“என் ஃப்ரெண்ட் ரொம்ப நல்ல மாதிரி, பையன் ரொம்ப பொறுப்பு” என்று போக வர ஏதோ ஒன்றை கன்யா காதுபட பேசிக்கொண்டே இருந்தார்.
ஏற்கனவே காலை செய்து வைத்த திருமணத்தின் பிரதிபலிப்பு அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக எப்படி இருக்கும் என்ற சிந்தனையில் இருந்தவளுக்கு தலைவலி லேசாக ஆரம்பித்து இருந்தது.
இதில் இவர் வேறு ஏதாவது பேசிக்கொண்டே இருக்க,
“மா.. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா? உன் ஃப்ரெண்ட் பையன் ஓவியம் தான். ரொம்ப பிடிச்சா நீயே கல்யாணம் பண்ணிக்கோ. சும்மா காதுல ஓட்டை போட்டுட்டே இருக்காத” என்று எரிச்சலாக கூறிவிட்டு சோஃபாவில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
அப்பொழுது அலைபேசி மணி அடிக்க, ரஞ்சிதா அழைத்திருப்பாள் என்று எண்ணி அதனை கையில் எடுத்தவள், முகுந்தனின் எண்ணைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
‘இந்த இம்சை ஏன் இப்ப போன் பண்ணுது? இவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் இதுக்கு காதல் அருமை புரியப் போறது இல்ல.’ என்று அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு டி.வி யில் செய்தி சேனலை ஒளிர விட்டாள்.
ஏதேதோ பழைய செய்திகளுக்குக் பின், “ஜாதி சங்கத்தின் முன்னாள் தலைவர் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். தங்கள் தந்தையிடம் இருந்து காப்பாற்றுமாறு காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவரது தந்தையான ஜாதி சங்கத்தின் முன்னாள் தலைவர் சோமசுந்தரம் நமது தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ‘என் பொண்ணுக்கு விருப்பமான பையனை அவ கல்யாணம் பண்ணிக்க நினைச்சது எனக்கு தப்பா தெரியல. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி பண்ணிட்டாங்க. சொல்லி இருந்தா நானே விமரிசையா கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். இப்பவும் ஒன்னும் இல்ல. வந்தா ஏத்துக்க தான் போறேன். அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும். நாம நம்ம வேலையை பார்ப்போம் வாங்க ‘”என்று நிருபரை சாதாரணமாக பார்த்து பேசிக்கொண்டிருந்த அந்த மனிதரை மற்றவர்கள் கால மாற்றத்துக்கு ஏற்றார் போல காதலுக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் என்று ஒரு புறமும், ஜாதி சங்கம் என்று வைத்துக் கொண்டு தன் பெண் மாற்று ஜாதியில் மணமுடித்தால் தவறில்லை என்று கொள்கையில் இருந்து பிறழ்கிறார் என்று ஒரு புறமும் வாதம் வேறு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதைக் கண்ட கன்யாவுக்கு, “அடேய் ஒரு காதல் கல்யாணம்.. அதுக்குப் பின்னாடி எவ்வளவோ அரசியல், எவ்வளவு வன்மம், எத்தனை டிராமா?” என்று பெருமூச்சு விட்டுவிட்டு, கைபேசியை எடுத்தவள் அதில் இருந்தவைகளை கவனித்துவிட்டு ‘அவன் அவன் வசதிக்கு விஷயத்தை எப்படி எல்லாம் சொல்றான் பாரு’ என்று யூட்டியூப் தம்ப்நெயில்களைப் பார்த்து சிரித்துக் கொண்டாள்.
இவளது நல்ல நேரமா கெட்ட நேரமா என்று பிரித்தறிய முடியாதபடி குணவதி சோபாவுக்கு பின்னால் நின்று செய்திகளைக் கேட்டுவிட்டு,
“ஏன்டி இந்த கல்யாணத்தை நீ நடத்தி வைக்கலை தானே! ஏன் கேட்கிறேன்னா, நீ நடத்தி இருந்தா இப்பவே நான் தலைமறைவாகத் தான். அப்பறம் எவனாவது கத்தியை உன்னை விட்டுட்டு என் கழுத்துல வைப்பான். ஜாதி சங்கம் அது இதுன்னு சொல்றத பார்த்தா, ஒருவேளை நீயா இருந்தா இந்த முறை கத்தி வராது, அருவா தான் வரும்.” என்று பெருமூச்சுடன் அங்கிருந்து விலகி சமையலறை சென்றார்.
நெஞ்சில் கை வைத்து ஆசுவாசப் படுத்திக் கொண்ட கன்யா, “அப்பாடி.. கிரேட் எஸ்கேப். அம்மாவுக்கு அது நான் தான்னு தெரியாது.” என்று நிம்மதியாக,
“ஒருவேளை இதை நீ செஞ்சிருந்தா உனக்கு பிடிக்குதோ இல்லையோ, இந்த கல்யாணம் கன்பார்ம்.” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் குணவதி.
“ஐய்யோ… இந்த அம்மாகிட்ட சிக்க கூடாது” என்று முடிவு செய்து மெதுவாக நழுவி மாடியில் உள்ள தன் அறைக்கு வந்து நிம்மதியாக அவள் மூச்சு விட்ட நேரம் மீண்டும் அவளது கைபேசியில் முகுந்தனின் அழைப்பு.
இம்முறை கோபம் வந்துவிட, “என்ன விஷயம் மிஸ்டர் முகுந்தன்?” என்று குரலில் கோபத்தை அப்பட்டமாக காட்டினாள்.
“கன்யா, அந்த ஆள் டி.வில கொடுக்கற பேட்டியை நம்பாத. அந்த பொண்ணு கிட்டயும் புனித் கிட்டயும் நம்பி திரும்பி வர வேண்டாம்னு சொல்லு. அதை சொல்ல தான் ரொம்ப நேரமா உனக்கு டிரை பண்ணிட்டு இருக்கேன்.” என்று படபடப்பாக பேசினான்.
“ஏன் என்னாச்சு? அவங்க அப்பா அக்சப்ட் பண்ணுகிறேன்னு தானே சொன்னார்? அப்படி இல்லையா?” என்று அவள் யோசிக்க,
“எல்லாமே சும்மா டிராமா. நான் பெசன்ட் நகர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மதியரசு கிட்ட பேசினேன். எங்க கல்யாணம் பண்ணினாங்க, எங்க போனாங்கன்னு எல்லாமே விசாரிக்க சொல்லி இருக்காராம். கூடவே அந்த சொந்தக்காரன் ஒருத்தன் ரௌடிக்கு ரைட் ஹேண்டா இருந்தான்ல அவன் வேற கார்ல ஆளை போட்டுகிட்டு சிட்டி முழுக்க தேடிக்கிட்டு இருக்கான். நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இதுக்கு தான் நான் பயந்தேன்.” என்று முகுந்தன் தன் நண்பனுக்காக யோசிக்க,
“நீ போலீஸ் தானே? அவனுங்க இவ்வளவு அராஜகம் பண்ணுறாங்க, தடுக்காம அந்த பிள்ளைங்கள ஒளிய சொல்ற? ஒன்னு எப்பவும் போல காதலுக்கு எதிரியா இருந்து அவங்களையும் என்னையும் அவங்கப்பா கிட்ட காட்டிக் கொடு. இல்ல காதலுக்கு ஹெல்ப் பண்ற ஐடியா இருந்தா எப்ப ஹெல்ப் கேட்டாலும் பண்ணு. அதை விட்டுட்டு சும்மா பூச்சி காட்டாத. வை.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
அவளது பேச்சு முகுந்தனை எரிச்சல் அடைய வைத்தது.
‘அதென்ன ஒன்னு வெள்ளை, இல்லனா கருப்பு. ரெண்டு கலர் தான் இருக்கா, இதுக்கு இடையில எத்தனை இருக்கு? மனுஷனும் அப்படித்தான். ஒன்னு அப்படி இல்லனா இப்படின்னு ரெண்டு கோடு போட்டு அதுக்குள்ள நிற்க முடியுமா? இந்த செஸ் போர்டுக்கு புரிய மாட்டேங்குது.’ என்று சலித்துக் கொண்டான்.
மாலை மங்கி இரவு கவிழத் துவங்கியது. கன்யா மனதில் எந்த சலனமும் இல்லாமல் உணவை முடித்துக்கொண்டு படுக்கைக்கு வந்து விட்டாள்.
ஆனால் அங்கே முகுந்தனின் மனமோ முள்ளில் சிக்குண்ட பறவையாக சிறகை படபடவென்று அடித்துக்கொண்டு நினைவுகளின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் தவித்தது.
அன்னை வேறு அழைப்புக்கு மேல் அழைப்பு விட்டு மறுநாள் சந்திப்புக்கு நினைவூட்டல் செய்கிறார்.
தீபக் இவனின் அழைப்பை ஏற்க வழியில்லாமல் அவனது கைபேசியை தூர எறிந்து விட்டான் போலும். அவன் நிலவரமும் தெரியவில்லை.
கன்யா எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன் என்று கூறியதோடு, கைபேசி அழைப்பில் கோபமாக பேசி மறுமுறை எதற்கும் கேள்வி கேட்க வழி இல்லாமல் செய்து விட்டாள்.
இந்த தீபக் தன்னை அழைக்காமல் இருந்திருக்கலாம். இந்த அவஸ்த்தை அவனுக்கு இருந்திருக்காது.
இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் உழன்றவன் நெஞ்சம் எதற்கு உழல்கிறாய் என்ற கேள்விக்கு மட்டும் விடை சொல்ல மறுத்தது.
கன்யா நிதானமாக காலை எட்டு மணிக்கு எழுந்து கீழே வர, தந்தை அலுவலகம் செல்ல தயாராகி உணவு மேசையில் காலை உணவுக்காக காத்திருந்தார்.
“குட் மார்னிங் ஞானம்” என்று சீவிய அவர் தலையை அவள் கலைத்து விட
“என்ன டா கன்யா, நேரமாகுது இப்போ போய் கலச்சு விட்டுட்ட ?” என்று பொய் கோபம் காட்டி அவர் தலையை கோதிக்கொள்ள,
“எப்படி இருந்தாலும் நீ அழகு தான் ஞானம்” என்று சலுகையாக தந்தையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அன்னை அவளை முறைத்தபடி தந்தைக்கு தட்டில் இட்லிகளை வைத்து சாம்பாரை தனியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வந்து அவர் முன்னே வைத்தார்.
“என்னவோ உன் குணா என்னை இந்த முறை முறைக்குதே ஞானம்? நான் என்ன தப்பு பண்ணினேன்?” என்று கேட்டுக்கொண்டே தந்தை அவர் சாப்பிட எடுத்த விள்ளலை அவருடைய கைகொண்டு தான் வாய்க்கு மடை மாற்றினாள்.
“பல்லு தேய்காம சாப்பிடற? நீயெல்லாம் ஒரு வக்கீல்?” என்று மகளை முதுகில் தட்டிவிட்டு திரும்பிய குணவதி ஆணியடித்தார் போல நின்றார்.
அவரின் பேயறைந்த முகத்தைத் கண்டு பின்னால் திரும்பிப் பார்த்தனர் தந்தையும் மகளும்.
அங்கே ஒரு சிறு கும்பலுக்கு முன்னே ஜாதி சங்க முன்னாள் தலைவர் திரு.சோமசுந்தரம் நின்று கொண்டிருந்தார். இளமதியின் தந்தை என்று நன்கறிந்த கன்யா, எப்பொழுதும் போல முகத்தில் அலட்சியத்தைப் பூசிகொண்டு,
“வாங்க சார்.. என்ன விஷயம்?” என்று சாதாரணமாக விசாரித்தாள்.
“என்னைத் தெரியுமா மா? நான் தான் இளமதியோட அப்பா.” என்று கைகூப்ப,
“அப்படியா சார்?” என்று தெரியாதவள் போல வினவிய மகளை முறைத்தார் குணவதி.
அவர் தான் இந்த மனிதரை தொலைகாட்சியில் பார்த்திருந்தாரே!
மகளின் அருகில் வந்து, “என்ன டி பண்ணித் தொலைச்சிருக்க?” என்று கேட்க,
அவளோ சற்றும் லட்சியம் செய்யாமல் தன் செல்போனை அதன் தாங்கியில் வைத்துவிட்டு,
“ஒன்னும் இல்ல. நீ சும்மா நில்லு. எவனும் உன் கழுத்துல கத்தி வைக்காம நான் பார்த்துக்கறேன்.” என்று கண்ணடித்தாள்.
இவர்கள் பேசுவதற்குள் ஞானவேல் கைகளை அலம்பிக் கொண்டு,
“வாங்க சார். நீங்க யாருன்னு எனக்கு தெரியல. உட்காருங்க.” என்று வீட்டிற்கு வந்தவரை உபசரிக்க ஆரம்பித்தார்.
“ஐயோ உங்கப்பா வாண்டடா போய் சிக்குறார் பாரு டி. காப்பாத்து.” என்று மகளை முன்னே தள்ளினார் குணவதி.
ஆனால் அப்பொழுது தான் மகள் இரவுடையில் இருப்பதைக் கவனித்து,
“போய் ட்ரெஸ் மாத்திட்டு வர்றியா?” என்று கேட்டு வைக்க,
“அப்ப உன் புருஷன் கழுத்துல அருவா வச்சா உனக்கு ஓகே வா?” என்று அவள் மெல்லிய குரலில் வினவ, யோசிக்காமல் மகளின் கையில் ஒரு அடி வைத்தார்.
“அதை கவனித்த சோமசுந்தரம், இப்ப அடிச்சு புண்ணியம் இல்லம்மா. முன்னமே சொல்லி வளர்க்கணும். கேட்கலன்னா அடிச்சும் வளர்த்திருக்கணும். இல்லன்னா இப்படி இந்த வயசுல என் வீட்டுப் பொண்ணை கண்டவனுக்கு….” என்று அவர் முடிக்காமல் இழுக்க குணவதிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
ஆனால் கன்யாவோ அலட்சியமாக, “ஏன் நிறுத்திட்டீங்க சார்? முழுசா சொல்லுங்க. நான் உங்க பொண்ணை கண்டவனுக்கு… சொல்ல முடியலையா? ஏன்னா நான் அதை செய்தேன்னு சொன்னா உங்க பொண்ணு செஞ்ச வேலைக்கும் ஒரு பேர் வைக்கணும் இல்லையா? அதை நான் தயங்காம சொல்லுவேன். உங்களால முடியுமா?” என்று அவரை சீண்டினாள்.
“கன்யா. அமைதியா இரும்மா. பெரியவங்க கிட்ட என்ன பேசுற?” என்று ஞானவேல் கோபம் கொள்ள,
“அவர் பெரியவர் மாதிரி பேசலப்பா. அவர் பொண்ணு காதலிச்சா, கல்யாணம் பண்ணிக்கிட்டா, நான் ஜஸ்ட் ஹெல்ப் பண்ணினேன். இவருக்கு நம்ம வீட்ல என்ன வேலை? என்னை ஏன் தேவையில்லாம பேசுறாரு?” என்று தந்தையிடம் கேட்பது போல அவள் குடைந்தது என்னவோ சோமசுந்தரத்திடம் தான்.
“என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு தெரியாதா? நீ யார் அதை செய்ய?” என்று அவரும் தன்னிலை மறந்து எகிறி வந்தார்.
“அவ உங்ககிட்ட கேட்கலன்னு எனக்கு தெரியாது சார். ‘நாங்க லவ் பண்ணுறோம். வீட்டுக்கு தெரிஞ்சா சரியா வராது. எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க’ அப்படின்னு வந்து நின்னது உங்க பொண்ணு. நீங்களே கல்யாணம் பண்ணி வைப்பீங்கன்னு அவங்களுக்கு தெரியாது இல்லையா?” என்று சற்றும் நக்கல் குறையாத குரலில் அவள் கேட்க,
“என்ன? நான் கல்யாணம் பண்ணி வைப்பேனா? அதுவும் அந்த பரதேசியையா? நெவர். ஒழுங்கா அவங்க எங்கன்னு சொல்லிடு.” என்று அவளை நோக்கி அவர் முன்னேற, அவளோ,
“எங்கன்னு என்கிட்ட கேட்டா? கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டா, நான் போனேன். என்கிட்ட அவளோட ஓடிப்போகற பிளான் எல்லாம் சொல்லி, நீங்க வந்தா நான் சொல்றதுக்கு ரூட் மேப் எல்லாமா கொடுத்துட்டு போவா? கொஞ்சமாவது லாஜிக்கா யோசிங்க சார்.” என்று சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டாள்.
“சின்ன பொண்ணு நீ, உனக்கு என்ன இவ்வளவு தைரியம்? நான் நெனச்சா நீ இருந்த தடயமே இல்லாம உன்னை அழிச்சிடுவேன்.” என்று அவர் மிரட்ட,
“நல்லா யோசிச்சு தானே சார் சொல்றீங்க? அப்பறம் பேச்சு மாற மாட்டிங்க தானே? ஏன்னா பொண்ணு வந்தா ஏத்துக்கறேன்னு நேத்து பிரஸ் கிட்ட சொல்லிட்டு, இன்னிக்கு வேற மாதிரி பேசுறீங்க. இப்ப என்னை கொலை பண்ண போறேன்னு சொல்லிட்டு நாளைக்கு பேச்சு மாற மாட்டிங்கல்ல?” என்று நக்கல் கொப்பளிக்க கேட்கும்போது வேகமாக அவளை நோக்கி வந்தவர்,
“உனக்கு எவ்வளவு நக்கல் இருந்தா இப்படி கேலி, கிண்டலா பேசுவ?” என்று அவள் முடியை கொத்தாக பிடிக்க வந்த நேரம் அவர்கள் வீட்டு வாசலில் போலீஸ் வாகனம் நிற்கும் ஓசை கேட்டது.
தன் கண் முன்னே இவர்கள் மூவரும் இருக்க, போலீசுக்கு தகவல் கொடுத்தது யார் என்று சோமசுந்தரம் குழம்பி நிற்க,
“சார் நான் உங்களை ஹராஸ்மெண்ட் அண்ட் அட்டம்ப்ட் டு மர்டர் கேஸ்ல அரஸ்ட் பண்ணுறேன். என்னோட வாங்க ” என்று வந்து நின்றார் ஆழ்வார்பேட்டை காவல்துறை ஆய்வாளர்.
குணவதியும் ஞானமும் அந்த மனிதர் மகளிடம் வந்த வேகத்தில் பயந்து போயிருக்க, சரியான நேரத்தில் போலீஸ் வந்து அவரை கைது செய்யவும் எப்படி என்று புரியவில்லை என்றாலும் மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற நிம்மதி பிறந்தது.