விடாமல் அடித்துக் கொண்டிருந்த போனைக் காணக் காண முகுந்தனுக்கு எரிச்சலாக இருந்தது.
வேறு யாரும் இப்படி அழைத்தால் இரண்டாம் அழைப்பில் எடுத்து கடித்துக் குதறி இருப்பான்.
அழைப்பது அன்னை என்பதால் பொறுமையாக நின்றிருந்தான்.
அன்று முக்கிய அமைச்சரவை கூட்டத்திற்காக அனைத்து அமைச்சர்களும் வருவதால் அவனுக்கு பந்தோபஸ்து பணி கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நீண்ட நெடிய ஓ.எம்.ஆர் சாலையில் சாதாரணமாக வாகனங்கள் இறக்கை கட்டி பறக்கும். சர்வீஸ் லேனை மட்டும் திறந்து விட்டு பத்து நிமிடமாக முக்கிய சாலையின் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.
எங்கோ ஒரு தங்கும் விடுதியில் இருந்து மூன்று அமைச்சர்கள் இந்த பாதையில் வருவதால் இந்த கெடுபிடி இருந்தது. மக்கள் அவர்களது அவசர வேலைக்காக சந்துகளில் புகுந்தும், சர்வீஸ் லேனில் முட்டிக்கொண்டும் சென்ற வண்ணம் இருந்தனர்.
அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி அவர்கள் இந்த பகுதியை நெருங்கிவிட்டதாக வாக்கியில் தகவல் தெரிவித்துவிட்டார்.
பின்னால் கைகளை கட்டிய வண்ணம் நின்றிருந்த முகுந்தனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருந்தது. சொன்ன நேரம் சென்று ஐந்து நிமிடம் ஆன பின்னும் அவர்கள் இந்த இடத்தைக் கடக்கவில்லை. வெயில் வேறு ஏறிக்கொண்டு இருக்கிறது. எத்தனையோ வாகனங்கள் அவர்கள் எப்பொழுது அனுமதிப்பார்கள் என்று காத்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வராமல் தகவல் மட்டுமே வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த கோபத்தில் இருந்தவனின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் விடாமல் வைப்ரேஷன் மோடில் குதித்துக் கொண்டு இருக்கிறது.
அடுத்த பத்து நிமிடத்திற்கு பின் தான் அந்த அமைச்சர் அவ்விடத்தை கடந்து செல்ல, போகும் வாகனத்துக்கு சல்யூட் அடித்து நின்ற கோபம் வேறு அவனிடம் கனன்றது.
அவர்கள் கடந்து சென்றதும் பணியில் இருந்த காவலர்களை பொதுமக்கள் சென்றதும் கலைந்து தங்கள் பணியிடம் செல்ல கட்டளை பிறப்பித்துவிட்டு வேகமாக தன் வாகனத்தில் ஏறினான்.
இன்று ஐயாக்கண்ணு விடுமுறை எடுத்திருந்தார். அதனால் அவனே வாகனத்தை செலுத்திக்கொண்டு தன் செல்போனை எடுத்தான்.
பக்கத்தில் இருந்த ஆட்கள் நடமாட்டமற்ற குடியிருப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு அன்னைக்கு அழைப்பு விடுத்தான்.
அவர் அழைப்பை ஏற்றதும், “ஏம்மா இப்படி? ஒரு தடவை போன் எடுக்கலன்னாலே ஏதோ வேலைன்னு புரிய வேண்டாமா? அதுவும் இல்லாம உங்க டைம் ஜோன் என்ன? இங்க நேரம் என்ன? அப்படி அத்தனை தடவை போன் பண்ணுற அளவுக்கு என்ன தலை போகுற விஷயம்?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேள்வி எழுப்பினான்.
“கத்தி முடிச்சாச்சா? போன் எடுக்க முடியலனா வேலை இன்னதுன்னு மெசேஜ் பண்ணுறதுக்கு உனக்கு என்ன? எப்பவும் இப்படி கூப்பிடாதவ கூப்பிடுறாளே முதல்ல என்னனு கேட்போம்னு தோணுச்சா உனக்கு? போடா டேய். ஊருக்கு தான் நீ போலீஸ் ஆபிசர். வீட்டுக்கு நீ மகன் தான். நினைவுல வச்சுக்கோ.” என்று கண்டித்துவிட்டு,
“பொண்ணு வீட்ல வெள்ளிக்கிழமை ஹோட்டல் ‘பே வியூ’ -ல அந்த பொண்ணு உன்னை வந்து பார்க்க ஓகே சொன்னதா தகவல் சொன்னாங்க. அதை சொல்ல தான் கூப்பிட்டேன். ஒழுங்கா போய் பார்த்து பேசி ஓகே பண்ணுற. இல்லன்னா நேரா சென்னை வந்து உன் குவாட்டர்ஸ்ல உட்கார்ந்துடுவேன். உங்கப்பா தான் உன் சித்தி சித்தின்னு சொல்லி இங்கேயே இருக்காரு. எனக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல. என் பிள்ளைக்கு மிஞ்சி தான் மத்தவங்க. அது உன் அப்பாவே ஆனாலும் சரி. புரியுதா?” என்று கோபமாக கேட்ட ஜெயந்தி முகுந்தனுக்கு புதியவர்.
“மா.. ஜெய்யு.. என்னாச்சு? ஏன் இவ்ளோ கோபம்? அப்பாவோட ஏதாவது சண்டையா?” என்று அன்னையின் மனநிலை அறிந்து கொள்ள நிதானமாக கேள்வி எழுப்பினான்.
“ஆமா பொல்லாத உன் அப்பா. எப்பவும் உன் சித்தி பாவம், அவளுக்கு ஒரு வழி சொல்லணும். இதான் நம்ம வாழ்க்கை லட்சியமா? நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு முகுந்தா. இவருக்கு அது புரியவே மாட்டேங்குது. அவளும் நாம லேசா சிரிச்சா கூட முகத்தை சுருக்கி எனக்கு மனசு கஷ்டமா இருக்கு மாமான்னு இவர் கிட்ட சிம்பதி கிரியேட் பண்ணிகிட்டே இருக்கா. எனக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமா குறையுது. என்னை நீ எப்ப வேணாலும் சென்னையில எதிர்பார்க்கலாம்.” என்றார் கோபமாக.
“அம்மா. நீங்களா இப்படி பேசுறீங்க? சித்தி பாவம் தானே மா. அக்கா இப்படி செய்வான்னு நாம யாரும் எதிர்பார்க்கல தானே! சித்தப்பாவும் இல்லாத இந்த சூழ்நிலையில சித்திக்கு நீங்க சப்போர்ட் பண்ணனும் மா.” என்று பொறுமையாக கூறிய மகனை அருகில் இருந்திருந்தால் கண்டிப்பாக அடிக்க வந்திருப்பார் ஜெயந்தி.
ஏற்கனவே காலை முதல் கணவருடன் இதே விஷயத்துக்கு பிணக்கு கொண்டு பேசாமல் இருந்தார். மாலை அவரே ஏதோ பேச்சை ஆரம்பிக்க பெண் வீட்டார் அழைத்து சொன்ன தகவலில் மகிழ்ந்து கணவருடன் அதை பகிற,
“இப்போ அவசரமா இதெல்லாம் பண்ணனுமா? சரி உன் ஆசைக்கு நான் ஒத்துக்கிட்டேன். கோமதி உள்ள நிலைமைக்கு நாம இதை கொண்டாடினா அவ மனசு வருத்தப்படாதா?” என்று கேட்டுவிட்டார்.
ஜெயந்தி அத்தனை எளிதில் கோபம் கொள்பவர் கிடையாது. ஆனால் கணவரின் இந்த பேச்சு ஒரு தாயாக தன் மகனின் திருமண விஷயங்களுக்கு கூட தான் மகிழக் கூடாது என்று உணர்த்துவதைப் போல இருக்கவே காளியாக மாறிவிட்டார்.
கோமதி இல்லாத நேரமாக கணவரை வார்த்தைக்கு வார்த்தை சாடி விட்டார்.
கோமதியின் வருத்தம் நேற்று முளைத்த ஒன்றா? இல்லையே! சில ஆண்டுகளாகவே இருப்பது. அதற்காக தன் ஒரே மகனின் திருமண விஷயங்களுக்கு மகிழ்ந்து கொண்டாடாமல் இருக்க இயலுமா? என்று அவர் கிழித்த விதத்தில் துரைராஜ் வாயடைத்துப் போனார்.
அன்னை சொன்னதை அமைதியாகக் கேட்ட முகுந்தன் வெள்ளியன்று சென்று வர தனக்கு விருப்பம் இல்லை என்பதை வாயில் வைத்து அப்படியே விழுங்கிக் கொண்டான்.
ஏனெனில் ஜெயந்திக்கு இரத்தக் கொதிப்பு உண்டு. ஏற்கனவே தந்தையுடன் சண்டை எனும்போது, தானும் அவருக்கு எதிராகப் பேசினால் அவரது உடல்நிலை சீர்குலையலாம் என்று எண்ணி,
“நான் வெள்ளிக்கிழமை போறேன். அந்த பொண்ணை பாக்கறேன். போலீஸ்காரனுக்கு ஏத்தவளா இருந்தா நீயே வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேன். ஓகே வா?” என்று மகிழ்ச்சியாக பேசி அன்னையின் வருத்தத்தை தணித்து அவரை சற்று சிரிக்க வைத்தான்.
“நான் ஏன் டா வேண்டாம்னு சொல்ல போறேன். அந்த பொண்ணு ரொம்ப புத்திசாலி. நிறைய படிச்சிருக்கா. பெண்ணுரிமை எல்லாம் பேசுமாம்” என்று அவர் கூற, ஏனோ முகுந்தனின் மனக் கண்ணில் ஒரு நொடி கன்யா வந்து மறைந்தாள்.
“சரி சரி பார்த்துட்டு சொல்றேன். இன்னிக்கு தானே செவ்வாய். பார்ப்போம்” என்று சிரித்து அழைப்பை துண்டித்தான்.
அதன் பின் தான் அவன் கன்யாவை சந்தித்து நான்கு நாட்களுக்கு மேல் ஆவதை நினைவு கூர்ந்தான்.
“பரவாயில்லை. அந்த டெவிலை பார்க்காம மறந்து போயிடுவோம்னு நெனச்சேன். ஆனா மண்டைக்குள்ள அப்பப்ப வர்றா.” என்று சிரித்துவிட்டு வாகனத்தை செலுத்தினான்.
•••••
புதன் மாலை ஆறு மணிக்கு அவசரமாக அவளைக் காண வேண்டும் என்று ரஞ்சிதா கூறியதால் அருகில் இருந்த உணவகத்தில் சந்திக்க திட்டமிட்டனர்.
கன்யா முன்னரே வந்து காத்திருந்து பொறுமை கற்பூரமாக கரையத் துவங்கிய வேளையில், ஓட்டமும் நடையுமாக உள்ளே நுழைந்தாள் ரஞ்சிதா.
“ஏய் என்ன டி. எனக்கு வேலை இல்லன்னு நினைச்சியா? அடுத்த திங்கள் பெரிய கேஸ் ஒன்னு ஹியரிங் வருது, நான் தான் அட்டென்ட் பண்ணனும். எவ்வளவு நோட்ஸ் எடுக்கணும் தெரியுமா?” என்று கோபமாக அவளிடம் ஆரம்பித்தவளை கைகாட்டி நிறுத்தினாள் தோழியவள்.
மேசையில் இருந்த தண்ணீர் ஜக்கை அப்படியே எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டவளுக்கு உடலில் லேசான நடுக்கம்.
இப்படி ஓடிவரும் பெண்ணில்லை ரஞ்சிதா. தண்ணீரை டம்ளரின் விளிம்பில் வைத்து நாகரிகமாக பருக வேண்டும் என்று மற்றவர்களுக்கு பாடம் எடுப்பவள். அவளின் இத்தகைய செயல் கண்டு கன்யா கோபத்தை கைவிட்டவளாக,
“என்னாச்சு ரஞ்சு. உன் தங்கச்சிக்கு ஆபத்து இல்லையே?” என்று அவள் பதற,
“இல்ல கன்யா. நான் இன்னிக்கு ஒலால புக்கிங் லேட் ஆகுதுன்னு ரோட் சைட் வர்ற ஆட்டோல வரலாம்ன்னு பார்த்தேன். ஆனா ஷேர் ஆட்டோ தான் கிடைச்சுது. ஏறிட்டேன். அதுல ஒருத்தன் மேல கை வைக்கவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு டி” என்று நெளிந்து குறுகி அவள் கூறிய விதமே இதெல்லாம் அவளுக்கு பழக்கமில்லை என்று கன்யாவுக்கு உரைத்தது.
“ஒரு நாள் பயணத்துக்கு இப்படியா? அவன் மேல கை வச்சா நீயும் திருப்பி அவன் மூஞ்சில கை வைக்க வேண்டியது தானே! கடவுள் உனக்கும் கை கொடுத்திருக்காரு தானே டி?” என்று சிரித்தபடி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.
“என்ன டி இப்படி பேசுற?” என்று ரஞ்சிதா சற்று ஆசுவாசம் அடைந்து வினவ,
“உங்களை எல்லாம் கோழிக்குஞ்சு மாதிரி உங்க வீட்டுல அடை காத்து வளர்த்துட்டு வர்றாங்க. வெளில வந்தாலே உங்க பார்வை மருளுது. அதைக் கண்டா சில நாய்களுக்கு இது பயந்த கேஸ், நாம என்ன பண்ணினாலும் ஒன்னும் பண்ணாதுன்னு தைரியம் வந்து மேல கை வைக்குதுங்க. உங்களை சொல்லக் கூடாது. வெளி உலகத்தோட முகத்தை உங்களுக்கு காட்டாம பொத்தி வளர்க்கற உங்க அம்மா அப்பாவை சொல்லணும்.” என்று அவளிடம் சலித்துகொண்டு இரண்டு லெமன் மின்ட் சோடா ஆர்டர் செய்தாள்.
“காலேஜ் படிக்கும் போது நான் பஸ்ல போவேன் டி. உனக்கு தெரியாதுல்ல” என்று சமாளிக்க முயன்றவளிடம்,
“அப்ப உன் காலேஜ் பசங்களும் அதே பஸ்ல வருவாங்க. உங்களை பொறுப்பா இறக்கி விட்டுட்டு அப்பறம் அவனுங்க போக வேண்டிய பஸ்ல போவானுங்க. அதான் உனக்கு இந்த இடிமாடு, உரசல் பன்னிகளைப் பத்தி தெரியல.” என்று சிரித்தாள் கன்யா.
“சரி விடு. வந்த விஷயத்தை சொல்லிடுறேன். நாளைக்கு அவளை கூட்டிகிட்டு வெளில போக என் சித்தப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன். ஆனா சாட்சி கையெழுத்து நான் போட மாட்டேன் டி. இது அவளுக்கு தெரிய வேண்டாம். தெரிஞ்சா வருத்தப்படுவா.” என்று கூறும்போது ரஞ்சிதாவின் தலை தாழ்ந்து விட்டது.
“ஏன் தெரியக் கூடாது? கண்டிப்பா உன் தங்கச்சி உன்னை தப்பா நினைக்க மட்டா. அவளுக்காக இத்தனை ரிஸ்க் எடுத்து செய்யற நீ கையெழுத்து போட முடியாதுன்னு சொல்றேன்னா, நாளைக்கு உன் வீட்ல உன்னை சேர்த்துக்காம போகலாம், இல்ல உன் சித்தப்பா உன்னை திட்டலாம். இப்போவே அவர்கிட்ட சொல்ல ஒரு நம்பகமான பொய்யை தயார் பண்ணிக்கோ. வீட்டுக்கு போய், அவளை உங்க ஏரியா தாண்டினதுல இருந்தே காணோம்னு சொல்லிடு. பஸ்ல போனோம், எப்போ இறங்கிப் போனான்னு தெரியலன்னு சமாளி.” என்று அவளைத் தட்டிக் கொடுத்தாள்.
“என் தங்கச்சிக்கு ஒன்னும் ஆகாதுல்ல கன்யா?” என்று கண்ணீரோடு கேட்ட அவளிடம்,
“கவலைப்படாத டி , அவங்க தங்க சேஃப் பிளேஸ் பார்த்தாச்சு. அந்த பையனுக்கு ஒரு வேலை. கூடவே அவங்களுக்கு பாதுகாப்புன்னு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. யாரோ ஒரு ஜோடி வந்தாலே நான் பார்த்து பார்த்து பண்ணுவேன். நீ என் ஃப்ரெண்ட் டி. உனக்கு தங்கச்சின்னா எனக்கும் தான்.” என்று அவள் கைகளை ஆதரவாகப் பற்றிகொண்டாள் கன்யா.
இவர்கள் யாருக்கும் தெரியாத விஷயம், இதில் முகுந்தன் தலையிட்டு இருப்பது.
‘மறுநாள் பதிவாளர் அலுவலகத்தில் சந்திக்கலாம்’ என்று பேசி ஜூஸைக் குடித்து விட்டு இருவரும் விடை பெற்றனர்.
அப்பொழுது ஒரு காக்கி சட்டை மனிதர் அவளை கடந்து செல்ல, “என்ன பண்ணிகிட்டு இருக்கும் அந்த காக்கி?” என்று முகுந்தனைப் பற்றி சிந்தித்தபடியே தன் புல்லட்டில் பறந்தாள் கன்யா.