அவள் பேசியதைக் கேட்டு சடன் பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தினான் முகுந்தன்.
“கன்யா என்ன பேசிட்டு இருக்க?” என்று புரியாமல் வினவ,
“எவனோ என்னை தூக்கிட்டு உனக்கு போன் பண்ணினா நீ என்னை லவ்வர் இல்லன்னு சொல்லி இருக்க. அவன் என்னைப் பார்த்து, ‘அந்த போலீஸ்காரன் உன் லவ்வர்ன்னு நெனச்சு தான் தங்கச்சி தூக்கினோம். அவன் இல்லன்னுட்டான். பத்திரமா வீட்டுக்கு போ’ன்னு சொல்றான்.” என்று கடுப்புடன் அவள் கூற,
“அவனுங்க ரொம்ப மோசமானவங்க கன்யா.” என்று கஜாவின் தன்மை பற்றி அவன் கூற முனைய, இவளோ,
“ஓ. அப்ப மோசமானவன் கடத்திட்டு போனா என்னை லவ்வர் இல்லன்னு சொல்லுவ. அந்த அளவுக்கு அவன் மேல உனக்கு பயம்னா அவன் போன் எடுக்காம இருந்திருக்க வேண்டியது தானே! அவனுக்கு பயந்து என்னை விடுவியா?” என்று அவள் ஏகத்துக்கும் கத்த, அவள் குரலையும் தாண்டிய காற்றின் வேகம் சொன்னது அவள் கடற்கரை சாலையில் அதீத வேகத்தில் பயணித்துக் கொண்டு இருப்பதை.
“கன்யா. நான் சொல்ல வர்றதை முழுசா கேளு மா. பிளீஸ்.” என்று கெஞ்சுதலாக அவன் கேட்க, அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் அவள் இல்லை.
“போடா நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம். அந்த நாலு பேரும் இன்னும் பத்து நிமிஷம் என்னை அங்கேயே விட்டிருந்தா,கைகட்டை அவிழ்த்து நானே அவனுங்களை அடிச்சு போட்டுட்டு வெளில வந்திருப்பேன். இந்த பயம் பயப்படுற நீ எப்படி டா போலீஸ் ஆன? உன்னைப் பத்தி அந்த எம்.எல்.ஏ கேஸ்ல தெரிஞ்சும் லவ் வரைக்கும் வந்தது என் தப்பு.” என்று கோபத்தில் வார்த்தைகளை வீசினாள்.
முகுந்தன் எதுவும் பதில் கூறாது ஸ்டியரிங் வீலில் அழுத்தமாகப் பதிந்திருந்த வலது கையின் மேல் தலையை சாய்த்துக் கொண்டான்.
“இப்ப என்ன சொல்ல வர்ற?” கேட்டவன் குரலில் இருந்த வேற்றுமையை அவள் உணரவில்லை.
அவள் அவனுக்கு பதில் கூறாமல் அழைப்பை துண்டித்துவிட, ஸ்டேஷனுக்கு அழைப்பு விடுத்தான் முகுந்தன்.
“நான் பேட்ரோல் போயிட்டு மெயின் ரோட்ல இருப்பேன். அவசர கேஸ்னா வாக்கீல வாங்க. மத்தபடி தொந்தரவு பண்ண வேண்டாம்.” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
கன்யா இப்படி அதிரடியாக கோபம் கொள்ளுவாள் என்று அவன் எண்ணவில்லை. அவன் எண்ணமெல்லாம் அவள் நல்லபடியாக கஜாவிடம் இருந்து வர வேண்டுமே என்பதில் இருந்தது. அவன் செய்த சாதுர்ய வேலை அவன் காதலுக்கு விலையாக வந்து விட்டது.
எப்படியும் இந்த இரவில் அவளுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதுவும் இல்லாமல் எல்லாமே வேகமாக நடந்து கொண்டு இருப்பதாக அவனுக்கே தோன்றியது. இந்த வேகத்தடை கூட ஒரு வகையில் நம்மை என்று எண்ணிக் கொண்டு எப்பொழுதும் செல்லும் சாலைகளில் ரோந்து சென்று முடித்து முக்கிய சாலையில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியே வேகமாக செல்லும் வாகனங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
••••
வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கன்யாவின் மனம் உலைகலமாக கொதித்துக்கொண்டு இருந்தது.
‘என்னை லவ்வர் இல்லன்னு சொல்ற மூஞ்சி, என்ன டேஷ்க்கு என்னை கிஸ் பண்ணினான்? இந்த கன்யா அவளோ ஈசியா போயிடாளா அவனுக்கு?’ மனம் குமுறியபடி சென்றவள், வீட்டை நெருங்குகையில் தினமும் செய்த பழக்கமாக முகத்தை லேசாக துடைக்க முனைய அவள் விரல்களில் கண்ட ஈரம் அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
‘ஏய் நீ அழறியா? எதுக்கு? ஒரு ரௌடி மிரட்டினதும் நம்மளை லவ் பண்ணலன்னு சொன்ன அவன் தான் நம்ம அவன் லைஃப்ல இனிமே இல்லன்னு நெனச்சு அழணும்.’ என்று முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள்.
தன் ஒரு நாள் காதல் அந்த ஒரே நாளில் கருகி விட்டது என்று நினைத்த நொடி கண்களில் முனுக்கென்று எட்டிப்பார்த்த கண்ணீரை சபித்து விட்டு போர்டிகோவில் வாகனத்தை நிறுத்தினாள்.
அவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து சீராக்கிக் கொள்ள, திருமுருக பவனம் என்றும் இல்லாத திருநாளாக சிரிப்பும் பேச்சுமாக இருந்தது.
இப்படி இவர்கள் மகிழ்ந்து பேசும் அளவுக்கு யார் வந்திருக்கக் கூடும்? என்று குழம்பியவளாக அவள் உள்ளே நுழைய, ஹாலில் அன்னையும் தந்தையும் சோஃபாவில் அமர்ந்திருக்க, எதிரில் டேபிள் மேட்டின் உதவியுடன் ஜம்மென்று அமர்ந்திருந்தது தந்தையின் மடிக்கணினி.
‘அடப்பாவிகளா வீடியோ கால் பண்ணி பேசி தான் வைப் பண்ணிட்டு இருக்கீங்களா?’ என்று ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் மாடிக்குச் செல்லலானாள்.
“ஏங்க கன்யா முகமே சரி இல்லையே! என்னாச்சு? வாங்க போய் கேட்போம்.” என்று ஸ்கைப் காலில் இருந்த ஜெயந்தியை மறந்து கணவரிடம் கேட்டார் குணவதி.
“வேற என்ன ஏதாவது பெரிய கேஸ் வந்திருக்கும் இவளும் இவங்க சீனியரும் பூதக் கண்ணாடி வச்சு பல சட்ட புத்தகங்களை புரட்டி, இதே போல வேற கேஸ் இருக்கா அதுக்கு தீர்ப்பு என்னன்னு தேடி களைச்சு போயிருப்பாங்க. இன்னிக்கு வீட்டுக்கு போ, நாளைக்கு மீதியை தேடுவோம்னு சுகுமார் வீட்டுக்கு அனுப்பி இருப்பார்.” என்று ஞானவேல் அவர் ஊகத்தில் விளைந்த கதையைக் கூற,
“இல்ல இல்ல.. என் பொண்ணு முகம் சரியில்ல. கண்டிப்பா இது வேற ஏதோ.” என்று குணவதி கூறவும்,
“எதுக்கு அண்ணி கலக்கம்? நேரா அவ கிட்ட போய் உட்கார்ந்து மெதுவா பேச்சுக் கொடுங்க. அவளே சொல்லப் போறா. மணி வேற ஆகுது பாருங்க. மருமகளுக்கு சாப்பிட எடுத்துட்டு போங்க. பசியா கூட இருக்கலாம்.” என்றதும்,
“நீங்க சொல்றது சரி தான் அண்ணி” என்று குணவதி எழுந்து சமையலறை நோக்கிச் செல்ல,
“முகுந்தனும் பசி வந்தா முகத்தை உர்ன்னு வச்சுப்பான். அதுக்காக தான் அவனுக்கு கடலை மிட்டாய் சாப்பிடுற பழக்கத்தை உண்டு பண்ணினேன். அது கொஞ்சம் பசி தாங்கும், இவனும் நம்மளை கடிக்காம இருப்பான்.” என்று சிரித்தார் ஜெயந்தி.
“தங்கச்சி எல்லாத்தையும் பார்த்து பார்த்து தான் செய்வீங்க போல. அப்பறம் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணுமே?” என்று ஞானவேல் தயங்க,
“சொல்லுங்க ஞானவேல்” என்று துரைராஜ் அவரை உந்தினார்.
“இல்ல நீங்க இந்தியா வந்து இருந்திட முடியாதா? அங்கேயே தான் இருக்கணுமா?” என்றதும்,
“கோமதிக்கு மனசு மாறட்டும்ன்னு தான் முதல்ல இங்க வந்தோம். அப்பறம் சும்மா இருக்க பிடிக்காம வேலை பார்க்க அனுமதி வாங்கினோம். இப்படியே இங்கேயே இருந்துட்டோம். எங்களுக்கும் வரக்கூடாதுன்னு ஒன்னும் இல்ல. வந்தா செல்வராஜ் நினைப்பு வரும். கோமதி பாவம்.” என்று துரைராஜ் கூறிவிட்டு ஜெயந்தியின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டார்.
“அண்ணே நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் என் பையனுக்கு கல்யாணம் முடிஞ்சு எப்ப அவங்க என்னோட சேர்ந்து இருக்க விருப்படுறாங்களோ அன்னைக்கு சென்னையில செட்டில் ஆகிடுவேன். இப்போ கன்யா இருக்கற ரூமை எனக்கு தர மாட்டீங்களா என்ன? (Phentermine) அவங்களுக்குள்ள இடைஞ்சலா இல்லாம அதே நேரம் அவங்களுக்காக இருப்பேன்.” என்று ஜெயந்தி கூற,
துரை மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி, “அவங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு ஜாலியா இருக்க நினைச்சு இருப்பாங்க ஜெயந்தி, நீ போய் அவங்களை டிஸ்டர்ப் பண்ண போறியா?” என்று வாய் பொத்தி சிரிக்க,
“சும்மா இருங்க சம்பந்தி” என்று துரையிடம் கூறிவிட்டு,
“தங்கச்சி நீங்க எங்க கூடவே இருங்க மா. அவர் உங்களை கிண்டல் பண்ணுறார்.” என்று ஜெயந்திக்கு பதில் கூறி மூவரும் சிரித்துப் பேச அவ்விடம் அழகான நட்பு மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டு இருந்தது.
ஆரம்பத்தில் நால்வரும் பேசும்போது இருந்த தயக்கம் எல்லாம், ராதை பற்றியும் வசந்தமாலா பற்றியும் பகிர்ந்து கொண்டதும் தலைகீழாக மாறி நண்பர்களாக பரிமளித்து இருந்தனர்.
புதன் காலை உறவுகளை வீட்டிற்கு அழைத்து ஸ்கைப்பில் வைத்தே நிச்சயம் செய்வதாக முடிவானது. இதுவரை எதுவும் கன்யாவிடம் தெரிவிக்கப் படவில்லை.
ஞானவேலின் நம்பிக்கை மகள் தங்களை புரிந்து கொள்வாள் என்பதே. ஆனால் மகள் குணம் அறிந்த குணவதி முதலில் இருந்தே மகளிடம் கேட்டு செய்வோம் என்று ஞானவேலிடம் போராடி, பின் ஜெயந்தியின் அறிமுகத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தில் மகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இவ்வளவு நல்ல மனிதர்களை இழக்க வேண்டியது வருமே என்று அஞ்சி கணவருடன் கூட்டு சேர்ந்து விட்டார்.
ஆனால் இப்பொழுது மகள் முகத்தில் தெரிந்த பாவம் இதுவரை அவர் அறியாதது, தன் மகளிடம் பார்த்திராதது.
அவள் முகமெங்கும் தடித்து, அவள் அழுத தடம் அப்பட்டமாகத் தெரிய, ஆரம்பத்தில் இதனை கவனிக்காமல் அவளுக்கு தட்டில் மிருதுவான சப்பாத்தியும் நவரத்தின குருமாவும் வைத்து எடுத்து அவள் அறைக்குள் வந்தார் குணவதி.
“கன்யா இன்னிக்கு உன்னோட பேவரெட் குருமா டா” என்று அவள் முன்னே ‘டோன்டோடைன்’ என்ற ஒலியுடன் தட்டை நீட்ட, எப்பொழுதும் அன்னை இப்படி செய்யும் காமெடிகளை ரசித்து சிரித்துவிட்டு பின் கேலி செய்யும் கன்யா அமைதியாக அவர் கையில் இருந்த தட்டைப் பெற்றுக்கொண்டு அந்தப் பக்கமாகத் திரும்பிக் கொண்டாள்.
“என்ன டி அம்மா மேல கோவமா? நீ வேற எதுவும் மெனு சொன்னியா? இல்லையே!” என்று நாடியில் தட்டி யோசித்துவிட்டு,
“இல்லையே கன்யா. நீயும் ஒன்னும் சொல்லல, உங்க அப்பாவும் எதுவும் கேட்கல, அதான் நானா இந்த மெனு பண்ணினேன். வேற எதுவும் வேணுமா?” என்று தன் மகள் தன்னைப் பார்க்காமல் இருப்பது கண்டு அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினார் குணவதி.
கண்களில் கோடாக வழிந்த நீரைக் கண்டு தன் மகள் அழுகிறாள் என்றதும் இதயம் வலி கண்டது அவருக்கு.
“ஏய் என்ன டி அழுகற? யாரும் எதுவும் பேசினாங்களா?” என்று அவள் முகத்தை தன் சேலைத் தலைப்பால் துடைத்து, முகத்தை நிமிர்த்தி தன்னை நேருக்கு நேராக பார்க்கும்படி வைக்க,
அவளோ கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
“கன்யா.. என்னாச்சு டா அம்மா கிட்ட சொல்லு. எவனும் மிரட்டினானா? அதுக்கெல்லாம் பயப்படுற ஆளா என் மக? நாங்க குட்டிப்புலி ஆச்சே!” என்று மகளை சமாதானம் செய்ய அவர் விளையாட்டாக பேச, கையில் இருந்த தட்டை தனது எழுதும் டேபிளில் வைத்தவள் மடங்கி அன்னையின் மடியில் தலை சாய்ந்தாள்.
“டேய் கண்ணு. கன்யா.. என்ன இது?” என்று அவளது தலைமுடியை ஒதுக்கி கன்னத்தில் மென்மையாக நீவியவர்,
“எதுனாலும் அம்மா கிட்ட சொல்லு டா, என்னால பிரச்சனையை தீர்க்க முடியாதுன்னாலும், உன் மனசுக்கு ஆறுதலா இருப்பேன்ல! நீ அழுது அம்மா பார்த்து பல வருஷம் ஆகுது டி.” என்று ஆற்றாமையோடு குணவதி கூற,
“காதலிச்சா இப்படித்தான் வலிக்குமா மா?” என்று மகள் கேட்டதும் குணவதியின் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்று துடித்தது.