தன் புல்லட்டில் இறக்கை இல்லாமல் பறந்து செல்ல தான் கன்யாவுக்கு ஆசை, அதற்காகவே அன்னையின் எதிர்ப்பை மீறி அவள் புல்லட் வாங்கினாள். ஆனால் சென்னை சாலைகளின் வாகன நெரிசல் காரணமாக அவள் சாலையில் அவ்வாகனத்தில் இப்போது ஊர்ந்து தான் சென்று கொண்டிருக்கிறாள்.
புல்லட் வாங்க கிளம்பிய அன்று வீட்டில் நடந்த நிகழ்வை நினைத்தாலே கன்யாவுக்கு சிரிப்பு வந்து விடும்.
தந்தையும் அவளும் வாகனம் வாங்கி வர கிளம்பிய போதே அன்னையின் எதிர்ப்பை எதிர்பார்த்தார்கள் தான். ஆனால் அவ்வளவு தூரம் அடம் பிடிப்பார் என்பது விற்பனையகம் சென்ற பின் தான் அறிந்தனர்.
“ஏன் டி பொம்பள பிள்ளைக்கு எதுக்கு டி புல்லட் பைக்? ஸ்கூட்டியோ, வெஸ்பாவோ வாங்கிக்கோ. முதல்ல இங்க இருந்து கிளம்பு” என்று வாசலில் வந்து நின்று கொண்டார்.
தந்தை ஞானவேல் தான் அவரை சமாதானம் செய்தார். அதுவும் அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. இந்த வாகனத்தை வாங்கினால் மகள் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்றும் அதற்கு தந்தை தான் பொறுப்பு என்றும் அவர் போட்ட அத்தனை நிபந்தனைகளுக்கும் ஞானவேல் ஒப்புக்கொண்ட பின்னாரே அரை மனதாக சம்மதம் சொன்னார்.
முதல் முதலில் அவள் பைக்கை ஓட்டும் போது தந்தை பெருமிதமாக நோக்க, தாய் குணவதியோ எங்கே விழுந்து கை காலை உடைத்துக் கொள்வாளோ என்று பயந்தார்.
வண்டியோடு வீடு சேர்ந்ததும் அன்னை திருமணப் பேச்சை எடுக்க, தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் தான் அவருக்கு எந்த வாக்கும் கொடுக்க வில்லை என்றும் சொல்லி நழுவிக் கொண்டாள் கன்யா.
குணவதி நேராக கணவனிடம் சென்று கோபமாக வினவ, ஆரம்பத்தில் திணறிய ஞானவேலும் மகளின் மனம் அறிந்ததால்,
“நான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்னு தானே குணா சொன்னேன். இப்போவே ஓகே சொல்ல வைக்கிறேன்னு சொல்லவே இல்லையே.” என்று கூறி குணவதி திகைத்து நின்ற இடைவெளியில் தப்பிச் சென்றார்.
அன்று முதல் இன்று வரை அவள் வாகனத்தை எடுக்கும்போதெல்லாம் திருமண பேச்சும் ஒட்டிக்கொண்டு வரும். ஆனால் கடைசியில் குணவதிக்கு தந்தையும் மகளும் கிலோ கிலோவாக அல்வாவை கொடுத்துவிட்டு பறந்து விடுவர்.
பழைய நினைவுகள் தோன்றவும் கன்யா முகத்தில் புன்னகை பொங்க அந்த கடற்கரை சாலையின் நெரிசலில் வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்க, அவளது செல்போன் ரீங்காரமிட்டது.
காதில் இருந்த புளூடூத்தில் அந்த அழைப்பை ஏற்ற கன்யா, சீனியர் சுகுமாரன் என்றதும் சட்டென்று குரலில் மரியாதை ததும்ப,
“குட் ஆப்டர்னூன் சீனியர்.”
“என்ன கன்யா எம்.எல்.ஏவை கதி கலங்க வச்சுட்ட போல இருக்கே!” என்று சிரித்தபடி வினவினார்.
“நான் என்ன சீனியர் பண்ணினேன்? நீங்க சொன்னதை கோர்ட்ரூம்ல சொன்னேன். அவ்ளோதான் சீனியர்.” என்று மரியாதையாகக் கூறியதும்,
“சும்மா சொல்லாத, நான் ஏ.டி.எம் சிசிடிவி பத்தி தான் சொன்னேன். ஆனா நீ அந்த ஆளுங்க அவரோட அடியாளுங்க தான் அப்படின்னு எத்தனை போட்டோ ரெடி பண்ணி இருந்தன்னு இப்போ தான் மல்லி போன் பண்ணி சொன்னா.” என்று அவளை பாராட்டினார்.
“தேங்க்ஸ் சீனியர்” என்று அடக்கமாக கூறியவளிடம்,
“இதெல்லாம் ஓகே தான். ஆனா மறுபடி ஏன் அந்த இன்ஸ்பெக்டர் முகுந்தன் கிட்ட வம்பு பண்ணி வச்சிருக்க?” என்றதும்,
‘இதை யாரு இவரு கிட்ட போட்டுக் கொடுத்தது?’ என்று விழித்தாள். பின்,
“நான் என்ன பண்ணினேன் சீனியர்? அவர் கேசை ஒழுங்கா விசாரிக்கலன்னு சொன்னேன். அவ்ளோதான்” என்று பாவமாக கூறியபடி ராயப்பேட்டையை கடந்தாள்.
“கன்யா.. நான் அதை பத்தி பேசல. யாரோ ஒரு ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வச்சியாமே?” என்று லேசான கண்டிப்பு குரலில் அவர் கேள்வி கேட்டதும் சட்டென்று விறைப்பானாள் கன்யா.
“சீனியர், அந்த பையன் வேற சமூகம் அப்படின்னு சொல்லி அவங்களை அவங்க பேரென்ஸ் ஏத்துக்கல. உங்களுக்கு தெரியாதா சீனியர், உண்மையான காதலுக்கு கண்டிப்பா நான் ஹெல்ப் பண்ணுவேன். பொண்ணு வீட்ல அவளை ஹவுஸ் அரஸ்ட் பண்ண டிரை பண்ணவும் அவங்க தப்பிச்சு வந்தாங்க, நான் தான் கோவில்ல கல்யாணம் பண்ணி வச்சு, ஜாயின் கமிஷனர் ஆபிஸ்ல கம்ப்ளயின்ட் கொடுக்க வச்சு, வெளியூருக்கு அனுப்பினேன். நான் பண்ணினது தப்பா சீனியர்?” என்றாள் அழுத்தமாக.
“நாம சிலர் நினைச்சா எல்லாம் இந்த கலப்பு திருமணத்தை ஏத்துக்கற சமூக மாற்றத்தை கொண்டு வர முடியாது கன்யா. நீ இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு. அடிக்கடி இப்படி கல்யாணம் பண்ணி வச்சிட்டு இருந்தன்னா நாளைக்கு உன் லைப் பிரச்சனையா மாறிடும் மா. ஏற்கனவே உங்க அம்மா என்கிட்ட பல தடவை வருத்தப்பட்டு சொல்லிட்டாங்க.” என்று அவளுக்கு புரிய வைத்துவிடும் நோக்கில் சுகுமாரன் பேச,
“நீங்க சொல்றது எல்லாமே புரியுது சீனியர். ஆனா காதலிச்சிட்டு நினைச்சவங்க கிடைக்கலன்னு ஒருத்தர் இறந்து போறது எவ்வளவு பெரிய விசயம்? அதை தாங்கி இன்னொருத்தர் வாழுறது எத்தனை பெரிய வலி? ஒருதடவை அதையெல்லாம் கண்ணால பார்த்த பின்னாடி எனக்கு தெரிஞ்சு யாரும் அப்படி நின்னுடக் கூடாதுன்னு தான் முடிஞ்ச உதவியை நான் செய்யறேன் சீனியர்.” என்று அவருக்கு அவள் விளக்கம் கொடுப்பதற்குள் பல சிக்னல்களில் நின்று, கடந்து கோபாலபுரத்தை தாண்டியிருந்தாள்.
“புரியுது. ஆனா உன்னோட சேஃப்டி முக்கியம் கன்யா.”என்றவர் “அந்த முகுந்தன் கூட உனக்கு அடிக்கடி முட்டிக்குது.. என்ன விஷயம்?” என்று குறும்பாக வினவினார்.
“ஐயோ சீனியர் அந்த ஆளு, காக்கி சட்டைக்கு மட்டும் இல்லாம, தனக்கும் சேர்த்து கஞ்சி போடுற டைப். அதான் அடிக்கடி முட்டிக்குது. வேற ஒன்னுமில்ல.” என்று அவரிடமிருந்து ஜகா வாங்கினாள்.
“என்னவோ நீயும் சொல்ற, நானும் நம்புறேன். சரி பார்த்துக்கோ. நான் சென்னை வர ரெண்டு நாள் ஆகும். ஆபிசை கவனிச்சுக்கோ.” என்று அழைப்பைத் துண்டித்தார்.
அவளும் சீட்டி அடித்தபடி ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தங்கள் வீடு நோக்கி வாகனத்தை செலுத்தினாள்.
அவள் எதிர்பார்க்காத அசாத்திய சூழல் நிலவிக் கொண்டிருந்தது திருமுருக பவனத்தில்.
•••••
காவத்துறை வாகனம் சைரனை ஒலிக்க விட்டு வேகமாக அந்த சாலையில் பறந்து கொண்டிருந்தது.
திருடனையோ கொலைகாரனையோ பிடிக்க கூட ஐயாக்கண்ணு இத்தனை வேகமாக வாகனத்தை செலுத்தியதில்லை. ஆனால் கஜாவைப் காணச் செல்ல வேண்டி சரியான நேரத்தில் அங்கிருக்க எழுபதிற்கே திக்கும் வண்டியை நூறு வேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தார்.
அவருக்கு பக்கத்து சீட்டில் தலையை பின்னே சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்த முகுந்தனைக் காண ஏனோ அவருக்கு பயமாக இருந்தது. அந்த பயத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கஜாவை பார்க்கச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியதும் மறுவார்த்தை பேசது வாகனத்தில் அவன் ஏறிய விதம், ஏறியது முதலே எப்பொழுதும் நக்கலாக ஏதாவது பேசிக்கொண்டே வருபவன் இப்பொழுது காக்கும் அமைதி, அதைவிட இடைவிடாது அடிக்கும் கைபேசியை அவன் கண்டுகொள்ளாதது என்று அவருக்கு பயப்பட பல காரணங்கள் இருந்தது.
“சார். போன் அடிக்குது” என்று தயங்கித் தயங்கி அவர் கூற,
“காதுல விழுகுது அண்ணா.” என்றான் அமைதியாக.
“எடுக்கலையா சார்?” என்றார் புரியாமல்.
“எடுத்து என்ன செய்யறது? கஜாவை பார்த்தியான்னு கேட்பாங்க. அதானே? அங்க தானே போறோம்? பார்த்துட்டே பேசிக்கலாம்.” என்று அமைதியானான்.
கஜாவின் ஆட்களை அவன் வெளியே விட்டிருந்தால் இந்த தொல்லை இல்லையே என்று ஐயாக்கண்ணு நினைக்க,
“என்ன அண்ணே இவன் அவனுங்களை விட்டிருந்தா இதெல்லாம் தேவையில்லையேன்னு தோணுதோ?” என்று அவர் மனதை படித்தவனாக வினவ,
“உங்களுக்கு எல்லாமே தெரியுது தம்பி. ஆனாலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்கன்னு தான் புரியல.” என்று வருத்தமாக கூறினார்.
கஜாவின் இருப்பிடம் வந்ததும் ஐயாக்கண்ணு, “பார்த்து பேசுங்க தம்பி. உள்ள எஸ். ஐ. தினேஷ் இருக்காரு.” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
தன் கண்களில் குளிர்க்கண்ணாடியை போட்டுக் கொண்டவன், அவன் எதைப்
பார்க்கிறான் என்பதை எதிராளிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
அவனது பார்வை வழி எங்கும் வரிசையாக நிற்கும் கஜாவின் ஆட்களை மனதில் சேகரித்துக் கொண்டது.
அதில் ஒருவனை வேறு ஒரு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பார்த்த நினைவு வரவே, அவனை நன்றாக மனதில் பதித்துக் கொண்டான்.
பெரிய வராண்டாவில் கிடந்த நான்கு பிளாஸ்டிக் சேர்களில் ஒன்றில் எஸ் ஐ தினேஷ் அமர்ந்திருந்தான்.
முகுந்தனைக் கண்டதும், “என்னாச்சு சார்? ஏன் லேட்டு?” என்றவன் கேட்கும் போதே கஜா தன் சட்டைக் கையின் நீளத்தை கை முட்டிக்கு மேல் மடித்து விட்டபடி வராண்டாவிற்குள் நுழைந்தான்.
கஜாவின் பார்வை முகுந்தன் மீது சீற்றமாக படிய, அவனோ அதை கண்டுகொள்ளாது,
“நீ தானே அந்த எம்.எல்.ஏ கேஸ்ல எவிடன்ஸ் கலெக்ட் பண்ணினது?” என்று தினேஷிடம் வினவினான்.
இவன் இதனை இப்பொழுது ஏன் கேட்கிறான் என்று தெரியாமல் விழித்த தினேஷ்,
“ஆமா சார்.” என்று தலைசைக்க,
“இடியட், ஏ.டி.எம். சிசிடிவில எந்த ஃபால்ட்டும் இல்ல. உன்னால நான் இன்னிக்கு கோர்ட்ல அசிங்கப்பட்டு நின்னேன். ஒழுங்கா ஒரு கேஸ் விசாரிக்க தெரியல. காலைல இருந்து கையில உள்ள கேசையும் பார்க்காம, ஸ்டேஷன் வேலையும் செய்யாம, இங்க உக்கார்ந்து என்ன புல்லு தின்னுட்டு இருக்கியா?” என்று மெலிதாக ஆரம்பித்து கர்ஜனையாக முடித்தான் முகுந்தன்.
தினேஷ் அவன் சொன்னது புரிந்ததும் இப்பொழுது கஜாவுக்கு பயப்பட வேண்டுமா அல்லது முகுந்தனுக்கா என்று புரியாமல் திகைத்தான்.
“வண்டில தானே வந்த, ஒழுங்கா ஸ்டேஷனுக்கு போய் வேலையை பாரு. நேத்து நடந்த செயின் ஸ்னாட்ச்சிங் கேஸ் நிலவரம் என்னனு பாரு. நான் வர்றத்துக்குள்ள பிராக்ரஸ் இருக்கணும் இல்லன்னு வை. அவ்வளவு தான்.” என்று விரல் நீட்டி அவனை எச்சரித்து போகும் படி தலையை அசைத்துக் கூறினான்.
தினேஷ் கஜாவை பார்த்தபடி நிற்க, “உனக்கு சஸ்பென்ஷன் வேணுமா ட்ரான்ஸ்ஃபரா?” என்று முகுந்தன் முழங்க, ஒரே ஓட்டமாக அவ்விடம் விட்டு அகன்றான் தினேஷ்.
கஜாவின் பக்கம் திரும்பிய முகுந்தன், அவன் இன்னும் நின்று கொண்டிருப்பதை கவனித்துவிட்டு, தன் அருகே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
“உக்காருங்க மிஸ்டர் கஜேந்திரன்.” என்று அவனது வீட்டிலேயே வந்து அவனை உபசரித்தான்.
கஜாவுக்கு அவனது செயலில் கோபம் வந்தாலும் அவனது தைரியம் கண்டு உள்ளே பாராட்டிக் கொண்டான். சமீபகாலமாக இப்படி தைரியமான ஒருவனை கஜா சந்திக்கவில்லை.
“என் ஆளுங்களை வெளில விட உனக்கு என்ன வேணும்?” என்று நேரடியாக வினவ,
“அவங்க இனிமே கஞ்சா விக்கிறத நிறுத்தணும்.” என்று அவனைப் போலவே கூறினான் முகுந்தன்.
“நாங்க ஒன்னும் தேடி போய் விற்கல. கேட்டு எங்க வீடு வரைக்கும் வர்றாங்களே. அதான் கொடுக்கிறோம். அவங்களை வர வேண்டாம்னு சொல்லு. நாங்களும் விற்கல.” என்று அவனைப் போலவே நக்கலாக பதில் சொன்னான் கஜா.
“அப்படி தேடி வர்ற தறுதலைக்கு கொடு. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கேஸ் போட்டு கோர்ட்ல பிராட்யூஸ் பண்ணிட்டு விட்டுவேன். ஆனா காலேஜ் பக்கத்துல தேடி போய் வித்தான்ல அந்த நாலு பேர், அவனுங்களை நான் விட மாட்டேன்.” என்று சொல்லி அவன் கவனித்து வைத்திருந்த குற்றவாளி ஒருவனை அருகே வரும்படி கைகாட்டி அழைத்தான்.
“கடைசியா என்ன தான் சொல்ற?” என்ற கஜா பொறுமை இல்லாமல் கேட்க,
“அந்த நாலு பேரையும் வெளுத்து, இனி அப்படி செய்ய மாட்டாங்கன்னு எனக்கு உறுதியான பின்னாடி தான் வெளில விடுவேன். இதுக்கு இடையில் எவன் போன் பண்ணினாலும் விட மாட்டேன். சும்மா இருந்தீங்கன்னா சீக்கிரமே அவனுங்க வீட்டுக்கு போவானுங்க. இல்லன்னா பல பெரிய கேசுக்கு ஆள் இல்லாம இருக்கு. புக் பண்ணி உள்ள வச்சா அவன் குடும்பத்தோட அவன் வாழ நினைக்கிறதை மறந்துட வேண்டியது தான்.” என்றான் இரக்கம் இல்லாமல்.
கஜா கோபத்துடன், “இங்கேயே உன்னை வெட்டிப் போட்டுடுவேன் டா” என்று எழுந்து ஆவேசமாக மிரட்ட,
“அச்சோ.. பயமா இருக்கு கஜா…” என்று நக்கல் செய்துவிட்டு, “ஏய்.. இந்த உருட்டல் எல்லாம் வேற யார் கிட்டயாவது வச்சுக்கோ. நான் இங்க இருந்து ஒழுங்கா வெளில போகலன்னா அடுத்த அரை மணி நேரத்துல நீ ஸ்டேஷன்ல அழுதுகிட்டே உட்கார்ந்து இருப்ப. உன் பையனை காணோம்ன்னு” என்று சிரித்தபடி கூறிய முகுந்தன்,
“உன் பையன் ஸ்கூலுக்கு ஆள் அனுப்பிட்டு தான் இங்க வந்தேன். எனக்கு ஏதாவது ஆச்சு, உன் பையனை தூக்கிட்டு போயிடுவாங்க.” என்று மிரட்டியவன்,
“தப்பு பண்ற ரௌடி உனக்கே இவ்ளோ தைரியம் இருந்தா, உன்னை மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து சாமானிய மக்களை பாதுக்காக்கற பொறுப்புல இருக்குற எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? நீங்க தான் கடத்தல் பண்ணுவிங்களா? நீங்க மட்டும் தான் வெட்டுவீங்களா? எங்களுக்கு பண்ண தெரியாதா? என்னை மத்த போலீஸ் மாதிரி நெனச்சியா? நீ மிரட்டவும், உயிருக்கு பயப்பட? நோ ஃபியர், நோ எமோஷன். அண்டர்ஸ்டான்ட்?” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு,
“இவன் என் ஸ்டேஷன் லிஸ்ட்ல இருக்கான். கூட்டிட்டு போய் கேசை முடிச்சிட்டு கோர்ட்ல விட்டுடுறேன், நீ வக்கீல் வச்சு எடுத்துக்கோ.” என்று அசட்டையாக சொல்லிவிட்டு,
“ஜீப்புக்கு நட டா” என்று அவனை நகர்த்தினான். அவனது நடையில் நேர்மையின் திமிர் தெரிந்தது.
அவன் போவதை கையாலாகத் தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கஜாவின் மனதில் வன்மம் கொழுந்து விட்டு எரிந்தது.