“ஆமா, நீங்க இந்நேரம் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பீங்களே த்தை…” என்றாள் அவந்திகா.
ஒன்றும் பேசமுடியவில்லை. அங்கைக்கு தொண்டைக்குள் முள் சிக்கிய உணர்வு.
அதுவும் அவந்திகாவின் தோரணையும் இது என் வீடு என்பதை போலான அந்த பூரிப்பும், அவள் தன்னிடம் தணிந்து இல்லாமல், தன் செயலில் நடப்பதும் அவருக்குள் கலவரத்தை உண்டு செய்தது.
‘இனிமே எப்படி இவ என்னோட நடந்துப்பா? இப்பவே இத்தனை கேள்வி கேட்டுட்டு இருக்கா?’ என்று நினைத்தவருக்கு தான் பேசியவையும், மகனின் நடவடிக்கையும் முரண்பட்டு நிற்க கண்டு நிச்சயம் அவளுக்கு எல்லாமே தோன்றும் என்று நினைத்தவருக்கு தலை கிறுகிறுத்தது.
“அத்தை, அமலா இந்த ரூம்ல இருக்கா. இங்க தூங்குங்க…” என்று நளன் வந்துவிட,
“ம்மா, அது தர்ஷன் ரூம். எப்போ வேணா வருவானா இருக்கும். நீங்க இங்க வாங்க…” என்றாள் அமலாவும்.
“நான் என்ன வேணும்ன்னா அந்த ரூம்க்கு போனேன்? இன்னும் யார் யார் எந்தெந்த ரூம்ல இருக்காங்கன்னு கூட தெரியாது. என்னவோ நான் எல்லாருக்கும் இடைஞ்சலா தெரியறேன்…” என்றவர் அமலா வெளியே வந்த அறைக்குள் சென்று கதவை படாரென அடித்து சாற்றினார்.
“என்னாச்சு?…” என்று அடுக்களையில் இருந்து எட்டி பார்த்தாள் அவந்திகா.
“என்னம்மா, என்ன சத்தம்?…” என கலாவும் வந்துவிட அமலாவிற்கு என்னவோ போலானது.
ராகவ்வும், தரணியும் நளனுமே இதனை எதிர்பார்க்கவில்லை. சாதாரணமான ஒரு விஷயம். இதற்கு இத்தனையா என்றுதான் தோன்றியது.
வெளியில் இருந்த முகிலரசனும் அங்கே வந்துவிட அனைவரும் கூடி இருக்க கண்டவர்,
“என்னம்மா? ஏன் எல்லாரும் இப்படி நிக்கறீங்க?…” என்றார்.
“ஒன்னும், இல்லப்பா…” என்ற ராகவ்,
“அவந்தி, எவ்வளோ நேரம் கிழங்கை கையில வச்சிருப்ப? வந்து வை. ஆறிட போகுது…” என்றான் நிலைமையை சமாளிக்க.
“வை அவந்தி, நானும் போய் அடுத்து போடறேன்…” என்றார் கலா.
அவரின் பார்வை தரணியை தன்னோடு வரும்படி அழைத்தது. அதேநேரம் அமலாவின் சங்கடமான தோற்றம் தரணியை எங்கும் செல்லவிடவில்லை.
“அமலாக்கா நீங்க உட்காருங்க…”என தரணி சொல்ல,
“இன்னும் என்ன உனக்கு? உட்கார். அப்பறம் பேசிக்கலாம்…” என நளன் அவளை அழைத்து அமர சொல்ல தானும் அமர்ந்தாள்.
“அவந்தி நீ இருந்து பாரு. நான் போய் தோசை ஊத்தறேன். உன் ரெண்டு அண்ணனுக்கும் பொடி தோசை புடிக்கும்ல…” என்ற தரணி,
“அமலாக்கா உங்களுக்கு ஊத்தப்பம்…” என்று சொல்லிவிட்டு சென்றாள்.
“என்னாச்சு தரணி?…” என்று கலா அவள் வந்ததுமே கிசுகிசுப்பாய் கேட்க,
“அது வந்து த்தை…” என்று தரணி கல்லை எடுத்து போடும்போதே அவந்திகாவும் வந்துவிட்டாள்.
“என்னண்ணா இது? மூணு நாள் இருக்கலாம்ன்னு தானே ப்ளான். எல்லாரும் சேர்ந்து தானே கிளம்பறோம். அப்பறம் என்ன?…” என ராகவ்வும்,
“அமலாக்கா, நீங்க சொல்லக்கூடாதா?…” என்றாள் தரணி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.