் சொல்லி திருமணத்துக்கு அனுமதி கேட்கலாம், ஆனால் இது வெகு சுலபமாக கெளரவக்கொலைக்கு வழிவகுக்கும் என்று ராஜை பார்த்ததும் அவனுக்கு தெளிவாக புரிந்தது. முதலில் அவன் தந்தை சேவியரிடம் பேசி இதற்கு தீர்வு காண முடிவெடுத்து அங்கிருந்து சென்றான். ஏற்கனவே அவர்கள் மூவரும் திரும்பி போக ஒன்றாக டிக்கெட் வாங்கி இருக்க, இப்போது மீனா அவனுடன் மட்டும் தனியாக பயணிக்கும் படி ஆனது. இருவரும் இரயில் ஏறி இருக்க பின்னாலே ரோஹினியும் வீட்டிலிருந்து தப்பி ஓடி வந்தாள். விஷயம் தெரிந்த ராஜ் மதம் கொண்ட யானையாக அவர்கள் நிம்மதியை குழைக்க இதோ வந்துவிட்டான்.