தரணி ராகவ்வுடன், அமலாவும் நளனும் சற்று தள்ளி அமர்ந்திருந்தனர். கையிலிருக்கும் குழந்தையை தர மறுத்து தன் கைகளுக்குள் வைத்திருந்தான் ப்ரியதர்ஷன். அருகில் அவந்திகா.
அவள் நெற்றியில் தையல் போடப்பட்டிருக்க அதன் காயம் இன்னும் வலியை கொடுத்தது அவந்திகாவிற்கு.
ஒருவாரம் முழுதாய் கடந்திருந்தது. அங்கை உடல்நிலை சற்று தேறி இன்னும் இருநாட்களில் வீடு திரும்பலாம் என்றிருக்க அன்றைக்கு அங்கைக்கு கவுன்ஸிலிங் தரும் மருத்துவரை காண வந்திருந்தனர்.
இங்கே அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் யாரை பார்த்தாலும் பேச மறுத்து கண்ணை மூடிக்கொண்டார் அங்கை.
அவந்திகாவிடம் மட்டும் அவரின் பார்வை மன்னிப்பையும், வேதனையையும் காண்பித்தது.
இப்போதும் உள்ளே அங்கையிடம் மருத்துவர்கள் பேசிக்கொண்டிருக்க அவர்கள் அழைக்க காத்திருந்தனர் குடும்பத்தினர்.
அவந்திகாவை தாய் வீட்டிற்கு அழைத்து வந்ததில் இருந்து குழந்தையின் அழுகை ஏராளம்.
இடமாற்றம் ஒருபுறம் என்றால், எங்கும், எதற்கும் பிள்ளை தகப்பனை தேடியது. விடாது அழுகை. விழித்தாலும் உறங்கினாலும் அவன் வாசம் தேடி அழுது களைத்தது.
“சுத்தம், சும்மாவே உன்னை அனுப்ப யோசிச்சார். இப்ப மகன் இப்படி தேடினா சொல்லவே வேண்டாம்…” என்று மகளிடம் அங்கலாய்த்துக்கொண்டார் கலா.
ஒருவழியாய் புகுந்தவீட்டிற்கும் அவந்திகா வந்துவிட வந்த அன்றும், அதற்கு அடுத்த நாளும் அங்கை அவளை கைக்குள் வைத்து தாங்கினார் என்றே சொல்லவேண்டும்.
மீண்டும் மருமகள், பேரன் என்று அவரின் உலகமே அவருக்கு கிடைத்துவிட்ட சந்தோஷம்.
“இன்னும் ஒரு ஒருவாரம் கழிச்சு போவோமே. அவன் இங்க இருக்கட்டும்…” என்று பேரனை பார்த்துக்கொண்டே அங்கை சொல்ல,
“அவனோட தானம்மா நீங்களும் இருக்க போறீங்க? அப்பறம் என்ன? புறப்படலாம்…” என ப்ரியன் கிளம்ப கூற, இங்குமங்குமாய் காரணம் கூறிய அங்கைக்கு எப்படி அதற்குமேல் மறுப்பதென்று தெரியவில்லை.
அவந்திகாவிடம் தான் பேசினார் அங்கை. அவள் சொல்லிவிட்டால் மகன் கேட்பானே என்று.
“ரொம்ப எல்லாம் வேண்டாம் அவந்திம்மா. கொஞ்சநாள் இங்க இருப்போம்….” என்று கெஞ்சுதலாய் சொல்ல,
“ஏற்கனவே இவன் அவங்கப்பாவை ரொம்ப தேடறான் த்தை. அவங்களும் அடிக்கடி வர முடியுமா? நாம போவோம். வாங்களேன்…” என்று அவள் அழைக்க,
“இதுக்கு தான் சொல்றேன் வேண்டாம்ன்னு. கொஞ்சமாவது உன்னோட வச்சுக்க பாரு அவந்தி. எல்லாத்துக்கும் அப்பாவை பாட்டியை தேடினா உன்னை மறந்திடுவான் இவன்…” என்று சொல்ல அவந்திகா திகைத்துவிட்டாள்.
“என்னை ஏன் மறக்க போறான்? நானும் கூட தானே இருப்பேன்? எப்படி மறக்க முடியும்?…” என்று சொல்ல,
“மறப்பான். உனக்கு தெரியாது. அவந்திம்மா நான் சொல்றேன்ல. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…” என்று எத்தனையோ எடுத்து கூற அவளால் அதனை ஏற்க முடியவில்லை.
“உங்களுக்கு அங்க வர இஷ்டம் இல்லை த்தை. அதான் இப்படி சொல்றீங்க. சின்ன விஷயத்தை இவ்வளோ தூரம் கொண்டுட்டு வர்றீங்க….” என்று சொல்லிக்கொண்டிருக்க ப்ரியன் வந்துவிட்டான்.
“என்னாச்சு? ஏன் இவ்வளோ சத்தம்?…” என கேட்கவும் அவந்திகாவிற்கு அங்கை பேசியதை சொல்லவேண்டும் என தோன்றவில்லை.
எங்கே ஏற்கனவே அவர் வரவில்லை என்றதற்கு காய்ந்துகொண்டிருப்பவன் மேலும் இதனை கூறி அங்கை சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று மௌனமாய் இருக்க,
“என்னம்மா? இன்னும் என்ன உங்களுக்கு?…” என்றான் தன்மையுடன்.
“அதான் சொல்றேன்ல தர்ஷன். என் வீட்டை அப்படியே போட்டுட்டு…”
“ம்மா, வீடு வீடு வீடு. இந்த வீடு இங்க தான இருக்கும். இது உங்க வீடு தான். யாரும் அதுக்கு உரிமை கொண்டாடமுடியாது. அதுக்காக உங்களை தனியாவும் விடமுடியாது. எங்களோட இருங்க…” என்று அவன் முயன்றளவு பொறுமையுடனே தான் கூறினான்.
கோபமில்லாத அந்த குரலும் அங்கைக்கு அதட்டலாகவே உருவம் தந்தது. புரிந்துகொள்ளும் நிலையை எல்லாம் கடந்திதிருந்தார்.
“இல்ல, கொஞ்சநாள். அதுக்கப்பறம் பார்ப்போம்…” என்று அப்போதும் அவர் மறுக்க,
“பிள்ளைங்களை விட, பேரனை விட உங்க குடும்பத்தை விட இந்த வீடு தான் பெருசா போச்சா?…” என்று இப்போது குரலை உயர்த்த அவந்திகா பயந்து போனாள்.
“ஏன் இவ்வளோ கோவம்? பொறுமையா சொல்லுங்க. சொன்னா கேட்டுப்பாங்க…” என்று அவனை அமைதிப்படுத்த முயல அங்கே வந்து சேர்ந்தனர் நளனும், அமலாவும்.
அன்றிரவு விமானத்திற்கு தான் பயணச்சீட்டு எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவரை உடன் இருக்கலாம் என்று வந்திருந்தனர்.
“நீ வாயை மூடு அவந்தி. நான் வந்து சொல்லுவேன்….” என்று அவளை அதட்ட,
“நீயும் அவளை பேச விடாம பன்ற இல்ல? அப்படியே உங்கப்பா. உங்கப்பா தான் நீ. அவளையும் அவளையும் இப்படியாக்கிடுவ. ஆமா ஆமா….” என திடீரென்று கடத்தியவர் அவந்திகாவை பார்க்க அந்த பார்வையும் பேசும் தொனியும் தொண்டையில் நீர் வற்ற செய்தது அவந்திகாவிற்கு.
“ம்மா, என்னாச்சு?…” என்றாள் அமலா தாயிடம் கண்ட இந்த உடல்மொழி மாற்றத்தில்.
“வாய மூடுங்க, யாரும் பேசக்கூடாது. எல்லாரும் உங்கப்பா பேச்சு தானே கேட்பீங்க. என்கிட்ட பேசாத. நீயும் பேசாத. அவனும் பேசவேண்டாம். எல்லாரும் போங்க. நானும் அவந்தியும் மட்டும் இருக்கோம். அவ தான் என்னை புரிஞ்சுப்பா…” என்ற அங்கை,
“இதுக்கு தான் அவந்தி அத்தை சொன்னேன். அவனோட போனா கோவப்படுவான். பேசவிடமாட்டான். உன்னை சந்தோஷமா சிரிக்கவும் விடமாட்டான். எங்கயும் இருக்க விடமாட்டான். கடைசில வாழவே விடமாட்டான்…” என்று அழுதுகொண்டே சட்டென்று குரலை தழைத்து, கனிவுடன் அவந்திகாவிடம் அவர் கூற,
“ம்மா போதும். என்ன பேசறீங்க?…” என்று ப்ரியன் அவர் அருகில் வர பார்த்தான்.
“கிட்ட வராத தர்ஷன். நீ என்னை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போக தான பார்க்கற? எனக்கென்ன பைத்தியமா? நான் நல்லா தான இருக்கேன். திருச்சிலையும் நீ இதத்தான் செய்ய பார்த்த. நான் தான் உன் கூட வரலைன்னு சொல்றேன்ல. அப்பறமென்ன?…” என்றார் வெறுப்புடன் மகனை பார்த்து.
அவரின் முகத்தில் அளவற்ற அன்பை பார்தத்தில்லை என்றாலும் என்றுமே வெறுப்பை பார்த்ததில்லை ப்ரியன்.
இப்போது அங்கை அவந்திகாவிடம் காண்பிக்கும் அந்த உணர்வில் ஒரு சதவிகிதம் கூட தன்னிடம் காண்பிக்கவில்லை என்பதை கண்டு உடைந்து போனான் ப்ரியதர்ஷன்.
“அவந்தி, நீ அத்தையோட இரு. இந்த வீடு, என் வீடு. அடுத்து உன் வீடு. ஆமா. நான்லாம் உனக்கு உரிமை இல்லைன்னு சொல்லவேமாட்டேன். என் பேச்சை கேளு. உன்னை சந்தோஷமா பார்த்துப்பேன்…” என்று சொல்ல சொல்ல அவந்திகா பயந்து விலக பார்க்க,
“அத்தை உன்னை நல்லா பார்த்துப்பேன். நாம இங்க நல்லா தான இருந்தோம். அவந்திம்மா இங்க நீ சந்தோஷமா, உன் விருப்பப்படி இருக்கலாம்…” என்று அவளின் கன்னம் தொட வர,
“இதுக்கு மேல நாம ஹாஸ்பிட்டல் போகாம இருக்க முடியாது மச்சான்…” என்ற நளன்,
“அத்தை…” என்று அழைக்க யாரையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை அவர்.
அறைக்குள் குழந்தை விழித்துக்கொண்ட சப்தம். அனைவரின் கவனத்தையும் திசை திருப்பினான் குழந்தை.
“அவந்தி நீ போய் குழந்தையை பாரு…” என்ற ப்ரியனின் வந்தவளை,
“போன்னு சொல்றேன்ல….” என்று நகர்த்தியவன்,
“ம்மா, வாங்க. ப்ளீஸ் நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன்….” என்று கையெடுத்து கும்பிட்டும் பார்த்தான் ப்ரியன்.
“நான் சொல்லிட்டே இருக்கேன். வரமாட்டேன்னு சொல்றேன்ல. கேட்கமாட்டியா?…” என்றவரின் கோபம் கட்டுக்கடங்காமல் பெருக அருகில் வைத்திருந்த கண்ணாடி குடுவையை எடுத்து மகனை நோக்கி வீச,
“என்ன பன்றீங்க த்தை…” என்றபடி சட்டென குறுக்கே விழுந்தாள் அவந்திகா.
நொடியில் கண்ணை மூடி திறக்கும்முன் நிகழ்ந்துவிட்ட விபரீதத்தில் அனைவரும் ஸ்தம்பித்து போக,
“அவந்தி…” என்ற அலறலுடன் ப்ரியதர்ஷன் அவளை ஓடிவந்து தூக்க அங்கை இதனை எதிர்பார்க்கவே இல்லை.
நெற்றியில் இருந்து குபுக்கென்று ரத்தம் கொட்ட ஆரம்பிக்கவுமே மயங்கி சரிந்தாள் அவந்திகா.
தான் செய்துவிட்ட செயல், அதுவும் உயிராய் நினைத்த மருமகளை காயப்படுத்தியது, இத்தனை நாள் போராட்டம், பிள்ளைகளின் பார்வை என அவரை திசைக்கொன்றாய் அழுத்தங்கள் மூழ்கடிக்க சுரீரென்று நெஞ்சாங்கூட்டில் வலி மிகுந்து அழுத்த ஆரம்பித்தது.
நெஞ்சை பிடித்துக்கொண்டு சத்தமின்றி அங்கையும் சரிய குடும்பம் நிலைகுலைந்தது.
இப்போது நினைக்கும் பொழுது கூட அசாத்திய மனது படைத்தவர்களையும் ஆட்டிவிட்டது அன்றைய நிகழ்வு.
ஒரேநேரத்தில் இருவரையும் பார்க்கவேண்டும். கைக்குழந்தை வேறு. சுதாரித்துக்கொண்டு உடனடியாக செயல்பட காப்பாற்ற முடிந்தது.
கலாவிற்கு இன்னும் பயம் பிடித்தது. இப்படி ஒரு மனநிலையா அங்கைக்கு என்று.
அவர் தான் அவர்களை கவனித்து, பிள்ளைகளையும் பார்த்து என்று இங்கும் அங்குமாய் அழைந்தார் முகிலரசனுடன்.
ஒருவாரம் நரகமென கடந்திருந்தது அவர்களுக்கு. இன்னும் அங்கையை பார்த்துவிட்டு தங்களை அழைக்கவில்லையே என்று அவந்திகா ப்ரியதர்ஷனின் கையை சுரண்ட,
“என்ன அவந்தி?…” என்றான்.
“இன்னும் கூப்பிடலை. அத்தைட்ட பேசிட்டிருப்பாங்களோ?…” என்று கேட்க தலையசைப்பு மட்டும் தான் அவனிடத்தில்.
இந்த ஒருவாரத்தில் உயிரற்ற உணர்வற்ற முகம் தான் ப்ரியதர்ஷனிடம். எப்போதும் இறுக்கம் நிறைந்திருந்தாலும் துடிப்பு இருக்கும்.
அதுவுமில்லாத பிள்ளையாய் அவன் தவித்திருப்பதை பார்க்க முடியவில்லை ஒருவருக்கும்.
அமலா சொல்லி மாய்ந்துவிட்டாள் தான் கூட அவரின் மாற்றத்தை கவனிக்கவில்லையே என்று.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.