தன்னிடம் ஏதோதோ பேசிக்கொண்டிருந்த மித்ராவிடம் இல்லவே இல்லை ரதியின் கவனம்.
‘கீர்த்தி பேபி’யையே சுற்றி வந்தது அவளின் யோசனை.
அவள் கவனம் இங்கில்லை என மித்ராவுக்கும் புரிந்தது. பயணக் களைப்பு என எண்ணி அவள் எதுவும் கேட்காமல் விட்டுவிட்டாள்.
திருவரசன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிவிட்டுத் திரும்பும் வரை, அமைதியாக அமர்ந்திருந்தாள் ரதி. அலைபேசியோடு ஏதோ ஒரு அறைக்குள் நுழைந்தவன் தான் ப்ரித்வி. அதன்பின் அவனை இவள் காணவேயில்லை.
“கிளம்பலாமா மா?” என்று திருவரசன் கேட்டதும் எழுந்தவள், மித்ரா, மித்ராவின் தாய், தந்தை என அனைவரிடமும் “வரேன்”என சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.
அவனைத் தேடிய தன் கண்கள் மீதே அவளுக்குக் கோபம்.
அங்கிருந்து கிளம்பி வீடு செல்லும் வரையிலும் கூட திருவரசனும் ரதியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ரதி தான் ப்ரித்வி-கீர்த்தி பற்றிய சிந்தனையில் உழன்றுக்கொண்டிருந்தாள் என்றால், திருவரசனிடம் கிருஷ்ணமூர்த்தி தனியே அழைத்துப்சொன்ன செய்தி அவரை ஆட்கொண்டிருந்தது.
யோசனையின் பிடியில் இருந்தாலும், ரதியின் முகச்சுணக்கத்தைக் கவனிக்கத் தவறவில்லை திருவரசன்.
கவனித்தும் அவர் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை என்பதால் அமைதியின் ஆட்சியே நடந்தது.
வீட்டின் அளவிற்கு ஏற்றது போலவே, பெரிய வாயிற்கதவுகள்.
கதவுகள் மூடியிருக்கவும் மகிழுந்தை வெளியில் நிறுத்தி ஹார்ன் ஒலி எழுப்பினார் திருவரசன்.
வாயிற்கதவு. கதவுக்குப் பின் பெரிய தோட்டம். அந்தத் தோட்டத்தின் ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடமிருந்தது. தோட்டத்தைத் தாண்டித் தான் வீட்டுக்கும் செல்ல வேண்டும்.
தோட்டத்தில் இருந்த இருக்கையில் கார்த்தி அமர்ந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. கார்த்தி ரதியின் இரண்டாவது பெரியப்பாவின் இளைய மகன். ரதியின் ஐந்து அண்ணன்களில் இளையவன். அரவிந்தை விட இரண்டு வயது குறைவு அவனுக்கு.
திருவரசன் ஒலி எழுப்பியும் கார்த்தி திரும்பவில்லை. செவிப்பேசியை மாட்டிக்கொண்டு ஏதோ பாடலுக்கேற்ப தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.
அதில் கோபமான திருவரசன், “டேய்… கார்த்தி… டேய்” என இங்கிருந்து காட்டுக்கத்து கத்தியும் கார்த்தி திரும்புவது போல் இல்லை.
“பெரியப்பா. நான் எறங்கிப் போய் தொறக்கறேன்” என்று ரதி இறங்கப் போகவும், “நீ உக்காரும்மா” என்றவர், “காது கேக்கதா அவனுக்கு. செவுட்டு மிஷினை மாட்டிக்கிட்டு உக்காந்துட்டு இருக்கறதைப் பாரு. அவனுக்கு ஃபோனை போடும்மா” என்றார்.
ரதி கார்த்தியின் எண்ணிற்கு அழைக்கவும், அவள் கையிலிருந்த அலைபேசியை வாங்கிக்கொண்டார் திருவரசன்.
“நீ முதல்ல வந்து கதவைத் தொற. அப்புறம் சொல்றேன்” என்று திருவரசனின் குரல் கேட்கவும், ‘ஆத்தி… சின்ன பிசாசுன்னு நெனச்சு பூதத்து கிட்ட வாய குடுத்துட்டோமே’ என்று நினைத்துக்கொண்டு, “இதோ. இதோ ஓடி வரேன் பெரியப்பா” என்று சொல்லிவிட்டு வந்து கதவைத் திறந்தான் கார்த்தி.
மகிழுந்தை அதற்குரிய இடத்தில் திருவரசன் நிறுத்தவும், இறங்கினாள் ரதி.
“ஏன். அம்மணி எறங்கி கதவைத் தொறக்க மாட்டீங்களோ!!!” என்று கார்த்தி கேட்க, அதற்கு “ஏன் நீ தொறக்கமாட்டியோ?” என்று கார்த்திக்கின் காதைத் திருகினார் திருவரசன்.
திருவரசன் உள்ளே சென்றதும், கார்த்தி ரதியைப் பார்க்க, வாய் மேல் கை வைத்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தாள் ரதி.
மற்ற அனைவரிடமும் என்ன தான் அமைதியானாலும், ரதியின் வாலுத்தனமெல்லாம் கார்த்தியிடம் தான் கட்டவிழும். ‘பேயே… பிசாசே’ என்று அழகழகானப் பெயர்களை அவளுக்குச் சூட்டி மகிழ்வதும் அவன் தான்.
“ஐயோ பாவம். காது வலிக்குதா கார்த்தி” என்று ரதி அவனைப் பார்த்து சிரிக்க, “இப்போ தெரியும் வலிக்குதான்னு” என்று கார்த்தி ரதியின் காதைத் திருகப் போக, கைவைக்கும் முன்னே, “பெரியப்பா. அண்ணா காதைத் திருகறான்” என கத்தவும், “டேய். வந்தேன்னா உனக்குக் கையே இருக்காது சொல்லிட்டேன்” என உள்ளிருந்து வந்தது திருவரசனின் குரல். கூடவே ரதியின் குரல் கேட்டதும் வெளியில் ஓடி வந்தார் கலையரசன். ரதியின் மற்றொரு பெரியப்பா. கார்த்திக் மற்றும் கண்ணனின் தந்தை.
அவரைப் பார்த்ததும், ‘பெரியப்பா’ என்று ஓடிப்போய் கட்டிக்கொண்டாள் ரதி.
“கொரங்குக்குட்டி மாதிரி தாவுது பாரு” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டு நின்றான் கார்த்தி.
“பயணம் எல்லாம் சுகமா இருந்துச்சா தங்கம்???” என்று கலையரசன் கேட்க, “ஐயே. அப்டியே மகாராணி இங்கிலாந்துல இருந்து வராங்க பாரு. சென்னைல ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வர்றது. அதுக்கு இவ்ளோ சீனு. நல்ல குடும்பம் டா எப்பா” என்றான் கார்த்தி.
அவனை முறைத்தவள், வேண்டுமென்றே, “பெரியப்பா. லக்கேஜ் எல்லாம் கார்ல இருக்கு” என்று சொல்ல, “லக்கேஜ் எடுத்து உள்ள வைடா” என்றார் கலையரசன் கார்த்தியிடம்.
சென்னையில் இருந்து திருமண நிகழ்வுகள் அனைத்திற்கும் அணிவதற்கான உடைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வந்திருக்க, அவள் பைகள் கணமாகவே இருக்க, “வேணும்ன்னே ரெண்டு கருங்கல்லைத் தூக்கிப் போட்டுக்கிட்டு வந்திருக்கும் பிசாசு” என்று அவளைத் திட்டிக்கொண்டே உள்ளே சென்றான் கார்த்தி.
அவனைத் தொடர்ந்து கலையரசன், ரதி இருவரும் உள்ளே சென்றனர்.
உள்ளே வந்ததும் மொத்தக் குடும்பமும் வரவேற்க, ப்ரித்வி பற்றிய யோசனையே இல்லாமல் போனது ரதிக்கு.
மூன்று குடும்பமும் தாராளமாக தங்கும் அளவிற்குப் பெரிய வீடு அது. ரதியின் தாத்தா காலத்து வீடு. அவள் தந்தை, பெரிய தந்தைகள் எல்லோரும் வளர்ந்த வீடு.
பாட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, இப்போது தாத்தா ரங்கராஜன் மட்டுமே தனியே இருந்தார்.
மூன்று குடும்பமும் கடலூரிலே தான் இருந்தாலும், அவரவர் வசதிக்கேற்ப தனித்தனியாக வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். மூன்று மகன்கள் இருந்தும், யார் இல்லத்திலும் தங்க மாட்டேன் என்ற பிடிவாதம் ரங்கராஜனுக்கு. சமைக்க, துடைக்க, துவைக்கவென இந்தப் பெரிய இல்லத்தில் வேலைப் பார்க்க ஆட்கள் சிலர் இருக்க தனியே சமாளிக்க அவருக்குக் கடினமாக இல்லை.
ஆனால், தீபாவளியோ, பொங்கலோ, அல்லது வேறு ஏதேனும் விழாவென்றால் அனைவரும் இங்கே தான் ஒன்றுகூடுவர்.
ஒரு வாரத்தில் அரவிந்தின் திருமணம் என்பதால் அனைவரும் இங்கு தான் இருந்தனர்.
உள்ளே வந்ததும், திருவரசன் அரவிந்தையும், தம்பி தமிழரசனையும் அழைத்துத் தனியே சென்று அவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். மூவர் முகத்தையும் வைத்து ஏதோ சரியில்லை என்று தெரிந்தாலும், ‘அதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற எண்ணம் தான் ரதிக்கு.
மூவரும் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்ததை ரதி மட்டும் அல்ல, அவள் தாய் தெய்வானையும் தான் பார்த்தார். இவளிடம், “வா டி” என்று சொல்லிவிட்டு, கணவரிடமும் மகனிடமும் விரைந்தார் தெய்வானை.
ஆனால், மரியாதை நிமித்தமாக அவர்கள் பேசும் போது குறுக்கிடாமல், சற்று தூரத்திலேயே நின்றுவிட்டார்.
அம்மாவைத் திரும்பிப் பார்த்தான் மகன். அவன் முகத்தில் ஏதோ கலவரம்.
‘என்ன டா?’ என்று தெய்வானை சைகை காட்ட, ‘இரும்மா’ என்று பதில் சைகை காண்பித்தான் அரவிந்த்.
அண்ணன் முகத்தில் கலவரத்தைக் கண்டதும் தான் அருகே வந்தாள் ரதி.
“அதனால என்ன பெரியப்பா. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல” என்று அரவிந்த் சொல்வது கேட்டது.
அண்ணன் சொன்னதில் பெரியப்பாவுக்கோ, அப்பாவுக்கோ திருப்தி இல்லை என்பது அவர்கள் முகத்தைக் கண்டதுமே புரிந்தது ரதிக்கு.
“டேய் தமிழு. என்ன டா இவன். எடுத்துச் சொல்லு இவனுக்கு” என்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார் பெரியப்பா.
“இதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். நீ அமைதியா இரு” என்று தமிழரசன் அரவிந்திடம் சொன்னபோது அவர் குரலிலும் முகத்திலும் அத்தனைக் கடுமை.
‘விஷயம் ஏதோ விவகாரம் தானோ!’ என யோசித்துக்கொண்டே தந்தையிடம் சென்ற ரதி, “என்னப்பா ஆச்சுப்பா. ஏன் கோவமா பேசறீங்க???” என்றாள் அமைதியாக.
நிமிடத்தில் மாறியது தமிழரசனின் முகபாவனைகள். “அதெல்லாம் எதுவும் இல்லையே ரதி. நீ சாப்ட்டியா???” என்று எதுவுமே நடக்காது போல் பேசினார் இவளிடம்.
“இல்லப்பா” என்றவளிடம், “போய் சாப்டு. அப்புறம் போய் தாத்தாவ பாரு” என்று மென்மையான குரலில் சொன்னாலும், கட்டளைத் தொனி இருந்தது.
அனைவரிடமும் கடுமையாக, கறாராகப் பேசும் திருவரசன், இவளைக் கண்டதும் ‘ரதிம்மா’ என்று அழைத்து வார்த்தைக்கு வலிக்காத படி பேசுவது போலோ, ‘செல்லம். தங்கம்’ என்று கலையரசன் கொஞ்சுவது போலோ ரதியிடம் பேசமாட்டார் தமிழரசன்.
தமிழரசன் யாரிடம் பேசும்போதும், ‘நான் உயர்ந்தவன்’ என்ற தோரணை இருக்கும். அவர் படிப்பும் வேலையும் தந்த எண்ணம் அது.
அண்ணன்கள் இருவரும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. படிப்பில் நாட்டமில்லாமல் தந்தையின் தொழிலைக் கையில் எடுத்தனர். ஆனால் தமிழரசன் அப்போதே பொறியியல் படிப்பு படித்து, அரசாங்க உத்தியோகத்திலும் அமர்ந்திருந்தார். அவரோடு படித்த சிலர் ஒரு கட்டுமான நிறுவனம் தொடங்க, அதிலும் பங்குதாரராய் இருந்தார். தந்தையின் தொழிலைச் சார்ந்து இல்லாமல், தானாகவே சம்பாதித்த தன்னம்பிக்கையும், குடும்பத்தில் அதிகம் படித்தவர் என்ற பெருமையும் அவருக்கு அகம்பாவத்தையும் கொடுக்கத்தான் செய்தது.
திருவரசனுக்கோ, மூத்தவர் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதனாலேயே மூத்தவருக்கும் இளையவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும். இடையில் பிறந்த கலையரசன் இருவரின் சண்டையிலும் தலையிடமாட்டார். இருவரும் உருண்டு புரண்டு என்ன முடிவுக்கு வருகிறார்களோ அதையே ஏற்றுக்கொள்வார். அதில் அவர் மனைவி அகிலாவுக்குத் தான் ஏமாற்றம். தனக்கும் தன் கணவருக்கும் குடும்பத்தில் முக்கியத்துவமே இல்லையென்ற எண்ணத்துக்குள் சிக்கிகொண்டிருந்தவரால் அடிக்கடி ஏதேனும் சண்டை சச்சரவு வந்து போகும். அதற்கு நேரெதிர் திருவரசனின் மனைவி மீனாட்சி.
மீனாட்சி பிறந்தது முதல் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். இங்கே அண்ணன் தம்பிகள் மூவரும் தனித்தனியாக இருப்பதே என்னவோ போல் இருந்தது அவருக்கு. எந்தச் சண்டை வந்து அண்ணன் தம்பிகள் பேசாமல் இருந்தாலும், தானாகவே தூது சென்று சேர்த்து வைப்பவர் மீனாட்சி தான். வம்பாகப் பேசும் அண்ணனிடம் மல்லுக்கு நிற்கும் தமிழரசனின் கோபமெல்லாம் அன்பாகப் பேசும் அண்ணியிடம் முன் நிற்காது.
தான் கேட்ட கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், தந்தை தன்னைச் சாப்பிடச் சொல்லவும், பதில் பேச்சு எதுவும் பேசாமல் உணவு மேசை நோக்கிச் சென்றாள் ரதி.
அனைவரும் முன்பே உண்டிருக்க, மீனாட்சி பெரியம்மா மட்டும் இருக்கவும், அவருடன் சேர்ந்து அமர்ந்து இரவு உணவை உண்டாள் ரதி. அவளிடம் வம்பு வளர்க்கவென்றே அவள் அருகில் அமர்ந்தான் கார்த்தி.
அவள் செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த தமிழரசன், அரவிந்த் பக்கம் திரும்பி, “உங்க அம்மா என்னன்னு கேட்பா. அவகிட்ட சொல்லு. ஆனா, அவ சொல்றதை எல்லாம் கேட்காத. ஒழுங்கா என் பேச்சைக் கேட்டு நட. உன்னைக் கெடுக்கறதே அவ தான்” என்று தெய்வானை காதுபடவே சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் தமிழரசன்.
சாப்பிட அமர்ந்த ரதியோ, வந்ததும் வராததுமாக தாயும் தந்தையும் சண்டையிடுவதை எல்லாம் பார்க்க விருப்பமில்லாதவளாக, ‘ஆண்டவா. அம்மா பதிலுக்குப் பதில் பேசி சண்டையாகக் கூடாது ஆண்டவா!’ என்று ரகசியமாய் ஒரு வேண்டுதல் வைக்க, அது நிறைவேறியது.
ரதியின் தாய் தெய்வானைக்கும் அரசு உத்தியோகம் தான். நல்ல பதவியிலேயே இருப்பவர். ‘தான்’ என்ற எண்ணம் கொண்ட தமிழரசனுக்கு, ‘நானும் ஒன்றும் குறைந்தவள் இல்லை’ என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நினைவுப்படுத்துவார் தெய்வானை. தமிழரசனின் அண்ணன், அண்ணிகள், குடும்ப சச்சரவுகள் என எதிலும் தலையிட்டுக்கொள்ள மாட்டார் தெய்வானை. நீங்களாவது அவர்களாவது என்று அனைத்து முடிவுகளையும் தமிழரசன் கையிலேயே விட்டுவிடுவார்.
ஆனால், அவர்களின் பிள்ளைகள் பற்றிய முடிவென்றால், அதை இருவருமாகப் பிள்ளைகளுடன் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்பது தெய்வானையின் எண்ணம்.
ஆனால், கணவன் மனைவி இருவரும் எடுக்கும் முடிவுகள் பல நேரங்களில் ஒத்துப்போகாமல், சண்டையில் வந்து நிற்கும்.
இன்றும் அப்படி எதுவும் தொடங்கிவிடுமோ என்று ரதி பயந்தது போல் அங்கு எதுவும் நடக்கவில்லை.
அனைவரும் இருப்பதாலோ, அல்லது மகனிடமிருந்து விடயத்தைப் பெறுவதே இப்போதைக்கு முக்கியம் என நினைத்ததாலோ என்னவோ, தெய்வானை தமிழரசன் சொன்னதற்கு பதில் சொல்லவில்லை.
மாறாக, சோக முகத்துடன் நிற்கும் மகனை அறைக்குள் இழுத்துச் சென்றார் தெய்வானை.
அப்போது தான் தங்கள் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த அகிலா, தெய்வானை அரவிந்தை இழுத்துச் செல்வதைப் பார்த்துவிட்டு, ரதியிடம், “என்ன டி ஆச்சு. உங்க அம்மா உங்க அண்ணனை இழுத்துட்டுப் போறா???” என்று கேட்க, “எனக்குத் தெரியல பெரியம்மா” என்றாள் ரதி.
“அதான. உஷாரு. எங்கயாவது வெளிய சொல்லுதா பாரு. இதுவே நான் பெத்து வச்சிருக்கேனே ஒன்னு. அதைக் கேட்டா வீட்ல நடக்குறதை ஒன்னு விடாம ஒப்பிக்கும்” என்றவர் கார்த்திக்கின் தலையில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு சென்றார்.
“அம்மே!” என்று தலையைத் தேய்த்துக்கொண்ட கார்த்தி, “எல்லாரும் என்னைய தான் டா ஈசியா அடிக்கறீங்க” என்று நொந்துக்கொள்ள, அடக்கப்பட்ட சிரிப்போடு இட்லியையும் சேர்த்து விழுங்கினாள் ரதி.
கார்த்தியின் அலைபேசிக்கு ஏதோ அழைப்பு வரவும் அவ்விடம் விட்டு அகன்றான் அவன்.
உண்டு முடித்ததும், ரதி நேராகச் சென்றது அரவிந்தின் அறைக்குத் தான்.
அரவிந்தின் முகமே சரியில்லை.
“அண்ணா…” என்றாள் வாசலில் நின்றுக்கொண்டே.
“உள்ள வாடா” என்றான் அரவிந்த்.
உள்ளே சென்று அருகில் அமர்ந்துக்கொண்டவள், “என்ன அண்ணா ஆச்சு!” என்றாள் பரிவாக.
“அதெல்லாம் எதுவும் இல்லடா” என்றான் ஒட்டவைத்துக்கொண்ட புன்னகையுடன்.
ரதியைப்போலவே அமைதியானவன் அரவிந்த். அமைதியை விரும்புபவன். இருப்பது ஒரு வாழ்க்கை. அதை ரசித்து ரசித்து வாழ வேண்டும் என்று நினைப்பவன். முடிந்த வரை யாரையும் காயப்படுத்தாதவன். அதே நேரம் நினைத்ததை எப்படியேனும் செய்தும் விடுபவன். எதற்குமே அதிகம் வருத்தப்படாதவன் முகம் கொஞ்சம் தான் வாடியிருந்தது என்றாலும், அதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை ரதியால்.
“அப்புறம் ஏன் அண்ணா சோகமா இருக்க!” என்று ரதி கேட்க, “ச்ச. சோகமாலாம் இல்லையே. யோசனையா இருக்கேன்” என்றான் அரவிந்த்.
“என்னன்னு சொல்லேன். நானும் யோசிப்பேன்ல்ல” என்று ரதி கேட்க, “அது யோசிக்கற அளவுக்கு உன் மண்டைக்குள்ள மசாலா இருக்கா ரதி!!!” என்றான் அரவிந்த்.
அரவிந்தை முறைத்துவிட்டு, “இந்த கார்த்தி கூட சேராதன்னு சொன்னா கேக்கறியா?” என்று சலித்துக்கொண்டாள் தங்கை.
இது தான் சாக்கென்று பேச்சை மாற்றினான் அரவிந்த். ரதியிடம் சொல்லக்கூடாத விடயமென்ரெல்லாம் இல்லை. ஆனால், ‘அவளிடம் எதற்குச் சொல்லிக்கொண்டு’ என்றிருந்தது. அதுவும், அது அவனுக்கு ஒரு பெரிய விடயமாகக் கூடத் தோன்றவில்லை. ஆனால், தந்தையின் எண்ணங்களைப் பற்றி எண்ணுகையில் கசந்தது. கசப்பைத் தங்கைக்கும் கடத்துவானேன் என்று எண்ணினான் தமையன்.
“நான் எங்க கார்த்தி கூட சேருறேன். எப்போ பார்த்தாலும் மித்ரா கிட்டயே பேசிக்கிட்டு அவனைக் கண்டுக்க மாட்றேன்னு இந்த கார்த்தி குறைபடறான்” என்றான் அரவிந்த்.
“பார்றா பார்றா. எப்போ பார்த்தாலும் அண்ணி கூட பேச்சா. அப்போ இந்தக் கலாய் எல்லாம் அண்ணி ட்ரெய்னிங் தானா?” என்றாள் சிரித்துக்கொண்டே.
“அப்டியே வச்சிக்கோயேன்” என்றான் அரவிந்த்.
ரதி சிரித்துக்கொண்டாள். “அண்ணா. எனக்கு அண்ணிய ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் ரதி.
“அதுக்காக எல்லாம் அவளை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது ரதி!” என்று அரவிந்த் சொல்ல, “டேய்… அண்ணா…” என்று கொலைவெறியில் ராகம் இழுத்தாள் ரதி.
“எல்லாம் இந்த அண்ணி வேலை” என்று சலித்துக்கொள்வது போல் பாவனை செய்தாள்.
“அண்ணிக்கு பெங்களுர்ல வேலைன்னு சென்னையை விட்டுட்டு பெங்களுர்க்கு வேலை மாத்திக்கிட்டு போனல்ல. பெங்களூர் புடிச்சிருக்கா?” என்று ரதி கேட்க, “ஹ்ம்ம்… இப்போ தான போயிருக்கேன். போகப் போகத் தான் தெரியும்” என்றான் அரவிந்த்.
அந்நேரம் பார்த்து மித்ராவே அரவிந்தின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
அவன் அலைபேசியையும், ரதியையும் மாற்றி மாற்றிப் பார்க்க, “நான் கிளம்பறேன்ப்பா. நைட் கால். ஏதாவது ரொமான்ஸ் பண்ணுவீங்க” என்று ரதி சொல்ல, அதற்குச் சாதாரணமாகத்தான் சிரித்தான் அரவிந்த்.
“வெட்கப்படாத ண்ணா…” என்று சொல்லி அவனை வெட்கப்பட வைத்துவிட்டு, அவன் அறையை விட்டுத் தன் அறைக்குச் சென்றாள் ரதி.
‘அப்டி என்னத்த தான் நைட்ல பேசுவாங்களோ தெரியல. ஹ்ம்ம். முன்ன பின்ன அப்டி யார் கூடயாவது பேசியிருந்தா தான தெரியும்’ என்று நினைத்தவளுக்கு கீர்த்தியின் நினைவு வந்தது.
‘நான் யார் கூட அப்டி பேசணும்ன்னு நினைச்சேனோ அவன் அந்த கீர்த்தி கிட்ட பேசிக்கிட்டு இருப்பான்’ என்று நினைத்தவள் மனதிற்குள் குழந்தைக் கோபம் தான். அதையும் தாண்டி, ப்ரித்வி இன்னும் தன்னைத் தான் நினைத்துக்கொண்டிருப்பான் என்று பலமான ஒரு உள்ளுணர்வு ரதிக்கு. அது உண்மையோ பொய்யோ, அந்த உள்ளுணர்வு சுகமாய்த் தான் இருந்தது அவளுக்கு.
‘இன்னும் அந்த கீர்த்தி என் மிஸ்ட் கால் பார்த்து கால் பண்ணவே இல்ல. இன்னுமா அவன் கிட்ட பேசிட்டு இருக்கா!!!’ என்று கீர்த்திக்கு மீண்டும் அழைப்பு விடுத்தாள் ரதி.
அப்போதும் அவள் அலைபேசி ‘பிசி’ என்றே வந்தது.
ஆனால், அவள் யாருடன் பிசியாக இருக்கிறாள் என்று ரதி நினைத்தாளோ, அவனோ சில வாரங்களுக்குப் பிறகு வீட்டு உணவு உண்டதால், கூடுதலாக இரண்டு தோசையை விழுங்கிவிட்டு, குறட்டையே விடத் தொடங்கியிருந்தான்.