அந்த பெரிய திருமண மண்டபத்திற்குள், பட்டுச்சேலை சரசரக்க அதற்கேற்ற அணிகலன்கள் அலங்கரிக்க, மேகக் கூட்டத்திற்கு நடுவே வெண்மேகமாய் மிதந்து வந்தாள் என்று கூற ஆசை தான்!
ஆனால் அவளோ, அதிக எடையில்லாத ஸாஃட் சில்க் புடைவையை அணிந்து, அதிலும் தடுக்கி விழாத குறையாக அல்லவா ஊர்ந்து வந்து கொண்டிருந்தாள்.
“ஷப்பா, ஒவ்வொரு அடிக்கும் காலுக்கிடையில போய் சிக்கிக்கிது. இதையெல்லாம் எப்படி தான் கட்டுறாங்களோ?” என்று முணுமுணுத்தபடி நிமிர்ந்து பார்க்க, எதிரே அவளின் தந்தை வந்து கொண்டிருந்தார்.
தன்னை நோக்கித்தான் வருகிறார் என்று நின்றவளை தாண்டி அவர் சென்றுவிட, ‘அப்பாவே ரெகக்நைஸ் பண்ண முடியாத அளவுக்கா நம்ம மேக்கப் இருக்கு!’ என்று எண்ணிக் கொண்டவள், “ப்பா…” என்று கத்தினாள்.
அப்போது தான் மனிதருக்கு சுற்றுப்புறம் உரைத்தது போலும்.
“ப்பா, என்னை சீக்கிரம் வர சொல்லி ஃபோன்ல திட்டிட்டு, இப்போ நீங்க எதுக்கு வெளிய போயிட்டு இருக்கீங்க? உங்க க்ளோஸஸ்ட் ஃபிரெண்டோட பையன் கல்யாணத்தை விட அப்படி என்ன முக்கியமான வேலை?” என்றவளின் குரலில் கிண்டலும் கேலியுமே விரவி இருந்தது.
“நந்தும்மா, உதயா தம்பி கல்யாணம் நின்னு போச்சு மா.” என்று வருத்தத்தோடு கூறினார் அவளின் தந்தை.
அதைக் கேட்டவள் அதிர்ச்சியில் உறைய, அவளின் தந்தையோ, அலைபேசி அழைப்புகளில் மூழ்கி விட்டார்.
‘எது? அந்த முசுட்டு முசோலினி கல்யாணம் நின்னு போச்சா? லவ் மேரேஜ்னு சொன்னாங்க. ஹும், எப்பவும் முள்ளைக் கட்டி வச்சா மாதிரி இருக்குற முசோலினி மூஞ்சி, இப்போ கொஞ்ச நாளா தான் பார்க்குற மாதிரி இருந்துச்சு. இனி, திரும்ப பழைய முசோலினியை பார்க்க வேண்டி வரும் போலயே! த்ச்சு, யாரு கண்ணு பட்டுச்சோ!’ என்று அவனிற்காக பாவம் பார்த்தவளை, “இங்கேயே ஏன் நின்னுட்டு இருக்க? உள்ள வா.” என்று அவளின் தந்தை இழுத்துச் சென்றார்.
“ப்பா, அதான் கல்யாணமே நின்னு போச்சே, இப்போ எதுக்கு உள்ள போகணும்?’ என்று கேட்டுக் கொண்டே சென்றவளின் மனமோ, ‘அரை மணி நேரம் போராடி கட்டுன இந்த சேலை வேஸ்ட்டா?’ என்று கவலைப்பட்டது.
அவளின் கவலையை போக்கவென்றே அதன் பிறகான நிகழ்வுகள் நடக்க, ‘இங்க வந்துருக்கவே கூடாதோ!’ என்று ஆயிரமாவது முறையாக சலித்துக் கொள்ளப் போவதை அவளும் அறியவில்லை!
*****
பட்டுவேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்தவனின் முகமோ பாறையென இறுகி இருந்தது.
அவனருகே நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தார் அவனின் தந்தை கேசவமூர்த்தி.
“சாரி டா உதய், பொறுமையா விசாரிச்சு இந்த கல்யாண ஏற்பாட்டை பண்ணியிருக்கணும்! இப்போ பாரு…” என்று கேசவமூர்த்தி வருந்த, அவனிடம் பதிலில்லை.
தன் வாழ்க்கையே இந்த நொடியில் நின்று விட்டதைப் போல உணர்ந்தான் அவன். ஓராண்டாக காதலித்தவளை, பெற்றோர் சம்மதத்தோடு கைபிடிக்கும் வேளையில் தெரிந்த அந்த உண்மை, அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதாக அல்லவா இருக்கிறது.
நியாயமாக, தன் தந்தையின் இந்த வேதனைக்கு அவன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆனால், இதுவரை மன்னிப்பு என்ற ஒன்றையே கேட்டிராதவனிற்கு, கேட்கும் சூழலை உண்டாக்கியிராதவனிற்கு, தந்தையிடம் கூட அத்தனை எளிதில் மன்னிப்பு என்ற வார்த்தை வரவில்லை.
அதே சிந்தனையில் இருந்தவனிற்கு, அந்த நாளின் அடுத்த அதிர்ச்சியாக இருந்தது, தந்தை கூறிய செய்தி.
அத்தனை நேரம் அந்த பாறை முகம் நிர்மலமாகவே இருக்க, இந்த செய்தியைக் கேட்டு திகைப்புடன் தந்தையை நோக்கினான்.
“திரும்பவும் அவசரமா ப்பா?” என்று கண்டனமாக கேட்டவனின் பார்வை வட்டத்தில் விழுந்தாள் அவள்.
கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளிற்கு சளைக்காமல் தானும் பதில் முறைப்பை பரிசளித்தவன், “என்னால சம்மதிக்க முடியாது ப்பா!” என்று தன் மறுப்பை அவளும் கேட்கும் வண்ணம் உரைத்திருந்தான்.
*****
அவள் வாழ்வின் முக்கிய நாளிற்காக பார்த்து பார்த்து தயாராகிக் கொண்டிருந்தாள் மணமகள் ராகவர்ஷினி.
திருமண நிகழ்விற்கான வெட்கம் கலந்த பூரிப்பு அவள் முகத்தில் தாண்டவமாட, அதை குலைக்கும் விதமாக வந்து சேர்ந்தது அந்த செய்தி.
தகவல் தெரிந்ததும் முதலில் திகைத்தவள், இது கண்டிப்பாக நண்பர்கள் செய்யும் ‘பிராங்க்’காக இருக்கும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
தான் நினைத்ததை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டி, தன் தந்தையிடம் கேட்க, அவரோ மகளின் சிறு முகசுழிப்பையும் தாங்க இயலாதவராக, அவளின் முகம் பார்க்காமல், “கல்யாணம் நின்னு போனது உண்மை தான் டா வர்ஷி.” என்றார்.
தந்தை கூறியதைக் கேட்டதும் கண்மண் தெரியாத ஆத்திரம் தான் முதலில் வந்தது.
“நோ நோ!” என்று கத்தியவள், தன் பாசமிக்க தந்தை என்றும் பாராமல், அவரின் கழுத்துப் பட்டையை பிடித்து, “எப்படி இப்படி சொல்லலாம் நீங்க? உதய் எனக்கு தான்! எங்க கல்யாணம் கண்டிப்பா நடக்கும்!” என்று கோபமாக பேசியவள், “நீங்க எல்லாரும் என்னை ஏமாத்துறீங்க. நான் என் உதய் கிட்டயே கேட்டுக்குறேன்.” என்று வெளியே செல்ல எத்தனித்தாள்.
அப்போது அவளைத் தடுத்த அவளின் அன்னையோ, “உதய் உனக்கு இல்ல ராகவர்ஷினி. அவன் வேற ஒருத்திக்கு சொந்தமாக போறவன். அவனோட நினைவுகளை எல்லாம் இங்கேயே புதைச்சுட்டு, எங்க கூட ஜெர்மனி வர வழியைப் பாரு.” என்று அழுத்தம் திருத்தமாக உரைக்க, மகளோ எப்போதும் இல்லாத அன்னையின் இந்த கண்டிப்பை மலங்க விழித்தபடி பார்த்தாள்.