ரஞ்சிதா தவிப்புடன் அந்த பார்க் வாசலில் கன்யாவுக்காகக் காத்திருந்தாள்.
அவளது அருகே நின்றிருந்த இளமதி, “ரஞ்சுக்கா நீ சொல்ற உன் ஃப்ரெண்ட் கண்டிப்பா எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்களா?” என்று பயத்துடன் வினவ,
“அவ ஒருத்தி தான் டி உன்னை காப்பாத்த முடியும். பேசாம நில்லு. நானே அவ வந்து கேட்கப்போற கேள்விக்கு பயந்து நின்னுட்டு இருக்கேன்.” என்று இளமதியை விட்டு சற்று முன்னே சென்று சாலையில் கண் பதித்தாள்.
“என் மேல கோவமா ரஞ்சுக்கா?” என்று பாவமாக வினவிய தன் ஒன்று விட்ட தங்கையை முறைக்கவும் முடியாமல் சமாதானம் சொல்லவும் மனம் வராமல் வழியில் விழி வைத்திருக்க, அவளை மேலும் காக்க விடாமல் தன் புல்லட்டில் வந்து சேர்ந்தாள் கன்யா.
கண்ணில் இருந்த குளிர் கண்ணாடியை கழற்றி சட்டையில் மாட்டிக் கொண்டவள், எதிரில் தவிப்புடன் நிற்கும் தோழியை நோக்கி கரம் உயர்த்தி தான் வந்து விட்டதைத் தெரிவித்தாள்.
ரஞ்சிதா வேகமாக ஓடி அவளருகில் வர,
“என்ன டி அவசரம்? அதான் இவ்வளோ தூரம் வந்துட்டேன்ல, பார்க்குள்ள வர மாட்டேனா?” என்று அவளை அழைத்துகொண்டு பார்க் வாயிலை அடைந்தாள்.
அங்கே மிரண்ட பார்வையோடு நின்றிருந்த இளமதியைக் கண்டு, “நீ சொன்ன உன் சித்தப்பா பொண்ணு இவ தானா?” என்று கேள்வி எழுப்பியபடி அவளது தோளில் கைபோட்டு தன் அருகே இழுத்தாள்.
“ரஞ்சுக்கா…” என்று அவள் மிரள,
“ஐயோ பார்த்து மா. உன் ரஞ்சு அக்காவை இறுக்கமா பிடிச்சுக்கோ, இல்லன்னா இந்த பூச்சாண்டி உன்னை தூக்கிட்டு போயிடுவேன்.” என்று நக்கலாக கூறி ரஞ்சிதாவைக் கோபமாக முறைத்தாள்.
“யாரு டி இவ? ஸ்கூல் பொண்ணா?” என்று மிரட்டல் த்வனியில் கேட்க,
“இல்ல கன்யா. பி. ஈ முடிச்சிட்டா. அடுத்த வாரம் இவளை பொண்ணு பார்க்க சித்தப்பா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்காரு. இவ இப்போ வந்து நான் ஒரு பையனை விரும்புறேன். அப்பா ஒத்துக்க மாட்டார். எப்படியாவது என்னை அவனோட சேர்த்து வை. இல்லன்னா செத்து போயிடுவேன்னு சொல்றா டி.” என்று தன் நிலையை தோழிக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தாள் ரஞ்சிதா.
“பி.ஈ முடிச்சிட்டான்னு சொல்ற, ஏன் இப்படி பயந்து நடுங்குறா? யாரை லவ் பண்ணுறா இவ?” என்று ரஞ்சிதாவிடம் அவள் கேள்வி எழுப்ப, அவளோ பதில் தெரியாது திருதிருவென்று விழித்தாள்.
“என்ன டி முழிக்கிற? இவ உன் தங்கச்சி தானே? யாரை லவ் பண்ணுறான்னு கூட கேட்காம என்கிட்ட ஹெல்ப் கேட்டு வந்தியா?” என்று தோளில் பலமாக அடித்தாள் கன்யா.
“அவ்ச். சாரி டி. இவ செத்து போவேன் அது இதுன்னு சொல்லவும் பயந்து போய் உடனே உனக்கு போன் பண்ணிட்டேன் டி.” என்று மன்னிப்பு வேண்டி தங்கையிடம் திரும்பினாள்.
“யாரு டி அந்த பையன்?” என்று வினவ,
“புனித்னு என் காலேஜ் சீனியர் தான் ரஞ்சுக்கா. இப்போ பெங்களூர்ல பெரிய வேலையில இருக்காங்க. ரொம்ப நல்லவர் க்கா.” என்று தான் காதலித்தவன் நல்லவன் என்று பதிவு செய்ய அவசரம் காட்டினாள் இளமதி.
“நல்ல வேலையில் இருக்கான்னா வீட்ல சொல்லி கல்யாணம் பண்ண வேண்டியது தானே?” என்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கைகளை இருபுறமும் பரப்பி இளமதியிடம் கேள்வி எழுப்பிய கன்யாவை ‘இது கூட தெரியாதவரா நீங்கள்?’ என்னும் படி ஒரு பார்வை பார்த்தாள் இளமதி.
“அக்கா வீட்ல சொன்னா கல்யாணம் பண்ண மாட்டாங்க. எனக்கும் அவருக்கும் கருமாதி தான் பண்ணுவாங்க. எங்க அப்பாவுக்கு காதல்ன்னா சுத்தமா பிடிக்காது.” என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல கூறியவள்,
“அதுவும் இல்லாம புனித் கன்னடம் பேசுறவங்க, கண்டிப்பா அப்பா ஒத்துக்க மாட்டாரு. இப்போ பார்த்திருக்கற மாப்பிள்ளை யூ.கே ல இருக்காரு. நான் லவ் பண்ணுற விஷயம் லேசா தெரிஞ்சா கூட வீட்டை விட்டு வெளில விடாம, கல்யாணம் பண்ணி நேரா ஏர்போர்ட்ல தான் கொண்டு விடுவாரு.” என்று பயத்துடன் கூறினாள்.
“ம்ம். இது எல்லாம் மட்டும் தெளிவா தெரிஞ்சு வச்சுக்கோ. ஆனா காதலிச்சா பிரச்சனை வரும், அதை நீ தான் ஃபேஸ் பண்ணனும் அப்படிங்கறத மட்டும் மறந்திடு.” என்று எழுந்து கொண்டாள் கன்யா.
“அந்த பையன் போன் நம்பர், ஃபோட்டோ, சோஷியல் மீடியா லிங்க் எல்லாம் என் வாட்ஸ்ஆப்புக்கு அனுப்பு. நான் நாளைக்கு என்ன பண்றதுன்னு சொல்றேன்.” என்று இருவருக்கும் பொதுவாக கூறிவிட்டு,
“இன்னிக்கு ஒரு கேஸ் ஹியரிங் இருக்கு நான் உடனே ஹைகோர்ட் போகணும். நான் எல்லா டீட்டெயிலையும் செக் பண்ணிட்டு மறுபடி பேசறேன். இந்தாம்மா புத்திசாலி… நீ சொன்னியே அதே மாதிரி உன் காதல் விஷயம் வீட்டுல கசியாம பார்த்து பத்திரமா இரு.” என்று சொல்லிவிட்டு தன் புல்லட்டில் ஏறிப் பறந்தாள்.
“ரஞ்சுக்கா இந்த அக்கா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாங்களா” என்று அவள் மீண்டும் வினவ,
“ஆமா டி, நீ லவ் பண்ணு, நாங்க உனக்கு உதவி பண்ணி உங்க அப்பா கிட்ட அடிவாங்கி சாவுறோம். நீயே தெளிவா சொல்ற உங்கப்பா எப்படின்னு அப்பறம் என்ன இதுக்கு டி உனக்கெல்லாம் லவ் வருது?” என்று தங்கையை கோபத்தில் திட்ட ஆரம்பிக்க,
“உண்மையிலேயே புனித் ரொம்ப நல்லவர் அக்கா. அவர் கூட இருக்கும் போது அப்பா பத்தி பயமே இருக்காது. ஆனா அவர் இல்லாதப்போ அதை தவிர வேற சிந்தனையே இருக்காது க்கா” என்று கண்ணீர் வழிய கூறியவளை சமாதானம் செய்தபடி நடந்தாள் ரஞ்சிதா.
அவர்கள் இருவருக்கும் தெரியாத ஒன்று, அவர்கள் பயப்படுவது போல அவள் தந்தை சோமசுந்தரம் அப்படி ஒன்றும் கோபக்காரர் அல்ல, அதையும் தாண்டி கொடூரமானவர் என்று.
••••
ஹைக்கோர்ட் வாயில் எப்பொழுதும் போல ஜன நெரிசலுடன் காணப்பட்டது. கருப்பு அங்கி அணிந்த வழக்கறிஞர்கள் அங்கும் இங்கும் நடந்தபடி இருக்க, காக்கி சட்டை மனிதர்களும் கரைவேட்டி கணவான்களும் ஆங்காங்கே காட்சியளிக்க, வெயிலின் உக்கிரம் தாளாமல் வயது முதிர்ந்த பலரும் மரநிழலில் இளைப்பாரியபடி இருந்தனர்.
அத்தனை பெருமை மிகுந்த வாயிலை வாயில் சுவிங்கம் மென்றபடி கண்களில் இருந்த குளிர் கண்ணாடியால் அனைத்தையும் அளந்தபடி தன் புல்லட்டில் அலட்சியமாக நுழைந்தாள் கன்யா.
அவளது சீனியரிடம் பணி புரியும் சில ஜூனியர்கள் இவளுக்காக காத்திருக்க, அவர்கள் அருகே வந்தும் நிறுத்தாமல் உரசிச் செல்ல, அவர்களோ கடுப்புடன்,
“கன்யா நில்லு டி” என்று கத்திக் கொண்டு பின் தொடர்ந்தனர்.
வாகனம் நிறுத்தும் இடத்தில் புல்லட்டை நிறுத்திவிட்டு, தோள் பையை சீராக்கி, பக்கவாட்டு கண்ணாடியில் தன் முன் முடிக் கற்றைகளை சரி செய்துகொண்டு கண்ணாடியை அகற்றி தன் சட்டையில் சொருக்கிக் கொண்டாள்.
“நீ ஏன் கன்யா இப்படி பண்ற? நாங்க மூணு பேரும் அங்க நிக்கிறோம்ல? பார்த்தும் நிறுத்தாம இப்படி வர்ற?” என்று குறைபட,
“வண்டி நிறுத்தாம உங்க கூட நின்னு பேசினா, அந்த பார்க்கிங் பிளேஸ் போயிடும். நிறுத்த வேற இடம் அவன் பார்த்துக் கொடுப்பனா? அப்பறம் நின்னு பேசுறப்ப வேஸ்ட் ஆகுற பெட்ரோல் காசு யாரு கொடுப்பா? நீயா இவளா?” என்று கேட்டபடி, பையில் இருந்த இளஞ்சிவப்பு நிற அட்டையில் இருந்த கோப்புகள் மற்றும் தாள்களை எடுத்துப் பார்க்கலானாள்.
“நேத்து சீனியர் சொன்ன எவிடென்ஸ் கலெக்ட் பண்ணிட்டியா?” என்று மூவரில் ஒருவள் வினவ,
“ம்ச், வக்காலத்து என்கிட்ட இருக்கு. இது என் கேஸ். நான் பார்த்துப்பேன். நீங்க என்ன கிராஸ் எக்சாமின் பண்றீங்களா?” என்று எரிச்சலை மறைக்காமல் காட்டியவள்,
“போ மல்லி போய் உன்னோட டைவர்ஸ் கேஸ் என்னாச்சுன்னு பாரு. உனக்கு தனியா சொல்லணுமா பாஸ்கர்? நீ அபிராமி? உனக்கு கேஸ் எதுவும் இல்லையா?” என்று அனைவரையும் அவள் கடித்து வைக்க,
“ஏன் டி இப்படி கத்துற? அந்த ஆளை பார்த்ததும் தான் கத்துவன்னு நெனச்சோம். இப்போவே இந்த கோபம்ன்னா அவரை பார்த்ததும் எங்களுக்கு அடி விழுந்தாலும் ஆச்சரியம் இல்ல” என்று அபிராமி இரண்டு எட்டுக்கள் பின்னால் வைத்தாள்.
“எவன் அவன்? நான் ஏன் கத்தணும்? லூசா உங்களுக்கு?” என்று கன்யா வினவும்போதே,
“அதோ வர்றார் பாரு.” என்று கைகாட்டிய திசையில் ஜீப்பில் இருந்து இறங்கி காதில் இருந்த செல்போனில் யாரிடமோ பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தான் முகுந்தன்.
“மை புட். இவன் வந்தா எனக்கு என்ன?” என்று அபிராமியை நோக்கி கை உயர்த்திய கன்யாவை ஆச்சரியமாக பார்த்தவர்கள்,
“ஏய் நீ கேஸ் கட்டை படிக்கவே இல்லையா? இன்னும் அரை மணி நேரத்துல கந்தவேல் சார் டிவிஷன் கோர்ட்ல கேஸ் ஹியரிங் வருது டி” என்று மல்லி அவளை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.
“கேஸ் டீட்டெயில்ஸ் எல்லாம் எனக்கு பிங்கர் டிப்ல இருக்கு. அதுக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்?” என்று தன்னை அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டு வினவினாள் கன்யா.
“இவர் தான் டி அந்த கேஸ்க்கு ஐ. ஓ.” என்று பாஸ்கர் கூற, திருதிருவென்று விழித்தாள் கன்யா.
வேகமாக அந்த இளஞ்சிவப்பு அட்டையில் இருந்த தாள்களை திருப்ப, அதில் கொட்டை எழுத்தில் ஐ. ஓ. அதாவது ‘இன்வெஸ்டிகேட்டிங் ஆபிசர்’ என்ற இடத்தில் ‘முகுந்தன்’ என்று எழுதி இருந்தது.
அவளோ அதனை கவனிக்காமல் அதில் கையெழுத்திட்டு இருந்த தினேஷ் என்ற உதவி ஆய்வாளர் பெயரை மனதில் பதிந்து கொண்டதால் இவன் வரவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“இவன் வருவான்னு நினைக்கவே இல்ல. ச்ச.. சீனியர்… என்னை இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே..” என்று காலை லேசாக உதைத்தவள், சட்டென்று அருகில் இருந்த ஆட்டோவினுள் ஏறினாள்.
வேகமாக பக்கங்களை திருப்பி ஒருமுறை அனைத்தையும் சரி பார்த்தாள். நேற்றைய ஆதாரம் வேறு அவளுக்கு சாதகமாக இருக்க, நிம்மதியாக ஒருமுறை ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு, நீதியரசர் கந்தவேல் அவர்களின் டிவிஷன் கோர்ட்டை நோக்கி நடந்தாள்.
அவளுக்கு பின்னே நடந்து வந்த மூவரையும் திரும்பி ஒருமுறை முறைத்தவள்,
“ஒழுங்கா ஓடிப் போயிடுங்க. இல்ல சாயங்காலம் சீனியர் கிட்ட சொல்லி ஒரே நாளைக்கு பத்து பெட்டி கேஸ்ல உங்களை ஆஜர் ஆக வச்சிடுவேன்.” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
“நாள் முழுக்க நிக்கணும். போடி போடி இவளே. ” என்று அவளை வசை பாடிவிட்டு மூவரும் தங்கள் வேலைகளை கவனிக்கச் சென்றனர்.
குப்பைத் தொட்டி அருகில் சென்று தன் தோள் பையில் வைத்திருந்த சுவிங்கம் கவரில் வாயில் இருந்த சுவிங்கத்தை எடுத்து வைத்து அந்த தொட்டியினுள் வீசிவிட்டுத் திரும்ப, அவளைப் பார்த்து கை கட்டி நின்று கொண்டிருந்தான் முகுந்தன்.
‘ஐயோ வந்துட்டான்.’ என்று மனதில் நினைத்தாலும் அதை முகத்தில் காட்டாது ,
“என்ன இன்ஸ்பெக்டர் சார் இந்த பக்கம்?” என்று எப்பொழுதும் அவன் அவளிடம் கேட்கும் வசனத்தை அவனிடம் அவள் திருப்பி அடிக்க,
அவனோ அவளைப் போல நக்கலாக பதில் சொல்லாமல்,
“இன்னிக்கு ஒரு கேஸ்ல நீ தோத்துப் போகப் போறதா பிபிசி நியூஸ்ல சொன்னாங்க. அதான் பார்த்து சந்தோஷப்பட்டுட்டு போகலாம்னு வந்தேன்.” என்று சிரிக்காமல் கூறினான்.
“எது எப்படியோ பிபிசில வர்ற அளவுக்கு என் புகழ் இருக்கு. பாவம் உங்களைப் பத்தி லோக்கல் சேனல்ல கூட பேசுறது இல்ல போல இருக்கே இன்ஸ்பெக்டர்?” என்று எப்பொழுதும் போலவே நக்கலாக பதிலளித்தாள்.
“நீயெல்லாம் திருந்த மாட்ட. முந்தாநாள் நான் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு அனுப்பி விட்ட ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்க. மனசுல என்ன பெரிய புரட்சியாளர்ன்னு நினைப்பா?” என்று கோபம் மேலோங்க எகிறினான் முகுந்தன்.
“அவங்களே உயிருக்கு பயந்து உன் ஸ்டேஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி வந்து கேட்டா, லூசு மாதிரி அட்வைஸ் பண்ணி அனுப்பி இருக்க? அவங்க அப்பா அவங்களை ஆளுங்களை விட்டு துரத்தினார் தெரியுமா? ரெண்டு பேரும் கிட்டத்தட்ட செத்து பிழைச்சு என்கிட்ட வந்தாங்க. நான் பிராப்பரா புரோடெக்ஷன் ஏற்பாடு பண்ணி கல்யாணம் பண்ணி வச்சேன். உனக்கென்ன அதுல?” என்று அவளும் பதிலுக்கு கோபமாக அவனிடம் எதிர்த்து நின்றாள்.
இவர்கள் இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்த டிவிஷனல் கோர்ட் ஊழியர், “மா கன்யா. அடுத்து உங்க கேஸ் தான். உங்களுக்கு சொல்ல சொல்லி உங்க ஃப்ரெண்ட்ஸ் சொல்லிட்டு போனாங்க. வர்றீங்களா?” என்று சில வருடங்களாக பழகிய பழக்கத்தில் அவர் அவளை அழைக்க,
“இதோ வர்றேன் கோதண்டம் அண்ணா” அவள் முகுந்தனை நோக்கி முகத்தை திருப்பிக்கொண்டு கோர்ட் ஹாலை நோக்கிச் சென்றாள்.
‘எல்லாரையும் இப்படி கைக்குள்ள போட்டுகிட்டு காதலிக்கிறவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு அநியாயம் பண்ணுறா. சரியான லூசு.’ என்று அவளை திட்டிக்கொண்டு அவள் பின்னே அவனும் அதே வழக்குக்கு ஆஜர் ஆகச் சென்றான்.
– தொடரும்.