உதயகீதன், கேசவமூர்த்தியின் ஒரே மகன், தலைமகன். கேசவமூர்த்தி, அக்காலத்து சிங்கிள் பேரன்ட்!
தாயின் இடத்தை நிரப்ப முடியாவிட்டாலும், மகனின் வாழ்வில் தந்தைக்கான பாத்திரத்தை அருமையாக கையாண்டு, அவனின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறினால் மிகையாகாது.
பாசத்தில் மகனும் தந்தைக்கு சற்றும் சளைத்தவன் அல்ல. என்ன, அதை வெளிப்டையாக காட்ட தெரியாத இரும்பு மனிதன்.
அவன் இறுகிப் போனதற்கான காரணிகள் பல. அதில், அவன் குடும்பத்தை பற்றி புரளி பேசிய சில விஷ ஜந்துக்களும் அடங்கும்.
கேசவமூர்த்தியும், மகனின் இறுக்கத்தை இளக்க பல முறை முயற்சி செய்தும், இதுவரை அதை மட்டும் அவரால் சாதிக்க முடியவில்லை. மற்றபடி, ‘என்நோற்றான் கொல்லெனுஞ் சொல்’லுக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான்!
கேசவமூர்த்தி, பாட்டன் வழி வந்த சக்கரை தொழிற்சாலையை பெருக்க, மகனோ தனக்கான சாம்ராஜ்ஜியத்தை தானே உருவாக்கும் முயற்சியில் இறங்கினான்.
அவனின் சாம்ராஜ்ஜியத்திற்கான முதல் அடிக்கல் தகவல் தொழில்நுட்பத் துறை.
சொந்தமாக மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து, அது துவங்கியதிலிருந்து வளர்ச்சிப் பாதையிலிருந்து சற்றும் விலகாமல், அதிவேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் தொடர்ந்து இடம்பிடித்து வருவதற்கான மூலக்காரணமாக இருந்து வருகிறான்.
அதற்கான அவனின் உழைப்பும் அபாரம் தான். எந்நேரமும் அவன் எண்ணம் முழுவதையும் ஆட்கொண்டிருப்பது அவன் நிறுவனத்தின் வளர்ச்சி தான்.
அப்படிப்பட்டவன் ராகவர்ஷினியின் மீது காதலில் விழுந்தது எல்லாம் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர் போன்று அபூர்வமானது தான்!
ராகவர்ஷினி – ஜெர்மனியில் செட்டிலாகி விட்ட பெற்றோரின் ஒரே மகள். அவளின் பெற்றோருக்கு இந்தியா வரும் எண்ணம் இல்லை என்றாலும், ராகவர்ஷினி சிறு வயதிலிருந்தே இந்தியாவைப் பற்றி கேள்விப்பட்ட தகவல்கள், அவளை தாய்நாட்டை நோக்கி இழுத்து வந்திருந்தது.
தன் உயர்நிலைக் கல்வியை பெரியப்பாவின் வீட்டிலிருந்து முடித்தவள், பிரபல பொறியியல் கல்லூரியில் கடந்த கல்வியாண்டில் படிப்பை முடித்திருந்தாள்.
ராகவர்ஷினி, தன் வாழ்வை ரசித்து வாழ்பவள். அவளின் எதிர்பார்ப்புகள் அதிகம். நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் வரை ஓயாத குணம் கொண்டவள். அவளின் பெற்றோரின் செல்லமும் துணையிருக்க, இதுவரை அவள் நினைத்த அனைத்தும் அவளுக்கு கிடைத்தே பழக்கப்பட்டவள்.
தன் விருப்பமே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளறியாமலேயே அவளுள் வேரூன்றி இருந்தது. அதை அவளின் பெற்றோர் கண்டு கொள்ளாமல் விட்டது, அவளின் வாழ்வில் மட்டுமல்ல பிறரின் வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை யாருமே அதுவரை அறிந்திருக்கவில்லை.
இப்படி கிட்டத்தட்ட இருவேறு குணாதிசயங்கள் கொண்டவர்களின் முதல் சந்திப்பே எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு தான்.
நிகழ்காலம் மறந்து, தங்களின் முதல் சந்திப்பில் லயித்திருந்தவனை கலைத்தது கேசவமூர்த்தியின் குரல்.
அவர் அவனுக்கு அவசர திருமணம் நடத்த திட்டம் தீட்ட, மகனோ மிகவும் சிரமப்பட்டு பொறுமையாக தந்தைக்கு எடுத்துரைக்க முயன்றான்.
“ப்பா, திரும்ப அவசரப்பட வேண்டாம்.” என்று உதயன் கூற, மூர்த்தியோ, “சுதாகரை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். அவன் பொண்ணை உனக்கு தெரியும். இதுல அவசரப்பட்டு முடிவெடுத்துட்டேன்னு சொல்ல என்ன இருக்கு? சொல்லப்போனா, நீ காதலிக்கலைன்னா, நந்தினியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாமான்னு ஒரு யோசனை கூட இருந்துச்சு.” என்றார்.
சரியாக அதே சமயம், ஜீவநந்தினி அந்த அறைக்குள் நுழைய முற்பட, அவனின் கோபமெல்லாம் தேவையே இல்லாமல் அவள் புறம் திரும்பியது.
‘இவளை யாரு இப்போ வர சொன்னா? ஆஃபிஸ்லேயே இவளைப் பார்த்தா எரிச்சலா இருக்கும்.’ என்று மனதிற்குள் திட்டியதை அவன் முகம் காட்டிக் கொடுத்தது.
அதைக் கண்ட நந்தினியோ, ‘உனக்கு போய் பாவப்பட்டேன் பாரு, என்னை சொல்லணும். இப்போ எதுக்கு என்னை முறைச்சுட்டு இருக்கான் இந்த முசோ? கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா, இல்லன்னு சொல்லிட்டு போகணும். இல்ல, அந்த ஐடியாவை சொன்ன, அவங்க அப்பாவை திட்டனும். அதை விட்டுட்டு, என்னை எதுக்கு திட்டிட்டு இருக்கான், இடியட்!’ என்று மனதில் வருங்கால கணவனுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.
ஆக, இருவருக்கும் எதில் பொருத்தமோ, இப்படி மனதிற்குள் திட்டிக் கொள்வதில் வெகு பொருத்தம்!
மகனிடமிருந்து பதில் வராததை உணர்ந்த கேசவமூர்த்தி, “உதய்..” என்று விளிக்க, “என்னால சம்மதிக்க முடியாது ப்பா!” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான்.
தந்தையிடம் பேசினாலும், பார்வை மொத்தமும் பாவையிடத்தில் தான்!
‘க்கும், இவரு பெரிய மன்மத… இவரை கல்யாணம் பண்ணிக்க லைன்ல காத்துட்டு இருக்காங்க. முசுட்டு முசோலினிக்கு இவ்ளோ அகங்காரம் ஆகாது!’ என்று மானசீகமாக பேசிக் கொண்டாள் ஜீவநந்தினி.
முன்னர் இருந்த பதற்றம் இப்போது இல்லை. அதான், அவனே திருமணம் வேண்டாம் என்று கூறிவிட்டானே என்ற சந்தோஷம் உள்ளுக்குள் பொங்கினாலும், வெளியே நல்ல பிள்ளையாக காட்டிக் கொள்ள வேண்டி அமைதியாக இருந்தாள்.
அப்படியே இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது?
வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற வேண்டியும், தன்னை நல்லவளாக காட்டிக்கொள்ள வேண்டியும், “நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான் அங்கிள்.” என்று அவள் கூற, அது மூர்த்தியின் நெஞ்சில் பாலை வார்த்தது.
“அட்லீஸ்ட் நீயாவது எங்க பேச்சை கேட்குறியே மா, ரொம்ப சந்தோஷம் டா மா.” என்று வருங்கால மருமகளை பாராட்டினார் மூர்த்தி.
மூர்த்தி பார்க்காத நேரம், உதயனை நோக்கி மிதப்பாக பார்க்க, அவனால் அப்போது பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.
நந்தினியின் ஜாடையை கவனிக்காத மூர்த்தியோ, மகனிடம் திரும்பி கடினமான குரலில், “இப்படி என்னை பேச வைப்பன்னு நினைக்கல உதய்.” என்று இடைவெளி விட்டவர், “இந்த கல்யாணத்துல என்னோட மரியாதையும் இருக்கு உதய். வெளிய என்ன பேசுறாங்கன்னு எனக்கு கேட்கலன்னு நினைக்கிறியா?” என்று வினவியதில், உதயன் மேலும் இறுகிப் போனான்.
ஆம், இதில் அவனைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டது தந்தை தானே!
“ஆனாலும், அதையெல்லாம் தாங்கிட்டு இருக்கேன்னா, அதுக்கு முக்கிய காரணம் நீ உதய், உன் கல்யாணம்! ஏற்கனவே, நம்ம குடும்ப மானம் போயிட்டு இருக்கு. இதுல, உன் கல்யாணமும் நின்னு போச்சுன்னு ஒரு பேச்சு வேண்டாம். அட்லீஸ்ட் அதுக்காகவாச்சும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவன்னு நம்புறேன்.” என்றவர் அங்கிருந்த நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்தார்.
மூர்த்தி கூறுவதும் உண்மை தானே. இன்றைய பேச்சுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுக காரணம் அவன் தானே.
மனம் குற்றவுணர்வில் குறுகுறுக்க, எதேச்சையாக அறையின் வாயிலில் நின்றவளை பார்த்தான்.
அவளோ மூர்த்தியின் பேச்சில் திகைத்து போய் நின்றிருந்தாள்.
வாய் திறந்து எதுவும் கூறாவிட்டாலும், உள்ளுக்குள், ‘அடக்கடவுளே, இவரு என்ன இப்படி பிரெயின் வாஷ் பண்றாரு? இவரு பேச்சை கேட்டு முசோ ஒத்துப்பானோ?’ என்று பயந்து கொண்டிருப்பது அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது.
முன்பு அவள் செய்ததற்கு பழிக்கு பழியாக, இதழ் வளைத்த இகழ்ச்சிப் புன்னகையை அவளை நோக்கி செலுத்தியவன், “என்னமோ பண்ணுங்க.” என்று தந்தையிடம் கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.
செல்லும் போது, அங்கு சிலையாக சமைந்து நின்றவளை பார்வையாலேயே துளையிட மறக்கவில்லை.
அந்த பார்வையே நந்தினிக்கு ஒருவித திகிலை பரவச்செய்ய, ‘சும்மா இருந்த முசோவை ஏத்தி விட்டுட்டேன் போலயே!’ என்று காலம் தாழ்த்தி வருந்தினாள்.
இனி வருந்தி என்ன பிரயோஜனம்? காலம் முழுவதும் முசோலினியின் முறைப்பை தாங்க வேண்டும் என்று விதி தீர்மானித்து விட்டதே!
சம்பந்தப்பட்ட இருவரும் இருவேறு மனநிலையில் அலைந்து கொண்டிருக்க, அவர்களை சுற்றி வேலைகள் அனைத்தும் இயந்திர கதியில் துரிதமாக நடைபெற்று கொண்டிருந்தது.
“நந்தும்மா, என்ன இன்னும் பராக்கு பார்த்து நின்னுட்டு இருக்க? இதோ, இவங்களோட போய் மேக்கப் போட்டுக்கோ போ.” என்று கூறிய சுதாகரை பாவமாக பார்த்தாள் ஜீவநந்தினி.
சுதாகரோ பாவமாக, “நீதான நந்தும்மா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன. இப்போ எதுக்கு இப்படி மூஞ்சியை தூக்கி வச்சுட்டு இருக்க?” என்று வினவ, “ஹ்ம்ம், அவன் சம்மதிக்க மாட்டான்னு ஒரு நம்பிக்கைல சம்மதிச்சேன். இப்படி அந்தர்-பல்டி அடிப்பான்னு கனவா கண்டேன்!” என்று அவள் முணுமுணுத்தாள்.
திடீரென்று வேலைகள் நடப்பதைக் கண்ட விருந்தினர்கள், தங்களுக்குள் ஏதேதோ பேசியபடி இருக்க, அந்த சத்தத்தில் மகள் கூறியது தந்தையின் காதில் விழவில்லை.
“என்ன சொல்ற நந்து?” என்று சுதாகர் வினவ, “ஹ்ம்ம், போய் மேக்கப் போட்டுக்குறேன்னு சொன்னேன் ப்பா.” என்று கத்தியவள், அவர் காட்டிய அறைக்குள் சென்றாள்.
அவளின் மனசாட்சியோ தேவையில்லாமல் ஆஜராகி, ‘எப்படியோ நீ கட்டிட்டு வந்த சேலை வேஸ்ட்டாகாது. இப்போ ஹேப்பியா?’ என்று கேட்க, தலையில் தட்டி அதை அடக்கியவள், அடுத்து என்ன என்று யோசிக்கலானாள்.
அவளின் யோசனை, இதோ மணமேடையில் அமர்ந்த பின்னும் தொடர்ந்தது. ஆனால், முடிவு கிட்டிய பாடு தான் இல்லை.
மணமக்கள் இருவரும், அவரவர் எண்ணத்தில் இருக்க, இருவரின் வாயும், கரமும் ஐயர் கூறியதை செய்து கொண்டிருந்தது.
மணமகள் மாற்றத்தை கண்ட விருந்தினர்கள், தங்களுக்குள் அதற்கான காரணங்களை விலக்கி புரளி பேச, அதை எல்லாம் கேசவமூர்த்தி சட்டை செய்யவே இல்லை.
அவருக்கு மகனின் திருமணத்தை காண்பதற்கே கண்கள் இரண்டும் போதவில்லையே. கூடுதல் மகிழ்ச்சி, நண்பனின் மகளே தன் மருமகளாக வருகிறாள் என்பது.
சுற்றி நடப்பது எதுவும் மூளைக்குள் பதியாமல் போக, உதயனின் கண்கள் எதிரே எரிந்து கொண்டிருந்த அக்கினியையே வெறித்துக் கொண்டிருந்தன.
அக்கினியின் ஜுவாலையை மறைப்பது போல ஏதோ இடையில் வர, அப்போது தான் நிகழ்விற்கு திரும்பினான் உதயகீதன்.
அவன் பார்வையை மறைத்த பொருள், ஐயர் நீட்டிக்கொண்டிருந்த தாலி!
தாலியைக் கண்டதும் தயக்கம் ஒட்டிக் கொள்ள, மெல்ல நிமிர்ந்து தந்தையை ஒரு பார்வை பார்த்தான்.
அந்த பார்வையில் இருந்தது அனுமதியா பரிதவிப்பா என்று சரிவர தெரியவில்லை கேசவமூர்த்திக்கு. இருப்பினும், மகனிடம் கண்களை மூடி திறந்து ஜாடை காட்ட, அவனும் ஒரு பெருமூச்சுடன் தாலியை தன் கைகளில் வாங்கிக் கொண்டான்.
அதுவரை, தன்னருகே ஒருத்தி அமர்ந்திருக்கிறாள் என்ற உணர்வே இல்லாமல் இருந்தவன், தாலியை வாங்கிய கையோடு திரும்ப, அங்கு இன்னுமும் தன் எண்ணங்களில் மூழ்கி இருப்பவள் தான் தென்பட்டாள்.
அவளைக் கண்டதும் மீண்டும் ஒரு இகழ்ச்சிப் புன்னகை உதட்டினில் தோன்ற, தந்தையிடம் கேட்ட அனுமதியை, தன் சரிபாதியாகப் போகிறவளிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை போலும், அவளிடம் வார்த்தையை என்ன, பார்வையை கூட பரிமாறிக் கொள்ளாமல், அவளின் சங்கு கழுத்தில் தாலியைக் கட்டினான் உதயகீதன்.
சட்டென்று தன் கழுத்தில் ஏதோ ஊர்வது போலிருக்க, அப்போது தான் சுயத்தை அடைந்தாள் அம்மணி.
தன் கழுத்தை சுற்றி படர்ந்திருந்த வெள்ளை சட்டை அணிந்த கைகளை கண்டு திகைத்தவள், அருகில் திரும்பி பார்க்க, தாலியைக் கட்டி முடித்த அவளின் கணவனோ, அவளை கண்டுகொள்ளவே இல்லை.
‘ஹையோ, என்ன இது? எப்போ இவன் தாலி கட்டுனான்? அதுகூட தெரியாம இருந்துருக்கேனே!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவளின் பார்வையில் பட்டாள் மணப்பெண்ணாக தயாராகி இருந்த ராகவர்ஷினி.
அவளின் திகைப்பையும், கண்களிலிருந்து வழிந்த கண்ணீரையும் கண்ட ஜீவநந்தினியின் பார்வை தன்னால் தன்னருகில் அமர்ந்திருந்த கணவனைக் காண, அவனோ வேறெங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெருமூச்சுடன், ‘இதில் தான் என்ன செய்திருக்க முடியும்?’ என்று அமைதியாக இருந்தாள்.
அவளின் மன அமைதியை குலைப்பது போல, “உதய், நீயும் என்னை ஏமாத்திட்டியா?” என்ற ராகவர்ஷினியின் கேள்வி வெளிவந்தது.
மேளதாளங்கள் நின்றிருந்த வேளையில் கேட்ட அந்த குரலை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அனைவரும் ‘கப்சிப்’ என்று அமைதியாகி விட, ராகவர்ஷினி மேலும் பேசினாள்.
“என்னை ஏமாத்த எப்படி மனசு வந்துச்சு உதய் உனக்கு? இப்போ கூட, அப்பா அம்மா கிட்ட என்ன சொல்லிட்டு வந்தேன் தெரியுமா? என் உதய் என்னை கைவிட மாட்டான்னு. ஆனா, நீ?” என்று கூறியவள், மேலும் என்ன பேசியிருப்பாளோ, அங்கு வந்த அவளின் தந்தை, “வர்ஷி, என்னது இது? வா நாம போலாம்.” என்று அவளை இழுத்துக் கொண்டு செல்ல முயன்றார்.
அவளோ, “நோ டேடி. எனக்கு அவன் வேணும். என் உதய் எனக்கு தான்…” என்று அழுகைக்கு மத்தியில் கூறிக் கொண்டிருந்தாள்.
அவளின் குரல் கேட்க கேட்க, உதயனோ அவன் இறுக்கத்தை எல்லாம் மாலையில் காட்டிக் கொண்டிருந்தான்.
அவளின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி அவன் உதடுகள் துடித்தன. ஆனால், என்ன கூறிவிட முடியும்? வாய்க்கு மெல்ல எப்போது அவல் கிடைக்கும் என்று காத்திருக்கும் இந்த கூட்டத்திற்கு மத்தியில் அவளுக்கான பதிலை சொல்லிவிட முடியுமா என்ன?
தன் குடும்பத்திற்காக கட்டுப்படுத்திக் கொண்டான். அந்த இறுக்கத்தை தான் இலகுவான மலர்களிடம் காட்டிக் கொண்டிருந்தான்.
அவை அனைத்தையும் பேசாமடந்தையாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஜீவநந்தினி.
அப்போது, தூரத்திலிருந்து, “நீ எப்படி அவகூட சந்தோஷமா வாழ்றன்னு பார்க்குறேன்.” என்ற குரல் தெளிவில்லாமல் கேட்க, நந்தினியின் மனம் அலைபாய்ந்தது.
என்னதான், விருப்பம் இல்லாத திருமணம் என்றாலும், திருமணம் முடிந்த சில நிமிடங்களில் கேட்க கூடாத வார்த்தைகள் அல்லவா அவை?
அவனுடன் வாழ்வதும், வாழாமல் போவதும் இரண்டாம் பட்சம். ஆனால், அந்த வார்த்தைகளும், அவள் குரலிலிருந்த குரோதமும் நந்தினியின் மனதிற்குள் புகுந்து அவளின் அமைதியை குலைக்க வல்லதாக இருந்தது உண்மையே.
அதே குழப்பத்துடன் நந்தினி இருக்க, சம்பந்தப்பட்ட உதயனின் மனநிலையை எடுத்துரைக்கவும் வேண்டுமா?
தாலி கட்டி முடித்ததும் சொல்லி வைத்தது போல, கூட்டம் களைய ஆரம்பிக்க, மற்ற சடங்குகளை மணமக்களின் மனநலன் கருதி வேண்டாம் என்று விட்டனர் இருவரின் தந்தையர்களும்.
மற்ற வேலைகளை நம்பிக்கையான ஆட்களிடம் ஒப்படைத்தவர்கள், மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.
வீட்டிற்கு செல்லும் வழியில், கோவிலுக்கு சென்றதாகட்டும், வீட்டிற்கு வந்து பூஜையறையில் விளக்கேற்றியதாக இருக்கட்டும், அனைத்தையும் ஒரு மௌனத்துடனே செய்தனர் தம்பதியர்.
அது புயலுக்கு முன் வரும் அமைதியோ?
அதன்பிறகு, இருவரையும் வெவ்வேறு அறைகளுக்கு ஓய்வெடுக்க அனுப்ப, அதையும் மறுக்காமல் செய்தனர்.
அறைக்கு வந்த ஜீவநந்தினிக்கோ, அன்றைய அரை நாள் கடந்ததே, யுகம் யுகமாக கடந்து வந்ததை போல் அத்தனை அலுப்பு.
பின்னே, எதிர்பாராத திருமணம், எதிர்பாராத கணவன், எதிர்பாராத ‘வாழ்த்து’, என்று அன்று நடந்த அனைத்துமே எதிர்பாராமல் நிகழ்ந்தது தானே!
எதையெதையோ தேடி எடுத்து சிந்திக்கும் மனதை அடக்க வழி தெரியாமல், உறக்கத்தை துணைக்கு அழைக்க, நித்ராதேவியும் அவளுக்கு பாவம் பார்த்து வந்து அணைத்துக் கொண்டார்.
உதயனின் அறையோ, அவன் மனதை போல இருண்டு கிடந்தது.
எத்தனை ஆசைகள்? எத்தனை கனவுகள்? அனைத்தும் ஒன்றும் இல்லாமல் போவதற்கா?
காதலால் இளக துவங்கிய அவனின் இரும்பு மனம், மீண்டும் இறுகிப் போனது. மீண்டும் அது இளகுமா? பதில் நந்தினியிடமோ?