“மனுஷன் இவ்வளோ பேசறேன். வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க?…” என்று ஆத்திரத்தில் அவன் கண்களை உருட்டும் நேரங்களில் பயத்தில் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் கொஞ்சமும் அசையாமல் நின்றுவிடுவாள்.
இத்தனை நாட்கள் ஆகிவிட்டது. அவன் எதற்கு என்ன செய்வான் என்பது வரை அவளால் அனுமானிக்க முடிந்தது.
சிலநேரங்களில் தன் மடத்தனம் எல்லாம் எத்தனை தூரம் கொண்டுவந்திருக்கிறது என்று நினைக்கையில் தன் மீத அத்தனை கோபம் வரும்.
கவனிக்கவே கூடாது. அவன் திசைப்பக்கம் திரும்பவே கூடாதென்று தனக்கு தானே எழுப்பி இருந்த சுவற்றை தகர்த்துவிட்டு வந்து பார்த்தாள் ப்ரியதர்ஷன் என்பவன் யார் என்று.
தன்னுடைய அதீத எதிர்பார்ப்பும், சில கோபங்களும், ஒதுக்கங்களும் இத்தனை நாட்கள் தங்களை பிரித்து வைத்திருப்பதும் புரிந்தது.
இப்போதும் அவள் எதிர்பார்ப்பில் அவன் அடங்கவில்லை என்பது நூற்றுக்கு எண்பது சதவீதம் உண்மை.
ஆனால் இங்கே திருச்சி வந்த பின்னும் அந்த எதிர்பார்ப்பு அவளிடம் இருக்கிறதென்றால் கிடையவே கிடையாது.
ஆனாலும் வாழ்வின் சில உன்னதமான பொழுதுகள் அவளின் கை நழுவியதோடு, அவனையுமல்லவா சேர்த்து அதற்காக தண்டித்துவிட்டாள்.
தரணியின் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனம் அவளின் முகத்தில் அறைந்தது.
அந்த குற்றவுணர்வும் அவளிடம் வெளிப்படும் நேரங்களில் ப்ரியனின் முகத்தில் தான் அவளின் பார்வைகள் அவன் பாராமலே அவன் மீது நிலைத்திருக்கும்.
அதனின் உட்சபட்சமாய் இன்றைய பேச்சுவார்த்தை. அதிலும் அங்கையிடம் அவந்திகா பேசியிருந்தாள்.
அவளுமே நினைக்கவில்லை தன் மாமியாரிடம் இப்படி பேசுவோம் என்று. ஆனால் பேசிவிட அங்கையின் பதிலும், ப்ரியதர்ஷன் இதனை தெரிந்து என்ன செய்வானென்று பரிதவித்து இப்போது அமர்ந்திருந்தாள்.
இப்படியாக அவள் ஒவ்வொன்றையும் யோசித்தபடி இருக்க தரணி தான் அழைத்திருந்தாள் அவந்திகாவிற்கு.
“என்ன அவந்தி? ஒரு ரிங்ல எடுத்துட்ட? வெய்ட் பண்ணிட்டிருந்தியா என்ன?…” என்றாள் அவள்.
“இல்லைண்ணி, போன் இப்ப தான் பேசி வச்சேன். அதான் கைல இருந்துச்சு…” என்றாள் அவளிடம்.
“என்ன வாய்ஸ் ஒரே டல்லா இருக்கு?…” என்ற தரணி,
“அவந்தி நீ ஓகே தானே?…” என்றாள்.
“ஓஓ, ஓகே தான் அண்ணி…” என்று அதுவுமே தடுமாற்றமாய் தான் வந்தது அவந்திகாவிடம்.
“என்னாச்சு அவந்தி? அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என்றவள் குரல் கிசுகிசுப்பாய் வந்துபின்,
“நான் மாடிக்கு வந்துட்டேன்…” என்று சொல்ல,
“அதெல்லாம் எதுவும் இல்லை அண்ணி…” என்றாள் கம்மிவிட்ட குரலில்.
“அடி விழும் பார்த்துக்கோ. எனக்கு தெரியாதா உன்னை? என்ன விஷயம்ன்னு சொல்லு…” என்று சொல்லியும் அவந்திகா வாய் திறக்கவில்லை.
“சரி சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு. தப்பு உன் மேலையா, இல்லையா? அதை சொல்லு…”
“என் மேல தப்பில்லை தான். ஆனா இருக்குமோன்னு ஒரு பயம் அண்ணி…” என்று அப்போதும் அவள் குழப்ப,
“அவந்தி என்ன ஆச்சும்மா?…” என்று அத்தனை பதட்டம் தரணிக்கு.
“அதுவும் அடுத்தவாரம் நீ இங்க வரப்போற. இப்ப போய்….” என்றவள்,
“ஏன் அண்ணா ஊருக்கு போகவேண்டாம்ன்னு சொன்னாங்களா? சொன்னாங்கன்னா சரின்னு கேட்டுக்கோ அவந்தி. உன் ஹெல்த்தை பார்க்கனும்ல….” என்று சொல்லவும் அவந்திக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“அவங்க எதுவுமே சொல்லலை அண்ணி. நேத்து கூட டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிட்டு வந்தோம் ட்ராவல் பண்ணலாமா? நான் எப்படி இருக்கேன்னு எல்லாம் பார்த்தோம்…”
“ஆமா சொன்னியே?…”
“அவங்களுக்கும் ஓகே தான். அதுவும் அடுத்தவாரம் கிளம்ப அவங்களுமே ரெடி…”
“அப்பறம் என்ன?…” என்று கேட்கையில் வெளியே ப்ரியனின் வாகனம் வந்துவிட்ட அரவம்.
“அண்ணி அவங்க வந்துட்டாங்க…” என்றாள் அவந்திகா.
“சரி, வைக்கறேன். அப்பறம் பேசறேன்…” என சொல்லி தரணியும் அழைப்பை துண்டித்துவிட்டாள்.
மொபைலை டீப்பாயில் வைக்கவும் ப்ரியன் வீட்டின் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.
“வாங்க…” என்று அவந்திகா சொல்லும்பொழுதே முகமெல்லாம் சிவந்து அழுத தடத்தினை கண்டுகொண்டான் ப்ரியதர்ஷன்.
பார்த்ததும் தன்னிடம் எதுவும் கூறுவாளா என பார்த்துக்கொண்டே பூட்ஸை கழற்றியவன்,
“சாப்பிட்டியா அவந்தி?…” என்றான்.
“ம்ஹூம். இல்லை…” என்று சொல்லி தலையசைக்க,
“சரி, ப்ரஷப் பண்ணிட்டு வர்றேன். எடுத்து வை…” என்று சொல்லி உள்ளே சென்றுவிட அவந்திகா இரவு உணவை மேஜையில் கொண்டுவந்து வைத்துவிட்டு காத்திருந்தாள்.
பத்துநிமிடங்களானது ப்ரியதர்ஷன் மீண்டும் வர. காக்கி உடையை மாற்றிவிட்டு வெளியே செல்வதற்காக வேறு உடை அணிந்திருந்தான்.
வேலை விஷயமாக கிளம்புகிறான் என்று பார்த்ததுமே புரிந்துவிட இப்போது எதுவும் சொல்லவேண்டாம் என நினைத்தபடி அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள்.
“முதல்ல உன் ப்ளேட்ல வை. எத்தனை தடவை சொல்றது? எனக்கு கை இல்லையா?…” ப்ரியன் முகத்தில் கடுமை இன்னும் மிதமிஞ்சி இருந்தது.
வரும்பொழுதே ட்ரைவரிடம் என்னவோ கோபமாய் பேசிக்கொண்டு வந்ததையும் அவள் கவனித்திருக்க வாய் திறக்கவில்லை.
அடுத்த கரண்டி பொங்கலை தன் ப்ளேட்டில் வைத்தவள் அவனுக்கு ஹாட்பாக்ஸை நகர்த்த தனக்கும் வைத்துக்கொண்டவன் மௌனமாய் சாப்பிட்டபடி கைப்பேசியை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவந்திகா சாப்பிடுவதையும் ஒரு கண்ணால் கவனித்தவன் அவள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாய் பசியில் உண்பதை பார்த்தவனின் புருவம் இடுங்கியது.
“ஹாங்…” என்று திடுக்கிட்டு பார்த்தவளுக்கு சட்டென வியர்க்க துவங்க,
“சரி, சாப்பிட்டு முடி…” என்று முடித்துக்கொண்டவன் தானும் உண்டு முடித்துவிட்டு அடுக்களை வர, அவள் மாலை உணவு உண்டதன் அறிகுறி எதுவும் இல்லை.
வாங்கி வைத்திருக்கும் பால் காய்ச்சப்பட்டு அப்படியே இருந்தது. அதையும் அருந்தவில்லை.
பழங்கள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. தினமும் இவ்வளவு நீர் அருந்தவேண்டும் என்று அவளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்க அவளுக்கென வாங்கி வைத்திருக்கும் தண்ணீர் பாட்டிலில் பாதிக்குமேல் குறையவில்லை.
“மதியத்துக்கு மேல தண்ணியுமே நீ சரியா குடிக்கலை போல?…” என்று கேட்டான் அவன்.
சாப்பிட்ட பிளேட்டை எடுத்து வந்தவளிடம் அவன் பாட்டிலை காண்பித்து கேட்க மீண்டும் அவள் கண்ணில் நீர் சுரக்க ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“வாய திறந்து பதில் சொல்லு. என்ன பிரச்சனை? உடம்புக்கு எதுவும் செய்யுதா?…” என்றான் அவளின் கையை நீரில் காண்பித்தபடி.
“அதெல்லாம் இல்லைங்க…”
“பின்ன?…” என்றவன் நேரத்தை பார்த்தான்.
“என்னன்னு சொல்லுடி. கேட்கறேன்ல…” என்று வழக்கமான அதட்டல்.
“இல்லை, நீங்க வெளில கிளம்பிட்டீங்க. வந்து பேசுவோம்….” என்று அவனுக்காக கூற,
“மண்ணாங்கட்டி. என்னன்னு சொல்லாம நான் யோசிச்சிட்டே அங்க போய் சொதப்பவா. சொல்லு அவந்தி…” என்றவன் தன் குரலும் அவளை பயப்படுத்துகிறது என்று புரிந்து ஆழ்ந்த மூச்செடுப்பின் பின் நிதானமாகி அவளை பார்த்தான்.