நீதிமன்ற வளாகத்தின் அமர்வு நீதிமன்றங்களில் நீதியரசர் கந்தவேல் அவர்களின் டிவிஷன் கோர்ட் அறை சற்றே பரபரப்புடன் காணப்பட்டது.
அதற்குக் காரணம் அன்று அங்கே வரவழைக்கப்பட்டிருந்த சிலரின் பதவியும் அதிகாரமும் தான்.
அறை வாயிலில் அடுத்தடுத்த வழக்குகளுக்கான சாட்சிகள், வழக்கு பதிவு செய்தோர், எதிர் தரப்பு என்று பலரும் நின்று கொண்டிருக்க,
சினிமா காட்சி போலெல்லாம் உண்மையான நீதிமன்ற வளாகம் இருக்காது, அங்கே நீதிபதிக்கான உயரமான மேசை நாற்காலி, அவருடைய தட்டச்சாளர்/ கிளார்க் அமர ஒரு நாற்காலி பெரிய மேசையில் அனைத்து வழக்குகளின் காகிதங்கள், குற்றம் சாட்டப்பட்டவர், சாட்சிகள் நின்று பேச ஒரு தடுப்பும் , மற்றபடி நீளமான மேசையும் நாற்காலிகளும் வழக்கறிஞர்கள் அமர்ந்து கொள்ள இருக்கும். பார்வையாளர் இடமெல்லாம் இருக்காது. கடைசியில் உள்ள இடங்களில் ஜூனியர் வழக்கறிஞர்கள் வழக்குகளை வேடிக்கை பார்த்தபடி இருப்பர். அது அவர்களது பின்னாள் வழக்குகளுக்கு பயன்படும் என்பதால் அவர்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். நீதியரசர் கந்தவேல் தேவைக்கு அதிகமான கூட்டத்தை தன் மன்றத்தில் விரும்பாதவர். அதனால் அதிகப்படி ஜூனியர்களைக் கூட வெளியில் இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லி விடுவார்.
அதே நேரம் அவர்களுக்கு எந்த வழக்கிலும் சந்தேகம் என்றாலும் தயங்காமல் தன்னிடம் உதவி கேட்கலாம் என்றும் கூறி விடுவார்.
அப்படி பல சந்தேங்கள் கேட்டு அவரிடம் சென்று நின்ற ஒரே ஒருத்தி கன்யா மட்டுமே. அவரைக் கண்டால் அனைவரும் பயந்து பின்வாங்கும் வேளையில் அவரது அறிவை வெகுவாக வியந்து போற்றி தானும் அப்படியான வழக்கு ஞானத்தைப் பெற வேண்டும் என்று தயங்காமல் அவரிடம் சந்தேகம் கேட்கச் செல்வாள்.
அவளது துடுக்குத்தனமான பேச்சு அவருக்கு மிகவும் பிடிக்கும். அதே நேரம் விஷய ஞானமும், எதையும் உடனுக்குடன் புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவளுக்கு இருப்பதைக் கண்டு அவளை வெகுவாக பாராட்டுவார் நீதியரசர் கந்தவேல்.
அவர் தனது இருக்கையில் அமர்ந்து அன்றைய வழக்குகளை கவனித்துக் கொண்டிருக்க,
கொட்டிவாக்கம் எம்.எல்.ஏ வந்திருப்பதாகவும் அவரது வழக்கை விரைவாக எடுத்து விசாரிக்கவும் வேண்டி அவர்களது வழக்கறிஞர் வந்து மனு கொடுக்க,
“இப்போ இருக்கற கேசுக்கு அடுத்தது அது தானே? அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று மனுவை வாங்கி தனக்கு இடது பக்கமாக எறிந்தார்.
அப்பொழுது தான் உள்ளே நுழைந்த கன்யா, இடை வளைத்து அவருக்கு மரியாதையாக வணக்கம் சொல்லிவிட்டு மூன்றாவதாக இருந்த காலி இருக்கையில் சென்று அமர்ந்து தன் கோப்புகளை வகைப்படுத்தினாள்.
அந்த வழக்கு தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைத்ததும், இவளது வழக்கு எண் அறிவிக்கப்பட்டது.
அவள் எழுந்து முன்னே வந்து குமாஸ்தாவிடம் தன் வக்காலத்தைக் கொடுத்துவிட்டு நிமிர,
“அவங்க சீனியர் வரல போல இருக்கே, வாய்தா போட்டுக்கலாமா ஐயா?” என்று அவர்களது வழக்கறிஞர் சாந்தலிங்கம் வினவ,
“ஏன் வந்திருக்கிற ஜூனியர், வக்கீல் இல்லையா? வாதாட மாட்டாங்களா? அதுக்காக தானே அவங்க சீனியர் சுகுமாரன் அவங்களை அனுப்பி வச்சிருக்காரு.” என்று கந்தவேல் வினவியதும் அவர் வாய் மூடிக்கொண்டது.
‘ எம்.எல்.ஏ நாகராஜன் வெர்சஸ் ராஜகோபால், வழக்கு எண்’ என்று அனைத்தையும் வாசித்த கிளார்க் வழக்கை வாதிடும் படி கூறிவிட்டு அமர்ந்தார்.
வழக்கு என்னவோ ராஜகோபால் என்பவரிடம் கொட்டிவாக்கம் எம்.எல்.ஏ நாகராஜன் என்பவர் மூன்று லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்றதாகவும், அதற்கு ஈடாக அவரது கடையின் ஓராண்டு லீசை அதன் காம்பிளக்ஸ் இடத்திலேயே நடத்திக் கொள்ளலாம் என்றும், இல்லாவிட்டால் அவரது உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டியதால் அப்பணத்தை ராஜகோபால் கொடுத்ததாகவும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னாரும் ராஜகோபாலின் கடையையும் அவரையும் நாகராஜனின் ஆட்கள் அடித்து நொறுக்கி அவரை வெளியேற்றி விட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
பெரும்பாலும் லஞ்ச வழக்குகள் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு கீழ் வராது. அவை பொருளாதார வழக்குகளாக கருதப்பட்டு விசாரிக்கப்படும். ஆனால் இங்கே ராஜகோபாலை அடித்ததால் இது குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்து நின்றது.
அதற்கு காரணம் சுகுமாரன் தான். அவர் தான் இதனை இப்படி கொடுத்தால் தான் ராஜகோபாலுக்கு நீதி கிடைக்கும் என்று வழக்கை பதிவு செய்திருந்தார்.
ஆனால் இன்று அவருக்கு வேறு ஒரு முக்கிய வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இருப்பதால் கன்யாவை இவ்வழக்கை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு சென்றிருந்தார்.
கன்யா முன்னே வந்து ராஜகோபால் பற்றியும் நடந்த சம்பவங்களையும் விளக்க, நீதிபதி அதற்கு ஆதாரம் கேட்டார்.
வழக்கை பதிவு செய்து விசாரித்த அதிகாரியான முகுந்தன் வந்து விளக்க,
அது நாகராஜனின் ஆட்கள் இல்லை என்று வாதிட்டார் சாந்தலிங்கம்.
உடனே சில புகைப்படங்களை வழங்கிய கன்யா,
“இது அவரோட அவங்க இருக்கிற போட்டோஸ், எல்லாமே வேற வேற இடங்களில் எடுத்தது. எல்லா இடத்துலயும் இவங்க தற்செயலா அவரோட இருந்திருக்க முடியாது.” என்று சாந்தலிங்கத்தைப் பார்த்தபடி கன்யா கூற,
“இவங்க தான் அடிச்சாங்க அப்படின்னு சாட்சி இருக்கா?” என்று முகுந்தனிடம் கேட்டார் ஏற்கனவே அந்த காம்ப்ளெக்ஸ் சிசிடிவி காட்சிகளை அழித்துவிட்ட மிதப்பில்.
முகுந்தனோ, “இவர் இவங்க தான் அடிச்சாங்க அப்படின்னு ஐடெண்டிஃபை பண்ணினார். ஆனா அவங்க வந்து போன புட்டேஜ் எதுவும் கிடைக்கல?” என்று கைகளை பின்னால் கட்டிகொண்டு கூறினான் முகுந்தன்.
“சரி இன்ஸ்பெக்டர் சார்.ராஜகோபால் சார் இடத்தில அவங்க வந்து போன புட்டேஜ் இல்ல. ஆனா அவங்க அந்த நேரம் எங்க இருந்தேன்னு சொன்னாங்களோ அங்க இருக்குற புட்டேஜ் கூடவா கிடைக்கல?” என்று நக்கலாக வினவினாள் கன்யா.
முகுந்தன் பின்னால் கட்டியிருந்த கையை முறுக்கி தனது கோபத்தினை கட்டுப்படுத்தினான்.
“இல்ல மேடம்” என்று அவன் பதில் தர,
“ஆனா பாருங்க மிஸ்டர் முகுந்தன் எனக்கு அது கிடைச்சிருக்கு.” என்று பென் டிரைவ் ஒன்றை எடுத்து அங்கிருந்த கிளார்க்கிடம் கொடுத்தாள்.
தன் எதிரே இருந்த லேப்டாப்பில் அதை மாட்டிய கந்தவேல், அதில் தெரிந்த காட்சிகளைக் கண்டு, “என்ன மிஸ்டர் முகுந்தன், புட்டேஜ் இல்லன்னு சொன்னிங்க?” என்று அவன் பக்கம் திருப்ப,
அதில் ராஜகோபால் கடைக்கு எதிரே இருந்த ஒரு வங்கியின் ஏ.டி.எம் சிசிடிவி பதிவில் அந்த நால்வரும் அவர் கடையை அடித்து உடைப்பது, அவரை இழுத்து வெளியே விடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது
அதைக் கண்டு திடுக்கிட்ட சாந்தலிங்கம், “இது ஏதோ மார்பிங் பண்ணினது ஐயா.” என்று வேகமாக கூற,
“நான் விசாரிச்சப்போ இந்த ஏ. டி. எம் சிசிடிவி வேலை செய்யலன்னு அங்க இருந்த செக்யூரிட்டி சொன்னாரு சார்.” என்று முகுந்தன் குழப்பமாக கூறினான்.
“அது உண்மையா இல்லையான்னு கூட உங்க எஸ்.ஐ தினேஷ் விசாரிக்கல மிஸ்டர் முகுந்தன். கேசை அவரை விசாரிக்க சொல்லிட்டு கையெழுத்து மட்டும் போட்டா இப்படித் தான் கோர்ட்ல வந்து திருதிருன்னு முழிக்கணும்.” என்று கன்யா அவனிடம் நக்கலடிக்க,
இவர்கள் இருவரும் இப்படி ஒவ்வொரு வழக்கிலும் ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வதை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார் கந்தவேல்.
“மேடம்.. பார்த்து பேசுங்க. நான் அங்க போய் பார்த்தேன். கேமரா வேலை செய்யல.” என்று முகுந்தன் அழுத்தத்துடன் கூற,
“தப்பு. கேமரா வேலை செஞ்சது, அதுக்கு கீழ இருந்த எல்.ஈ.டி பல்ப் தான் வேலை செய்யல. அதை அந்த செக்யூரிட்டி கண்டுபிடிக்க முடியலன்னா சரி. ஒரு எஸ்.ஐ., ஒரு இன்ஸ்பெக்டர் ரெண்டு பேர் பார்த்தும் கண்டுபிடிக்க முடியலயா? அதை கூட விடுங்க, பேங்க்ல போய், அங்க புட்டேஜ் இல்லன்னு கூட உங்க டீம் கன்பார்ம் பண்ணல. இதுல இருந்து நீங்க சரியா விசாரிக்கலன்னு தெரியுது.” என்று அவனிடம் கூறிவிட்டு,
“இவர்கள் நால்வரும் தான் ராஜகோபாலை அடித்து இருக்கிறார்கள் மை லார்ட். அதை இந்த வீடியோ ஆதாரம் நிரூபிக்கும். இது சப்ஸ்டான்ஸ்சியல் எவிடென்ஸாக இருந்தாலும், பணம் கொடுத்ததற்கான ஆதாரமாக அவர் குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் பணம் கொடுத்த நேரம் அதற்கான சிசிடிவி காட்சி, இவர்கள் அதற்கு பின்னால் தான் அடித்தார்கள் என்பதற்கான ஆதாரமாக இந்த சிசிடிவி பதிவில் இருக்கும் தேதி, நேரம் ஆகியவையை ஆதாரமாகக் கொண்டு, எம்.எல். ஏ நாகராஜனின் ஆட்களுக்கு குண்டாஸ் ஆக்ட் படியும், அவர்களை ஏவி இவர் செய்த செயலுக்கு இவருக்கு தண்டனை வழங்குமாறும். அவர் லஞ்சம் வாங்கியதை விசாரிக்க கமிஷன் அமைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஆங்கிலத்தில் சரளமாகக் கூறிவிட்டு நாகராஜனை ஒரு பார்வை பார்த்தாள் கன்யா.
அப்போது நாகராஜனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
பார்த்தார் என்று சொல்வதை விட கண்களால் அவளை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
அவர் கண்களில் கொழுந்து விட்டு எரியும் கோபத்தீ அத்தனை எளிதில் கன்யாவை விட்டு விடாது.
அதை கன்யாவும் நன்கு அறிவாள். அதனால் தான் ஏளனமாக அவரை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி, அவரது கோபத்தீக்கு மேலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
நீதியரசர் கந்தவேல் நாகராஜனின் லஞ்ச வழக்கை, லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி விட்டு, அந்த நால்வருக்கும் இரு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அதற்கு தூண்டிய நாகராஜனுக்கு ஓராண்டு தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
தண்டனை என்று கூறியதும் எம்.எல் ஏவின் பின்னே நின்ற ஆட்களுக்கு பயம் பிடித்தது.
அவர்கள் சாந்தலிங்கத்திடம் அவரின் பதவி பற்றி பரிதவிப்புடன் வினவ,
“ஒரு வருஷம் தான் கொடுத்து இருக்காங்க. நான் இப்போ மேல் கோர்ட்ல அப்பீல் பண்ணிட்டு ஜாமீன் வாங்கிக் கொடுத்திடுவேன். ரெண்டு வருஷம் தண்டனை இருந்தா தான் பதவிக்கு ஆபத்து. இப்போதைக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. நீங்க ஐயாவை கூட்டிகிட்டு கிளம்புங்க.” என்று அவரின் பி.ஏ விடம் தெளிவாகக் கூறிவிட்டார் அவர்.
நாகராஜன் கன்யாவை முறைத்தபடி வெளியேற அவரது பார்வையை கவனித்த வண்ணம் அவளருகில் வந்து நின்றான் முகுந்தன்.
“சின்ன சின்னதா பிரச்சனை இழுத்தது போய் எம்.எல்.ஏ வரைக்கும் ஒரண்டை இழுத்து வச்சிட்ட. இனிமே கவனமா இரு.” என்று கூறிவிட்டு நகர முற்பட,
“இப்படி அவர் உங்க மேல கோபப்பட்டுடக் கூடாதுன்னு தானே அந்த ஆதாரத்தை கண்டுக்காம இருந்தீங்க?” என்று அவனிடம் நக்கலாக கேட்டு அவனது கோபத்துக்கு ஆளானாள் கன்யா.
“ஏய் என் வேலையில நான் அப்படி ஒருநாளும் காம்ப்ரமைஸ் பண்ணினது இல்ல. நான் பார்த்தப்ப கேமரா வேலை செய்யல்லன்னு சொன்னாங்க. நான் பேங்க்ல கேட்காம விட்டது தான் என் தப்பு. இது எனக்கு ஒரு பாடம், இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துப்பேன். அதுக்கு உனக்கு தேங்க்ஸ். ஆனா இதை நான் வேணும்ன்னு செய்யல புரியுதா?” என்று அவளது விழிகளை ஊடுருவி அவன் கூற,
அடுத்த வழக்கை விசாரிக்க அழைப்பு விடுத்த கந்தவேல் இவர்களது உரையாடலை தொலைவில் இருந்து கண்டு சிரித்துக் கொண்டார்.
அவரது அனுபவம் வாய்ந்த மூளை அவர்கள் ஜோடிப் பொருத்தத்தை எண்ணிப் பார்க்க, லேசாக சிரித்தபடி அடுத்த வழக்கை விசாரிக்கலானார்.
வெளியே வந்த நாகராஜனுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. மீடியா வேறு மைக்கை நீட்டி அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க,
இதற்கெல்லாம் மூலகாரணம் கன்யா தான் என்று அவரது உள்ளம் அவளை பழி வாங்கத் துடித்தது.
ஆனால் அவள் மீது எந்த தாக்குதல் நடந்தாலும் இன்றைய தேதியில் அது தனக்கே பிரச்சனையாக விடியும் என்று எண்ணியவர், சில நாட்களுக்கு இவள் விஷயத்தை ஆறப்போட நினைத்தார்.
ஆனால் கன்யாவின் விதி வேறு விதத்தில் அவரிடம் அவளைக் கோர்த்து விடக் காத்திருந்தது.