கலா ஒருமுறை அடித்து பார்த்து எடுக்கவில்லை என்றதும் மீண்டும் அழைக்கவும் தான் அவந்திகா கைப்பேசியையே கவனித்தாள்.
“அச்சோ அம்மா…” என கணவனை விட்டு விலக,
“ஹ்ம்ம், திரும்பவும் பொய் சொல்ல போற. இதுக்கு இவ்வளோ வேகம். உன்னை வந்து கவனிச்சிக்கறேன்…” என்றவன் அவளின் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டுவிட்டு,
“என்னோட மொபைலை வச்சிட்டு போய்ட்டேன் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணும்போது. அதை எடுக்க தான் வந்தேன்…” என்று உள்ளே சென்றவன், செல்லும்பொழுது அந்த அழைப்பையும் ஏற்றுவிட்டு நகர்ந்துவிட்டான்.
“அச்சோ போச்சு…” என அவனை முறைக்கவும் முடியாமல் மொபைலை எடுத்தவள்,
“ம்மா…” என்று வாசல்பக்கம் வந்து நின்றாள்.
வாகனத்தில் ஏறி அமர்ந்தவனின் கண்கள் சிரிக்க, கொள்ளையடிக்கும் அப்புன்னகையில் முறைக்கமுடியாமல் அவள் பார்க்க,
“உள்ள போடி…” என்றான் இதழசைத்து சத்தமின்றி.
“எவ்வளோ நேரம் கால் பன்றேன் அவந்தி. என்ன பண்ணிட்டிருந்த?…” என்று கலா போனில் படபடத்தவர்,
“அதுவும் கொஞ்சம் முன்னாடி தான் இப்படி வலி வந்துச்சுன்னு சொல்லியிருந்த. நான் திரும்பவுமோன்னு நினைச்சுட்டேன்…” என்றார் அவர்.
“ம்மா, பாத்ரூம் போயிருந்தேன். அங்கையெல்லாம் போனை கொண்டு போக முடியுமா?…” என்றவள்,
“என்னன்னு சொல்லுங்க…” என்றாள்.
“என்னத்த சொல்ல? கிளம்பி வான்னா உன் வீட்டுக்காரரை சொல்லி பயம் காட்டற. நாங்க வரலாம்ன்னா இங்க ஒத்தையில உன் அண்ணியால உன் அப்பா, அண்ணா, குழந்தையை சமாளிக்க முடியாது…” என்றார் கவலையுடன்.
“ம்மா, ஏன் புலம்பறீங்க? அதான் ஓகே தானே?…” என்று அவந்திகா ஆயாசமாய் கூற,
“என்ன ஈசியா சொல்லிட்ட நீ? நான் பேசறது புலம்பறதா? தரணி கூட சொல்லிட்டா பேசாம இருந்தே நீங்க கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு….”
“சரி இருந்திருக்க வேண்டியது தானே?…” என்று அவந்திகா சிரிக்க,
“ம்க்கும், பொண்ணை குடுத்த இடத்துல அவ்வளோ நாள் தங்கினா நல்லாருக்கே?…” என்று நொடித்துக்கொண்டார்.
“சரி, உன் மாமியார் பேசினாங்களா? போனவாரம் நாங்க போனப்போ முகம் குடுத்தே பேசலை அவந்தி…” என்றார் அவளிடம்.
“அத்தை போயாச்சு. ஹால்ல யாருமில்லை. நீ சொல்லு…” என்று சாவகாசமாய் அமர்ந்துகொண்டாள்.
“என்ன சொல்ல?…” அவந்திகா பேச்சை மாற்ற,
“கொஞ்சம் முன்னாடி நீ உன் அம்மாக்கிட்ட சொன்னியே. அதை சொல்லு. வேணும்னா இப்போ வீடியோ கால் செய்யவா?…” என்றாள் அவளிடம்.
“அதெல்லாம் வேண்டாம். சும்மா இருங்க அண்ணி…”
“அவந்திக்கு என்னம்மா பேச்சு வருது? அதோட சூட்சமம் என்னன்னு தெரிய வேண்டாமா? அதுவும் நாங்க அங்க இருந்து வந்து ரெண்டுநாள் ஆகலை. அதுக்குள்ள. எப்படிம்மா எப்படி?…” என வசனம் பேச,
“அவ்வளவு அப்பட்டமாவா தெரிஞ்சது?…” என்று அப்பாவியாய் கேட்டவள்,
“பின்ன இல்லையா? நீ கண்ணை உருட்டி பதறி கையை உதறுனதுலையே புரிஞ்சு போச்சு. எப்படி இருந்த பிள்ளை எப்படியாகிருக்குன்னு. பிழைச்சுக்குவ…” என்று கேலியாய் சிரிக்க,
“அம்மாவுக்கு தெரியாதுல…”
“ம்ஹூம். இப்ப வரை இல்லை. ஆனா என்கிட்ட இப்ப உளறின மாதிரி உளறாதே…”
“எல்லாம் உங்களால தான். அம்மாப்பாவுக்கு தான் எதுவும் தெரியலை. நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க? உங்களை சொல்லனும் முதல்ல. என்னை கொஞ்சமாச்சும் அதட்டி அனுப்பி வச்சிருக்கலாம்ல…” என்று தரணியின் பக்கம் அவந்திகா பிளேட்டை திருப்பினாள்.
“அடியேய், தெளியலாம். ஆனா இவ்வளோ தெளிவா தெளிய கூடாது. எம்புட்டு நேக்கா என்னை இதுக்குள்ள கொண்டுட்டு வர்ற நீ. பிச்சிருவேன்…” தரணி சிரிக்க,
“பின்ன, நீங்க உங்களோட கடமையை என்னன்னாலும் செஞ்சிருக்கனும்ல. உங்க பொறுப்புல இருந்து தவறிட்டீங்க. என் புருஷன் அப்பப்ப சொல்லுவார். தூக்கி உள்ள வச்சு கம்பி எண்ண விடறேன்னு. முதல்ல உங்களை தூக்கி வச்சு எண்ணுங்கன்னு விடனும்…” என்றாள் அவந்திகா சிரிக்காமல்.
“அடிப்பாவி. என் வாழ்க்கைக்கே உலை வக்கிற பார்த்தியா? நீ நல்லா வருவம்மா. இதை மட்டும் உன் அம்மா, அண்ணா முன்னாடி சொல்லு, என்னை மூட்டை முடிச்சோட கிளப்பி விட்டுருவாங்க….”
“அச்சோ அண்ணி நான் அப்படி சொல்லலை…”
“ஏன் சொல்லித்தான் பாரேன். கல்யாணம் முடிஞ்சதுல இருந்து அரை போதையில இருக்கிற மாதிரி எதையும் பார்க்காம, கவனிக்காம பயத்துல பத்தேநாள்ல காய்ச்சல்ல விழுந்தவ நீ. நீ தான?…”
“ஆமா ண்ணி…”
“என் மருமகளை இந்த நிலமையில நான் எப்படி அனுப்புவேன்னு சொல்லி காய்ச்சல் விடட்டும்ன்னு சொன்னது உன் மாமியார். அவங்க தான?…”
“ஆமா அண்ணி…”
“காய்ச்சல் விட்டு உன்னை கிளப்பனும்ன்னா தாலி பெருக்கி போட்டுட்டு போகட்டும்ன்னு நாள் குறிச்சது உன்னை பெத்த என் மாமியார். ஆமாவா இல்லையா?…”
“ஆமாவே தான்…”
“அந்த விசேஷம் முடிஞ்சதும் நீ மாசமாகிட்ட, இந்த நிலமையில உன்னால ட்ராவல் பண்ண முடியாதுன்னு சொல்லி பெட் ரெஸ்ட்ல இருக்க சொன்னது உனக்கு பார்த்த டாக்டர். அவங்க தான?…”
“அண்ணி தெரியாம சொல்லிட்டேன்…”
“தெரியாமலே இவ்வளோ சொல்ற. தெரிஞ்சு நீ என்னென்ன சொல்லுவ. இங்க வருவேல்ல. உன்னை வச்சிக்கறேன். அண்ணன் பொண்டாட்டின்னா சும்மாவா?…” என்று அதுவரை வசனம் பேச,
“என்னம்மா இன்னும் அவ தான் பேசிட்டிருக்காளா?…” என்று கலா வந்துவிட,
“ஆமா த்தை. அவ தான். பொழுது போகனும்ல. அதான் சும்மா தமாஷ் பண்ணிட்டிருந்தோம். என்ன அவந்தி…” என்று சொல்ல அவந்திகா அடக்கமாட்டாமல் அப்படி ஒரு சிரிப்பு.
“ஏய் மெல்ல அவந்தி. இப்படி சிரிக்கிற. வாயை மூடு தாயி…” என்று தரணி சொல்ல சொல்ல இன்னும் சிரித்தாள் அவந்திகா.
கண்ணில் நீர் வர அத்தனை சத்தமாய் புன்னகை. விடாது அவள் சிரிக்க சிரிக்க,
“அச்சோ இவ என்னை ஒருவழி பண்ணாம விடமாட்டா போல…” என்று தரணியே அரண்டுபோனாள்.
“இவளை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க த்தை…” என்று போனை கலாவிடம் தர மகளின் புன்னகை சத்தத்தில் அவருக்குமே நிம்மதி.
“அவந்திக்குட்டி…” என கலா அழைக்கவும் மெல்ல மெல்ல புன்னகையை கட்டுக்குள் கொண்டுவந்தவள்,
“சொல்லுங்கம்மா…” என்றாள் இன்னும் அடங்காத சிரிப்புடன்.
“என்னத்த சொல்ல?…”
“ம்மா, அதான் நான் நல்லா இருக்கேனே?…”
“விளையாட்டுத்தனமா தான் இருக்க அவந்தி. அதுவும் இந்த சூழ்நிலைல நீ தனியா இருக்கான்னும் போது எனக்கு பதறாதா?…” என்றார் அவர் இன்னும் தெளியாத கவலையுடன்.
“ம்மா, ஒருவேளை என் வளைகாப்பு ஏழாம் மாசம் நடக்காம ஒன்பதாம் மாசம் நடந்திருந்தா? நீங்க அப்போ தானே கூட்டிட்டு போயிருப்பீங்க….”
“ஒன்பதாம் மாசம்ன்னாலும் உன் மாமியார் உனக்கு துணைக்கு இருந்தாங்களே?…”
“நான் அங்க இருந்ததால சொல்றீங்க? அதுவே நான் இங்க கல்யாணம் முடிஞ்சப்போவே வந்திருந்தா இங்க தானே இருந்திருப்பேன். அப்போ என்ன பண்ணிருப்பீங்க?…” என்றதும் கலாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.
“என்ன என்ன சிரிப்பு?…” என்றாள் தாயின் குரலை கண்டு.
“உனக்கே அங்க இருந்து வர இஷ்டமில்லைனு புரியுது. என்னமா மடக்கற நீ?…” என்றார்.
“ம்மா…” அவந்திகா அசடு வழிய இங்கே புன்னகைக்க,
“சரி, சரி. ஜூஸ் குடிக்கிற நேரமாச்சே. எதாச்சும் குடிச்சியா நீ?…” என கேட்டுக்கொண்டிருக்க,