“கிளம்பலாம்ன்னு சொன்னதே நான் தான் தரணி. இருக்கட்டும்…” என்றாள் அவளும்.
“என்னன்னு இப்பவாவது சொல்லுங்களேன்…” என்று கலாவும், முகிலரசனும் கேட்க அவர்களிடம் எதுவும் சொல்லமுடியவில்லை.
“ப்ச், ண்ணா வாங்க நீங்க. அப்பறம் முடிவு பண்ணலாம். வாங்க…” என நளனை எழுப்பிக்கொண்டு ராகவ் வெளியே செல்ல,
“அவந்தி வாயேன் நாமளும் துளசியை பார்க்ல விளையாட வச்சுட்டு அப்படியே நடந்துட்டு வருவோம்…” என்ற தரணி,
“அத்தை மதியத்துக்கு வந்து செஞ்சுப்போம். பத்துமணி தானே ஆகுது. நீங்களும் கொஞ்சநேரம் படுங்க. நாங்க வந்திருவோம்…” என்று சொல்லிவிட்டு அமலாவையும் துளசியையும் அழைத்துக்கொண்டு சென்றாள் தரணி.
“ம்மா இன்னைக்கு வெஜ் பண்ணிப்போம். நாளைக்கு நான்வெஜ் செஞ்சுக்கலாம். பிள்ளைங்களுக்கு மஷ்ரூம், பனீர் மட்டும் வாங்கிட்டு வர சொல்லுங்க. இல்லைன்னா முட்டை வச்சுப்போம்…” என்று சொல்லிய அவந்திகாவும் அவர்களுடன் சென்றாள்.
“மெல்ல பார்த்து போகனும் அவந்தி. நிலவன் வந்து மோதுவான். பார்த்துக்கோ. தரணி அவளை கவனிச்சுக்கோ…” என்று சொல்லியே கலா அனுப்பிவைத்தார்.
அத்தனைபேரும் சென்றும் அங்கை சென்று மறைந்த அறைக்கதவு திறக்கப்படவே இல்லை.
வெளியே வந்தும் அமலாவின் முகத்தில் தெளிவில்லை. ஒருவித ஆதங்கத்துடனே தான் வந்தாள்.
“என்னண்ணி ஏன் இப்படி இருக்கீங்க?…” என்று அவந்திகா கேட்க,
“எல்லாம் அங்கம்மாவால. அமலாக்கா என்னவோ சொல்ல போய் அவங்க கோபமா பேசிட்டாங்க. அதுவும் எல்லார் முன்னாடியும்…” என்ற தரணி விஷயத்தை சொல்ல அவந்திகாவிற்கு இது என்னடா என்றானது.
வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் பக்குவம் என்பது எடுத்தவுடனே வந்துவிடாது.
அதேபோல தான் அவந்திகாவிற்கும். நடக்கும் நிகழ்வுகள் அவளுக்கு தான் என்ன செய்யவேண்டும் என்பதனை வலியின்றி கற்றுக்கொடுக்க ஆரம்பித்திருந்தது.
தான், தன் எண்ணங்கள், தனக்கான ஆசை, எதிர்பார்ப்புகள் என்றே இருந்துவிட்டவள். அப்படியே வளர்க்கப்பட்டுவிட்டவளும் கூட.
நல்லவையை புரிந்துகொள்ளும் அனுபவம் இன்னும் அவளுக்கு கிடைக்கப்பெறாதிருக்க அதன் முதல் படியில் எட்டு வைக்க ஆரம்பித்திருந்தாள் அவந்திகா.
“நான் என்ன தரணி தப்பா சொல்லிட்டேன்?…” என அமலாவிற்கு இப்போது அழுகையே வந்துவிட்டது.
“நாமளும் இவங்களை பார்த்துட்டு தான் இருக்கோம். அவந்திகா இன்னைக்கு நான் பார்த்த இந்த கொஞ்சநேரத்துல எத்தனை சந்தோஷமா இருந்தா தெரியுமா? தர்ஷனோட அவ இப்படி உக்கார்ந்து பேசி சாப்பிட்டு நான் பார்த்தே ரொம்ப மாசமாச்சு. தவிர்க்க முடியாம இருந்திருக்கா. அவ்வளோதான்…” என்றவள்,
“அதோட தர்ஷனுக்கு அவன் ரூம்ல வேற யாரும் யூஸ் பன்றது பிடிக்கவும் செய்யாது. அவன் சின்னதுல இருந்தே அப்படியே இருந்துட்டான். அம்மாவுக்கும் அது தெரியும்….” என்றாள்.
“புரியுது அண்ணி…” என்று அவந்திகா சொல்ல,
“என்ன புரிஞ்சதோ உனக்கு?…” என்ற அமலா,
“இப்ப தான் தனியான்னு வந்திருக்காங்க. பக்கத்துல தான் இருக்கான் தர்ஷன். எப்போ வேணா வரலாம். வந்தநேரம் இவக்கிட்ட பேசலாம். ஏன் ரெஸ்ட் எடுக்க கூட வரலாம். அப்போ நாம சங்கடம் குடுக்காம இருக்கனும்ல தரணி. அந்தநேரம் அம்மா போனா நிச்சயம் அவந்தி எதுவும் சொல்லமாட்டா தான். ஆனா அது எதுக்கு? இங்க என்ன வேற ரூமா இல்லை?…” என்று சொல்ல,
“அட போ அவந்தி. நான் ஒன்னும் தப்பா சொல்லலையே. அம்மா ஏன் இப்படி புரிஞ்சுக்கிட்டாங்க? ரொம்ப கஷ்டமாகிருச்சு. அதான் கிளம்பிருவோம்ன்னு பார்த்தேன். இதுல அவன் வந்து எதுவும் பேசினா?…” என்று சொல்லியவள் பார்க்கில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்தாள்.
“காலையிலயும் இப்படித்தான் நான் சாதாரணமா கேட்டதையும் ஏன் கேட்ட, அவன் இப்படி பேசுவானேன்னு சொல்றாங்க. அவன் சாதாரணமா சொன்னாலும் இப்படியா அவனை கோவப்படுத்துவன்னு சொல்றாங்க. பேசலைன்னா இருக்கறது ஒரு தம்பி. அவனை ஒதுக்கி வைக்கிறியா? என் பேச்சுக்கு என்ன மதிப்பு? உன்னை எதுவுமே சொல்ல கூடாதான்னு எல்லாம் கேட்கறாங்க…”
அமலா சொல்ல சொல்ல அவந்திகா யோசனையுடன் அமலாவை பார்த்துக்கொண்டிருக்க, தரணி மனதில் என்னென்னவோ சிந்தனை.
“இங்க என்ன பன்றீங்க?…” என்றவன் சத்தத்தில் மூவரும் திடுக்கிட்டு பார்க்க ப்ரியதர்ஷன் தான் நின்றிருந்தான்.
பார்க்கின் வெளியே அவன் வந்த காவல்துறை வாகனம் நின்றிருக்க அனைவரையும் இடுங்கிய கண்களுடன் பார்த்தவன் அமலாவின் கண்ணீரையும் பார்த்தான்.
“என்ன அமலா? ஏன் அழுதுட்டிருக்க?…” என்றதும் அவளும் பதறி, தரணியும் பதறிவிட்டாள்.
“ஒன்னும் இல்ல தர்ஷன்…” என்றவள் தரணி, அவந்தியிடமும் சொல்லாதே என்பதை போல தலையசைக்க அதுவும் அவனின் கண்களுக்கு தப்பவில்லை.
“சரி வீட்டுக்கு போங்க. பிள்ளைங்க ட்ரெஸ் எல்லாம் மண். அப்பறமா வந்து விளையாடட்டும்…” என்று சொல்லவும் தலையசைத்து பிள்ளைகளை பார்க்க அங்கே ஒரு மரத்தின் பின் துளசியும், துளசியின் பின் நிலவனும் ப்ரியதர்ஷனை பார்த்து ஒளிந்துகொண்டு நின்றனர்.
“கூட்டிட்டு போ…” என்றான் அமலாவிடம்.
அமலாவும், தரணியும் பிள்ளைகளை பிடித்துக்கொள்ள, அவந்திகாவும் சேர்ந்து அவர்களுடன் செல்ல பார்த்தாள்.
“அவந்தி நில்லு…” என்றவன்,
“நீங்க போங்க. நான் கூட்டிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த சேரில் சென்று அமர்ந்துகொள்ள அவந்திகாவிற்கு உதறியது.
“இல்ல அம்மா அங்க தனியா…” என்றவள் அவன் பார்த்த பார்வையில் கப்பென்று வாய் மூடிக்கொண்டது.
தரணி அமலாவுடன் சென்றதும் அவர்களை பார்த்துக்கொண்டே நின்ற மனைவியை பார்த்து தொண்டையை செருமினான் ப்ரியதர்ஷன்.
“அம்மோவ், பண்ணாரியப்பன்…” என்று சத்தமின்றி சொல்லிக்கொண்டவள் தொண்டைக்குழி ஏறி இறங்க,
“அதெல்லாம் இல்ல. வருவேனே…” என்று சமாதானமாய் வந்து அவனின் அருகே சற்று இடைவெளிவிட்டு அமர்ந்தாள் அவந்திகா.
“ஹ்ம்ம், சொல்லு…” என்றான் அவளிடம்.
“என்ன? என்ன சொல்லனும்?…” என்றவள் இதை சொல்வதா வேண்டாமா என அத்தனைமுறை யோசித்துவிட்டாள்.
“ஓஹ் சொல்ல எதுவும் இல்லையா?…” மீண்டும் அதட்டலும், அதிகாரமும்.
‘படுத்துறானே?’ என்று பார்த்தவளுக்கு தான் சொன்னால் அது என்ன மாதிரியான எதிர்வினையை உருவாக்கும் என்று தெரியவில்லை.
இதுவரை தான் எதுவும் அவனிடம் இப்படி சொல்லியதும் இல்லை. விளக்கியதும் இல்லை.
சொல்லபோனால் அப்படி அவளுக்கு அவசியம் ஏற்பட்டதும் இல்லை என்பது தான் உண்மையிலும் உண்மை.
திடீரென்று வீட்டிற்குள் பூசல், தாய்க்கும் மகளுக்கும் பிரச்சனை என்னும் குடும்ப அரசியலை கணவனிடம் ஒப்பிக்க வரவில்லை.
தன் வீட்டிலும் அப்படி எந்தவித பஞ்சாயத்துக்களும் நிகழ்ந்திருக்காதபடியால் அவனிடம் இதனை எவ்விதத்தில் தான் சொல்வது சரியாக இருக்கும் என்று திணறி போனாள் அவந்திகா.
மாமியார் வீட்டிலும் பிரச்சனைகள் எதுவுமின்றி உண்ண உறங்க என்பதை போலான வாழ்க்கை.
அங்கைக்கு மகனையும், கணவரையும் கதையாய் சொல்வதை தவிர வேறு வேலை இல்லை.
திருமணம் முடித்து இங்கே அவள் வரும்வரையில் நித்தமும் அவர்களை பற்றி புகார் படிக்க அங்கையிடம் ஏதாவது ஒரு விஷயம் இருந்துகொண்டே இருக்கும்.
சொல்லியதையே திருப்பி சொல்வாரா என்றால் அதுவும் அவந்திகாவிற்கு ஞாபகம் இருந்ததில்லை.