சென்னையின் அந்த மத்திய நடுத்தர மக்கள் வசிக்கும் சபேசன் காலனி காலை வேளை பரபரப்புகள் எல்லாம் முடிந்து சற்றே ஆசுவாசமாக அமரும் நேரம் காலை பத்து முப்பது.
அவரவர் இல்லங்களில் இல்லத்தரசிகள் மனம் போல வேண்டிய சீரியல்களை திரையில் ஒளிபரப்ப விட்டுவிட்டு, விட்டுப்போன வேலைகளை செய்தபடி அதனை காதில் வாங்கிக் கொண்டிருந்தனர்.
தெருவின் முதல் வீடான ‘திருமுருக பவனம்’ மட்டும் சற்றே நிசப்தமாக இருந்தது.
காலையே வீட்டின் தலைவர் ஞானவேல் தன் மத்திய அரசுப் பணிக்குக் கிளம்பிச் சென்றிருக்க,
வீட்டின் தலைவி குணவதி பின்பக்கமாக இருந்த வாஷிங்மெஷினில் துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.
அவர் துணிகளோடு சேர்த்து தங்கள் செல்வ மகளையும் அந்த மிஷினில் போடும் அளவுக்கு கோபத்தில் இருப்பது அவரது மெல்லிய புலம்பலில் இருந்து புலப்பட்டது.
“கொஞ்சமாவது இவளுக்கு பொறுப்பு இருக்கா? வயசு இருபத்தி ஆறு ஆகுது. ஆனா மனசுல பள்ளிக்கூட பாப்பான்னு நினைப்பு. மணி என்ன ஆகுது? இன்னும் மகாராணி ரூம் கதவைத் திறக்கக் காணோம். போய் எழுப்பலாம்ன்னு நெனச்சா, ரூம் வாசல்ல சிகப்பு கலர்ல ‘டு-நாட் டிஸ்டர்ப்’ போர்ட் போட்டு வச்சிருக்கா. அப்பா அம்மா மேல பயம் இருந்தா இப்படி செய்ய தோணுமா? எல்லாம் அவங்க அப்பா கொடுக்கற இடம். ‘அவளை தொந்தரவு செய்யாத’ன்னு ஆபிஸ் கிளம்பும் போது ஆயிரம் தடவை சொல்லிட்டு போறார். இப்படி இருந்தா அவ எப்படி என் பேச்சை கேட்பா?” என்று நிறுத்தாமல் புலம்பியபடி தன் கணவரின் சட்டைக் காலர்களுக்கு மட்டும் பிரஷ் வைத்து தேய்த்து மிஷினில் போட்டுக் கொண்டிருந்தார்.
இவர் திட்டுவதை நிதானமாக கேட்டு ரசித்தபடி தன் காபியை மிடறு மிடறாக உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தாள் இத்தனை திட்டுகளுக்கும் சொந்தக்காரியான கன்யா.
அவளது கண்களில் அன்னையின் திட்டுக்கு எதிர்வினையாக கோபம் வராமல் உதட்டில் சிரிப்பே வந்து கொண்டிருந்தது.
மெல்ல ஓசை எழுப்பாமல் பின் வாசல் படி இறங்கி வந்தவள், அங்கிருந்த துளசி மாடத்தின் ஓரத்தில் காபி கப்பை வைத்துவிட்டு அன்னையை பின்னால் இருந்து அணைத்தாள்.
மகளை அந்த நேரம் அவ்விடம் எதிர்பார்த்திராத குணவதி “ஐயோ” என்று அலறிவிட,
“ஏன் மா ஏன்? நான் என்ன பேயா, பூதமா? ஏன் இப்படி கத்துற?” என்று அருகில் இருந்த துவைக்கும் கல்லில் தாவி ஏறி அமர்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முக்கால் பேன்ட் இரவு உடைக்கு அவள் ஏறி அமர்ந்ததும் அவளது வாழைத்தண்டு கால்கள் வெயிலில் பளிச்சென மின்னியது.
“பேயோ பூதமோ வந்தா கூட பயமில்ல டி. உன்னைக் கண்டா தான் பயமே. எந்த நேரம் என்ன பிரச்சனையை இழுத்துட்டு வருவியோன்னு வயித்துல புளியை கரைச்சது போல இருக்கு.” என்று சோப்புத்தூளை போட்டு மிஷினை ஆன் செய்தார்.
“ம்மா என் வேலை அப்படி. அதுக்காக நீ இப்படி பேசினா நல்லாவே இல்ல மா” என்று முகம் சுருக்கினாள்.
அவளது முகம் வெயிலின் உபயத்தால் மிதமான மஞ்சள் நிறத்தில் மின்ன, அவளையே உற்று நோக்கிய அன்னையின் மனதில் தோன்றும் பயம் எத்தகையது என்பதை அறிந்தும் அறியாதவள் போல பாவமான முகபாவம் காட்டினாள்.
“நீ கேடி டி. வேலை எது வம்பு எதுன்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.” என்று துணி கொண்டு வந்த வாளியை உப்புக் கரை போக பிளாஸ்டிக் ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்து குழாயில் காட்டி கழுவினார்.
“மா…” என்று அவள் எழுந்து வந்து செல்லம் கொஞ்ச முற்பட,
“நேத்து எத்தனை மணிக்கு நீ வீட்டுக்கு வந்த? எப்போ தூங்கி எப்போ எழுந்திருக்க? மணி என்ன தெரியுமா?” என்று குரலில் கோபத்தைக் காட்டி அவர் வினவ,
“முக்கியமான கேஸ் மா. எவிடன்ஸ் கலெக்ட் பண்ண சீனியர் என்னைத் தான் அனுப்பி வச்சாரு. அங்க கொஞ்சம் நேரமாகிடுச்சு. வீட்டுக்கு வரும்போது மணி ஒன்னு இருக்கும். இப்போ மணி பதினான்னு ஆகப் போகுதுன்னு தெரியும். பன்னிரெண்டு முப்பதுக்கு அந்த எவிடன்ஸை கொடுக்க ஹைகோர்ட் வரைக்கும் போகணும். அம்மா தாயே குணவதி நீ கொஞ்சம் மனசு வச்சு நாலு தோசை சுட்டுக் கொடுத்தா தின்னுட்டு தெம்பா கிளம்பிடுவேன்.” என்று அன்னையின் இரண்டு கன்னத்தையும் கைகளைக் கொண்டு கிள்ளி ஆட்டி அவள் கேட்ட விதத்தில் வலித்தாலும், அவளது பசியும் அவள் கிளம்ப வேண்டிய அவசியமும் உணர்ந்து,
“வலிக்குது. கையை எடு பிசாசு.” என்று அவள் கைகளைத் தட்டி விட்டுவிட்டு சமையல் அறை நோக்கி செல்லலானார்.
அன்னை செல்வதைக் கண்டு மெல்லிய புன்னகையை உதிர்த்தவள், தன் அறைக்கு சென்று குளித்துத் தயாராக ஆரம்பித்தாள்.
கருப்பு நிற பேன்ட்டும் வெள்ளை நிற மேல் சட்டையும் அணிந்தவள், கருப்பு நிற வெயிஸ்ட் கோட் அணிந்து தன் அரையடி கூந்தலை ஒரு கருப்பு ரப்பர்பேண்ட் கொண்டு போனி டெயில் போட்டாள்.
கண்ணுக்கே தெரியாத கருப்பு நிற பொட்டு வைத்து, கையில் அதே கருப்பில் ஸ்மார்ட் வாட்சை கட்டிகொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தாள்.
எதிரே இருந்த கண்ணாடியில் அவளது உருவம் செஸ் போர்ட் போல கருப்பு வெள்ளையில் மிளிர்ந்தாலும் அதையும் தாண்டிய அவளது முகத்தின் எலுமிச்சை நிறம் எடுப்பாய் தெரிந்தது.
அப்பொழுது அவளது செல்போன் அவளை தனது இனிய கானம் இசைத்து அழைக்க, அதில் தெரிந்த ‘ரஞ்சிதா’ என்ற எண்ணைக் கண்டு புருவம் முடிச்சிட அழைப்பை ஏற்றாள்.
“என்னாச்சு ரஞ்சி இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க?” என்று பேசிக்கொண்டு ஹாலுக்கு வந்தவள்,
இரவு கொண்டு வந்து செல்ஃப்பில் வைத்த அவளின் கருப்பு நிற ஷோல்டர் பேகை எடுத்தபடி அன்னை என்ன செய்கிறார் என்று கவனித்தாள்.
“கன்யா ஒரு பெரிய பிரச்சினை டி. நீ தான் வந்து சால்வ் பண்ணி வைக்கணும்.” என்று எதிர்முனையில் இருந்த ரஞ்சிதா படபடக்க,
“என்னாச்சு? அதை சொல்லு முதல்ல.” என்று கண்டிப்பாக அவள் கேட்ட விதத்தில் படபடவென்று அனைத்தையும் ஒப்பிக்கலானாள் அவள்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டபடி சாக்ஸ் போட்டு ஷூ லேசை கட்டி முடித்து, “இன்னும் பத்து நிமிஷத்துல நீ சொன்ன இடத்தில இருப்பேன்.” என்று அழைப்பை துண்டித்து செல்போனை தன் பேன்ட் பாக்கெட்டில் திணித்தாள்.
குணவதி தோசைகளை அடுக்கி மகளுக்குப் பிடிக்கும் என்று மிளகாய் பொடி எண்ணெய் சேர்த்து எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தபோது காலியான அறையே அவரை வரவேற்றது.
கன்யா அப்பொழுதே கிளம்பிச் சென்றிருந்தாள்.
“எந்த இம்சை போன் பண்ணி உதவி கேட்டுச்சோ தெரியல, இவ சோறு கூட திங்காம கிளம்பிப் போயிட்டாளா? ராத்திரியே சாப்பிட்டாளோ இல்லையோ? இவளை வச்சுகிட்டு ஒரு வேளையாவது நிம்மதியா இருக்க முடியுதா? கட்டிக் கொடுத்து துரத்தி விடலாம் அப்படின்னு பார்த்தா அப்பனும் பொண்ணும் சேர்ந்துகிட்டு எனக்கே டிமிக்கி கொடுக்குதுங்க. இன்னிக்கு வீட்டுக்கு வரட்டும் ரெண்டு பேரையும் ஒரு வழி பண்றேன் பாரு.” என்று எப்பொழுதும் போல புலம்பிவிட்டு தோசையை வெறித்த வண்ணம் ஹாலில் அமர்ந்தார் குணவதி.
•••••
முற்பகல் பதினொரு மணி என்பதை உலகுக்கு பறை சாற்றும் விதமாக சூரியன் பளிச்சென்று வானில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தான்.
சிவப்பு நிற பொலேரோ வண்டியில் நீலமும் சிவப்புமாக விளக்குகள் ஒளிர சாலையோர நிழலில் நிறுத்திவிட்டு அதன் அருகில் பதைபதைப்புடன் நின்றிருந்தார் அதன் ஓட்டுநர் ஐயாக்கண்ணு.
அவருக்கு இருக்கும் பரபரப்பில் துளி கூட இல்லாமல் அருகில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தான் அவன்.
“சார் மணி ஆகுது சார். நாம போகணும்.” என்று அவனருகில் செல்லும் துணிவில்லாமல் நின்ற இடத்தில் இருந்தே அழைத்தார் ஐயாக்கண்ணு.
“போவோம் அண்ணா. என்ன அவசரம்? நமக்காக மினிஸ்டரா காத்துகிட்டு இருக்காரு?” என்று நக்கலாக கேட்டபடி டீயை குடித்தான் முகுந்தன்.அந்த சரகத்தின் காவல்துறை ஆய்வாளர்.
“எஸ். ஐ. தினேஷ் சார் ஏற்கனவே அங்க போயிட்டார் சார். நமக்காக அவரும் காத்துகிட்டு இருக்காரு.” என்று தயங்கிக் கூற,
“அவனை யாரு முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி போக சொன்னது? நான் சொன்னேனா? முன்னாடி போனான்ல பேச்சு வாங்கட்டும்.” என்று இயல்பாக கூறிவிட்டு தான் குடித்த டீக்கான பணத்தை அங்கிருந்த மிட்டாய் டப்பா மீது வைக்க, கடைக்காரர் பயந்தபடி,
“வேண்டாம் சார்.” என்று நகர்த்தினார்.
“ஏன் யா வேண்டாம்னு சொல்ற? காசு போட்டு தானே பால், டீத்தூள், சக்கரை எல்லாம் வாங்குற? என்கிட்ட காசு வாங்காம எப்படி சமாளிப்ப? ஒருவேளை சைட்ல பான், கஞ்சா இப்படி சேல்ஸ் பண்ணுறியா? உள்ள வந்து பார்க்கவா?” என்று லட்டியை இன்னொரு டப்பாவில் வைத்துத் தட்ட, பயந்து போன கடைக்காரன்.
“ஐயோ அப்படி எதுவும் இல்லங்க சார்.” என்று பம்மியதும்,
“இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நான் தான். யாராவது மாமூல் கேட்டாலோ, இல்ல உன்கிட்ட டீயோ பொருளோ வாங்கிட்டு காசு தராம போனாலோ இந்தா என் போன் நம்பர். யாருன்னு பேரை மட்டும் விசாரிச்சு வச்சிட்டு எனக்கு தகவல் சொல்லு. உண்டு இல்லன்னு பண்ணிடலாம். அப்பறம் நானும் அப்பப்ப உன் கடையை வந்து பார்ப்பேன். பான், சர்தா இப்படி ஏதாவது பார்த்தேன்னு வை. யோசிக்காம தூக்கி உள்ள வச்சிடுவேன்.” என்று மிரட்டலாக கூறிவிட்டு நகர்ந்தான்.
அதே நேரம் சில சிறுவர்கள் வந்து சிகரெட் கேட்க, கடைக்காரன் செய்வதறியாது விழித்தான்.
அவனது விழியில் வழிந்த பயத்தைப் பார்த்ததும் அவர்கள் சற்று தள்ளி நடக்க ஆரம்பித்திருந்த முகுந்தனைக் கண்டு பின்வாங்க, அவனோ போன வேகத்தில் திரும்பி வந்து அவர்களில் ஒருவனின் சட்டைக் காலரை பற்றினான்.
“வயசு என்ன டா உனக்கு? இந்த வயசுல சிகரெட் கேட்குதா? ஒழுங்கா படி போ.” என்று அனுப்பிவிட்டு,
“பதினெட்டு வயசுக்கு கம்மியா உள்ள பசங்களுக்கு சிகரெட் கொடுத்த கடையை காலி பண்ணிடுவேன்.” என்று மிரட்ட,
“நான் என்ன சார் பண்ணுவேன்? அப்பா கேட்டாரு, அண்ணன் கேட்டான் அப்படின்னு சொல்லுதுங்க. தரமாட்டேன்னு சொன்னா அடுத்த கடையில வாங்கிட்டு போகுதுங்க. அதான் சார் கொடுத்தேன். இனிமே கொடுக்க மாட்டேன் சார்.” என்று கைகூப்பினான் கடைக்காரன்.
“இவனுங்கள அடிக்க கூடாது, வாங்கிட்டு வர சொல்ற, இல்ல இவங்க முன்னாடியே ஊதுற இவங்க அப்பனுங்களை அடிக்கணும்.” என்று முகுந்தன் ஜீப்பில் ஏற முற்பட்டான்.
“போவோமா சார்?” என்று ஐயாக்கண்ணு வேகமாக ஏற,
“ஹைகோர்ட் போங்க அண்ணா. இன்னிக்கு ஒரு ஹியரிங் இருக்கு” என்று சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
“தம்பி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நீங்க பகைச்சுக்கிறது பெரிய இடம். கஜா சாதாரண ரவுடி இல்ல தம்பி. அவன் நேரம் சொல்லி போகாத ஒரு ஆபிசர் கூட நம்ம பக்கம் இல்ல. நீங்க எங்க கிட்ட மரியாதையா பழகுற பழக்கத்துக்காக இதை உங்களுக்கு ஒரு அண்ணன் மாதிரி நெனச்சு சொல்றேன்” என்று அவனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில் கூறினார்.
அவர் சொன்னதை அடுத்த ஐந்து நிமிடத்தில் அவனது மேலதிகாரி போனில் அழைத்துக் கூற, இகழ்ச்சியான சிரிப்பை உதிர்த்தவன்,
“இன்னிக்கு ஒரு மணிக்கு ஹைகோர்ட்ல ஒரு கேஸ்க்கு நான் ஆஜர் ஆகணும் சார்.நான் தான் கேசுக்கு ஐ. ஓ. ஜட்ஜ் நம்ம கந்தவேல் சார் தான். போன் பண்ணி எனக்காக பர்மிஷன் சொல்லிட்டீங்க அப்படின்னா நான் நேரா கஜாவை பார்க்க போயிடுவேன்.” என்று கொஞ்சமும் அலுங்காமல் கூறிய முகுந்தனை மனதில் வசை பாடிய அவர்,
“சரி ரெண்டு முப்பதுக்கு கஜா சொன்ன இடத்துக்கு போயிடணும்.” என்று கறாராகக் கூறி அழைப்பைத் துண்டித்தார்.
செல்போனை ஏளனமாக பார்த்து சிரித்துவிட்டு தன் காக்கி சட்டையின் பையில் திணித்த முகுந்தனுக்கு வயது இருபத்தி எட்டின் விளிம்பு.
எஸ். ஐ செலக்ஷன் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று டிரெய்னிங் சென்ற நாளில் இருந்து அவன் இன்று வரை தன் கொள்கையில் வளைந்து கொடுத்ததில்லை.
நேற்று கஜாவின் ஆட்கள் நால்வரை கஞ்சா விற்றதற்காக கைது செய்து வைத்துவிட்டான். அவர்களை வெளியே விடச் சொல்லி எம்.எல்.ஏ போன் செய்ய,
“சார் இன்னும் கொஞ்சம் சத்தமா பேசினிங்கனா பக்கத்துல இருக்கற தீச்சுடர் நிருபருக்கு கேட்டுடும் சார் மெல்ல பேசுங்க.” என்று நக்கலாக அவன் சொன்னதும் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
அவனிடம் தன் செல்வாக்கு செல்லுபடியாகாத கடுப்பில் அவனை நேரில் வந்து பார்க்கச் சொல்லி அழைத்திருந்தான் கஜா.
அதற்கு அவன் செய்த வேலைகளே மேலே நாம் பார்த்தது.
இவர்களிடமிருந்து நழுவி ஹைகோர்ட் செல்லும் இவன் சிக்கப் போவது கஜாவிடமா? கன்யாவிடமா?