முதலில் லேசாக விழுந்த அடி, நேரம் செல்ல பலமாகவே விழத் துவங்கியது.
“ஏய்.. செஸ் போர்ட்.. அடிக்காத. வலிக்குது. அவ்வ்ச்”என்று அவளை விட்டு நகர்ந்து அவன் ஓட ஆரம்பித்தான்.
“வலிக்கட்டும். நல்லா வலிக்கட்டும். ஆளைப் பாரு. ஆறு சிக்னல்.. நிற்காம பைத்தியம் மாதிரி இந்த ஊர் டிராபிக்ல நூறுக்கு மேல வேகமாக ஓட்டிகிட்டு வந்திருக்கேன். இன்னிக்கு ஒரே நாள்ல என் மேல எத்தனை கேஸ் வரப்போகுதோ தெரியல” என்று அவள் அவனை விடாமல் துரத்த,
“நான் எந்த கேசும் வராம பார்த்துக்கறேன். ஆனா நீ ஏன் இவ்வளவு வேகமா வந்த? காரணம் சொல்லிட்டு அடிம்மா. என்ன தான் நீ வக்கீலா இருந்தாலும் போலீஸ்காரனை இந்த அடி அடிக்கிறியே. காரணமாவது சொல்லணும்னு உனக்கு தோணுச்சா?” என்று கட்டிலின் மத்தியில் நின்று அவள் கைகளுக்கு அகப்படாமல் ஆட்டம் காட்டினான்.
“எங்க டா உன் போன்?” என்று அவள் அதிகாரமாக கேட்டு அவனை முறைக்க,
“அதோ அங்க சார்ஜர்ல இருக்கு. சத்தியமா எனக்கு வேற எந்த பொண்ணையும் தெரியாது. நான் ரொம்ப குட் பாய்.” என்று கட்டிலில் ஓய்ந்து போய் குத்த வைத்தது போல அமர்ந்தான்.
“ஓ.. ஐயாவுக்கு வேற பொண்ணு வேற கேட்குது. உன் மூஞ்சிக்கு நானே அதிகம் டா.” என்று சொல்லிக்கொண்டே சென்று அவனது கைபேசியை எடுத்து அவன் மடியில் விட்டு எறிந்தாள்.
“பாரு டா. நல்லா கண்ணைத் திறந்து பாரு” என்று கோபத்துடன் கூறிவிட்டு அங்கே கிடந்த பிளாஸ்டிக் சேரை இழுத்து கட்டிலுக்கு அருகில் போட்டு அமர்ந்தாள்.
நன்றாக சம்மணமிட்டு அமார்ந்தவன், பேட்டர்ன் லாக் போட்டு செல்போனை திறந்து பார்த்தால் அதில் கிட்டத்தட்ட ஐம்பது மிஸ்ட் கால்கள்.
அனைத்தும் இவள் ஒருத்தியின் உபயம் தான். அமைதியாக செல்போனை அணைத்து விட்டு,
“சொல்லு கன்யா. என்ன விஷயமா எனக்கு கால் பண்ணின?” என்று எதுவுமே நடக்காதது போல அவன் கேள்வி கேட்க,
கிஞ்சித்தும் அவன் மேல் கருணை இல்லாமல் தலையணையை எடுத்து அவனை சாத்தி விட்டாள்.
“உன் வாழ்க்கைக்குள்ள நான் வர அனுமதி இருக்கான்னு கேட்டா போதுமா டா? இருக்கா இல்லையான்னு யோசிக்க டைம் கேட்டு போன் பண்ணினா அதை எடுக்கணுமா வேண்டாமா?” என்று அவனை கழுத்தில் கைவைத்து மிரட்டினாள்.
அவள் அழுத்தியத்தில் கட்டிலில் சரிந்தவன் மேல் முழுவதுமாக அவள் சரிந்து கிடக்க,
முகுந்தனின் மனதில் முதன் முதலில் ஒரு உரிமையுள்ள பெண்ணின் மீது எழும் தாபம் எழுந்தது.
அவள் அவன் ஏதாவது பதில் தருவான் என்று அவனையே பார்த்திருக்க,
அவளது பூப்போன்ற மேனி தன் மீது அழுத்தி இருந்த கிறக்கத்தில் அவளை கண்களோடு கண்கள் கூடிப் பார்த்தான்.
அவனது பார்வை மாற்றத்தை கன்யா அப்போது தான் உணர்ந்தாள். அவள் முகத்தில் நாணம் குடியேற கண்கள் மெல்ல தாழ்ந்தது.
தன் மீது இருந்தவளின் இடையை தான் கரங்களுக்குள் வளைத்தவன்,
“நான் போன் எடுக்கலன்னா நீ ஏன் அவ்வளவு பதறின கன்யா?” என்று அவள் போனி டெயிலுக்குள் அடங்காத சில முடிகளை அவன் தன் விரல் கொண்டு நகர்த்தி அவள் காதுக்கு முன்னால் வழிய விட்டான்.
அப்பொழுது அவன் விரல்கள் அதோடு நில்லாமல் கன்னத்தில் கோடு போட்டு கழுத்துக்கு பயணமானது.
“நீ போனை எடுக்காம போனதும் என்னென்னவோ யோசனை. உனக்கு ஏதோ ஆகிடுச்சுனு பயந்து ஓடி வந்தேன்” என்று சொன்னவள், அவன் பிடியில் இருந்து எழுந்து கொள்ள முயன்றாள்.
ஆனால் அந்தக் கள்வன் அவளை விட்டால் தானே!
“ஏன் போற? இப்படியே பேசு.” என்று மேலும் இறுக்க,
“டேய்.. நான் உன்கிட்ட டைம் வேணும்ன்னு சொல்லத்தான் கால் பண்ணினேன்” என்று அவள் சொன்னது இந்த நிலையில் அவளுக்கே அபத்தமாகத் தோன்றியது.
“நிஜமாவா? உண்மையாவே நீ டைம் கேட்க தான் நினைச்சியா?” என்றவன் விரல்கள் இன்னும் அவள் கன்னத்துக்கும் கழுத்துக்கும் இடையே தான் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.
“ஆமா” என்று அவனை தள்ளிக் கொண்டு அவள் எழ நினைக்க, அவளது சட்டையின் பட்டன் அவனது பனியனில் மாட்டிக் கொண்டது.
மீண்டும் அவள் அவன் மீது விழ, விஷமமாக சிரித்தான் முகுந்தன்.
“டேய் நாட்டி போலீஸ். ஒழுங்கா எழுந்திரு டா.” என்று அவள் மிரட்ட தான் நினைத்தாள். ஆனால் குரல் என்னவோ ஐஸ்க்ரீம் போல குழைவாகவே வந்தது.
அவன் ஒய்யாரமாக கட்டிலில் தலைக்குப் பின்னே கைகளை கோர்த்துக்கொண்டு, “நான் ஒன்னும் பண்ணலப்பா. நீ எழுந்து போ ” என்று தரையைத் தொடாமல் தொங்கிக் கொண்டிருந்த அவனது காலை ஆட்ட, அவள் உடலும் அவன் ஆட்டத்துக்கு சேர்ந்து ஆடியது.
தன் சட்டையின் பட்டன் அவனது பனியனில் ஓட்டை போட்டு உள்ளே சென்று மாட்டிக் கொண்டிருப்பது கண்டு அதை எடுக்க அவள் நிமிர மீண்டும் அவன் மேல் அவள் சரியும் நேரம் சரியாக அவள் இதழ்களில் தன் இதழைச் சேர்த்தான் முகுந்தன்.
காதல் நெருப்பு பற்றிக்கொண்டு அவன் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து இருக்க,
சிறு தீப்பொறியுடன் அவனைத் தேடி வந்தவள் அவனோடு காதல் தீயில் இணைந்தாள்.
இதழோடு இதழ் உறவாட, அவள் விரல்கள் அவனது தலை முடிக்குள் கோலமிட்டது. அவனது கைகள் அவனையும் மீறி அவளது சட்டையின் இடையெளியில் இருந்த சிற்றிடையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டது.
சில நிமிட நேரம் நீண்ட அந்த இதழணைப்பு விலகும் போது இருவரையும் காதல் என்னும் ஒரு கோட்டுக்கு கீழ் கொண்டு வந்து சேர்த்திருந்தது.
மெல்ல எழுந்தவன், அவளது சட்டையின் பட்டன் பிய்ந்து விடாமல் தன் பனியனில் இருந்து எடுத்துவிட்டான்.
அவள் அமைதியாக அவனுக்கு அருகில் அமர்ந்திருக்க,
“ஏ கன்யா என்ன சைலண்ட்டா இருக்க? உனக்கு விருப்பம் இல்லையா?” என்று அவள் மோவாயை நிமிர்த்தி வினவினான்.
அவள் பதில் ஏதும் தராமல் அமைதியாகி விட, தவறு செய்தவன் போல முகுந்தனின் முகம் குற்றவுணர்வு கொண்டது.
தனக்கு என்னவோ என்று தேடி வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டோமோ என்று அவன் மனம் அவனை அறுக்க,
“சாரி கன்யா. நான் வேணும்னு பண்ணல.” என்று வருத்தத்துடன் கூறிய அவன் இதழ்களில் விரல் வைத்து அவனை அமைதிப்படுத்தினாள்.
“நீ எந்த தப்பும் செய்யல. நான் யோசிச்சிட்டு இருந்தேன். உனக்கு ஏதோன்னு பயந்து போய் நான் ஓடி வந்திருக்கேன். அப்ப என் மனசுல நீ ஆழமா பதிஞ்சிருக்க. நீ என்கிட்ட அப்படி நடந்துக்கும் போது எனக்கு அருவருப்பு வரல, உன்னை தள்ளிவிட நான் நினைக்கல. ஏன்.. சொல்லப்போனா நான் அதை ரசிச்சேன்? அப்ப நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். அதானே அதுக்கு அர்த்தம். எனக்கே என் மனசு புரியாதப்போ உனக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? அது தான் யோசனையா இருந்தது முகுந்த்.”என்றாள் உரிமையாக.
அவளின் ‘முகுந்த்’ என்ற அழைப்பில் வழிந்த அந்த நேசம் கண்டு முகுந்தன் முகத்தில் அத்தனை மலர்ச்சி.
“தேங்க்ஸ் கன்யா” என்று கன்னத்தில் லேசாக கிள்ளியவன்,
“ரெண்டு நாள் முன்னாடி வரை எனக்கு உன் மேல காதல் வரும்ன்னு நான் நினைக்கவே இல்ல. போன நிமிஷம் வரை நீயும் நினைச்சு இருக்க மாட்ட. இப்படித்தான் மேஜிக் மாதிரி வருமா இந்த காதல்?” என்று கட்டிலில் வாகாக சாய்ந்து அமர்ந்து அவளை தன் அருகே வரும்படி கைகளை விரித்து அழைத்தான்.
அவள் அமைதியாக அவனுக்கு இடதுபக்கம் வந்து அமர்ந்தாள். அவனது இடது கரத்தில் இன்னும் அந்த கட்டு பிரிக்கப்படாமல் இருந்தது.
மெல்ல அதனை வருடியவள், “எவன் டா உன்னை இப்படி பண்ணினது? அவன் கேஸ் எதுன்னு சொல்லு, வாழ்க்கை முழுக்க வெளில வர முடியாதபடி அவனை உள்ள வைக்க அந்த கேசை நானே எடுத்து நடத்துறேன்.” என்று கோபத்துடன் கூறி அந்த கட்டில் தன் முத்தத்தை பதித்தாள்.
“அடிப்பாவி. அடிவாங்கின என்னை விட்டுட்டு கட்டுக்கு போய் முத்தம் வைக்கிற?” என்று அவளை தன் அருகே மெல்ல இழுத்தான்.
“போதும் போதும்.. மெட்ரோ டிரெயின் மாதிரி இத்தனை வேகம் நம்ம காதலுக்கு ஆகாது. கொஞ்சம் மெதுவாவே போவோம்.” என்று தன்னை நோக்கி வந்த அவன் இதழ்களை தன் கை கொண்டு தள்ளினாள்.
கிடைத்த கைகளுக்கு முத்தத்தை வாரி வழங்கியவன், “நீ சொல்றதும் சரிதான்.” என்று அவளது செயலுக்கு சம்மதம் தெரிவிக்க,
“பரவாயில்ல முகுந்த். முதல் பாடத்தை ரொம்ப சீக்கிரம் சரியா கத்துக்கிட்டீங்களே!” என்று போலியாக ஆச்சரியம் காட்டினாள்.
“ஏய் காதல்ல நான் தான் பாடம் சொல்லித் தரணும். நீயென்ன புதுசா சொல்ற? நான் எதைக் கத்துக்கிட்டேன்?” என்று அவன் விழிக்க,
“அதான் முகுந்த் இப்போ சொன்னீங்களே, நீ சொல்றது சரின்னு. இதை மட்டும் சரியா கத்துகிட்ட எந்த காதலும் பிரிஞ்சதா சரித்திரமே இல்ல.” என்று மெச்சுதலாக அவனை நோக்கி கன்னம் வழித்து அவள் திருஷ்டி எடுக்க,
“ஓய், செஸ் போர்ட்.. சேட்டை தானே உனக்கு. என்னைப் பார்த்தா ஆமா சாமி போடுறவன் மாதிரி இருக்கா?” என்று இம்முறை இவன் துரத்த அவள் ஓடினாள்.
“யோவ் நான் எங்க உன்னை ஆமா சாமி போட சொன்னேன்? நான் சொன்னா சரியா இருக்கும்ன்னு சொல்றது காதலை பலப்படுத்தும், நீடூழி வாழ வைக்கும் எக்சட்ரா எக்சட்ரா..” என்றாள் சிரித்தபடி.
இவர்கள் இப்படி ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் அந்த நேரத்தைக் கடத்த, பெண் பார்க்கும் படலம் எல்லாம் ஒரு சம்பரதாயம் தான் என்று உணர்ந்திருந்த கன்யாவின் அப்பா ஞானவேலும், முகுந்தனின் தாய் ஜெயந்தியும், புதன் கிழமையன்று நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று போனில் பேசி முடிவு செய்து இருந்தனர்.
பிரிய வேண்டுமா என்று இருவரும் எண்ணி எண்ணி தவிக்க, காதலை சற்று பொறுமையாக உணர்ந்து அனுபவிப்போம் என்று இறுக்கமாக அணைத்து விட்டு கன்யாவுக்கு விடை கொடுத்தான் முகுந்தன்.
அவன் மனதில் இரண்டு நாட்களாக இருந்த தவிப்பெல்லாம் விலகி கன்யா தன்னை காதலிக்கிறாள் என்றதும் ஏதோ சாதனை செய்த பெருமித உணர்வு பெருக அவளை கையசைத்து வழியனுப்பி வைத்து விட்டு மகிழ்ச்சியில் வீட்டையே சுற்றிச் சுற்றி ஓடினான் முகுந்தன்.
அவள் அவன் மனதிற்குள் புகுந்த மாயமே இன்னும் அவனுக்கு விளங்காத நிலையில் அவள் மனதில் தான் இருக்கிறோம் என்ற எண்ணம் கொடுத்த உணர்வை அணுஅணுவாக அனுபவித்தான்.
அவனை வீட்டில் சென்று சந்திந்து விட்டு மீண்டும் அலுவலகம் செல்ல விரும்பாத கன்யா தங்கள் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்த,
ஆழ்வார்பேட்டைக்கு முன்னால் ஒரு சிக்னலை கடக்காமல் சந்தில் சென்று வீட்டை அடைய எண்ணியவளை வழி மறித்து அவள் சுதாரிப்பதற்குள் தனக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டது ஒரு ஆம்னி வேன்.