“இருக்கட்டும், மாடிக்கு போகும்போது வச்சுக்கறேன்…” என மகன் சொல்ல, அவந்திகாவும் அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
இப்போது கூட அவளின் புகுந்தவீடு. இத்தனை மாதங்களில் எல்லா இடத்திலும் அவளிருந்திருக்கிறாள்.
ஆனால் இன்றளவும் திருச்சியில் அவள் அனுபவித்த அந்த உரிமை உணர்வு தந்த தாக்கம், ஏனோ இங்கே விருந்தாளி என்னும் உணர்வை விரட்ட முடியாமல் போனது.
உள்ளுக்குள் அங்கிருந்த நாட்களை அசை போட்டபடி அவள் அமர்ந்திருக்க அங்கை தண்ணீரை கொண்டுவந்து கொடுத்ததும் வாங்கி குடித்தவன்,
“அவந்தி….” என்று அவளிடம் நீட்டினான்.
“போதும்…” என்று தானும் கொஞ்சமாய் குடித்துவிட்டு தந்தவளை எழும்படி சொல்ல,
“அவ இருக்கட்டும் ப்பா. நீ போய் ரெஸ்ட் எடு…” என்றார் அங்கை.
“அவளுக்கு தான் ம்மா ரெஸ்ட் வேணும். உக்கார்ந்தே வந்தா….” ப்ரியன் கூற,
“சரி, அப்போ இங்க இருக்கற ரூம்ல எடுக்கட்டும். நான் அவந்தியை பார்த்துக்கறேன்…” என்றதும் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டவன்,
“அதெல்லாம் வேண்டாம். கல்யாணம் ஆனப்போ நான் இருந்தவரைக்கும் அவ மாடிக்கு வந்தது. இப்ப வரைக்கும் போகலையே. அதனால அங்கயே அவ இருக்கட்டும்…” என்றவன்,
“டாக்டர் மாடி ஏறி இறங்கலாம்ன்னு எல்லாம் சொல்லியிருக்காங்க ம்மா. நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லி அவந்திகாவை முன்னே நடக்க சொல்லிவிட்டு,
“நாளை மறுநாள் நீங்களும் தானே வர்றீங்க. அங்க வந்து அவளோட பேசலாம். அதுக்கப்பறம் உங்களை சேர்ந்து இருக்கவேண்டாம்ன்னு யார் சொன்னா?…” என்றவன் தானும் மாடிக்கு செல்ல அங்கை செய்வதறியாமல் நின்றார்.
ஊருக்கு வரவில்லை, திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதை தவிர்த்து மகன் அவரிடம் எதுவும் பேசவும் கேட்கவும் இல்லை. அதுவே அவருக்கு ஒரு தைரியத்தை தந்தது.
ஒருவேளை அவந்திகா அவனிடம் முழுமையாய் எதையும் சொல்லியிருக்கவில்லையோ என்று நினைத்தவர் அமர்ந்துவிட்டார்.
மாடிக்கு சென்றதுமே அந்த அறையை அவந்திகா சுற்றி பார்க்க, பெட்டியை வைத்த ப்ரியன்,
“நீ சந்தோஷமா நினைச்சு பார்க்கிற மாதிரி இந்த ரூம்ல எதாச்சும் உனக்கு ஞாபகம் இருக்கா என்ன?…” என்றான் அவளிடம்.
சட்டென்று இப்படி கேட்டதும் அவந்திகாவின் மனதில் பெரும்வலி. எத்தனை தூரம் தானே ஒன்று நினைத்து வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டோமே என்று.
முகமெல்லாம் சட்டென்று வாடிவிட ப்ரியனுக்குமே தான் கேட்டதன் தாக்கம் அவளை சோர்வுற செய்யும் என்று புரிந்தது.
ஆனாலும் கேட்காமல் இருக்கமுடியவில்லை. அப்படி என்ன அளவற்ற எதிர்பார்ப்பும், நடக்கவில்லை என்றால் வரும் ஒதுக்கமும் என்று இப்போதும் அவனுக்கு அதில் ஏக வருத்தம்.
“உன்கிட்ட தான் கேட்டேன் அவந்தி…” என்றவன் உடை மாற்றிவிட்டு கட்டிலில் வந்தமர்ந்தான்.
என்ன சொல்ல முடியும்? அந்த அறையில் அவனோடு இணைந்து இருந்த பொழுதுகளை தவிர்த்து வேறு எந்த ஞாபகம்.
ஆனால் இருந்த நேரங்களில் எல்லாம் விட்டால் போதும் என்பதை போல விட்டு ஓடத்தானே பார்த்தாள்?
அது ஒன்று நன்றாய் ஞாபகத்தில் இருந்து வைக்க அவன் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திணறி போய் பார்க்க,
“நான் ஸாரி…” என்று அவனருகில் வந்தமர்ந்தாள் அவந்திகா.
“உன் ஸாரி எதையெல்லாம் திருப்பி தரும்னு சொல்லேன். கேட்போம்…” என இன்னுமே நக்கல் தான் அவனிடம்.
முகம் வாடி அமர்ந்திருந்தவள் முகத்தில் அந்த கேள்வி குற்றவுணர்ச்சியை உண்டாக்க,
“ப்ச், சில விஷயங்களை மாத்த முடியலை. ஆனாலும் பேசாமலும் இருக்க முடியலை….” என்றவன்,
“ஓகே, பாஸ்ட் இஸ் பாஸ்ட். அதை விட்டுடுவோம். இனிமே நல்ல ஞாபகங்களை ஏற்படுத்துவோமே. ஹ்ம்ம்…” என்று அவள் முகம் நோக்கி குனிந்தவனின் வசீகர புன்னகை அவந்திகாவின் முகத்தில் ஒளிர்வை உண்டாக்க பொழுதுகள் நேசத்தால் நிரப்பப்பட்டது.
அவளுள் மூழ்கியிருந்தவனின் கைப்பேசி இசைக்க மெல்ல விலகி எழுந்து பார்த்தவன்,
“அமலாக்கா…” என்றான் அவந்திகாவின் களைத்த முகம் பார்த்து.
“ஆமா, நாம வந்திருக்கோம்ன்னு சொல்லவே இல்லையே…”
“அம்மா சொல்லியிருப்பாங்க…” என்று அழைப்பை ஏற்றான்.
“எப்போ வந்த தர்ஷன்? அவந்திகா எப்படி இருக்கா? ஜர்னி ஓகேவா?…” என்றாள் அமலா அக்கறையுடன்.
“ஹ்ம்ம், எல்லாம் ஓகே தான்…” என்றவன்,
“நாளைக்கு கல்யாணத்துக்கு சேர்ந்தே போயிடலாம். நீ இங்க வந்திரு…” என்று சொல்ல,
“ஓகே தர்ஷன்…” என்றவள்,
“சரி, நீங்க நைட் டின்னருக்கு இங்க வந்திருங்க. அம்மாவை கூப்பிட்டேன். வரலைன்னு சொல்லிட்டாங்க. நீ வரும்போது கூப்பிட்டு பாரு. இல்லைன்னா கிளம்பி வா…” என்று சொல்ல,
“டின்னருக்கா?…” என்று யோசிக்க,
“ஏன், டயர்டா இருந்தா ஒன்னும் பிரச்சனை இல்லை. நானே அங்க எடுத்துட்டு வர்றேன்…” என்றாள் அவள் என்ன சொல்வானோ என யோசனையுடன்.
“ம்ஹூம், வேண்டாம் நாங்களே வர்றோம்…” என்று சொல்லியவன் அவந்திகாவை பார்க்க எழுந்து அமர்ந்திருந்தவள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“சரி வைக்கறேன்…” என சொல்லி அழைப்பை துண்டித்தவன்,
“சந்தோஷமா?…” என்று கேட்டு அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான்.
வார்த்தையால் சொல்லாதவள் அவனின் தோளில் ஒட்டியிருந்த பொட்டை எடுத்து தன் நெற்றியில் வைத்துவிட்டு புன்னகைக்க ப்ரியதர்ஷன் புன்னகை பெரிதாய் விரிந்தது.
“சரி உன் அம்மாவுக்கும் கால் பண்ணி சொல்லிடு. நாம கிளம்புவோம்…” என்று எழுந்துகொண்டான்.
சற்றுநேரத்தில் கிளம்பி இருவரும் அமலாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்துவிட்டனர்.
அங்கை அங்கே வர மறுத்துவிட பெரிதாய் வற்புறுத்த எல்லாம் இல்லை ப்ரியதர்ஷன்.
அவந்திகாவும் அழைத்ததற்கு தனக்கு முடியவில்லை அது இதுவென்று ஆயிரம் உடல் உபாதைகளை அவர் சரளமாக அடுக்கிக்கொண்டே செல்ல,
“இதுக்கு தான் ஊருக்கு வர சொல்றாங்க. இங்க இருந்தா யார் உங்களை பார்ப்பா?…” என்று வேறு அவந்திகா சொல்ல,
“இல்ல இல்ல. அதெல்லாம் என்னை நானே பார்த்துப்பேன்…” என உடனடியாக அவர் மறுக்க ஒவ்வொன்றும் ப்ரியதர்ஷன் பார்வையில் பதிந்துகொண்டே தான் இருந்தது.
இரவு அமலாவின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்துவிட்டு காலை இத்தனை நேரத்தில் கிளம்பவேண்டும் என்றதற்கும் அங்கை பதில் சொல்லவில்லை.
காலை தான் முதலில் கிளம்பிய ப்ரியன் அங்கையிடம் கேட்க திருமணத்திற்கு வர மறுத்துவிட்டார் அவர்.
“திரும்பவும் உடம்புக்கு முடியலையோ?…” என்றவன் கேள்வியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.
“ஆமா முடியலை…” என்று மறுத்துவிட அப்போதும் அவன் எதுவும் சொல்லவில்லை.
மீண்டும் மாடிக்கு வருகையில் அவன் மனைவி பட்டுபுடவையோடு கபடி விளையாடாத குறையாக மல்லுக்கட்டிக்கொண்டிருக்க அதற்கும் கோபம்.
நேரமாகிவிடுமே என்று நினைத்திருக்கே கீழே அமலா வந்துவிட்ட சப்தம்.
“அமலாண்ணி வந்துட்டாங்க….” ஆர்வத்துடன் அவள் கூற,
“நைட் தானே பார்த்த நீ. வரட்டும்…” என்றவன் ஒன்றாய் மடிப்பை எடுத்துவிட்டு தள்ளி நின்று பார்த்து,
“ஹ்ம்ம், ஓகே. உனக்கு சரியா இருக்கா?…” என்று இங்குமங்குமாய் அவன் சுற்றி பார்க்க அவந்திகாவிற்கு சற்று வெட்கமும் கூட.
“வெட்கப்பட நேரம் காலமே இல்லையா உனக்கு? கிளம்பற நேரம் டென்ஷன் பன்ற…” என கடிந்தவன் அதற்கொரு இதமான தண்டனையை சுகமாய் அவளிடம் பிரதிபலித்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு கீழே இறங்கினான்.
“லேட்டாகிடலையே?…” நளன் கேட்க,
“ஆகிடுச்சு. ப்ளான் பண்ணினதை விட இருபது நிமிஷம் லேட்…” என்றவன் அவந்திகாவை பார்த்தான்.
“சரி பேசிட்டே இருந்தா இன்னும் லேட்டாகும். வாங்க…” என்று அமலா சொல்லவும்,
“கிளம்பறோம் ம்மா. நீங்க உங்க ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணி வைங்க. நாளைக்கு மார்னிங் புறப்படறோம்…” என்று சொல்லிய ப்ரியதர்ஷன் மற்றவர்களிடம் தலையசைத்து முன்னே சென்றான்.
குடும்பமாய் அனைவரும் சேர்ந்து கிளம்பி செல்ல அங்கைக்கு தனித்து விடப்பட்ட உணர்வு.
அமலா அங்கையோடு அத்தனை சண்டை உடன் வர சொல்லி. முடியவே முடியாதென்றிருந்தார் அவர்.
அவர்கள் அழைத்தது எதுவும் தெரியவில்லை. விட்டு சென்றது தான் இப்போது பெரிதாய் தோன்றியது அங்கைக்கு.
அவந்திகாவிற்கு உள்ளுக்குள் அத்தனை உற்சாகம். உள்ளமெல்லாம் கொண்டாட்டத்துடன் தாய் வீட்டை காண செல்கிறோம் என்பதில் அவளை கையில் பிடிக்கமுடியவில்லை.
பின் இருக்கையில் அமலாவும், துளசியும் அவந்திகாவுடன் அமர்ந்திருக்க துளசியுடன் வாய் ஓயாத பேச்சுக்கள் தான் அவளுக்கு.
ஒருவழியாய் சரியான நேரத்திற்கு மண்டபம் வந்துவிட, முகிலரசன் குடும்பத்துடன் வாசலுக்கு வந்துவிட்டார் மகள், மருமகனை வரவேற்க.
அதிலும் அங்கே ப்ரியதர்ஷனுக்கும், அவனின் பதவிக்கும் தனி மரியாதை வழங்கப்பட்டு முக்கியத்துவம் கூடியது.
திருமணம் முடிந்து அவந்திகாவுடன் தானும் மாமனார் வீடு சென்றுவிட்டான் ப்ரியதர்ஷன்.
மறுநாள் மீண்டும் அங்கை இன்றி தனித்த பயணம் தான் அவந்திகாவிற்கும், ப்ரியதர்ஷனுக்கும்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.