கண்கள் கலங்க அமர்ந்திருந்தவள் முகத்தில் இன்னும் கலக்கமும், சஞ்சலமும் தான்.
முதலில் ப்ரியதர்ஷன் பேசிய பொழுது போகவேண்டாம் என்று மட்டுமே விடாது சொல்லிக்கொண்டிருந்தவள் நள்ளிரவில் பாதி உறக்கத்தில் அவனின் கேள்விகளுக்கெல்லாம் ஒப்புவிப்பதை போல பதிலளித்து இருந்தாள் அவந்திகா.
“இவ்வளோ பேசியிருக்காங்க சொல்லமாட்டியா நீ? இன்னுமா என்கிட்ட ஷேர் பண்ணமாட்ட?…” என்று விடிந்ததும் அவளை உண்ண வைத்து, மாத்திரை போட வைத்துவிட்டு பிடிபிடியென பிடித்துக்கொண்டான் ப்ரியதர்ஷன்.
மலங்க மலங்க விழித்தவளுக்கு எல்லாம் சொல்லிவிட்டோம் என்றொரு புறம் ஆசுவாசமாக இருந்தாலும், அங்கையை பேசியதற்கு எதுவும் கூறுவானோ என்று கூர்ந்து கவனித்தபடி நின்றிருக்க அவன் அங்கைக்கு அழைத்துவிட்டான்.
“இல்லப்பா, அவளுக்கு பக்குவமா…”
“அந்த பக்குவத்தை தான் இங்க வந்து செய்ங்கன்னு சொல்றேன். ஏன் இதுவும் உங்க மகன் வீடு தானே? இது உங்க வீடு இல்லையா?…” என்று கேட்க அங்கை அவனிடம் பதில் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
‘ஆம் அது உன் வீடு. உன் மனைவி வீடு’ என்று அந்த உணர்வு சட்டென வெளிவந்தது உள்மனதின் கூவலாய்.
எப்போதும் போலவே மனதிற்குள் அவருக்கவரே நீதிபதியாய், சாதகமாய் தீர்வு சொல்லிக்கொண்டார்.
“என்னம்மா? சொல்லுங்க…” என மகன் கேட்க,
“இல்லப்பா, எனக்கு மூட்டுவலி, சுகர். நான் எப்படி அங்க வர? இந்த வயசுல அலைச்சல்…” சாதுர்யமாக மறுக்க பார்க்க,
“ப்ளைட்ல தான் வர போறீங்க. என்ன அலைச்சல்? கஷ்டம் இருக்காது. இங்க வந்து ரெஸ்ட் எடுங்க…” என்றவனுக்கும் உள்ளுக்குள் ஆற்றாமை.
‘உங்களுக்கே முடியலை, இவளை எப்படி பார்ப்பீங்க?’ என கேட்டுவிட தான் நினைத்தான்.
ஆனால் எதுவாகினும் அங்கையை தன் பார்வையில் வைத்துக்கொண்டுதான் பேசவேண்டும் என நினைத்து மௌனம் காத்துக்கொண்டான் ப்ரியதர்ஷன்.
“சரி வச்சிடறேன்…” என்று அங்கை சொல்ல,
“அமலா வந்தாளா?…” என்றான் அவரிடம்.
“ம்ம்ம், வந்துட்டு போய்ட்டா….” என்று பேச்சை கத்தரிப்பதை போலவே அங்கை அழைப்பை துண்டிக்க பார்த்தார்.
“சரி வைங்க. நீங்க ஊருக்கு வரும்போது தனியா வர கஷ்டமா இருந்தா அமலாவையும் துணைக்கு கூட்டிட்டு வாங்க…” என்று ப்ரியன் சொல்ல,
“சொன்னேனேப்பா. எனக்கு உடம்புக்கே முடியலை. காலெல்லாம் குடைச்சல்…”
“ஒருவாரம் இருக்கே. அதுக்குள்ள சரியாகிடும். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வாங்க. அடுத்தவாரம் இங்க வாங்க…” என்று சொல்லி வைத்துவிட்டான் அவன்.
பேசி முடிப்பதற்குள் அத்தனை ஆயாசமாக இருந்தது. இந்தமுறை ஊருக்கு செல்வதற்கும் ஒரு காரணமிருக்க அது எதுவும் நடக்காது போலிருந்தது ப்ரியனுக்கு.
நளனுக்கு இதனை தெரிவிக்கவென்று அழைக்க அவனுக்கு அழைப்பு செல்லவில்லை.
நளன் திருச்சி வந்துவிட்டு சென்ற பின்னர் அங்கே அங்கையின் வீட்டிற்கு செல்லவே முடியாது, அமலாவையும் அனுப்ப முடியாது என்று வருத்தத்துடன் சொல்லியிருக்க,
“நான் சொன்னா அதுல காரணம் இருக்கும்ன்னு தெரியாதா மாப்பிள்ளை? நீங்க அமலாவையாவது அப்பப்போ அனுப்புங்க. இப்போதைக்கு நான் வரக்கூடிய சூழ்நிலையோ, வந்தா இருக்க கூடிய சூழ்நிலையோ இல்லை. ப்ளீஸ்…” என்று இத்தனை வருடத்தில் முதன்முறையாக கெஞ்சலாக அவனிடமிருந்து வார்த்தைகள் வர,
“ப்ச், என்ன மச்சான் இது? சரி அனுப்பறேன்…” என்று நளன் சொல்லியிருக்க,
“தேங்க்ஸ் மாப்பிள்ளை…” என்ற ப்ரியதர்ஷனின் வார்த்தைகள் நளனை அதிர செய்தது.
“வேற எதுவும் பிரச்சனை இல்லையே?…” என்று கேட்டுவிட்டான் நளன்.
“இருக்கக்கூடாதுன்னு தான் நினைக்கறேன். பார்க்கலாம்….” என்ற ப்ரியனின் குரலில் அதுவரை காணாத ஒரு தளர்வு.
“கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு நிக்கறாங்களே? என்ன பண்ண போறேனோ?…” என அவனுக்கவனே சொல்லுவதை போல கரகரத்து சொல்லியிருக்க நளனுக்கே தாளவில்லை.
அமலாவை அதன்பின் அடிக்கடி அங்கே சென்றுவரும்படி கூற அவளிடமும் ப்ரியனின் பேச்சுக்கள் அதிகமானது.
“அதிசயம் தான். என் தம்பி நானா கூப்பிட்டாலும் ரெண்டுவார்த்தைக்கு மேல பேசமாட்டான். இப்பலாம் அவனே கூப்பிடறான்…” என்று அமலா சந்தோஷத்துடன் கூறிக்கொள்வதுண்டு.
“எல்லாம் சம்சாரியானா தானா வந்திரும்…” என நளன் கேலி போல கூறினாலும் ப்ரியதர்ஷன் கூறிய விஷயங்கள் எதையும் அமலாவிடம் பகிரவில்லை.
அவ்வப்போது அவனாகவே அழைத்து ப்ரியதர்ஷனிடம் பேசிக்கொள்வான் நளன்.
அவனும் புரிந்துகொண்டு தனக்கு தோள் கொடுப்பதை போலிருக்க ப்ரியதர்ஷனுக்குமே பெரும் நிம்மதி.
அங்கையிடம் பேசிவிட்டு நளனுக்கு அழைக்க, அவன் தொடர்பு எல்லைக்குள் இல்லை என்றதும் கைப்பேசியை வைத்துவிட்டு திரும்ப அவந்திகா அவனின் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளை பார்த்ததும் மீண்டும் அவள் இரவில் கூறிய அந்த வார்த்தைகள் ப்ரியனின் உயிரை உலுக்கியது.
‘தனியா இருக்கும்போது எதுவும் அசம்பாவிதம்ன்னா?’ என எத்தனை சாதாரணமாக சொல்லிவிட்டார் தன் தாய்?
எதுவும் பிரச்சனை இருந்தால் கூட ஒன்றுமில்லை, தைரியமாக இரு. சரியாகிவிடும் என்று தானே கூறவேண்டும் என மனம் விண்டுதான் போனது.
தனக்கே இத்தனை வலிக்கையில் மனைவியின் நிலை. நினைத்தவனுக்கு பெரும்வலி.
இத்தனை நாட்கள் அவள் தன்னை புரிந்துகொள்ளவில்லையே என்று அவனுக்குமே அவந்திகாவின் மீது கோபமிருந்தது தான்.
ஆனால் புரிந்துகொள்ளும்படியான சூழலில் அவள் இல்லை என்பதை இப்போது முழுதாய் உணர்ந்துகொண்டான்.
“நீங்க கிளம்பலையா?…” என தன்னை பார்த்தபடி அமர்ந்திருந்தவனிடம் மெதுவாய் அவந்திகா கேட்க, இதற்குமே தயங்கி யோசித்து கேட்டவள் முகம் கண்டவன் மெலிதாய் முறுவலித்தான்.
மீசையின் அடியில் அப்புன்னகை அமர்ந்துகொள்ள கண்கள் அவனின் சிரிப்பை காட்டிக்கொடுத்தது.
“போகனும். ஏன் கிளம்பவா?…” என்று கேட்க,
“அதெல்லாம் இல்லை. நைட்ல நீங்க வேலையா வெளில போய்ட்டு வர லேட்டாச்சு. அதான் ஒருவேளை இன்னைக்கு லேட்டா கிளம்புவீங்களோன்னு கேட்டேன்…”
“ஹ்ம்ம், போகனும். ஆமா நான் இல்லாம இப்பலாம் தனியா இருந்துக்க பழகிட்ட இல்லையா அவந்தி?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், தனியா இருக்க எல்லாம் பயமில்லை. இருந்துப்பேன் தான். அதுவும் எப்பவும் வெளில நடமாட்டம் இருக்கு தானே? அதுல இன்னும் கொஞ்சம் தைரியம் தான்…” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம், தைரியம் தான். இது எல்லா சூழ்நிலையிலையும் இருக்கனும்…” என்றவன் பேசிக்கொண்டிருக்க சாமந்தி வந்துவிட்டார்.
“என்னக்கா இன்னைக்கு வர நேரமாகும்ன்னு சொன்னீங்க? அதுக்குள்ள வந்துட்டீங்க?…” என ப்ரியனை விட்டுவிட்டு, சாமந்தியை கண்டதும் எழுந்து அவரோடு செல்ல அவள் கணவனின் பார்வை அவளையே வட்டமிட்டது.
அவள் எழுந்து செல்லவும் தானும் யோசனையுடன் அடுக்களை வந்தவன் அவந்திகாவின் தோளில் தட்டி,
“உன்னோட ட்ராலி வெளிலையே இருக்கு பார். ஊருக்கு தான் போகலையே. எடுத்து உள்ள வை…” என்று சொல்ல,
“இப்பவேயா?…” என்றவள் அவனின் பார்வையில்,
“ஊருக்கு போகலைல. அதுவே போதும். நான் போய் வைச்சிட்டு வர்றேன்…” என்று நிம்மதியுடன் சந்தோஷமாய் மறுபேச்சின்றி அவள் நகர்ந்து சென்றாள்.
அவந்திகா தலையாட்டிக்கொண்டு முகத்தில் கொப்பளிக்கும் குதூகலத்துடன் அங்கிருந்து சென்றதும்,
“என்னமும் கேட்கனும்ங்களா ஸார்?…” என்றார் அவன் நின்ற தோரணை கண்டு.
“ஹ்ம்ம், நீங்க இந்த கை வைத்தியம் எல்லாம் பார்ப்பீங்களா சாமந்தி?…” என்று கேட்க,
“எதை கேட்கறீங்க ஸார்?…” என்றார் அவர் புரியாமல்.
“அதான் அவந்திக்கு இந்த நேரம் என்னென்ன பண்ணனும்ன்னு உங்களுக்கு தெரியுமா?…” என்று விசாரிக்க அவரின் முகத்தில் சிரிப்பு.
அதை காண்பித்துவிட முடியாதே. உயர் அதிகாரி வேறு. அவளால் அவந்திகாவிடம் பேசுவதை போல எல்லாம் ப்ரியதர்ஷனிடம் பேச முடியாது.
“தெரியும்ங்க ஸார்…” என்றார் உடனே.
“சரி சொல்லுங்க…” என்று அதையும் விசாரணை பாவனையில் அவன் கேட்க சாமந்தி சொல்ல சொல்ல எல்லாவற்றையும் கவனமாய் மனதில் ஏற்றிக்கொண்டான்.
இரவில் அவந்திகா உறங்குவதற்கு முன் அவளை எழுப்பிக்கொண்டு குளியலறை வந்தவன் கையில் எடுத்தவற்றை கண்டு அவந்திகா விழி விரித்தாள்.
“ப்ச், என்ன பார்வை இது அவந்தி? சும்மா முழுங்கற மாதிரி எப்ப பாரு பார்க்கறது. இத்தனை மாசம் நீ பார்த்தவன் தானே? வந்து இந்த ஸ்டூல்ல உட்கார்….” என்று அதற்கும் அவளை கடிந்தவன்,
“கன், லத்தி பிடிச்ச கை. இப்ப விளக்கெண்ணெய்யை வச்சிகிட்டு. ஹ்ம்ம் என்னவோ போ. நான் இப்போ இங்க புருஷனாச்சே…” என சொல்லிக்கொண்டு அவளிடம் வர அவந்தியின் முகத்தில் பெரிதாய் ஒரு விரிந்த புன்னகை.
முரட்டு உருவத்தில் குழந்தை பேச்சு என்பதை போலிருந்தது ப்ரியதர்ஷன் பேச்சும், அவனின் பார்வையும், குரலும்.
களவுகள் கை கொள்ளாத அளவிற்கு கண்மூடித்தனமாய் சுகமாய் மனதோடு தொலைந்துகொண்டிருந்தது.