அழகப்பன் பேருந்தில் ஏறி இருந்தார், மனம் பாரம் ஏறி போய் இருந்தது, “ராத்திரி அவங்களை ட்ரெயின் ஏத்தி விட்டப்ப கூட அவங்க மொகத்துல ஒரு சின்ன கள்ளம்கபடம் தெரியல ஆனா இப்போ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஃபோன் பண்ணி ‘உங்க பொண்ணு ஜேக்கப்ங்குற பையனை திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டா, கொஞ்சம் வந்து பொண்ணுக்கு உங்களால எந்த ஆபத்தும் வராதுன்னு எழுதி கொடுத்துட்டு போங்க’ன்னு சொல்றாங்க, மீனாம்மா என்னாச்சி இது எப்படி நடந்துருக்கும், அந்த பையன் கூட ரொம்ப நல்லவனா தான் தெரிஞ்சான், ஒரே குழப்பமா இருக்கே” என்ற பலவித மன குழப்பத்தில் காவல் நிலையத்திற்கு பயணித்தார்.
காவல் நிலையம், திண்டுக்கல்
அங்கு தான் ஜேக்கப், மீனா, ரோஹினி, ராஜ் மற்றவர்களையும் அழைத்து வந்திருந்தனர். இரவு ராஜ் ட்ரெயினில் இருந்து அரிவாளுடன் குதித்ததை காட் பார்த்துவிட அதை காவல்துறைக்கு தெரிவித்துவிட்டார். ரோந்து வந்த காவலர்கள் அங்கு தாலியோடு கண்ணத்தில் அடி வாங்கிய தடத்தோடு அழுதுக்கொண்டிருந்த மீனாவையும் காலில் இரத்தம் வழிய நின்றிருந்த ஜேக்கப்பையும் கண்டதுமே சந்தேகம் வர அவர்கள் அனைவரையும் அள்ளிக் கொண்டு வந்துவிட்டனர்.
ஜேக்கப் தலையில் கை வைத்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தான், என்னவெல்லாம் நடந்துவிட்டது, உடன் மனதார பேசி சிரித்து நிறைய சந்தோஷமான தருணங்களை தந்து அவன் வாழ்க்கைக்கு இன்னும் அழகு சேர்க்கும் ஒரு அற்புத உறவாக வந்தவளின் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறான், அதுவும் உயிருக்கு பயந்து இந்த செயலை செய்த தன்னை நினைத்து அவனுக்கு அருவருப்பு தான். அழிக்கவே முடியாத கறை அவன் இதயத்தில் படிந்திருக்க, அவனுக்கு அது ஒவ்வாமையாக இருந்தது, அடிவயிற்றில் இருந்து எல்லாம் வாய் வழியாக வெளியே வந்துவிடும் உணர்வு.
ஆவேசமாக இரயில் பெட்டியில் ஏறிய ராஜை பார்த்த உடன் முதலில் பயந்தாலும் பேசி புரிய வைக்கத்தான் முயற்சித்தான் ஆனால் மதம் கொண்ட யானை போல் சீறிக் கொண்டு வெட்ட வந்தவனிடம் கடைசியாக உண்மையை சொல்லிவிட்டு என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று இருந்தவனை தந்தை தாயை ஞாபகப்படுத்தி அங்கிருந்து ஓட சொன்னது ரோஹினி தான். ஒன்றை எதிர்க்க உடல் திடத்தை விட மனவலிமை இருந்தால் போதும் ஆனால் ஜேக்கப்க்கு அத்தகைய வலிமை குறைவு தான் என்பதைவிட அத்தகைய சூழ்நிலையை அவன் ஒருபோதும் சந்தித்தது இல்லை என்பது தான் உண்மை எத்தகையோரையும் சமாதானமாக பேசியே சமாளிப்பவன், அவன் தந்தை கூட ‘வாய் பேச்சுல வீரன் தான்டி உன் பையன், அந்த தாட்டியகாரன வாய வச்சி ரெண்டு ஊர் பிரச்சனைய தீர்க்க சொல்லு பாப்போம்’ என்று கிண்டலடிக்க, அவன் தாயோ ‘ஆமா அதுக்கு தான் பெத்துருக்கேன் பாருங்க அவனை உங்களை போல ஆக்க பாக்காதீங்க’ என்று அவனின் இந்த குணத்தை பாதுகாப்பார். எளிதில் சிரித்து பேசி தேவையானதை நிறைவேற்றி கொள்ள தெரிந்தவனுக்கு சண்டை எல்லாம் கடினம் தான், அந்த குணத்தை தான் இப்போது அவன் வெறுத்துக் கொண்டிருக்கிறான். உண்மையில் இப்படி ஒரு சூழலை அவனுக்கு எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை, உயிருக்கு பயந்து ஓடினானா இல்லை, என்ன செய்வது என்று தெரியாமல் பேய் அறைந்தது போல் நின்றுக் கொண்டிருந்தவனை போ என்று தட்டிவிட்டதால், ஓடும் ரயில் என்று கூட பார்க்காமல் குதித்தானா என்று அவனுக்கு இப்போது வரை கூட ஞாபகத்திற்கு வரவில்லை.
தலை தெறிக்க ஒடியவன் மாறி ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை, காரணம் அவன் பேசினாலே ராஜ்க்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது மற்றும் காதலின் உச்சம் தொட்ட பிறகு அவர்களுக்கு இடையே இருப்பது நட்பு தான் என்று வெறும் வார்த்தையாக கூட யாரிடமும் அவன் சொல்ல விரும்பவில்லை, இராஜிடம் உண்மையை சொன்னால் ரோஹினி உயிரும் சேர்ந்து தப்பாது என்று சரியாக கனித்தவன் அதனால் எதுவும் சொல்லாமலே அந்த சூழ்நிலையை கடக்க நினைத்தான், எதுவாகிலும் தன்னோடு போகட்டும் என்கிற எண்ணம் மட்டுமே.
ஆனால் நடந்ததற்கு அவன் விதியை நோகவில்லை ரோஹினி மீது தான் எரிச்சல் வந்தது. அவன் அவளுக்கு மட்டும் தான் சொந்தம் என்று ஒவ்வொரு நொடியும் அவனுக்கு உணர வைப்பவள், எப்படி வாய் கூசாமல் இப்படி ஒரு பொய்யை சொன்னாள். இப்போது கூட மனம் அதை நினைத்து எரிந்துக் கொண்டிருந்தது. அவன் தலையிலிருந்து கை எடுத்து எதிர் பெஞ்சில் அமர்ந்திருந்த ரோஹினியை பார்த்தான், முறைக்க கூட தெம்பு இல்லை, அவளோ இன்னும் அழுது கொண்டிருக்க, அவள் அருகில் இருந்தவளை அவன் கண்கள் பார்க்க கூசியபோதும் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரிய வேண்டும் ஒரு உந்துதல் எழ லேசாக அவன் கண்மணி அவள் புறம் திரும்பியது. அவன் கண்களுக்கு முதலில் பட்டது மஞ்சள் நிறத்தில் மின்னிய கயிறு தான், சட்டென கண்களை மூடிக் கொண்டான்.
“கட்டுடா தாலிய” என்று ராஜ் ஜேக்கப்பை மிரட்ட, அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து தான் போனார்கள், அழகப்பனை பிடிக்கவில்லை என்றாலும் சொந்தமாக இருப்பவர்களுக்கு இது அநாவசியமாக தான் தோன்றியது அதுதான் உண்மையும் கூட. ஆனால் யார் ராஜை தடுப்பது, அவன் செயலை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவனுக்கு எதிரிகளே, அப்படி இருக்க அவனிடம் பணம் வாங்கி பிழைப்பு நடத்தும் இவர்கள் என்ன செய்து விட முடியும், அதிர்ச்சியில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். ரோஹினி மட்டும் அவன் காலை பிடிக்க ஓட, ராஜ் கண்ணை காட்டி அவளை தடுக்கும்படி ஆணையிட, ஒருவன் அவளை பிடித்துக் கொண்டான். அவள் கத்தினாள், “அண்ணா வேணாம் பிளீஸ் அவங்கள விட்டுறு நான் பொய் சொன்னேன்” என்று கதற, அவளை பார்த்து முறைத்தவன், வாயின் மீது விரல் வைத்து, “ஷ்ஷ்… சத்தம் போடாதே… காது வலிக்குது, எதுவும் கேக்க மாட்டேங்குது” என்று சொல்லிவிட்டு மீனாவின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான், “கட்ட போறியா இல்ல இன்னும் அறையவா” என்று ஜேக்கப்பை பார்த்து ராஜ் கர்ஜிக்க, அதிர்ந்துவிட்டான் ஜேக்கப். அறை வாங்கிய அவளுக்கு அது ஏன் நடந்தது என்று புரியாமல் இருக்க, அவனுக்கு புரிந்துவிட்டது அழகப்பன் மீதான வன்மத்தை தீர்த்துக் கொள்ள ராஜ் அவர்களை கருவியாக பயன்படுத்த போகிறான்
ராஜ் அவன் நினைத்ததை நிறைவேற்றாமல் அவர்களை விடப்போவது இல்லை.
ஜேக்கப் கண்கள் மங்களாக பெருமூச்சு விட்டு, “இது சரியில்ல… இதை செய்யக்…கூடாது… என்னால முடியாது… வேண்டாம்… என்ன கொண்ணுடுங்க” என்று கலங்கி வார்த்தைகளை துண்டுத்துண்டாக சொன்னாலும் அவன் உணர்ச்சி எல்லாருக்கும் கடத்தப்பட்டது. ஆனால் அந்த மனிதாபிமானம் அற்றவனுக்கு அது எல்லாம் மண்டைக்குள் ஏறவே இல்லை, “ரெண்டும் ஒன்னுதான்டா எனக்கு… நீ என்ன யோசிக்குறன்னு எனக்கு தெரியுது” என்று ரோஹினியை ஒரு பார்த்துவிட்டு, “ரொம்ப பண்ணாதடா சென்னைல ரெண்டு பேரையும் நல்லா பாத்துகிட்டவன் தான, இப்ப சீன் போடுற, என்ன பாத்தா கேனை மாதிரி இருக்கா… எனக்கு பொறுமை ரொம்ப கம்மி கண்ணா… இப்ப மட்டும் நான் சொன்னதை செய்யல மூணு பேருல யாரை அறுத்துப் போடுவேன்னு எனக்கே தெரியாது” என்ற உறுதியாக மிரட்ட, அந்த வார்த்தையில் மிரண்டு போனான் அந்த அப்பாவி இளைஞன். கடைசியில் வழக்கம்போல் அதர்மம் தான் ஜெயித்தது, அந்த தருணத்தில் அவள் கண்கள் கேட்ட ஒரே கேள்வி, “இப்போ கூட உன்னால தனியா ஒன்னும் செய்ய முடியாதா” என்று மட்டும் தான்.