தன் காதில் விழுந்த வார்த்தைகள் சரியா அல்லது வாகன நெறிசல் சத்தத்தில் சரியாகக் கேட்கவில்லையா என்று ஞானவேல் குழம்பி நின்றார்.
அவர் முகத்தை வைத்து அவர் குழப்பத்தை அறிந்தவன், “எனக்கு கன்யாவை பிடிச்சிருக்கு அங்கிள். எனக்கு நல்லா தெரியும், இது இப்படி ஒரு இடத்தில வச்சு பேசுற விஷயம் இல்ல. ஆனா நீங்க எம்.எல்.ஏவை நினைச்சு பயப்படவும் தான் நான் இதை சொல்ல வேண்டியதா போச்சு. இஃப் யூ டோண்ட் மைண்ட், நாம பக்கத்துல எங்காவது நல்ல ரெஸ்டரன்ட்ல உட்கார்ந்து பேசுவோமா?” என்றான் அவர் கரத்தில் கொடுத்த லேசான அழுத்தத்துடன்.
“எஸ், போவோம்” என்று வாகனத்தை ஓரமாக தள்ளி நிறுத்தி பூட்டி விட்டு அவன் பின்னால் நடந்தார்.
இரண்டு கட்டிடம் தாண்டி முதல் மாடியில் இருந்த ஒரு உணவகத்துக்கு அழைத்துப் போனவன்,
“மணி இப்போவே ஒன்பது இருபது ஆகுது அங்கிள். மதியம் பன்னிரெண்டு, ஒரு மணிக்கு சாப்பிட்டு இருப்பீங்க. ஏதாவது சாப்பிடுங்க, நாம அப்படியே பேசுவோம்.” என்று சொல்லி மெனு கார்டை அவர் பக்கம் நீட்டினான்.
அவன் கொடுத்ததை வாங்கியவர் ஒரு தோசை என்று மட்டும் சொல்ல, அவன் வெயிட்டரை அழைத்து ஒரு தோசையும் ஒரு செட் இட்லியும் சொல்லி அனுப்பி வைத்தான்.
அங்கே சில நிமிடங்கள் சங்கடமான அமைதி நிலவ, அதை கலைக்கும் பொருட்டு, “எனக்கு ஒன்றரை வருஷத்துக்கும் மேல கன்யாவை தெரியும் அங்கிள். ஆனா இப்போ நேத்து தான் அவளை.. எப்படி சொல்றது? அவ நேத்து ஒரு பையனை பார்க்க வந்தா இல்லையா? அதே போல் நான் ஒரு பொண்ணை மீட் பண்ண போனேன். எனக்கு அந்த பொண்ணு ஒத்து வரல, அவளுக்கு அந்த பையன் ஒத்து வரல.” என்றதும் ஞானவேல் முகத்தில் லேசான அதிருப்தி வெளிப்பட்டது.
“ஐயோ அங்கிள், நீங்க ஏதோ ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு நான் கணக்கு போட்டதா நினைக்க வேண்டாம்.” என்று நேற்றைய நிகழ்வை விவரித்தான்.
பின் அமைதியாக அவன் இருக்கவே, “சரி பிடிச்சது, காலைல பார்க்க வீடு கண்டு பிடிச்சு வந்தீங்க. அப்பறம் ஏன் பார்க்கல?” என்று பாயிண்டாக கேள்வி கேட்டார்.
“என்ன அங்கிள் வக்கீலோட அப்பான்னு ப்ரூஃப் பண்றீங்களா? நான் அவளை பார்க்க வெயிட் பண்ணினேன். ஆனா நீங்க வந்து..” என்று இழுத்தான்.
“என்ன? என்னைப் பார்த்ததும் வில்லன் போல இருந்ததா?” என்று லேசாக சிரித்தார் ஞானவேல்.
“இல்ல, எப்படி சொல்றதுன்னு தெரியல. எனக்கு கன்யாவை பிடிச்சிருக்கு. ஆனா அவளோட கொள்கை.. காதலிக்கிறவங்க வந்து உதவி கேட்டா கல்யாணம் பண்ணி வைக்கிறது.. அது கூட அவளுக்கு பின்னாடி ஒரு நியாயமான காரணம் இருக்கலாம். ஆனா வாசல்ல பேனர் எல்லாம் வச்சு.. அதை தான் அங்கிள் என்னால சாதாரணமா எடுத்துக்க முடியல. வீம்பு பண்ணுற மாதிரி, திமிருக்கு பேனர் வச்சது போல இருக்கு.” என்று மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினான்.
அவன் மனசாட்சியோ அவனிடம், ‘ஏன்டா அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்ன, அதை இன்னும் அந்த பொண்ணுக்கே சொல்லல. அதுக்குள்ள அவங்க அப்பாவுக்கு சொல்லிட்ட, சரி இவர் மூலமா பொண்ணை கரெக்ட் பண்ணுவன்னு பார்த்தா அப்பா கிட்டயே பொண்ணுக்கு திமிர், வீம்புன்னு ஆப்பு வச்சுட்டு இருக்கியே, என்ன தான் உன் கணக்கு? போலீஸ் ட்ரெஸ் பார்த்து உன்னை ஒன்னும் சொல்லாம போனாலும் பொண்ணு தராமா போயிடப் போறாரு டா.’ என்றது.
‘என்ன ஆனாலும் சரி இன்னிக்கு ஒரு முடிவு தெரியணும். என்னால இது சரியா தப்பான்னு எப்பவும் மனசுல பட்டிமன்றம் நடத்திகிட்டு, பார்க்கற எல்லாரையும் கடிச்சு வச்சுட்டு சுத்த முடியாது. ஒரே நாள்ல என் குணமே மாறிப் போனது போல ஒரு ஃபீலிங்’ என்று மனதுக்கு அவன் பதில் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்,
“நான் சொல்றது கேட்குதா பா” என்று அவன் முகத்துக்கு முன்னே கையசைத்தார் ஞானவேல்.
“சாரி அங்கிள். சொல்லுங்க.” என்று அவன் நிமிர்ந்து அமர,
“அவ திமிரா தான் அதை வச்சா.” என்று சொன்னதும் அவன் திடுக்கிட்டான்.
அந்த பேனர் வீட்டுக்கு வந்த விதம் பற்றி நிதானமாக அவர் கூறினார்.
“இப்போ சொல்லுங்க அவ வேற என்ன செய்வா?” என்று கேட்டுவிட்டு,
“இங்க உங்க கிட்ட பிடிச்சது என்ன தெரியுமா பா, அவ இப்படி செய்ய அவ கிட்ட ஒரு காரணம் இருக்கும் அப்படின்னு நம்பினீங்க பாருங்க. அதான்.” என்று சொல்லிவிட்டு டேபிளில் கொண்டு வந்து வைக்கப்பட்ட உணவை அவனுக்குக் காட்டி உண்ணச் சொல்லி விட்டு தானும் உண்டார்.
“அது என்ன அங்கிள்? நான் அவ கிட்டயே கேட்கலாம் தான், ஆனா அவ சொல்றதை விட நீங்க சொன்னா எனக்கு அவளை ஹேண்டில் பண்ண கொஞ்சம் பெட்டரா இருக்கும்.” என்று இட்லியை பிட்டு சாம்பாரில் மூழ்கடித்து வாயில் போட்டான்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவர் அவனுக்கு அவளது ஆழமான, நியாயமான காரணத்தை கூறத் துவங்கினார்.
“எங்க அப்பா அம்மாவுக்கு நாங்க ரெண்டு பிள்ளைங்க. நானும் என் தங்கை வசந்தமாலாவும்.
வசந்தா என்னை விட பன்னிரெண்டு வருஷம் சின்னவ. எங்கம்மா ரொம்ப சிரமத்துக்கு அப்பறம் அவளை பெத்து எடுத்தாங்க. அம்மாவால அவளை கவனிக்க முடியல. அனேக நேரம் அவ என்னோடவே தான் இருப்பா. அப்பாவுக்கு வேலைக்கு போகவும் வரவும் தான் நேரம் இருக்கும். அப்பா அந்த காலத்துல இந்தியா இலங்கை கப்பலுக்கு டிக்கட் செக்கரா இருந்தாரு. போனா வர நாலு நாள் ஆகும். வந்தாலும் உடனே அடுத்த கப்பலுக்கு கிளம்பிடுவார்.
அதனால வசந்தா முழுக்க முழுக்க என் கைக்குள்ள வளர்ந்தா. நான் காலேஜ் போகும் போது அவளை பிரைமரி ஸ்கூல்ல விட்டுட்டு போவேன். யார் என்ன கிண்டல் பண்ணினாலும் கவலைப்பட மாட்டேன்.
எனக்கு சென்ட்ரல் கவர்மென்ட் வேலை கிடைச்சது. இன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல அப்ப கிளார்க் வேலை. வீட்டை விட்டு ரொம்ப தூரம். முதல் தடவையா வசந்தாவை அம்மா கிட்ட விட்டுட்டு வேலைக்கு போனேன். அப்பாவும் ரிட்டயர் ஆனதால வேலையை பார்க்க வந்துட்டேன்.
எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. குணவதி வந்தா, அடுத்த வருஷம் கன்யா பிறந்தா. அவளும் வசந்தாவும் ரொம்ப க்ளோஸ். நான் வசந்தாவை வளர்த்தது போல அவ கன்யாவை வளர்க்க ஆரம்பிச்சா. ஆறு வருஷம் எந்த பிரச்சனையும் இல்லை. அப்ப தான் வசந்தா கடைசி வருஷ காலேஜ் படிப்புல இருந்தா.இருபது வயசு இருக்கும். எங்கப்பா ஒருநாள் எங்களை கூப்பிட்டு வசந்தா யாரோ ஒரு பையனோட வெளில போனதா சொல்லி, இனிமே அவளை வெளில விடாம கல்யாணம் பண்ணி அனுப்பிடணும்னு சொன்னாரு.
நானும் என் மனைவியும் அந்த பையனை பத்தி விசாரிப்போம், அப்புறம் முடிவு பண்ணலாம்ன்னு அப்பா கிட்ட மெதுவா தான் சொன்னோம். ஆனா அதுக்கு எங்கப்பா குடும்ப மானம், மரியாதை, கவுரவம், இன்னும் என்னென்னவோ சொல்லி நாங்களும் பெரியவங்க வார்த்தையை மதிக்கிறது இல்லன்னு ஊரையே கூட்டிட்டார். எங்களால அவர சமாளிக்க முடியல. வசந்தாவை சரி பண்ணிடலாம்னு நம்பினோம். அப்பா கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பிச்சார். அவளை ஒரு இடத்தில் இருக்க வைக்க கன்யாவை அவளோட பொறுப்புல விட்டுட்டு அம்மாவும் குணாவும் கல்யாண வேலையா வெளில போக ஆரம்பிச்சாங்க.
ஆனா திடீர்னு ஒருநாள் ஆபிஸ் போயிட்டு வீட்டுக்கு வந்தா வீடு முழுக்க புகை, உள்ள ஓடினா, ஒரு ரூம்ல வசந்தா எரிஞ்சு கிடக்கறா. அதே ரூம் வாசல்ல கன்யா அவளையே வெறிச்சு பார்த்துட்டு இருந்தா. வீட்டுல அங்கங்க நெருப்பு பத்தி ஏரிஞ்சுட்டு இருந்தது. கன்யாவை வெளில தூக்கிட்டு வர்றப்ப அவ சொன்ன ஒரே விஷயம்,
“என் வசுவை அனுப்பி இருக்கலாம்ல? பாவம்.. நெருப்பு எரிய எரிய வசு எப்படி கத்தினா தெரியுமா?” ன்னு தான்.
ஆறு வயசுல கண்ணு முன்னாடி அவளோட வசு எரிஞ்சு போனது அவ மனசை ரொம்ப பாதிச்சிடுச்சு. வளர வளர, அவங்க காதலுக்கு யாரும் ஹெல்ப் பண்ணல அதான் இப்படி நடந்தது. இனிமேல் ஒருத்தர் கூட இப்படி சாக நான் விட மாட்டேன்னு சொல்லுவா.
நிறைய கவுன்ஸ்லிங் கொடுத்தோம், நிறைய கோவிலுக்கு போனோம். அவ சாதாரணமா எங்களோட பேசவே ஒரு வருஷம் ஆச்சு.
வளர்ந்த பின்னாடி அவ எங்க கிட்ட சொன்னது ஒன்னு தான். நான் லவ் பண்ணிறவங்களை சேர்த்து வைப்பேன். என்ன நடந்தாலும் எனக்கு பரவாயில்லன்னு தான்.
காலேஜ் போன முதல் வாரமே ஒரு ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வச்சா. அதை இவதான் செஞ்சான்னு வெளில தெரியாம மறைக்க நான் அவ்வளவு கஷ்டப்பட்டேன். கோபத்துல இதை நான் சொன்னப்ப, இனிமே வெளில தெரியாம பார்த்துப்பேன் ஆனா நிறுத்த மாட்டேன்ன்னு உறுதியா சொல்லிட்டா. அப்போல இருந்து இப்ப வரை அவ சரின்னு பட்டா செஞ்சிடுவா. அதுக்கு நிறைய பிரச்சனை வரும்.
நானும் என் மனைவியும் அதை சமாளிப்போம்.” என்று முழுவதையும் கூறிவிட்டதன் அடையாளமாக டம்ளரில் இருந்த நீரை வேகமாக பருகினார்.
இவர் கண்டித்து வளர்த்திருக்கலாம் என்று தான் எண்ணியது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று நினைத்தான் முகுந்தன்.
அவனால் அவளது மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. தன் கண் முன்னே தன்னை வளர்த்தவர் இறந்து போக காரணமாக இருந்த காதல் எதிர்ப்பை அவள் எதிர்க்கிறாள். என்ன தான் முயன்றாலும் அவளை நிறுத்த அவள் தந்தையால் முடிந்திருக்காது என்று தோன்றியது முகுந்தனுக்கு.
“மனசுல சின்ன குழப்பம் இருந்தது அங்கிள். லவ் பண்ணுறது தப்பில்ல, ஆனா வீட்டை விட்டு ஓடுறத நான் ஊக்குவிக்கிறது இல்ல அங்கிள். இதை செய்யற பொண்ணு கூட எனக்கு செட் ஆகுமா, இதான் பெரிய மண்டை குடைச்சலா இருந்தது காலைல இருந்து. இப்போ நான் கிளியர்.” என்றான் நிம்மதியாக பெருமூச்சு விட்டபடி.
“என்ன கிளியரா இருக்கீங்க?” என்றதும்,
“அவ எனக்கு தான். நான் பிக்ஸ் பண்ணிட்டேன். கொள்கையில
எதிர் துருவமா இருந்தாலும் குணம் ஒன்னு தானே. ஆனா ஒரே ஒரு விஷயம் இருக்கு.”என்று இழுத்தான்.
“என்ன?” என்று வேகமாக வினவிய ஞானவேலிடம்,
“உங்களுக்கு என்னை பிடிக்கணும். உங்க பொண்ணுக்கு திமிர், வீம்பு, பிடிவாதம்ன்னு எல்லாம் உங்க கிட்டயே சொல்லிட்டேன். கோவப்பட்டு பொண்ணு தர மாட்டேன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்?” என்று பாவமாக அவன் முகத்தை வைக்க, ஞானவேல் சிரிப்புடன்,
“விருப்பம் இல்லாம தான் பழைய கதையெல்லாம் சொல்லிட்டு இருந்தேனா? உங்க பேச்சும் உங்க பண்பும் எனக்கு ரொம்ப பிடிச்சது தம்பி. அதான் நான் யார் கிட்டயும் சொல்லாத விஷயங்களை கூட உங்ககிட்ட சொன்னேன்.” என்று கூறிவிட்டு,
“அடுத்து என்ன? என் பொண்ணு கிட்ட பிரப்போஸ் பண்ண போறீங்களா?” என்று காபியை கொண்டு வரச் சொல்லி ஊழியருக்கு கையசைத்து விட்டு இவனிடம் வினவினார்.
“யாரு… அவ கிட்ட நான் லவ் சொல்லவா? வாய்ப்பே இல்ல. நான் சொல்லி அவ நோ சொல்லிட்டா என்ன பண்றது? இன்னிக்கு மதியம் கூட எங்களுக்குள்ள சின்ன சண்டை. நான் அவ கிட்ட சொல்ல மாட்டேன்.” என்று திட்டவட்டமாக கூறினான்.
“அப்ப நீங்க லவ் பண்ணுறதா நான் சொல்லணுமா?” என்றார் திடுக்கிடலோடு.
“ச்ச.. அதெல்லாம் வேண்டாம் அங்கிள். பேசாம இதை அரேஞ்ட் மேரேஜா நடத்திட்டா என்ன?” என்று லேசாக இழுத்தான்.
“இல்லையே தம்பி இதுல என் பொண்ணுக்காக மட்டுமே யோசிக்கிறது போல தெரியலையே!” என்று ஓரக் கண்ணில் அவனை கிடுக்குப் பிடி போட,
“எங்கப்பா லவ் மேரேஜுக்கு ஹிட்லர் அங்கிள். அதனாலதான் நான் அப்படியே இதை உங்க மூலமா என் அம்மா கிட்ட கொண்டு போய் அப்பறம் அப்பா கிட்ட கொண்டு போய்..” என்று இழுத்தான். முகத்தில் லேசாக அசடு வழிய,
“ஏன் தம்பி காதை சுத்தி மூக்கை தொடுற கதை தெரியும். ஆனா இப்படி உலகத்தை சுத்தி தொடுறத இன்னிக்கு தான் பாக்கறேன்.” என்று கிண்டல் செய்ய,
“கன்யாவுக்கு உள்ள சென்ஸ் ஆப் ஹியுமர் உங்க கிட்ட இருந்து தான் வந்திருக்கும் அங்கிள்.” என்று சமாளித்தான் முகுந்தன்.
“சரி இதான் என் நம்பர். எழுதிக்கோங்க. அடுத்து என்ன பண்ணுறதுன்னு நாளைக்கு பேசுவோம்.” என்று சொல்லி காபியை ஒரே மிடறில் விழுங்கிவிட்டு பில்லுக்கான தொகையை வைத்துவிட்டு எழுந்தார் ஞானவேல்.
“அங்கிள் நான் தான் கூட்டிகிட்டு வந்தேன்.” என்று வேகமாக அதை மறுக்க அவன் முயல,
“அதெல்லாம் அப்பறம் கணக்கு பார்ப்போம். குணா தேடுவா. மணி பத்து.” என்று வேகமாக அவனிடமிருந்து விடை பெற்றார்.
போகும் அவர் பின்னோடு வந்தவன் கேட்ட கேள்வியில் அவர் சிரிக்க, அவர் சொன்ன பதிலில் அவன் திகைத்தான்.