ஆய்வாளர் அறையில் ராஜ் ஒய்யாரமாக அமர்ந்திருக்க, அவனுடன் பள்ளியில் படித்த அவனின் நண்பன் ஆய்வாளர் பரமனோ, “டேய் ராஜ்… என்னடா பண்ணி வச்சிருக்க நீ கட்டாயப்படுத்தி தாலி கட்ட வச்சிட்டா எல்லாம் முடிஞ்சுதுன்னு நினைச்சியா… இப்ப அந்த பொண்ணும் பையனும் வாக்குமூலம் கொடுத்தா நான் உன்ன தான் தூக்கி உள்ள வைக்கணும், என் எடத்துல வேற ஆள் இருந்தா இப்ப நீ லாக்கப்க் குள்ளதான் இருந்துருப்ப, நான் நண்பனா போய்ட்டியேன்னு அந்த பாதிக்கப்பட்டவங்களை கூட விசாரிக்காமல் இத எப்படியாவது சமாளிக்கலாம்ன்னு பாக்குறேன்” என்று சொன்னார்.
எதிரில் முறைத்தபடி அமர்ந்திருந்த ராஜோ, “ஏன் பேசமாட்ட அங்க வரும்போதே தெரியும்ல அங்க பிரச்சனை பண்ணது நான் தான்னு என் நண்பனா இருந்தா அப்படி அங்க எதுவும் நடக்கலன்னு மேலிடத்துக்கு தகவல் கொடுத்துட்டு நீ பாட்டு போயிருக்க வேண்டிதான, இங்க கூட்டிட்டு வந்து வியாக்கானம் பேசிட்டு இருக்க… நான் ஒன்னு நினைக்க அது பாட்டு ஒன்னு நடக்குது, இப்ப கட்சிகாரங்களுக்கு தெரிஞ்சா இன்னும் ரொம்ப அழகா இருக்கும்” என்று சத்தமில்லாமல் பேசினான்.
“அதுசரி நல்ல பேசுறடா இவ்வளவு யோசிக்கிறவன் எதுக்கு இத பண்ண, தாலி கட்டிட்டா சேர்ந்து வாழ்ந்துடுவாங்களா சம்பந்தமே இல்லாம உன் தங்கச்சி வேற ரொம்ப அழுறா, அந்த பையனுக்கு முதலுதவி கொடுக்க சொல்லி ஏட்டுகிட்ட அந்த கெஞ்சு கெஞ்சுறா, எல்லாரும் சந்தேகமா பாக்குறாங்க என்னடா கதை”
“டேய் லூசு மாதிரி கேள்வி கேட்காத… எனக்கு அந்த ஆள் அதான் அழகப்பன், வெளிய நிக்குறாள்ள மீனா அவளோட அப்பா, திமுறு பிடிச்ச ஆள் ஊருல என்னையும் அப்பாவையும் மதிக்காத ஒரே ஆள் என் வேலைக்கு ரொம்ப கொடைச்சல் கொடுக்குறாரு அவர எப்படியாவது ஊருக்குள்ள தலைகுனிய வச்சி திமிரை அடக்கணும்ன்னு தான் இதை பண்ணேன், இந்நேரம் அழகப்பன் பொண்ணு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாளாம் ஊரு முழுக்க பேச ஆரம்பிச்சுருப்பாங்க அது எப்படி சாத்தியம் ஆகும்ன்னு யாரும் ஆராயப்போரது இல்ல அவங்களுக்கு தேவை அடுத்தவனை ஏளனமா பாக்க அவங்ககிட்ட இருக்குற குறை மட்டும் தான் அதை நான் உண்டுப் பண்ணிட்டேன் எனக்கு அது போதும், இனி அந்த ஆள் அடுத்தவங்க விஷயத்துல தலையிட கூட யோசிக்கணும் எனக்கு அது தான் வேணும், இதுங்க ரெண்டும் சேர்ந்து வாழ்ந்தா என்ன நாசமா போனா எனக்கு என்ன” என்று அவன் சொல்லி முடிக்குமுன்னே, அறை வாயிலில் ஒரு ஆண் குரல், “யாருல்ல சீரழியனும் உனக்கு… உன் சுயநலத்துக்காக எத்த தண்டி வேலைய பாத்துருக்க… ஈனப்பயலே உன்ன” என்றுபடி ராஜ் அருகே அவர் ஓடி வர, அவர் உடன் வந்தவர்கள் அவரை இழுத்துப் பிடித்து அடக்கினர். அவர்கள் அடக்கியதில் கொஞ்சம் நிதானம் அடைந்த மனிதர், ராஜை கொலைவெறியோடு நோக்கிக் கொண்டிருந்தார், அவர் ஜேக்கப்பின் தந்தை சேவியர்.
“என்ன மாமா போலீஸ் ஸ்டேஷன்ல வச்சி, இவன வெளிய பாத்துப்போம்… இன்ஸ்பெக்டர் நான் வக்கீல் வளன் தூத்துக்குடில இருந்து வாரோம், எங்க பையன் ஜேக்கப் ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு ஃபோன் வந்தது, என்னாச்சின்னு வந்து பாத்தா தான தெரியுது… இப்ப என்ன பண்றீங்கன்னா எங்க பையனா கொலை முயற்சி பண்ணான்னு இவன் மேல கேஸ் எழுதி இவனையும் இவன் கூட்டாளிகளையும் பிடிச்சி இங்கயே உக்கார வச்சிக்கோங்க நாங்க புள்ளைங்கள கூட்டிட்டி கிளம்புறோம்” என்று முறைத்துகொண்டே முடித்தார், வக்கீல்.
பரமன் எதுவும் பேசவில்லை காரணம் வக்கீலை அழைத்து வந்ததால் அவருக்கு யாரையும் ஏமாற்ற முடியவில்லை, ராஜ் செய்த வேலைக்கு அவர்கள் இந்த அளவுக்கு சின்ன கேஸ்சொடு முடித்ததே பெரிய விஷயமாக பட அதற்கான பார்மாலிட்டியில் இருங்கினார். ஆனால் இராஜோ, ‘பையனை பாத்துட்டு அவங்களை தப்பா எடை போட்டேன்னே இவங்க என்னடான்னா ரவுடி கும்பலா இருக்காங்க, இவங்க சின்னதா விட மாட்டாங்க போலையே’ என்று உள்ளுக்குள் சின்ன பயம் வரத்தான் செய்தது.
அப்போது தான் அழகப்பன் அங்கு வர, மீனா உயிர்ப்பெற்று அவரிடம் ஓடிச்சென்று, மூச்சி வாங்கி நிற்க, அவள் கண்களே அவருக்கு அவள் எந்த தப்பும் செய்யவில்லை என்று உரைத்த போதும் கவலை கொண்ட தந்தையின் கண்களில் தாலி தான் முதலில் தெரிந்தது. அவர் கண் போகும் திசையை உணர்ந்தவள், “அப்பா… நான் எதும் பண்ணலப்பா…” என்று நிலத்தில் விழுந்து கதறி அழுதாள். பெற்றவருக்கு மனசு கேட்குமா, நொடியில் அவளை தூக்கி நிறுத்தி, “தங்கமே… அழாத அப்பா இருக்கேன் நான் உன்ன நம்புறேன்மா, மனச விட்டுறாத மீனம்மா… என்ன நடந்ததுன்னு அப்பாகிட்ட சொல்லுமா…” என்றவர் கண்களிலும் கண்ணீர்.
இதை பார்த்த எல்லோருக்கும் சங்கடமான உணர்வுதான், சேவியர் தான் அழகப்பன் அருகே சென்று, “நான் ஜேக்கப் ஓட அப்பா… உங்க மனநிலை புரியுது எல்லாத்துக்கும் இங்க பதில் கிடைக்காது, இதுக்கு காரணமானவனை உள்ள வச்சிட்டேன் மீதிய வெளிய போய் பேசிக்கலாம், இப்ப இங்க இருந்து வெளிய போனா தான் பொண்ணுக்கும் நல்லது” என்று மீனாவை பார்த்து நிதானமாக பேசி நிலைமையை புரியவைத்தார். புரிந்து கொண்ட ஆழகப்பணும் மீனாவின் சோர்ந்த முகத்தை ஒரு கணம் பார்த்துவிட்டு இப்போது காரணம் அறிந்து எதிரியுடன் மல்லுகட்டுவதை விட மகளை கவனிப்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்து, அவளை தன்னோடு அணைத்தபடி வெளியே செல்ல தொடங்கினார்.
சேவியர் மறந்தும் ஜேக்கப் பக்கம் திரும்பவே இல்லை, மகன் மீது அதீத கோவம் இருந்தது அவருக்கு, அவனுக்கு திராணி இருந்திருந்தால் நடந்ததில் எதையாவது மாத்தி இருக்கலாம் என்ற எண்ணம் அவரை அவன் மீது கோவம் கொள்ள செய்தது. என்னமோ சில கோவங்கள் அர்தமற்றதாக இருக்கும் அப்படித்தான் இதுவும் ஜேக்கப் சொந்தங்களுக்கு தோன்றியது. உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, ஜேக்கப்பை கைத்தாங்கலாக அழைத்துக் சென்றனர் அவன் தந்தையுடன் வந்தவர்கள். போகும் போது ஜேக்கப் திரும்பிப் பார்க்க அங்கு ரோஹினி அப்படியே அவனை பார்த்தபடி இருந்தாள், அவளிடத்தில் ஏக்கப் பார்வை மட்டுமே, அவனுக்கோ கண்களால் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை, நம்பிக்கை அளிப்பதா கோபமாக முறைப்பதா என்ன மாதிரி உணர்வை வெளிப்படுத்த என்கிற போராட்டம் அவனுள், அதனால் வெறுமையாக பார்த்துவிட்டு திரும்பி நடந்தான்.
அருகே இருக்கும் ஒரு உணவகத்துக்கு சென்று இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்து உண்ண சொல்லிவிட்டு, இரு தந்தைகளும் தனியாக சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மீனா தந்தைக்காக சாப்பிட்டாள் அவர் அவளை நம்புகிறார் என்பதே அவளுக்கு போதுமானதாக இருக்க அவள் மனம் கொஞ்சம் நல்ல விதமாக மாறியிருந்தது, ஆனால் ஜேக்கப்போ ரோஹினியை நினைத்து சாப்பிட முடியாமல் தவித்தான், அவள் சாப்பிடாமல் இருப்பாலே என்கிற எண்ணம்தான், அவனுக்கு தான் ஆடாவிட்டலும் தன் தசை ஆடியது, உண்மையில் பாவம் தான் அந்த அன்பு காதலன்.
திரும்ப வந்த அழகப்பன், “மீணம்மா நீ எதை பத்தியும் கவலைப்படாதே, நடந்தது ஓரளவுக்கு எங்களுக்கு புரிஞ்சி போச்சி, இனி அதை நான் பாத்துக்கிறேன்… இப்ப நீ அவங்க கூட போ, நான் ரெண்டு நாள் கழிச்சி அங்க வாரேன், ஊருல வேலை இருக்கு முடிச்சிட்டு வாரேன் அப்பறம் பேசுவோம்… இப்ப உன்ன ஊருக்கு கூட்டிட்டும் போக முடியாது, ஊருக்குள்ள என்னன்ன சொல்லி வச்சிருக்காங்கலோ தெரியல, நீ வந்தா கஷ்டபடுவீயோன்னு அப்பாக்கு பயமா இருக்கு நீ வளந்துட்ட உனக்கு இது எல்லாம் புரியும் தானே” மீணாவிடம் விளக்கம் கொடுத்து, இந்த முடிவு சரி என்பது போல் அவரும் நம்பி அவளுக்கும் நம்பிக்கையூட்டா பார்த்தார். ஏற்கனவே யாரை எதற்கு நம்பினாளோ தெரியவில்லை இப்போது ஏமாந்துவிட்டாள் என்பது தெரிந்தது, இனியும் எதற்கும் அவள் தயாராக இல்லை.
கண்களில் நீர் கசிய, “இப்ப அவங்க கூட போனால் ஊரு நடந்தது உண்மை மாதிரி தான பேசும்… அப்பா நான் சென்னை போறேன்” என்று எச்சிலை விழுங்கியபடி பேசினாள்.
“உன்னை தனியா விட முடியாது மீனா, அப்பாவால இப்போ அது முடியவே முடியாது… கல்யாணம் பண்ணது உண்மைதானே, அந்த உண்மையை தான் ஊரு பேசும் அதை நீ தாங்குவியான்னு எனக்கு தெரியலை… அந்த பையனோட அப்பா உன்ன மருமகளா கூட்டிட்டு போறேன்னு சொல்றாரு, அவங்க ரொம்ப நல்லவங்கலா தெரியுறாங்கமா” என்று வழக்கமான தந்தையாக ஆரம்பிக்க, அவரை அதிர்ச்சியுடன் நோக்கினாள் மீனா.