அடுத்த நாள் காலை ஜன்னல் சாளரங்கள் வழியாக அவள் அறையை எட்டிப்பார்த்த சூரியக் கதிர்கள் கண்ணைக் கூசவும் தான் கண்ணைத் திறந்துப் பார்த்தாள் ரதி.
ஒரு வாரம் விடுமுறை எடுப்பதால், கிளம்புவதற்கு முன்பு சில வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. இரவு பகலாக அதைச் செய்து முடித்ததில் சென்ற வார தூக்கம் முழுதும் ஸ்வாஹா தான். தினம் மூன்று நான்கு மணி நேரத் தூக்கத்தோடு சென்ற வாரத்தை எப்படியோ கடத்தியிருந்தாள். அதுமட்டுமின்றி நேற்றைய பயணம், இரவு நெடுநேரம் தூக்கமின்றித் தவித்தது எல்லாம் சேர்ந்து கொண்டு, காலை மணி பதினொன்று வரை ரதியைத் தூக்கத்தின் பிடியிலேயே வைத்திருந்தது.
கைகளால் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்தவள் மணி என்னவென பார்க்க அலைபேசியை எடுத்தாள்.
மணி பதினொன்று என்பதைப் பார்த்தே அதிர்ந்தவள், மித்ராவிடமிருந்து இரண்டு அழைப்புகள் வேறு வந்திருக்க அதைப் பார்த்து இன்னும் பரபரத்தாள்.
கட்டிலில் அமர்ந்தபடியே மித்ராவுக்கு அழைத்தாள்.
இரண்டு ரிங்கிலேயே அழைப்பை ஏற்ற மித்ரா, “அம்மாடி நாத்தனாரே. பொழுது விடிஞ்சுதா?” என்று கேட்க, அசடு வழிந்தாள் ரதி.
“இன்னைக்கு ஃப்ரீயா ரதி?” என்று மித்ரா கேட்க, யோசித்தவள், “ஃப்ரீ தான் அண்ணி” என்றாள்.
“அப்போ என் கூட பார்லர் வரியா? மேப்-அப் ட்ரையல் பார்க்கப் போகணும்” என்று அழைக்க, “அம்மா கிட்ட கேட்டுட்டு சொல்றேன் அண்ணி” என்று ரதி சொல்ல, “சரி” என்றாள் மித்ரா.
எழுந்தவள், நேரத் தாமதம் இல்லாமல், குளித்துவிட்டு, அறையைவிட்டு வெளியேறினாள்.
கூடத்திலும், சமையல் அறையிலும் தாயைத் தேடியவள், அவர் அங்கே இல்லை என்றதும், தாய் தந்தையின் அறையை நோக்கிச் சென்றாள்.
கதவு உள்ளே தாழிட்டிருந்தது. ஆனால், தாயோடு தந்தையும் உள்ளே தான் இருக்கிறார் என்பதற்கு சாட்சியாக, இருவருக்குமான வாக்குவாதம் இவள் வரைக் கேட்டது.
இருந்தும் கதவைத் தட்டி விடுவது என்ற எண்ணத்தைச் செயல்படுத்தி விட்டாள் ரதி.
இவள் கதவைத் தட்டும் நேரம், அங்குச் சரியாக வந்துவிட்ட அரவிந்த், “ரதி… இப்போ எதுக்கு கதவைத் தட்டுற? உள்ள எப்டி கத்திட்டு இருக்காங்க. கேக்குதுல்ல!!!” என்று அடிக்குரலில் கேட்க, அவளும் அதே குரலில், “அவசரமா அம்மா கிட்ட பெர்மிஷன் கேட்கணும்” என்றாள்.
“எதுக்கு?” என்று அரவிந்த் கேட்ட நேரம், அறைக்கதவைத் திறந்தார் தெய்வானை.
“என்ன? இங்க நின்னு ரகசியம் பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். யார் கதவைத் தட்டுனது?” என்று தெய்வானை சீர, “இதோ இவ தான்ம்மா” என்று தாமதிக்காமல் ரதியைக் கை காட்டினான் அரவிந்த்.
தெய்வானை ரதியை ‘என்ன?’ என்பது போல் பார்க்கவும், உள்ளே இருந்த தமிழரசனும் வெளியே வந்துவிட்டார்.
“என்ன ரதி?” என்று அவரும் கேட்க, “அது வந்தும்மா. அண்ணி இன்னைக்கு மேக்-அப் ட்ரையல் பார்க்க பார்லர் போகணுமாம். நான் கூட வந்தா உதவியா இருக்கும்ன்னு சொன்னாங்க” என்று ரதி சொல்ல, “மேக்-அப் தான் இப்போ குறை” என்று முணுமுணுத்தார் தமிழரசன்.
பிரச்சனையின் மூலமே தெரியாமல் பாவமாய் நின்றிருந்தாள் ரதி.
“உனக்குப் போக இஷ்டம் தான ரதி???” என்று தெய்வானை கேட்க, ஆமாமென தலையாட்டினாள் ரதி.
“ரதி. நீ போகாத” என்று தமிழரசன் சொல்ல தாய் தந்தை இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து விழித்தாள் ரதி.
தெய்வானை இப்போது தமிழரசனைக் கண்ணெடுக்காமல் முறைக்க, “என்ன? கல்யாணத்துக்கு செய்றேன்னு சொன்னதைச் செய்ய வக்கில்ல. இதுல அந்தப் பொண்ணுக்கு எடுபுடியா என் பொண்ணு போகணுமா?”
பிரச்சனை ஏதோ வரதட்சணை சம்பந்தப்பட்டது என்று மேலோட்டாமாகப் புரிந்தது ரதிக்கு.
“அப்பா. எடுபுடி எல்லாம் இல்லப்பா. மேக்-அப் சஜ்ஜஷன் கேட்கத் தான். வேற எதுவும் இல்லப்பா” என்றாள் ரதி.
மித்ராவைப் பற்றி தமிழரசனுக்குமே நல்ல அபிப்ராயம் தான். அதுவும் இதற்கு முன்னான சந்திப்புகளிலேயே அவள் ரதி மீது நேச மழைப் பொழிந்ததை எல்லாம் பார்த்துப் பூரித்திருக்கிறார் தான்.
ஆயினும், உள்ளிருக்கும் தணலை எல்லாம் சொல்லில் கொட்டி விடும் நோக்கில் ஏதோ எடுபுடி என்றெல்லாம் பேசிவிட்டார்.
அதற்கு மகள் பதில் வேறு சொல்லவும், ‘இது என்ன என் பேச்சுக்கு எதிர் பேச்சு’ என்று கோபம் வந்தாலும், சொன்னது மகள் என்பதால் அமைதியாய் இருந்தார்.
‘நடக்காத கல்யாணத்துக்கு மேக்-அப்’ என்ற வார்த்தை வாய் வரை வந்தாலும், அபசகுனமாக அதைச் சொல்ல அவருக்கே மனம் ஒப்பவில்லை.
அவருக்கு இந்தத் திருமணம் நடக்கக்கூடாது என்றெல்லாம் இல்லை. ஆனால், பேசிய வரதட்சணை வந்தே ஆகவேண்டும் என்ற எண்ணம்.
“ஏதோ பண்ணுங்க” என்று ரதியைப் பார்த்துச் சொன்னவர், “டேய். இந்தப் பிரச்சனை முடியற வரைக்கும் அந்தப் பொண்ணு கிட்ட எழையுறது கொழையுறது எல்லாம் கொஞ்சம் நிறுத்து” என்று என்றார் அரவிந்திடம்.
அதற்கு அரவிந்த் பதில் எதுவும் சொல்லாமல் நிற்க, “என்ன டா? சரி தான?” என்று தமிழரசன் கேட்டும் வாயைத் திறக்கவில்லை அரவிந்த்.
“டேய் அரவிந்த். ரதியை நம்ப கார்ல கூப்ட்டுட்டு, அப்டியே அவங்க வீட்டுக்குப் போய் மித்ராவைக் கூப்ட்டுட்டு, ஏதாவது ஹோட்டல் போய் சாப்ட்டுட்டு ரெண்டு பேரையும் நீயே பார்லர்ல ட்ராப் பண்ணி பிக்-அப் பண்ணு புரியுதா?” என்று தெய்வானை தமிழரசனைப் பார்த்துக்கொண்டே சொல்ல, அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“சரிம்மா!” என்றான் அரவிந்த் உற்சாகமாய்.
“உங்க அம்மா பேச்சைக் கேட்டு நடுத்தெருவுல தான் நிக்க போற நீ” என்று அவர் சொன்னது, அரவிந்த் இங்கு இருந்தால் தானே அவனுக்குக் கேட்க.
“சீக்கிரம் போய் கிளம்பு ரதி” என்று தங்கையையும் தள்ளிக்கொண்டு அவன் தான் ஓடியே விட்டானே.
அதன் பின் அண்ணன் தங்கை இருவரும் அவசர அவசரமாக கிளம்பினர். காலை தாமதமாக எழுந்த ரதி, காலை உணவு எதுவும் உண்ணாமல், கொஞ்சம் பாலை மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பலானாள்.
ரதி கூடத்தில் காத்திருக்க, “ஹான் மித்து. நாங்க வீட்ல இருந்து கிளம்பறோம். நீ ரெடியா இரு. லஞ்ச் சாப்ட வேணாம்” என்று பேசிக்கொண்டே வந்தான் அரவிந்த்.
கூடத்தில் அமர்ந்திருந்த கார்த்திக்கிடம், “நீயும் வரியாடா?” என்று அரவிந்த் கேட்க, “எதுக்கு. நீ ஹோட்டல்ல ரொமான்ஸ் பண்ற கருமத்தை எல்லாம் நான் பாக்கணுமா?” என்று அரவிந்திடம் சொன்னவன், ரதியிடம், “நீ எதுக்கு கரடி மாதிரி கூட? சோறு போடுறேன்னு சொன்னா போதுமே” என்றான் கார்த்தி.
அவனிடம் “போடா” என்ற ரதி, அரவிந்துடன் கிளம்பினாள்.
செல்லும் வழியெல்லாம், மதிய உணவு எங்கே சாப்பிடுவது என்ற மிக முக்கியமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தாலும், மனதின் ஏதோ ஒரு ஓரத்தில், மித்ராவை அழைக்கச் செல்லும் போது அவனையும் பார்க்கக் கூடுமோ என்ற யோசனை ஓடிக்கொண்டு தான் இருந்தது.
ஒருவேளை அவன் அங்கு இருந்தால், அவனைக் கண்டுக்கொள்ளாமல் எப்படி இருப்பது என்றெல்லாம் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தாள். அத்தனையும் வீண் தான்.
மித்ராவின் இல்லத்தில் மகிழுந்தை நிறுத்தியதும், அந்தச் சத்தத்தைக் கேட்டு முதலில் வெளியே வந்ததே ப்ரித்வி தான். வந்ததும் அவள் கண்கள் நிலைத்தது அவனிடம் தான்.
மித்ரா வெளியே வந்தால், அவளை அழைத்துக்கொண்டு அப்படியே செல்லலாம் என்று தான் நினைத்திருந்தான் அரவிந்த்.
ஆனால், மகிழுந்தின் கதவைத் தானே திறந்து, “வாங்க மாம்ஸ்…” என்று ப்ரித்வி அழைக்கவும், வேறு வழியில்லாமல் இறங்கினான் அரவிந்த்.
“வாங்க மாப்ள” என்ற படியே வீட்டிலிருந்து வெளிப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. “மித்ரா கிளம்பிட்டு இருக்கா. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க மாப்பிள்ளை” என்றார் அவரோடு வந்த லக்ஷ்மி.
“வாம்மா…” என்று லக்ஷ்மி மகிழுந்தின் உள்ளே அமர்ந்திருந்த ரதியை அழைக்க, கீழே இருந்கினாள் ரதி.
“ஆமா ஆமா. இப்போவே பழகிக்கோங்க. காலம் முழுக்க அவ கிளம்பறதுக்கு வெய்ட் பண்ணிட்டு தான இருக்கப் போறீங்க” என்று ப்ரித்வி சொல்ல, “டேய்…” என்று அதட்டினார் லக்ஷ்மி.
“சும்மாவே பொண்ணுங்க கிளம்ப லேட் ஆகும். இதுல மேடம் ஸ்டைலிஸ்ட் வேற. மாம்ஸ் இப்போ இருந்தே பழகிக்கணும்ல்ல” அவன் சொல்ல, “நீ போய் மித்ராவை சீக்கிரம் ரெடியாக சொல்லு” என்று சொல்லி ப்ரித்வியை உள்ளே துரத்தினார் லக்ஷ்மி.
“நான் போய் அண்ணி ரெடி ஆக ஹெல்ப் பண்ணட்டா மாமி???” என்று ரதி கேட்க, லக்ஷ்மி சரி எனவும், ப்ரித்வியின் பின்னே உள்ளே சென்றாள் ரதி.
இவள் வருவதைக் கண்ட ப்ரித்வி, “ப்ச்! கொஞ்சம் பர்சனாலிட்டியா இருந்தா போதுமே. பின்னாடியே வரவேண்டியது” என்றான்.
“ஐயே. வராங்க இவரு பின்னாடி. நான் அண்ணிய பார்க்க வந்தேன்” என்ற சொல்லிக்கொண்டு நிற்காமல் நடந்தாள்.
“அண்ணி அண்ணின்னு ஐஸ்க்ரீமா உருகுற போல. அது சரி… மித்ரா அண்ணின்னா, நான் உனக்கு என்ன முறை வேணும். அத்தான் முறை தான” என்று அவன் குறும்பாய் கேட்க, “அதுக்கு என்ன இப்ப?” என்று இவள் வெகுவாக முயற்சித்து முகத்தில் தக்கவைத்துக்கொண்ட முறைப்போடு.
“அத்தான்னு மரியாதையா கூப்ட்டு பழகு. புரியுதா” என்று சிரித்துக்கொண்டே சொல்ல, “அதெல்லாம் உங்க கீர்த்தி பேபியை கூப்ட சொல்லுங்க” என்று அவள் பாதி சொல்லி மீதியை விழுங்கினாலும், அவனுக்குப் புரிந்துவிட்டது.
அவள் பதிலில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவன், அவள் சொன்னது செவிகளில் விழாதது போல், “வந்த வேலையைப் பாப்போம்” என்றுவிட்டு மித்ராவின் அறைக்கதவைத் தட்டினான்.
“மித்ரா. சீக்கிரம் வா. மாமா வந்துட்டாங்க” என்று ப்ரித்வி சொல்ல, “அஞ்சு நிமிஷம்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள் மித்ரா.
“ரொம்ப லேட் பண்ணாத. மாமா இந்தப் பொண்ணு வேணாம்ன்னு சொல்லிட போறாரு” என்று இவன் மீண்டும் குரல் கொடுக்க, “சொல்லித் தான் பாக்கட்டுமே” என்றாள் அவள் உள்ளிருந்து.
மித்ரா வருகிறேன் என்று சொல்லியும் ஓயாமல் கதவைத் தட்டிய வண்ணம் இருந்தான் ப்ரித்வி.
அவன் கதவைத் தட்டும் சத்தம் ரதியை எரிச்சலாக்க, “கொஞ்சமாவது பொறுமை இருக்கா???” என்று முணுமுணுத்தாள் ரதி.
“பொறுமை எல்லாம் இருந்துச்சு ஒரு காலத்துல. நீ வேணாம்ன்னு சொல்லியும் உனக்காக காத்துட்டு இருக்க அளவுக்கு” என்று அவன் சட்டெனச் சொல்ல, இதை இந்த நேரத்தில் எதிர்பார்க்காதவளுக்கு அவன் சொல்வதை உள்வாங்கிக்கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.
அவள் முகம் சட்டென வாடிவிடவும், அதைப் பார்க்க முடியாதவனாக, “சீக்கிரம் வா” என்று ஒரு முறை மித்ராவுக்குக் கேட்கும் படி கத்திவிட்டு, அங்கிருந்து நகர்ந்து நடுக்கூடத்தில் இருந்த சோஃபாவில் போய் அமர்ந்தான்.
சில நொடிகளுக்குப் பின் தான், அவன் இங்கு இல்லை என்று உணர்ந்தவள், அவனைத் தேடி கூடத்திற்குச் சென்றாள்.
“இருந்துச்சுன்னா… இப்போ இல்லையா?” என்ற கேள்வியை உள்ளே வைத்துக்கொள்ள முடியாமல் அவனிடம் கேட்டு வைக்க, அவன் அதற்குப் பதில் சொல்லும் முன் மித்ரா வந்துவிட்டாள்.
வாசலில் நின்றிருந்த அரவிந்திடம், “மாப்ள. வீட்ல என்ன சொன்னாங்க???” என்று கிருஷ்ணமூர்த்தி தயங்கித் தயங்கிக் கேட்க, “அம்மாவுக்கோ எனக்கோ எதுவும் பிரச்சனை இல்ல மாமா. ஆனா, அப்பா பெரியப்பா எல்லாம் கொஞ்சம் கோவமா தான் இருக்காங்க” என்று நிலவரத்தைச் சொன்னவன், அவர் முகம் வாடவும், “கவலைப்படாதீங்க மாமா. நான் பாத்துக்கறேன்” என்றான் அரவிந்த்.
“இந்தப் பிரச்சனை எல்லாம் மித்ராவுக்குத் தெரியாது இன்னும்…” என்று கிருஷ்ணமூர்த்தி இழுக்கவும், “சொல்ல வேண்டாம் மாமா. பாத்துக்கலாம். அவளுக்கு வேற எதுக்கு டென்ஷன்” என்று சொன்ன வருங்கால மருமகனை நிம்மதி படர பார்த்தார் அவர்.
உள்ளே இருந்த மூவரும் வெளியே வர, இவர்கள் பேச்சுத் தடைப்பட்டது.
மித்ராவை மட்டுமல்லாமல், வரமாட்டேன் என்று சொன்ன ப்ரித்வியையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றான் அரவிந்த்.
நால்வருமாக கடலூர் பேருந்து நிலையத்தின் அருகே இருந்த ஒரு உணவகத்திற்குச் சென்று, உள்ளே அமர்ந்தனர். ரதிக்கு அருகில் மித்ரா அமர்ந்துக்கொள்ள, ஆண்கள் இருவரும் எதிர்பக்கம் அமர்ந்துக்கொண்டனர்.
மற்ற மூவரும் தங்களுக்குத் தேவையானதை கூறிவிட, நெடு நேரம் மெனு கார்டை புரட்டிக் கொண்டிருந்தாள் ரதி. இதைப்பார்த்து மித்ரா தனக்கு எதிரில் இருந்த அரவிந்துக்கு ஏதோ சைகை காண்பிக்க, அதற்கு அரவிந்த் ஏதோ பதில் சைகை காண்பிக்கவென, ஊமை மொழியில் ஒரு உரையாடல் அங்கு நடந்துக் கொண்டிருந்தது.
ஆனால் ரதியின் கவனம் மெனுகார்டிலும், ப்ரித்வியின் கவனம் ரதியிடமும் பதிந்திருந்ததால், இருவரும் அந்த ரகசிய உரையாடலைக் கவனிக்கவில்லை.
“ரதி… நீ ஆர்டர் பண்ணு. அதுக்குள்ள நான் உன் அண்ணா கூட பக்கத்துல இருக்க மெடிக்கல் ஷாப்க்கு போய்ட்டு வந்துடறேன்…” என்றாள் மித்ரா.
“அது. என் டெர்மெட்டாலஜிஸ்ட் எழுதி குடுத்த ஃபேஸ் வாஷ் இந்த மெடிக்கல் ஷாப்ல தான் கிடைக்கும் ரதி. வாங்கிட்டு வந்துடறோம்.” என்று முன்பே யோசித்து வைத்த பொய்யைச் சரலமாகச் சொல்லித் தப்பித்தாள் மித்ரா.
மித்ரா அரவிந்த் இருவரும் வெளியே சென்றுவிட, “என்ன? மெனுகார்டை மனப்பாடம் பண்றியா? என்ன தேடுனாலும் அதுல பால்சாதம் எல்லாம் இருக்காது” என்றான் ப்ரித்வ.
“எப்பவோ நடந்ததை இன்னும் சொல்லி காட்றீங்க” என்றவளுக்கு முன்னொரு காலத்தில் தான் கேட்டதற்காக ப்ரித்வி பால் சாதம் செய்து ஊட்டிவிட்ட ஞாபகமெல்லாம் வந்தது.
அதில் கட்டுண்டவளாக, “அப்போ இருந்த ப்ரித்விக்கு எவ்வளவு பொறுமை தெரியுமா?” என்றாள்.
“அதெல்லாம் ஏதோ லவ்ல பண்ணது” என்றவனிடம், “அப்போ இப்போ அந்த லவ் இல்லையா?” என்றாள் ரதி.
“ஆர்டர் பண்ணு நீ” என்றவனிடம் வேறு ஏதும் பேச முடியாமல், வெயிட்டரை அழைத்து, “ஒரு மஷ்ரூம் நூடல்ஸ்” என்றாள்.
வெயிட்டர் சென்றதும், “லவ்வும் இல்ல. நீ லவ் பண்ணுவன்னு கிழவன் ஆகுற வரை காத்திருக்க பொறுமையும் இல்ல” என்றான் ப்ரிதவி.
“எதுவுமே இல்லையாம். ஆனா எனக்குப் பால்சாதம் பிடிக்கும்ங்கற ஞாபகம் மட்டும் இருக்குமாம்” என்று சொல்லும் போது வந்துவிடும் என்றிருந்த அழுகையை எப்படியோ அடக்கிவிட்டாள்.
‘அது எப்படி. மூன்றாண்டுகள் இவள் மட்டும் அவனை மட்டும் நினைத்திருக்க, அவன் மட்டும் இவள் மேல் காதல் இல்லை என்பானா…’ என்று கோபம் கொண்ட பெண்ணின் காதல் மனதிற்கு, ‘இவள் அவனையே நினைத்துக்கொண்டிருந்தது பாவம் அவனுக்கு எப்படித் தெரியும்’ என்றெல்லாம் யோசிக்கவில்லை.
“நான் மூவ் ஆன் ஆகிட்டேன். மத்தபடி அம்னீஷியா எல்லாம் இல்ல” என்றவனிடம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ரதி.
காதல் இல்லை என்பவனிடம் என்ன பேசுவது? ‘அவன் மூவ் ஆன் ஆகிட்டான். என்னால ஆக முடியாதா என்ன?’ என்ற வீராப்பு. அவன் சொன்னது எதுவுமே அவளைப் பாதிக்காதது போல், உணவகத்தில் இருந்தவர்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
‘அழுத்தக்காரி’ என்று நினைத்துக்கொண்டு மீசைக்குள் புன்னகைத்தான் ப்ரித்வி.
வெளியே சென்ற அரவிந்தும், மித்ராவும் இரண்டு கட்டிடங்கள் தள்ளி இருந்த மருந்தகத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தனர்.
“மித்து ப்ளீஸ். நீயே போய் வாங்கிக்கோயேன்” என்று அரவிந்த் கெஞ்சிக்கொண்டிருக்க, “நோ. நீ போ” என்றாள் மித்ரா அவன் கெஞ்சலுக்குச் செவி சாய்க்காமல்.
“மித்து. நீ சின்ன வயசுல இருந்து இங்க இல்லாததால உன்ன யாருக்கும் இங்க தெரியாது. ஆனா, இங்க நிறைய பேருக்கு என்னைத் தெரியும் மா. தெரிஞ்சவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று அரவிந்த் கேட்க, “என்ன நினைப்பாங்கன்னு நம்ப முன்னாடியே யோசிச்சிருக்கணும்” என்று பதில் சொன்னவளின் தவிப்பு புரிந்த அரவிந்த் அதற்கு மேல் வாதாடவில்லை.
ஆனால், அவனாக உள்ளே சென்று வாங்கி வரவும் கூச்சம் தடுத்தது. “என் அமுல் பேபில்ல. டென்ஷன்ல கை கால்லாம் தானா டேன்ஸ் ஆடுது. நீயே போயேன்” என்று கொஞ்சலில் இறங்கியவளிடம், “சரி. உள்ள ஏற்கனவே ரெண்டு பேர் ஏதோ வாங்கிட்டு இருக்காங்கல்ல. அவங்க வந்ததும் போறேன்” என்று அரவிந்த் சொல்ல, “தேங்க்ஸ்” என்றாள் மித்ரா முகத்தில் உண்மையான நன்றியுணர்வுடன்.
அவளை இதற்கெல்லாம் ‘தேங்க்ஸ்’ சொல்ல வைத்த தன்னையே பிடிக்காமல், “ப்ச்!” என்றான்.
அந்த மருந்தகத்திற்கு உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் எல்லாம் வெளியே வந்துவிட, கடை காலியாக இருந்தது.
ஒரு பெருமூச்சுடன் அரவிந்த் கடைக்குள் நுழைய ஒரு அடி முன்னே எடுத்து வைக்க, மித்ராவுக்கு என்ன தோன்றியதோ, அவன் கையைப் பிடித்தாள்.
‘என்ன?’ என்பது போல் அவன் திரும்பிப்பார்க்க, “சேர்ந்தே போலாம்” என்றாள்.
இருவரும் கைபிடித்துக்கொண்டு ஒன்றாகவே உள்ளே சென்றனர். “என்ன வேணும்???” என்று கேட்ட கடைக்காரருக்குப் பதில் சொல்லாமல், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “என்ன தம்பி வேணும்??” என்றார் அவனிடம் மீண்டும்.
“அண்ணா… அது வந்து…” என்று அவன் வார்த்தையை மென்று விழுங்க, முயன்று சொல்லிவிட்டாள் மித்ரா, “ஒரு ப்ரெக்னன்சி டெஸ்ட் கிட்” என்று.