வீடே வெறிச்சோடி கிடந்தது. வீட்டின் வரவேற்பறையில் தனியாய் அமர்ந்திருந்தார் அங்கை.
ஒருவிதமான மன அழுத்தம் அவரை பிடித்து ஆட்டமாய் ஆட்டிக்கொண்டிருந்தது.
திருச்சியில் இருந்து கிளம்பியதுமே அங்கை மகளை தன்னுடன் அழைக்க, ‘வரவில்லை’ என சொல்லிவிட்டான் நளன்.
“அம்மாப்பாவை தனியா விட்டுட்டு வந்துட்டோம். என்னன்னு போய் பார்க்கனும். நான் ஆபீஸ்க்கு கிளம்பிடுவேன். அமலாவுக்கும் ரெஸ்ட் வேணும். அவளுமே டயர்ட்…” என்று சொல்லிவிட்டான் நொடியும் யோசிக்காமல்.
சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி செல்லும் வரை பேசியவன் அங்கே தான் தன் மகளிடம் நடந்துகொண்ட விதத்தில் பேச்சை அப்படியே நிறுத்திக்கொண்டான்.
மகன் அழைத்து தன்னிடம் பேசி மருமகனிடம் தனியே மன்னிப்பை கேட்கையில் அவன் பேசியவிதம் அவரை இப்போதும் குத்திக்கொண்டிருந்தது.
“நீங்க அந்த ரூம்க்குள்ள போறப்போ அமலா இங்க இருக்க. இங்க வாங்கன்னு சொன்னது நான். அதை ஆரம்பிச்சதே நான் தான். உங்க பொண்ணு சொன்ன மாதிரி அது தர்ஷன் ரூம்ன்னு அர்த்தத்துல இல்லை. உங்க பொண்ணு இங்க இருக்கா, உங்களுக்கு எதுவும் அவசியம்ன்னா அவ இருக்கான்ற அர்த்தத்துல…” என்றவன்,
“எங்க மனசுல எந்தவித தப்பான என்னமோ, நோக்கமோ இல்லை. ஆனா நான் சமீபமா கவனிச்சவரை உங்ககிட்ட என்னவோ சரியில்லை. இதுக்குமேல இது விஷயமா பேசவேண்டாம். இப்பவும் நாங்க இங்க இருக்கறது என் தங்கச்சி வீடு, என் தங்கச்சி புருஷன் வீடுன்ற உரிமையில தான்….” என்று சொல்லிவிட்டு பேச்சை துண்டித்தவன் தான்.
அமலாவிடம் பேச ஆரம்பித்ததற்கு அவள் அதற்குமேல் அழுது கதறிவிட்டாள் ‘என்னை போய் இப்படி சொல்லிட்டீங்களே?’ என்ற விதமாய்.
“நீங்க சொல்லித்தானமா வந்தேன். அப்பறம் ஏன் அப்படி பேசினீங்க? இனிமே உங்களை எதுவும் பேசவோ, கேட்கவோ மாட்டேன். உங்க மகன் வீடு. எப்படியும் இருங்க…” என்றுவிட்டாள்.
அதன்பின் பேசினால் மட்டுமே அதற்கு பதில் என்று அவளின் முகமே தெளியவில்லை.
எத்தனை தான் அவந்திகா, கலா, தரணி என அனைவரும் அமலாவை கவனித்துக்கொண்டாலும் அமலாவிற்கு அத்தனை சங்கடம்.
அந்த அதீத கவனிப்பே அவளை இன்னும் வருந்த செய்தது. தன்னை சமாதானம் செய்வதற்கென்றே அவர்கள் படும் மெனக்கெடல் ஒருபுறமும், அவர்கள் முன் தன் நிலையும் என்று ஒருவிதமாய் உள்ளுக்குள் தோன்றும் குன்றலை தவிர்க்க முடியவில்லை.
எப்போதடா ஊர் கிளம்பி செல்வோம் என்றுதான் இருந்தது அவளுக்கு. அவந்திகாவிற்கு விடவே மனதில்லை.
“இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு போகலாமே அண்ணி?…” என்று அவளிடமும்,
“அடுத்த லீவ்க்கு துளசியோட கண்டிப்பா இங்க தான் வரனும் அண்ணா. லீவ் இல்லைன்னு சொல்ல கூடாது…” என்று நளனிடமும்,
“வீடியோ கால் பண்ணி அத்தையோட பேசனும். சரியா…” என்று துளசியிடமும் அவள் கூறியவிதத்தில் அவர்களை பிரியும் கவலை அதிகம்.
“அவந்திக்கு இத்தனை கவனிக்க தெரியுமான்றதே திருச்சிக்கு நீ வந்த பின்னாடி தான் தெரியுது. இதுக்காகவே கண்டிப்பா வருவோம்…” என்ற நளன்,
“என்னை விட்டுட்டு நீ மட்டும் வர நினைக்காதடா தம்பி…” என்றான் ராகவ்விடமும்.
“அண்ணன் எவ்வழியோ தம்பி அவ்வழியே…” என்று ராகவ்வும் அவனை அணைத்துக்கொண்டான்.
இப்படியாக அங்கிருந்து கிளம்பி அவரவர் வீடு சென்றுவிட அங்கையின் வீட்டு வாசலில் அவரை இறக்கிவிட்டுவிட்டு நளன் தன் குடும்பத்துடன் கிளம்பிவிட்டான்.
மீண்டும் உறவிருந்தும் யாருமற்ற ஒரு சூழ்நிலை அங்கைக்கு. அவர் அறவே வெறுக்கும் ஒரு சூழல்.
தன் தவறு இதில் அதிகம் என்று தெரிந்தாலும் அவரின் ஏமாற்றங்கள் இந்தளவிற்கு நிதானமிழக்க செய்திருந்தது.
அவந்திகாவின் குடும்பத்தலைவியான தோற்றமும், அதன் பூரிப்பும் ஒருபுறம். பெற்ற மகளின் பாராமுகம் ஒருபுறம். மருமகனிடம் மதிப்பிழந்தது ஒருபுறம்.
சம்பந்திகள் முன்னிலையில் தலையிறக்கமாகி போன சூழ்நிலை என எல்லாவற்றிற்கும் சிகரமாய் மகனின் பேச்சு.
“ஊர்ல சாய்பாபா கோவிலுக்கு போவீங்களே? கிளம்புங்க. இன்னைக்கு போய்ட்டு வரலாம்…” என்று வேலையிலிருந்து வந்ததும் வராததுமாக தாயை அனைவரின் முன்னிலையில் அழைக்க அங்கைக்கு ‘என்னடா இது புதிதாய்?’ என்றிருந்தது.
“உங்களை தான் ம்மா. கிளம்புங்க. நீங்களும், நானும் தான் போறோம்…” என்று சொல்லியவன், மற்றவர்களையும் ஒரு பார்வை பார்க்க அவரவர் தங்களின் கவனத்தை திருப்பிக்கொண்டனர்.
அவந்திகாவிடம் ஒரு டீயை மட்டும் வாங்கி குடித்தவன் உடை கூட மாற்றாமல் அமர்ந்திருந்தான்.
அவன் முகத்தில் தெரிந்த களைப்பும், அடக்கப்பட்ட கோபமும் என்று ப்ரியதர்ஷனை யாராலும் நெருங்க முடியவில்லை.
அவந்திகா டீ கொடுத்ததோடு சரி. அவள் மீண்டும் அந்த கப்பை வாங்கிவிட்டு என்னவென்பதை போல பார்த்து நிற்க எச்சரிக்கும் பார்வை பார்த்தான் ‘இப்போது எதுவும் பேசாதே, கேட்காதே’ என்பதை போல.
அவளுக்கு அது புரிந்ததோ இல்லையோ. அந்த பார்வையில் நிறைந்திருந்த கோபக்கனலில் எட்டி நின்றுகொண்டாள் அவள்.
“கிளம்பியாச்சா?…” என்றான் அவன் வேகமாய்.
அந்த சத்தத்தில் உள்ளே நின்றுகொண்டிருந்த அங்கை தான் அமலாவிடம் பேசியதை பற்றிதான் பேச போகிறானோ என பயத்துடன் கையை பிசைந்துகொண்டிருந்தார்.
வேறு யாரும் அறைக்கு வரவே இல்லை. அழைக்க கூட அமலாவோ, அவந்திகாவோ செல்லவில்லை.
ப்ரியதர்ஷன் தான் பார்வையிலேயே அனைவரையும் நிறுத்தி வைத்திருந்தானே.
“ம்மா…” என்று மீண்டும் அவனின் முரட்டு குரல்.
தூக்கிவாரிப்போட அங்கை மெதுவாய் வெளியே வர அவந்திகாவிற்கு பாவமாய் இருந்தது.
“முன்னாடி போங்க. வர்றேன்…” என்று சொல்லி அங்கையை முன்னே அனுப்பியவன் தானும் செல்ல,
“என்னங்க…” என்றாள் அவந்திகா.
“கொஞ்சநேரத்துல வந்திருவோம்….” என்றவன்,
“வேற எதுவும் கேட்கனுமா?…” என்றதில் ஒருவரும் வாய் திறக்கவில்லை.
அங்கையை அழைத்துக்கொண்டு அவன் சொல்லியதை போல அருகில் இருந்த சாய் பாபா கோவிலுக்கு அழைத்து சென்றவன் வெளியே நின்றுகொண்டான்.
“போய் கும்பிட்டு வாங்க…” என்று சொல்ல அங்கை தயங்கி நிற்க,
“கும்பிட்டு வாங்கன்னு சொன்னேன். நீங்க எப்பவும் பன்றது தானே?…” என்றதும் மகன் தன்னை கவனித்திருக்கிறான் என்ற எண்ணம் கூட அவருக்கு எழவில்லை.
இதையெல்லாம் பிள்ளைகளுக்கு தாங்கள் சொல்லி வளர்க்கவேண்டிய அவசியமில்லை என்பதும் அங்கைக்கு புரியவில்லை.
தனது அன்றாட செயல்கள் மட்டுமல்லாது, தனக்கென பிடித்த சின்ன விஷயங்களில் சிலவை பிள்ளைகளுக்கு சொல்லாமலே பதிந்துபோகும் என்றும் அவர் உணரவே இல்லை.
கோவிலுக்குள் சென்றவருக்கு மனம் லயிக்கவே இல்லை. தவறு செய்துவிட்டதை போலவே ஒரு நடுக்கம்.
அதனைகொண்டே தன்னை தேடி வந்த அவந்திகாவிடம் பேச்சுக்கொடுக்கவில்லை.
கலாவிடம் முகம் காண்பித்து பேசவில்லை. அந்த அறைக்குள்ளேயே தான் முடங்கிக்கொண்டார்.
தான் பேசியதன் தாக்கம் நேரம் சென்றுதான் புரிய அவரால் அதனை கூறி வருத்தம் தெரிவிக்கவும் முடியாதவகையில் வெளியே பேச்சுக்குரல்கள்.
மதியத்திற்கு இதை செய், என்பதில் தொடங்கி மற்றவர்களின் பேச்சும் சிரிப்பும் எல்லாம் அவரின் வருத்தத்தை துடைத்து ஒருவித கோபத்தை விதைத்தது.
அதற்கென்றே வெளியே வரவும் இல்லை. கதவை தட்டி அழைத்ததற்கு பதிலும் இல்லை.
“தலைவலி…” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.
தன்னில்லை என்றாலும் இவர்களுக்கு ஒன்றுமே இல்லை தானே? என் மகளே அப்படித்தானே என்று தனக்கு தானே ஒன்றை நினைத்துக்கொண்டிருந்தவருக்கு விஷயம் மகன் வரை செல்லும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
கோவிலுக்குள் சிலநொடிகள் மட்டுமே இருந்தவர் அதன் கனம் தாங்காமல் மீண்டும் வெளியே வந்துவிட்டார்.
“கார்ல உட்காருங்க….” என்று சொல்லியவன் தானும் அமர்ந்து காரை கிளப்பி சென்று இன்னும் சற்று தள்ளி இருந்த ஒரு கடையில் டீயை வாங்கி வந்து அவருக்கு நீட்டினான்.
“குடிச்சு முடிங்க பேசலாம்…” அந்த குரலே அடிவயிற்றில் அமிலத்தை சுரக்க செய்தது.
அங்கை மகனை திரும்பியும் பார்க்கவில்லை. கைகள் நடுங்க அந்த டீயை குடித்து முடித்தவர் கப்பை வெளியே போட்டதும் கார் ஜன்னலை எல்லாம் மூடி காரினுள் ஏசியை போட்டவன் அவரின் புறம் திரும்பி அமர்ந்தான்.
“இப்படி உங்களோட இந்தமாதிரி பேசவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு நினைக்கலை நான்…..” என்றவன்,
“சொல்லுங்கம்மா அவந்திகா என்ன பண்ணினா?….” என்றான் அவரிடம் நேரடியாக.
அமலாவை பேசியதற்காக கேட்க போகிறான் என நினைத்திருந்தவருக்கு மகனின் கேள்வி உயிரை கிள்ளியது.
“தர்ஷன்….” என்றவரின் சத்தம் மேலே எழும்பவில்லை.
“எதுவுமே இல்லையா?…” என்றதும் அவருக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை.