முகுந்தன் மனதில், இது காதலா இல்லையா? சேருமா சேராதா? சரி வருமா வராதா? இப்படியாக பல கேள்விகள் உழன்று கொண்டிருக்க, கன்யாவின் எண்ணமெல்லாம், தனக்கு உதவியவரை சோமசுந்தரம் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதே.
அவள் அவரிடம் கேட்ட உதவி, பதிவாளர் அலுவலகத்தில் வேலைகள் துரிதமாக நடக்க ஆவன செய்யக் கேட்டிருந்தாள். இவளை சோமசுந்தரம் கண்டறிந்த விதம் இவள் பதிவுத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போட்டதினால் மட்டுமே. அது மட்டுமல்லாது, யார் கேட்டாலும் தன் பெயரை மட்டும் சொல்லுமாறும் மற்றவர்கள் தான் அழைத்து வந்த ஆட்கள் என்று சொல்லும்படி தான் பியூன் முதல் பதிவாளர் வரை தனிப்பட்ட முறையில் கூறி இருந்தாள். ஆனால் அவர் உதவியது எப்படி தெரிந்து, இப்போது அவரை அடித்து விசாரித்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் யாராக இருக்க முடியும் என்று சிந்தித்தவள் மனம் முகுந்தன் போல தன் செயல் பிடிக்காத யாராவது இருக்கும் என்று ஒதுக்கித்தள்ள இயலவில்லை.
யோசனையோடு அவள் சென்று நின்ற இடம் அவர்களுக்கு அவள் திருமணம் செய்து வைத்த ராயப்பேட்டை பதிவாளர் அலுவலகம்.
யாருக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு பதிவாளர் அலுவலகத்தில் தான் எப்பொழுதும் திடீர் திருமணங்களை நடத்தி வைப்பாள் கன்யா. ராயப்பேட்டை பதிவாளர் மிகவும் நல்ல மனிதர், உதவும் குணம் கொண்டவர் என்று அறிந்து அவரிடம் பேசி விட்டு தான் ஏற்பாடுகளில் இறங்கினாள். ஆனால் அனைத்திற்கும் அவரிடம் சென்று நிற்க முடியாது என்று தான் அலுவலக பணியாளர்கள் செய்து அனுப்ப வேண்டிய வேலைகளை துரிதப்படுத்த டேபிளின் கீழ் சமாசாரம் தேவை என்று அந்த நண்பரின் உதவியை நாடி இருந்தாள். அவரை யார் காட்டிக் கொடுத்திருக்கக் கூடும் என்று எண்ணியவள் நேராக அலுவலகம் வந்து விட்டாள்.
மாலை ஆரம்பமாகும் வேளை என்பதால் அதிக கூட்டம் இல்லாமல் இருந்த அலுவலகத்தை நோட்டமிட்டபடி சற்று தொலைவில் நின்றாள்.
சிறிது நேரத்துக்குப்பின் அவளை ஒருவன் நெருங்கி வந்தான்.
“என்னம்மா ரொம்ப நேரமா ஆபிஸை பார்த்துகிட்டு இருக்க? ஆள் யாரையும் பார்க்கணுமா? இல்ல உள்ள பைலை எப்படி மூவ் பண்ணுறதுன்னு தெரியாம நின்னுட்டு இருக்கியா?” என்றதும், அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
நல்ல உயரம், வாளிப்பான தேகம், முகத்தில் தாடி மீசை சீராக வெட்டப்பட்டு பார்க்க மார்கெட்டிங் ஆள் போல இருந்தான்.
“இல்ல ஒரு பைலை அனுப்பி ஒரு வாரம் ஆகுது, கிளார்க் அதை அடுத்த டேபிளுக்கு தள்ள மாட்டேங்குறார், நேரா போனா காசும் கொடுக்க முடியல. அதான் வெளில வந்தா பேசலாம்ன்னு நிக்கிறேன்.” என்றாள் கண்களை சுருக்கி அவனது நடவடிக்கைகளை கவனித்தபடி,
“அதை நீ ரோட்டில் கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க. என்ன பைல், என்ன டீட்டெயில்னு என்கிட்ட சொல்லு. நான் அதை ஒரு சீட்டுல காட்டி ஓகே வாங்கிட்டு வந்து அமவுண்ட் சொல்லுறேன். நீ கொடுத்ததும் நான் உனக்கு ஒரு சீட்டு தருவேன். கொண்டு அவர் கிட்ட கொடு. உன் வேலை உடனே முடியும்.” என்று கூறினான்.
“இங்க நீங்க மட்டும் தான் இப்படி செய்வீங்களா?” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல.
“நானும் இன்னொருத்தன் இருக்கான் அவனும் தான். வேற யாரும் வர முடியாது. இது எங்க கோட்டை.” என்றான் சட்டைக் காலரை தூக்கியபடி.
“அவரையும் வர சொல்ல முடியுமா?” என்றாள் வேகமாக.
“இந்த வேலைக்கு நான் போதும் மா. என் கமிஷன் கூட உன் அழகான மூஞ்சிக்காக நான் குறைச்சு வாங்கிக்கிறேன்.” என்றான் வழிந்தபடி.
“இல்ல.. அவரும் வந்தா உன் கமிஷனை ரெண்டு மடங்கா தர்றேன்.” என்று ஆசை காட்டினாள்.
அவன் யாருக்கோ அழைப்பு மேற்கொள்ள, சற்று நேரத்தில் அவனைப் போலவே ஒருவன் வந்து நின்றான்.
அதற்குள் கன்யா தன் தோழர்கள் சிலரை அழைத்து அருகில் இருந்த ஜுஸ் கடையில் காத்திருக்க கூறினாள்.
அவன் வந்ததும், அவர்களும் வந்து விட்டதை உறுதி செய்து கொண்டவள்,
“வாங்களேன் ஜுஸ் சாப்பிட்டுகிட்டே பேசுவோம்.” என்று அழைத்தாள்.
‘இரட்டிப்பு பணம், இதில் ஜுஸ் வேறு. ஆஹா அழகான பெண்ணுடன் இன்று தங்களுக்கு கொண்டாட்டம்’ என்று இருவரும் அவளுடன் அந்த ஜுஸ் கடையை நோக்கி நடந்தனர்.
அங்கே ஒரு நாற்காலி மேசை தவிர அனைத்திலும் ஆள் இருக்க, தெரிந்த கடைக்காரன் என்பதால் அவ்விருவரும், “என்ன அல்போன்ஸ் இன்னிக்கு நல்ல வியாபாரம் போல?” என்று கேட்டபடி அமர, சட்டென்று பின் இருக்கையில் அமர்ந்திருந்தவன் ஒருவனை வளைத்துப் பிடிக்க, மற்றவனை வேறு இருவர் பிடித்தனர்.
“வியாழக்கிழமை ஒரு கல்யாணம் நடந்தது, அது பத்தி யார் உங்க கிட்ட வந்து விசாரிச்சாங்க? நீங்க என்ன சொன்னீங்க?” என்று கன்யா கேள்வி கேட்க, ஒருவன் திருதிருவென்று விழித்தான்.
மற்றொருவன், “யாரும் எதுவும் கேட்கல. அப்படியே கேட்டாலும் என்ன? எங்களை பிடிக்க நீ யாரு? போலீஸை கூப்பிடவா?” என்று குரல் கொடுத்து,
“அல்போன்ஸ் நம்ம ஏரியா எஸ்.ஐ க்கு போன் பண்ணு.” என்றான் திமிராய்.
“வரட்டும் நானும் உன்னோட அண்டர் த டேபிள் டீலிங்கை சொல்லுவேன்.” என்று கன்யா இகழ்ச்சியாக கூற,
“உன்கிட்ட சாட்சி இல்ல. எங்களை ஒன்னும் செய்ய முடியாது.” என்றான் வேகமாக.
“அதெல்லாம் இருக்கு. ஒழுங்கா உங்க கிட்ட யார் விசாரிச்சது, நீங்க என்ன சொன்னீங்கன்னு சொன்னா விடுவேன், இல்லன்னா தெரிஞ்ச ஸ்டேஷன்ல சொல்லி ஆளுக்கு நாலு கேஸ்ல தள்ளி விட்டுடுவேன்.” என்று அவன் முன்னே கை கட்டிக்கொண்டு அவள் சொன்ன விதம் கண்டிப்பாக செய்வாள் என்று கட்டியம் கூறியது.
“நேத்து ஒரு ஆள் வந்தாரு, கேட்கற தகவல் கொடுத்தா நிறைய பணம் தர்றதா சொன்னாரு. பணத்தை பார்த்ததும் ஒத்துக்கிட்டேன். வியாழன் நடந்த கல்யாணத்துக்கு அவசரமா பேப்பர் மூவ் பண்ண பணம் கொடுத்தது யாருன்னு கேட்டாரு. நான் எனக்கு யூ.பி.ஐ ல பணம் அனுப்பினவர் நம்பரை அந்த ஆளுக்கு கொடுத்தேன். அவர் எனக்கு பணம் கொடுத்துட்டு போயிட்டார் மேடம். சத்தியமா வந்தது யாருன்னு தெரியாது” என்று கை கூப்பினான்.
அவனை பிடித்திருந்தவன் அவனால் அடி வாங்கியவரான ஜனா சார் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தான். சற்றும் யோசிக்காமல் கன்னம் சிவக்கும் வரை அறைந்து தள்ளிவிட்டான்.
அவர்கள் இருவரையும் மிரட்டி இனி இப்படி தகவல் கொடுத்தால் கண்டிப்பாக வழக்குகளில் சிக்க வைத்து விடுவோம் என்று விரட்டி விட்டாள்.
“ஜனா சார் இவனுங்களுக்கு பணத்தை கேஷா கொடுத்திருந்தா மாட்டி இருக்க மாட்டார். டிரான்ஸ்பர் பண்ணவும் தான் டீட்டெயில்ஸ் எடுத்து இப்படி பண்ணிட்டாங்க. இனிமே நாம எப்பவும் கேஷ் தான் கொடுத்து நம்ம வேலையை முடிக்கணும். நமக்கு இது பாடம்.” என்று சொல்லிவிட்டு,
“இனிமே இப்படி நடக்காம கவனமா இருக்கணும். அதே போல பொண்ணு பையன் பேக்ரவுண்ட் எல்லாம் ஒருதடவை சரி பார்த்துப்போம் இனிமே. பெரிய இடமா இருந்தா சின்ன தப்பு கூட வராம பிளான் பண்ணிட்டு கல்யாணம் பண்ணி வைப்போம். அந்த பையன் புனித் கிட்ட தகவல் சொல்லுங்க. அவங்களை தீவிரமா தேடுறாங்க கவனமா இருக்க சொல்லி சொல்லுங்க ” என்றவள் யோசனை படிந்த முகத்துடன்,
“அப்ப இனிமே இதுக்கெல்லாம் நீங்க வர மாட்டீங்களா சீனியர்?” என்று அவளது ஜூனியர் மாணவனாக இருந்தவன் வினவினான்.
“என்னை நிறுத்த யாராலும் முடியாது அக்ஷய். ஆனா கல்யாண நேரம் வந்தா அப்ப கொஞ்சம் பிஸியா இருப்பேன்.” என்று மட்டும் கூறிவிட்டு வேறு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என்று விடைபெற்றனர்.
••••
இரவு ஒன்பது மணி, அடையார் சிக்னலில் தன் காவல் வாகனத்தில் அமர்ந்து ஜனத்திரளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன். அவசர மீட்டிங் ஒன்று நிகழ்வதால் அவசரமாக செல்ல வேண்டிய நேரத்தில் சிக்னல் போட்ட கடுப்பு ஐயாக்கண்ணு முகத்தில் தெரிய, இவனோ அதை எல்லாம் கண்டு கொள்ளாதவனாக இருந்தான்.
அவனது அருகில் வந்து நின்ற ஜுபிட்டர் வண்டியில் ஞானவேல் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தலையில் தொப்பி அணிந்திருந்த முகுந்தனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கூட்ட நெரிசலில் வியர்வை வழிய அமர்ந்திருந்தவன் தொப்பியை கழற்றி டேஷ்போர்ட்டில் வைத்தான்.
காற்றுக்காக முகத்தை வெளியே திருப்பியவன் விழி வட்டத்தில் ஞானவேல் விழ, எதார்த்தமாக திரும்பிய அவரும் அவனை பார்த்துவிட்டார்.
அவர் “தம்பி..” என்று அழைத்துவிட்டு அவனது வாகனம் மற்றும் உடையை கவனித்த பின் தன்னைத் திருத்திக் கொண்டவராக, “சார்.. சார்..” என்று அழைக்க,
மிகவும் தயங்கி அமைதியாக இருந்து, இதற்கு மேல் பேசாமல் இருந்தால் மரியாதை இல்லையே என்று அவர் பக்கம் திரும்பியவன்,
“சொல்லுங்க சார்” என்று கேட்டான்.
“இல்ல காலைல.. நீங்க தான எங்க வீட்டுக்கு பக்கத்துல நின்னது? நீங்க போலீஸா? எதுவும் பிரச்சனையா சார்?” என்று வினவினார்.
அவர் கண்டு கொண்டாரே என்று சங்கடத்தில் ஆழ்ந்த முகுந்தன், “நானா? இல்லையே சார். நீங்க எந்த ஏரியா? எனக்கு கொட்டிவாக்கம் ஸ்டேஷன் சார். இப்போ மீட்டிங்காக எஸ் பி ஆபிஸ் போறேன்.” என்று தேவையில்லாத தகவல்களையும் சேர்த்தே கொடுத்தான்.
ஆனால் அவரோ கொட்டிவாக்கம் என்றதும் எம்.எல்.ஏ பற்றிய பயத்தில், “சார் எம்.எல்.ஏ என் பொண்ணை கண்காணிக்க சொன்னாரா சார்? பிளீஸ் உண்மையை சொல்லிடுங்க. நான் எப்படியாவது அவர் கையில காலுல விழுந்தாவது என் பொண்ணை காப்பாத்திக்கிறேன் சார்.” என்று மன்றாடும் போதே சிக்னல் விழுந்து பின்னால் இருந்த வண்டிகள் ஹார்ன் சத்தத்தை எழுப்ப ஆரம்பித்தது.
அவரின் பரிதவிப்பான முகத்தைத் கண்ட பின் அவரை அப்படியே விட்டுச் செல்ல முகுந்தன் மனம் இடமளிக்கவில்லை.
“சார் அப்படி லெப்ட்ல ஓரம் கட்டுங்க. நான் வர்றேன்.” என்று கூறிவிட்டு, ஐயாக்கண்ணுவிடம் வாகனத்தை இடது புறமாக ஓரமாக நிறுத்த உத்தரவிட்டான் .
அவனுக்கு முன்பாகவே சாலை ஓரம் ஒதுங்கிவிட்ட ஞானவேல் தவிப்புடன் நின்றிருந்தார். அவர் நின்ற விதமே மகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பை பறை சாற்றியது.
‘இப்படி அன்பு வைத்துள்ள மனிதர் மகளை சற்று கண்டித்து வளர்த்திருக்கலாமே’ என்று அவன் மனதில் தோன்றியது.
அவனும் இறங்கி அவர் அருகில் சென்றதும்,
“சார் சொல்லுங்க சார். என் பொண்ணுக்கு எதுவும் பிரச்சனையா?’ என்று அவர் பதற,
அவரை சமாதானம் செய்ய வேறு வழி தெரியாது, “அங்கிள்.. காம் டவுன். நான் சொல்ல வர்றதை நிதானமா கேளுங்க. நான் கன்யாவை பார்க்க தான் காலைல வந்தேன். ஆனா யார் சொல்லியும் வரல.” என்று கட்டை விரலால் நெற்றிப்பொட்டை பிடித்து, இரண்டு விரல்கள் கொண்டு நெற்றியில் கீறியபடி இவரிடம் இந்த இடத்தில் இப்படி பேசுவது சரியா? என்று ஆயிரம் குழப்பங்கள் மனதில் சூழ,
“எனக்கு தான் அவ மேல இன்ட்ரஸ்ட். அவளை பார்க்க தான் வந்தேன்.” என்று சொன்னவன் முகத்தில் லேசான வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
ஆனால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஞானவேல் முகமோ குழப்பத்தை தத்தெடுத்துக் கொண்டது.