இருவருக்கும் தனிமை கொடுத்து அனைவரும் வெளியே நின்றிருக்க அமலாவும், நளனும் உள்ளே வந்தனர்.
பின்னால் அங்கை மருத்துவமனையை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் இவர்களை நெருங்கினார்.
“வாப்பா, வா அமலா. வாங்க சம்பந்தி…” என்று முகிலரசன் அழைக்க, மற்றவர்களும் தனித்தனியாக அவர்களை அனைவருமே வரவேற்றனர்.
“ரொம்பநேரம் ஆகிடுச்சா த்தை?…” என்றாள் அமலா.
“அதனால என்னம்மா? நாங்களும் கொஞ்சம் முன்னாடி தானே வந்தோம்?…” என்றவர்,
“உள்ள வாங்க. முதல்ல குழந்தையை பாருங்க. வாங்க சம்பந்தி…” என்றழைத்தார் கலா.
“துளசி இங்க வா…” என்று அவளை தரணி அழைத்துக்கொண்டாள்.
மருத்துவமனை என்றதுமே துளசிக்கு பயம் பிடித்தது. அதிலும் உறக்கத்தில் இருந்து எழுந்த பிள்ளை,
“ஊசியா? வேணா வேணா…” என்று கூற,
“அடடா, நாம குட்டி தம்பியை பார்க்க வந்திருக்கோமே. இங்க எல்லாம் ஊசி போடவே மாட்டாங்க…” என்று துளசியிடம் ராகவ் சொல்ல அதன் பின்னரே துளசி முகம் தெளிவாகியது.
“பிள்ளையை ஊசியை சொல்லியே பயம் கட்டி வச்சிருக்கீங்க ண்ணே…” என்று ராகவ் நளனிடம் கூற,
“அதுக்காவது பயப்படட்டும்டா. அவ பயப்படற ரெண்டே விஷயம் ஒன்னு ஊசி, இன்னொன்னு நம்ம போலீஸ். ஊசிக்கு கூட சமாதானமாவா. கன் பார்ட்டிக்கு நோ வே…” என்று சொல்லிக்கொண்டே சிரித்தபடி அறைக்குள் நுழைய, அங்கே ப்ரியதர்ஷன் கைகள் அவந்திகாவின் நெற்றியில் பதிந்திருந்தது.
அடைக்கப்படாமல் சாற்றி இருந்ததனால் சத்தமின்றி நிலவன் கை வைத்ததும் கதவு திறந்துகொள்ள ப்ரியதர்ஷன் திரும்பி பார்க்க, மற்றவர்களின் கவனிப்பில் அவன் அவந்திகாவின் அருகில் அமர்ந்து மனைவியின் நெற்றியை வருடியபடி இருந்தான்.
“பார்ரா…” என்று நளன் புன்னகைக்க,
“அதெல்லாம் உலக அதிசயங்கள் கொஞ்சநஞ்சமில்லை. ஏகப்பட்டது நடக்குது…” என்று ராகவ் சிரிக்கவும், ப்ரியதர்ஷன் எழுந்துகொண்டான்.
“வாங்க…” என்று அனைவருக்கும் பொதுவாய் அழைத்து விலகி நிற்க அமலாவும், அங்கையும் வேகமாய் அவந்திகாவை நெருங்கினார்கள்.
“வாழ்த்துக்கள் மச்சான்…” என நளன் ப்ரியனிடம் வாழ்த்து கூறி,
“அத்தைட்ட குழந்தையை குடு அமலா. வச்ச கண்ணெடுக்காம பார்த்திட்டிருக்காங்க பார்…” என்று கூறவும்,
“ம்மா, பிடிங்க…” என்று நீட்டினாள் அமலாவும்.
“வர்ற வழியெல்லாம் பிள்ளை எப்படி இருப்பானொன்னு ஒரே புலம்பல். இப்ப என்னடான்னா அப்படியே நின்னுட்டீங்க?…” என்று சொல்லியவள் அவந்திகாவிடம் பேசினாள்.
அங்கைக்கு கையிலிருக்கும் பேரனின் முகம் கண்ணீரை வரவழைத்தது. வரும் வழியில் என்னவெல்லாம் பேசிவிட்டோம் குழந்தையை என்று மனது போட்டு அறுத்தது அவரை.
அவரின் அத்தனை பிம்பங்களும் விலகிக்கொண்டு பேரப்பிள்ளை மீதான அன்பு மட்டுமே அந்தநொடி முன் நின்றது.
ஆராய்ச்சி தாண்டி ஆசையாய் அந்த பிஞ்சு குழந்தையை கைக்குள் பொத்திக்கொண்டவர் பேரன் கண் விழிக்க பார்த்திருந்தார்.
“அப்பறம் மச்சான், உங்க மகனும் காக்கி சட்டை தானா? இல்லை வேற ப்ளானா?…” என்று நளன் விளையாட்டாய் கேட்க,
“இல்லை இல்லை. என் பேரனுக்கு இந்த போலீஸ் உத்தியோகம் எல்லாம் வேண்டவே வேண்டாம். வேண்டாம்…” என்று வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல அனைவரின் கவனத்தையும் குத்தி கிழித்து திருப்பியது அங்கையின் பதட்டமான, குரல்.
அடுத்தநொடி வீலென்ற சப்தம். அங்கையின் அந்த சத்தத்தில் அவரின் கையிலிருந்த குழந்தை திடுக்கிட்டு விழித்து கத்தியிருந்தது.
அவரின் குரலில் வெறும் பதட்டம் தாங்கியிருந்தால் கூட இத்தனை அதிர்வு ஏற்பட்டிருக்காது.
அதையும் தாண்டிய அவசரமும், கோபமும் அளவுக்கு மிஞ்சியே தான் இருந்தது அங்கையிடம்.
அந்த முகபாவம், இதுவரை யாருமே கண்டிராதவிதமாய் ஆக்ரோஷம் காண்பித்திருக்க ஸ்தம்பித்து பார்த்தனர்.
“ம்மா…” ப்ரியன் அங்கையை பார்க்க,
“என்னம்மா பேசறீங்க? அதுவும் பிள்ளையை கையில வச்சுட்டு? பாருங்க அழறான்…” என அமலா குழந்தையை கையில் வாங்கிக்கொண்டாள்.
“சம்பந்தி…” என கலா பேசவர,
“அத்தை விடுங்க…” என்ற ப்ரியனின் குரலில் அவர் என்னவென்று பார்க்க,
“அம்மாவையும் கூட்டிட்டு போங்க வீட்டுக்கு போறப்போ. டயர்டா இருப்பாங்க…” என்று சொல்ல அங்கை அதற்கும் மறுக்கவில்லை.
மௌனமாய் தான் நின்றார். செல்லவில்லை என்றோ, ஏன் போகனும் என்றோ எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.
தான் பேசியதும், அதனை அனைவரும் பார்த்ததும் என்று உள்ளுக்குள் என்னவோ போல் உணர்ந்தார்.
“இல்ல, இப்ப தான் வந்தாங்க…” என முகிலரசன் கூற,
“மாமா, அவங்களுக்கும் டயர்டா இருக்கும். அண்ணா சொல்றது சரி தான். இங்க தானே இருக்க போறோம்? அப்பறம் என்ன? நாளைக்கு காலையிலையே பார்த்துப்போம்…” என்றாள் தரணி.
“அதுவும் சரிதான். நீங்க வர்றீங்களா சம்பந்தி?…” என கலா அங்கையிடம் கேட்க,
“ஹ்ம்ம்…” என்று மட்டும் தலையசைத்தவர்,
“போறப்போ சொல்லுங்க…” என்றார் பொதுவாய்.
சொல்லிவிட்டு அவந்திகாவின் மறுபுறம் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்துகொள்ள அனைவரும் மாறி மாறி குழந்தையை பார்த்து சமாதானம் செய்துகொண்டிருந்தனர்.
அங்கை குழந்தையை பார்க்கவும், அவந்திகாவிடம் பேசுவதுமாய் இருக்க சற்றுமுன் அவர் பேசிய வார்த்தைகள் தான் அவந்திகாவின் மண்டைக்குள் குடைந்துகொண்டிருந்தது.
ஏன் எதற்கு என்று ஏகப்பட்ட யோசனைகள். அதனை அவளின் முகமே காண்பிக்க விழிகள் கணவனிடம் சென்றடைந்தது.
அவருக்கு மகளை விட்டு செல்ல மனதில்லை. அதற்காக அமலாவை அனுப்பவும் தோன்றவில்லை.
அவள் இருக்கவேண்டும் என்று நினைப்பாளே என கலா மருமகளை வீட்டிற்கு அனுப்ப பார்க்க,
“நீ என்ன சொல்ற?…” என்றான் ராகவ் வெளியே வந்த தரணியிடம்.
“ஏன்டா ரெண்டுநாளைக்கு உன் பிள்ளைய நீ சமாளிக்கமாட்டியா? அவ்வளவுக்கு ஒன்னும் அவன் தேடமாட்டானே? அதெல்லாம் பார்த்துப்போம். அவங்க இங்க இருக்கட்டும்…” என்ற நளன்,
“மச்சான் இங்க கலாம்மாவும் இருக்க முடியுமான்னு கேளுங்க. எப்படியும் அவங்களுக்கு விட்டுட்டு வர மனசிருக்காது. அமலாவும் நான் சொன்னாலும் வரமாட்டா. அதனால மூணு பேர் இருக்க முடியுமான்னு கேளுங்க…” என்றான்.
“ஹ்ம்ம், நான் பேசிக்கறேன்…” என்ற ப்ரியதர்ஷன் மருத்துவரின் அறைக்கு சென்றான்.
“மூணு பேர் இங்க இருக்க எதுக்கு? நைட்ல ஒருத்தர் இருந்தா போதாதா?…” என்றார் அங்கை.
சட்டென நளனுக்கு பற்றிக்கொண்டு வந்தது அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்.
“இங்க எத்தனை பேர் வேணும்ன்னு முன் அனுபவம் இருக்கறவங்களுக்கு தான் தெரியும் த்தை. அமலாவுக்கு நார்மல் டெலிவரி. ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்துட்டா. அந்தநேரம் உங்களுக்கு உடம்புக்கு முடியலை. என்னோட அம்மா பார்த்துக்கிட்டாங்க. கூட நானும் இருந்தேன்….” என்று படக்கென்று அவருக்கு குத்தும் விதமாகவே சொல்லிவிட்டான்.
உண்மைக்கும் அந்தநேரம் அங்கைக்கு உடல்நிலை சரியில்லை தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அவரின் நிலையறிந்து தான் தானும், தன் தாயும் சேர்ந்து அமலாவிற்கு எல்லாம் பார்த்துக்கொண்டது.
ஆனால் வரும்வழியில் எல்லாம் அவர் பேசிய சில பேச்சுக்களும், இங்கே பேசியதும் என்று நளனின் பொறுமையை வெகுவாய் சோதித்துவிட்டார் அங்கை.
“என் மேல ஏறி உக்காருவேன்.வேகவச்சு இறக்கிவிடறேன்….” என்று கடுப்படித்தவன்,
“நீ வேற ஏன்டா மனுஷன் பொறுமையை சோதிச்சிட்டு…” என எரிச்சலானான்.
“விடுங்கப்பா. இதை ஒரு விஷயம்ன்னு பேசிட்டு. போய் பிள்ளைங்களுக்கு கேண்டீன்ல போய் ஏதாவது வாங்கி குடுங்க…” என்று அனுப்பினார் முகிலரசன்.
ராகவ்வும், நளனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்ப நளனுக்கு பொடுபொடுவென்று வந்தது.
ஆனால் இந்தநேரம் அதை பற்றி எல்லாம் ராகவ்விடம் சொல்லி அவனின் மனதில் எந்தவித வருத்தத்தையும் ஏற்ற விரும்பவில்லை.
பொதுவாய் பேசி, சிரித்து சமாளித்துவிட்டான் அவன். இரவு அமலா, கலா, தரணி மூவரும் தங்குவது என்று முடிவானது.
அந்தநேரமே மற்றவர்களுடன் கலாவும் வீடு கிளம்பினார் சாமந்தியை அழைத்துக்கொண்டு.
ப்ரியதர்ஷன் அமலா மட்டும் மருத்துவமனையில் இருந்தனர். இரவு அவர்களை அழைக்க வருவதாய் சொல்லி மனைவியை விட்டு அவன் எங்கும் நகரவில்லை.
வீடு சென்று இரவு உணவிற்கு தேவையான எல்லாம் செய்ய துவங்க சாமந்தி அவருக்கு உதவ என்று பரபரப்பானார்.
பிள்ளைகளுடன் வெளியே விளையாட நளனும், ராகவ்வும் சென்றுவிட தரணி என்னென்ன வேண்டும் என்று ஒவ்வொன்றும் பார்த்து செய்ய அங்கை உடன் வந்தார்.
“இப்படி வாங்க சம்பந்தி, நான் பார்க்கறேன்…” என அங்கை கலாவை அழைக்க,
“நான் பார்த்துக்கறேன் சம்பந்தி. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? அதுவுமில்லாம இங்க அவந்தியோட நீங்க வந்தது. என்ன எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியாதுல. தடுமாற்றமா இருக்கும். நான் போனவாரம் தானே வந்துட்டு போனேன். நீங்க இருங்க…” என்று சொல்லிவிட்டார் கலா.
அதுவும் அவர் மிக சாதாரணமான தொனியில் தான் சொல்லியிருந்தார். அதையே அங்கையால் தாங்க முடியவில்லை.
“இது என் மகன் வீடும் தான் சம்பந்தி. ஆனா உங்க நாட்டாமை தான் அதிகமா இருக்கு…” என்று சிரித்துக்கொண்டே சொல்லியவிதத்தில் கலா திடுக்கிட்டு அவரை திரும்பி பார்த்தார்.
அங்கையின் முகம் சாதாரணம் போல தான் இருந்தது. ஆனால் சொல்லிய வார்த்தையும், சொல்லியவிதமும் கலாவை நோகடிக்க,
“நான் அந்த அர்த்தத்துல சொல்லலை சம்பந்தி…” என்றவருக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.