அந்த பதிவாளர் அலுவலகம் காலை நேரத்தில் சற்று கூட்டமாக இருக்க, வாயிலை பார்த்து நின்றிருந்த அந்த பெண்ணிற்கு உடல் உதறிக்கொண்டு இருந்தது.
“அக்கா ரொம்ப பயமா இருக்கு. எங்கப்பா எப்ப வேணாலும் ஆளுங்களோட இங்க வருவாரு அக்கா” என்று தன் கைகளை பிடித்துக் கொண்டு பயத்தில் நடுங்கும் அப்பெண்ணைக் காண அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.
‘இப்படி பயந்து நடுங்கும் இவள் ஏன் தைரியமனவர்கள் செய்ய வேண்டிய காரியத்தை செய்யத் துணிய வேண்டும்?’
அந்த கோபம் கொஞ்சமும் குறையாமல் குரலில் காட்டி,
“இவ்வளோ பயப்படுற நீ ஏன் மா இங்க வந்த? உன் வீட்ல உங்க அப்பா பக்கத்துலயே இருக்க வேண்டியது தானே?” என்று நக்கல் சற்று தூக்கலாக வைத்துக் கேட்டாள்.
அந்த பெண்ணிற்கு இவள் கோபம் கொள்ளும் விதம் கண்டு பயம் வந்திருக்க வேண்டும், இவளது கரத்தை விட்டு அவளருகில் நின்றவன் கரத்தைப் பற்றினாள்.
“என்ன..? அவன் கையை பிடிச்சா உங்கப்பா வர மாட்டாரா?” என்றாள் மேலும் எள்ளலாக.
“அக்கா.. ” என்று ராகமிழுத்தவள், “ரொம்ப பயமா இருக்கு கா. அதான்…” என்று தயங்க,
“அதெல்லாம் இவனை காதலிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வந்திருக்கணும். அட்லீஸ்ட் வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ண இப்படி ரெஜிஸ்டர் ஆபிஸ் வர்றதுக்கு முடிவு செய்யறதுக்கு முன்னாடியாவது வந்திருக்கணும். இப்ப வந்து என்ன பயன்? பயன்படாத பயம் குப்பைக்கு சமம்.” என்றாள் கோபமாக.
அவளின் கைப்பற்றி நின்ற ஆடவனுக்கோ, எங்கே இவள் பேச்சைக் கேட்டு தன்னவள் திருமணம் வேண்டாம் என்று சென்று விடுவாளோ என்று பயம் பிடிக்க,
“மேடம் அவளை இன்னும் தான் நீங்க பயம் காட்டுறீங்க” என்று கூறியதும்,
“நானே பயம் காட்டுறேனா? அப்போ அதோ வர்றாறே, அவர் பேசப் போறதைக் கேட்டு என்ன டா சொல்லுவ?” என்று தெனாவெட்டாகக் கேட்டவள் தொலைவில் காக்கி உடையில் மிடுக்கோடு நடந்து வரும் அவனைக் கண்டு எரிச்சல் வர, அதை மறைக்கும் பொருட்டு தன் ஷர்ட்டில் இருந்த குளிர்கண்ணாடியை எடுத்து கண்களில் அணிந்து கொண்டாள்.
“என்ன இந்த பக்கம் மிஸ் கன்யா?” என்று தன் எதிரே வந்து கேள்வி கேட்டவன் விழிகளில் இருந்த அலட்சியம் கன்யாவை உசுப்பேற்றி விட,
“கம்மி விலையில இங்க லாலிபாப் கிடைக்குதாம் அதான் வாங்க வந்தேன். உங்களுக்கும் நாலு வாங்கித் தரவா இன்ஸ்பெக்டர் முகுந்தன்?” என்று பல்லை கடித்தபடி வினவினாள்.
“அச்சச்சோ வேண்டாம் மிஸ், லாலிபாப் சாப்பிட்டா பூச்சி வருமாம்… பல்லுல…” என்று அவன் கன்னத்தில் கை வைத்து பேசிய விதம் சர்வ நிச்சயமாக அவளை கேலி செய்யத்தான் என்று ஒரு குழந்தையைக் கேட்டாலும் சொல்லி விடும்.
பதிவாளர் அலுவலகத்தில் வந்து இவர்கள் பேசும் விதம் அவர்கள் அருகே நின்ற காதல் ஜோடியான இளமதி – புனித் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்த,
தங்கள் காதல் திருமணத்தில் முடியுமா? அல்லது இவர்கள் இருவரில் ஒருவரால் கேள்விக்குறி ஆகுமா? என்று தெரியாமல் திருதிருத்தனர்.
– தொடரும்
காதல் முன்னேற்றக் கழகத்தில் இருப்பது காதலை இணைக்கும் கழகமா? அல்லது கலகமா? கதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.