“எதுவும் இருக்காது அண்ணி. போய்ட்டு வாங்க. இது ஒரு தெளிவுக்கு தான். அதான் உங்க தம்பியும் உங்களோட வர்றாங்க தானே?…” என்றாள் அவந்திகா மென்னகையுடன்.
“எனக்கு எதுவும் இல்லையே? நான் நார்மல் தானே?…” அமலாவுக்கே அத்தனை சந்தேகம்.
கேட்கையில் அழுகை வெடித்துவிட்டது. சற்று தள்ளி துளசி, குழந்தை ஆத்விக்கின் விரல்களை பிடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவன் உறங்குவதற்கு கதை சொல்கிறேன் என்று அவனுடனே இருந்தாள் துளசி.
அமலாவின் பார்வை தன் மகளின் மீது தான். பரிதவிப்பான அந்த பார்வையும், அழுகையை மென்று விழுங்க முயலும் சிரமமும் நளனையும் கலங்கடித்தது.
அங்கை இறந்து நாற்பது நாட்களாகிவிட்டது. ப்ரியதர்ஷனால் ஜீரணிக்க முடியவில்லை என்றாலும், வெளியே காண்பித்துக்கொள்ளவில்லை.
அவந்திகாவை தவிர அவனின் மனவலியை மற்றவர்கள் பாராவண்ணம் மறைத்துக்கொண்டான் அவன்.
ஆனால் அமலாவினால் அதனை தாண்டி வரமுடியவில்லை. குற்றவுணர்வு பேயாய் பிடித்தாட்ட, நிலைகுலைந்த அவளை சாமாளிக்க முடியவில்லை.
அங்கை இருந்த பொழுதும் கூட அத்தனை தூரம் அவள் தளர்ந்ததில்லை. ஆனால் அவர் இறந்ததில் இருந்து அமலாவின் பேச்சுக்கள் மொத்தமும் அம்மா மட்டுமே.
“என்னோட அம்மாவை நான் கூடவே இருந்தும் விட்டுட்டேன். நான் பார்க்காம போய்ட்டேன். அம்மா பாவம், அப்போ அம்மா வாழ்க்கை. இனிமே நான்…” என என்னென்னவோ பேசி, குழம்பி என்று கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் தொலைந்துகொண்டிருந்தாள்.
“அண்ணிக்கு கண்டிப்பா கவுன்ஸிலிங் தேவைன்னு தோணுதுங்க. அன்னைக்கு அத்தைக்கு பார்த்தாப்போ பேசினாங்களே டாக்டர். அவங்ககிட்ட கேளுங்க. பேசிட்டு வரலாம்…” என்று அவந்திகா ப்ரியதர்ஷனிடம் சொல்லியிருக்க,
“நானும் அதைத்தான் யோசிச்சேன். ஆனா மாப்பிள்ளை என்ன சொல்லுவாரோன்னு தான்…” என்றவன்,
“சரி பேசிடறேன்…” என்று நளனிடம் பேச,
“எனக்கும் இப்படியே விடறது சரியில்லைன்னு தோணுது. அவ தூங்கறது கூட இல்லை மச்சான். குழந்தையை பார்த்துட்டே இருக்கா. இவ என்னை கவனிக்கிறாளா, நான் என் அம்மாவை விட்டுட்டேன்னு சொல்லி ரொம்பவே மனசொடிஞ்சு போயிருக்கா..” என்றான் நளன்.
அதன்பின் தாமதிக்கவில்லை. மருத்துவர் மணிமேகலையிடம் பேச நேரம் வாங்கிவிட்டு அமலாவிடம் சொல்ல அலண்டுபோனாள் அவள்.
“அப்போ எனக்கு…” என்று ப்ரியன், அவந்திகா, நளன் மூவரையும் மாறி மாறி பார்க்க,
“உங்களுக்கு எதுவும் இல்லை. போய் பேசிட்டு வாங்க அண்ணி…” என்ற அவந்திகா,
“இது வேற யாருக்குமே தெரியாது. என் அம்மா வீட்டுல கூட நான் சொல்லலை. ஜஸ்ட் ஒரு சிட் சாட் தான்…” என்று தேற்ற சரி என்றாள் அமலா.
குழந்தைகளை அவந்திகா பார்த்துக்கொள்ள, அமலாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டான் ப்ரியதர்ஷன். உடன் நளனும்.
அமலாவின் விழிகளில் அப்பட்டமான பயம் அப்பிக்கிடந்தது. அவ்வப்போது நளனை வேறு பார்த்துவைக்க,
“ஏன்டி சாவடிக்கிற? உன்னை என்ன வேண்டாம்ன்னா சொல்லபோறேன்? என் தலையில ஏறி உக்கார்ந்தாலும் கடைசி வரை நீ என் கூட தான் இருப்ப. போதுமா?…” என்று கத்திவிட்டான் அவன்.
ப்ரியன் அவர்களை திரும்பி பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. மனமெல்லாம் கனத்து போயிருந்தது.
இனி சாகும் காலம் வரை இந்த குற்றவுணர்வு அவர்களை விட்டு ஒழிய போவதில்லை என்பது தான் நிதர்சனம்.
மருத்துவமனை வந்ததும் மணிமேகலை அழைப்பிற்கு காத்திருக்க பத்துநிமிடங்கள் கழித்து தான் உள்ளே அழைத்தனர்.
“வாங்க ஸார். எப்படி இருக்கீங்க?…” என்று மணிமேகலை நலம் விசாரித்துவிட்டு அமலாவை பார்த்து புன்னகைத்தார்.
“நீங்க போன்ல சொல்லியிருந்தீங்க. எங்களுக்குமே வருத்தம் தான். ஒருவகையில உங்கம்மாவுக்கு இது ஒரு விடுதலைன்னும் சொல்லலாம். பிறப்பும், இறப்பும் நம்ம கையில் கிடையாது…” என்று சொல்லி அம்லாவிடமும் அவர் பேச ப்ரியதர்ஷன் முகத்தில் யோசனையான பாவனை.
“டாக்டர், இஃப் யூ டோன்ட் மைண்ட், நான் டாக்டர் அஷ்மிதாகிட்ட பேசலாமா?…” என்றான் அவன் மணிமேகலையிடம்.
அவரின் முகத்தில் ஆச்சரியமும் புன்னகையும். அமலா, நளனை பார்த்துவிட்டு இவனிடம் திரும்பியவர்,
“அவங்க இங்க இல்லையே. அவங்களோட ஊர் குறிஞ்சியூர். ஆக்சுவலி அன்னைக்கு கூட என்னை இன்வைட் பண்ண வந்திருந்தாங்க. அந்த சமயம் நர்ஸ் வந்து என்னை கூப்பிடும்போது அஷ்மிதாவும் என்னோட இருந்ததால நான் தான் அவங்களை உங்க அம்மாக்கிட்ட கூட்டிட்டு போனேன்…” என்றவர்,
“அதான் சொன்னேனே அன்னைக்கே. உங்கம்மாவை எங்களால பேச வைக்க முடியலை. என்ன செஞ்சும், கேட்டும் மனம்விட்டு பேச அவங்க தயாரா இல்லை. அஷ்மிதா இருந்ததால ஜஸ்ட் ஒரு ட்ரைக்கு அவங்களை கூட்டிட்டு போனேன்…” என்றார் மூவரையும் பார்த்துவிட்டு.
“ஓஹ்…” என்ற ப்ரியதர்ஷன் விரல்கள் யோசனையாய் மேஜையை தட்டியது.
“உங்களுக்கு அஷ்மிதாகிட்ட பேசறது பெட்டரா இருக்கும்ன்னு தோணினா நோ அப்ஜெக்ஷன். நான் அவங்கட்ட பேசிட்டு சொல்றேன்…” என்றவர் உடனடியாக அவளுக்கு தொடர்புகொண்டார்.
ஐந்துநிமிடங்கள் தான். விவரத்தை கூறி அவளிடம் பேசிவிட்டு புன்னகையுடன் ப்ரியனை பார்த்தவர்,
“ஒரு அரைமணி நேரத்துல கால் பன்றேன்னு சொல்லிருக்காங்க. நீங்க வெய்ட் பண்ணுங்க. நான் கூப்பிடறேன்…” என்றதும் சரி என்று வெளியே வந்தான் ப்ரியதர்ஷன்.
“இப்ப எதுக்கு மச்சான் இன்னொரு டாக்டர்…” என்றான் நளன்.
“காரணமா தான். அவங்கட்ட பேச தோணுச்சு. அக்கா பேசட்டும்….” என்றவன் கை கட்டி அமர்ந்துகொண்டான்.
அரைமணிநேரத்திற்கு முன்பே அவர்கள் மீண்டும் உள்ளே அழைக்கப்பட வீடியோ காலில் அஷ்மிதா புன்னகை முகமாய் அமர்ந்திருந்தாள்.
“ஹாய் ஹாய்…” என்று கையசைத்து அவர்களிடம் விசாரித்துவிட்டு,
“டாக்டர் எல்லாமே சொன்னாங்க. வருத்தமான விஷயம் தான். ஆனாலும் நீங்க இவ்வளோ சபர் ஆக வேண்டாம் அமலா…” என்றாள் குறையாத புன்னகையுடன்.
அவளின் முகமும், புன்னகையுமே பார்ப்பவர்களுக்கு மருந்தானது. அமலாவும் அன்று தான் அவளை பார்த்தாள்.
அங்கையை பற்றி பேசவுமே அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் உடைப்பெடுக்க விசும்ப ஆரம்பித்துவிட்டாள் அமலா.
“அமலா அழாத…” என்றான் நளன்.
“விடுங்களேன். அவங்க அழட்டும்….” என்ற அஷ்மிதா அமலா தன்னை பார்த்ததும்,
அவளின் கேள்வியும், பார்வையும் அமலாவின் அழுகையை நிறுத்திவிட்டு கவனிக்க செய்தது.
“உங்கம்மாவை நினைச்சு வருத்தப்படறீங்க, அழறீங்க, ஓகே. ஆனா நீங்க அவங்களை கவனிக்கலைன்னு எப்படி உங்களையே குற்றம் சொல்லிப்பீங்க? நீங்க தெரிஞ்சு அப்படி செஞ்சீங்களா?…” என்றாள் அஷ்மிதா.
“இல்லை, அப்படில்லாம் இல்லை…” என்று அவசரமாய் அமலா மறுக்க,
“ஹ்ம்ம். அப்போ இவ்வளோ கில்ட்டா ஃபீல் பண்ண வேண்டியதில்லை. தாய் இல்லைன்னா எல்லா பொண்ணுங்களுக்குமே அது ஈடு செய்யமுடியாத இழப்பு தான். எனக்கும் கூட விவரம் தெரியமுன்னமே என்னோட அம்மா இல்லை….”
“அச்சோ…” என்றாள் அமலா.
“அச்சோ தான். ஆனா ஏதாவது ஒருவிதத்துல அவங்க நம்மளோட நல்லவிதமா இருக்காங்கன்னு நான் நம்பறேன். நம்மோட நம்பிக்கை தானே நம்ம பலமே. நீங்களும் அதை நம்புங்க….” என்றவள்,
“அமலா உங்க தம்பிக்கும் சொல்லாத ஒரு விஷயம் சொல்றேன். உங்கம்மா எவ்வளவோ துக்கங்களை, துயரங்களை அவங்களுக்குள்ள வச்சிருந்தாங்க தான். ஆனா அதை எதிர்த்து போராடனும், அதை விட்டு வெளில வரனும்ன்னு அவங்க நினைக்காம போய்ட்டாங்க. கோழையா இருந்துட்டாங்க. இதுல நீங்க எந்தவிதத்துல காரணமாவீங்க?…”
“உங்க குழந்தைப்பருவம், மத்தவங்க வழிகாட்டுதல்ல நடக்கக்கூடிய காலம். வீட்டுல உள்ள பெரியவங்க என்ன சொல்றாங்கன்றதை கேட்டு நடந்திருக்கீங்க. உங்கம்மா நினைச்சிருந்தா உங்களை நெருங்கி இருக்கலாம். அவங்களோட சூழ்நிலை, மனநிலை அதுக்கு இடம் தரலை….” என அஷ்மிதா கூற,
“ஆனாலும் அம்மாவை நான் பார்த்திருக்கனும் தானே?…” என்றாள் அமலா மீண்டும்.
“இல்லைன்னு சொல்லலை. இப்போ நீங்க முகம் வாடி உக்கார்ந்திருந்தா உங்க பொண்ணு உங்களை பார்த்து கவனிச்சு கேட்குமா கேட்காம போகுமா?…” என்று கேட்க,
“கண்டிப்பா கேட்பா….” என அமலா.
“அதான் என்ன கேட்பாங்க?…”
“என்னம்மா தனியா இருக்கீங்கன்னு கேட்பா. உடம்பு சரியில்லையான்னு கேட்பா. பசிக்குதான்னு கேட்பா…” என்ற பொழுதில் தான் தன் தாயிடம் இதையெல்லாம் கேட்டதில்லையே என்னும் மனஉறுத்தல்.
“எங்கம்மாட்ட இதெல்லாம் நான் கேட்டதே இல்லை…” என்றும் சொல்லியாதும் கண்ணீர் வந்துவிட்டது அமலாவிற்கு.
ப்ரியதர்ஷனுமே அந்த பேச்சுக்களை கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தான். அமலாவின் மன போராட்டத்தை வெளிப்படையாய் பார்க்க முடிந்தது.
ஆனால் ப்ரியதர்ஷன் மனதிற்குள் படும் பாட்டினை எவர் கண்களும் அறிந்திருக்கவில்லை.
அவனுக்குமே மனஅமைதி தேவையாய் இருந்தது. அதற்கென்றே அவன் வந்திருந்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.