2.11. முதல் உரையாடல்
கால்டன் காரில் ஏறியவுடன் வேறு வழியின்றி எவாஞ்சலின் கிளம்பினாள். வழக்கத்தை விட அதிகமாகவே அலட்டிக்கொண்டு பூனை நடை நடந்து சென்றவள், எதிரே கயலைக் கண்டவுடன் நின்று வம்பிழுத்தாள்.
“ஹே.. ப்ரவுன் லேடி. மீட்டிங், டிஸ்கஷன் எல்லாம் முடிஞ்சுதா.?.”
கயல் வழக்கம் போல் அலட்சியப் பார்வை வீசினாள்.
“பேச மாட்டிங்களோ..? நீ என்ன வேணுமின்னாலும் பண்ணு. ஆனா இந்த விஷயத்துல உனக்கு பேரு கிடைக்க நான் விடவே மாட்டேன். பாத்துக்கிட்டே இரு” என்று சொடுக்குப் போட்டு கயலிடம் சொல்லி விட்டு மீண்டும் பூனை நடையைத் தொடர்ந்தாள் எவாஞ்சலின்.
அவள் கயலிடம் வம்பிழுக்கிறாள் என்று காரில் அமர்ந்தபடியே கண்டுபிடித்துவிட்டார் கால்டன். கயல் எந்தப் பதிலும் பேசாதிருப்பதையும் கவனித்தார்.
அவள் சென்றதும் கண்களைச் சிமிட்டி புருவங்களை உயர்த்தி மண்டையை ஆட்டிவிட்டுக் கயலும் கால்டன் காரை அணுகினாள்.
அவள் ஏறியதும் உடனே, “அவ உங்களைச் சீண்டறாளா!!” என்று கால்டன் கேட்டார்.
கயல், கால்டன் எத்தனை கூர்மையானவர் என்று ஒரு நொடி வியந்தாள். எவாஞ்சலின் பற்றிய நல்ல அபிப்ராயம் அவருக்கு இல்லை என்பதையும் கால்டனின் கேள்வி உணர்த்திவிடவே கோபமும் காணாமல் போனது.
அவள் பார்வையிலேயே புரிந்து கொண்ட கால்டன் கோபமாக கார் கதவைத் திறந்து இறங்கப் போனார்.
“எங்க போறீங்க?!” என்று நிறுத்தினாள் கயல்.
“எனக்கு இவளைப் பத்தி, இவளோட குணத்தைப் பத்தி சின்ன வயசுலேருந்து நல்லா தெரியும். உங்ககிட்ட எந்த வம்பும் வச்சுக்க வேண்டாமின்னு என் பாணியில சொல்லிட்டு வர்றேன்.”
“இவளை எல்லாம் நான் மதிச்சதே இல்ல. டைம் வேஸ்ட் பண்ணாதிங்க. கிளம்பலாம்”
கயல் சொல்கிறாளே என்று காரைக் கிளப்பினார் கால்டன்.
தனக்காகப் பேச அவர் எத்தனித்ததை எண்ணி உள்ளுக்குள் பூரித்தாள் கயல். ஒரு பெண்ணுக்குத் தன்னவன் தனக்காகத் தன்னுடன் நிற்கவேண்டும் என்பதைத் தவிர வேறென்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்துவிடும்?!
ஒரு வாரமாகக் கால்டனும் விலகி இருந்தது நெகட்டிவ் சைகாலஜி போல் வேலை செய்தது கயலுக்குள். கால்டன் எதாவது கேட்க மாட்டாரா பேச மாட்டாரா என்று மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஓடிக்கொண்டே இருந்த போது தான், கால்டனிடமிருந்து அழைப்பு வந்தது. உடனே எடுத்தாள். அரை மணி நேரம் காத்திருந்து அவருடன் காரில் செல்கிறாள். அவளின் தீர்மானங்களின் தீவிரங்கள் மெல்ல பலமிழக்கத் துவங்கியிருந்தன.
“எவாஞ்சலினும் நீங்களும் ஒன்னா வேலை பாக்குறிங்கன்னு ஸ்டிரைக் ஆகவே இல்ல எனக்கு”
“ஒன்னா படிச்சோம். இப்ப ஒன்னா வேலை பாக்குறோம். நான், அலி எவாஞ்சலின் மூனு பேரும் மூளை அறுவை சிகிச்சை பிரிவுல மாஸ்டர்ஸ் படிச்சோம். க்ளாஸ்மேட்ஸ்”
“ஹோ. அலி… அவரும் இந்தியரா?”
“இல்ல இல்ல. அவர் இஸ்தான்புல். நான் மட்டும் தான் இந்தியா”
“க்ரேட். இன்னைக்கு ஏன் டூட்டி இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுச்சு!”
“நாளைக்கி ஒரு ரொம்ப பெரிய சர்ஜரி இருக்கு. 14 மணி நேர சர்ஜரி. அதுனால இன்னைக்கு ரெஸ்ட் கொடுத்து சீக்கிரம் அனுப்பிட்டாங்க”
“14 மணி நேரமா!!!”
“ஆமா. ரொம்ப சாலஞ்சிங் சர்ஜரி. நானும் அலியும் எங்க ப்ரொஃபஸரோட கைடன்ஸ்ல செய்யுறோம்.”
“ஹோ அதுக்குத் தான் அத்தனை புத்தகங்களை ரெஃபர் பண்ணியிருக்கிங்களா!?”
“ஆமா. ஸ்மார்ட் டியூமர்னு ஒரு வகை மூளை கான்ஸரோட 24 வயசு இந்திய இளைஞர் ஒருத்தர் வந்திருக்காரு. அவருக்கு தான் இந்த சர்ஜரி செய்யுறோம்.”
“பதட்டமா இருக்கிங்களா?”
மீண்டும் ஆச்சரியப்பட்டாள் கயல், கால்டனின் கூர்மையைக் கண்டு. ஒரு நொடி இருவரின் கண்களும் சந்தித்தன.
“ஆமா. வெளியில தெரியுதா!”
“எனக்கு தெரியுது”
“..”
“ஏன் பதட்டப்படறீங்க?!”
“கண்டிப்பா சக்ஸஸ் ஆகுமின்னு சொல்ல முடியாது. அதான் பதட்டமா இருக்கு”
“கவலைப் படாதிங்க. நல்லா நடக்கும்”
“தேங்க்ஸ்”
அமைதி குடிகொண்டது காருக்குள்ளே. மகிழ்ச்சி குடியேறியது மனங்களுக்குள்ளே. சில சமயங்களில், ஒரு சாதாரண சிறிய உரையாடல் மாயாஜாலம் செய்ய வல்லது இல்லையா!!
முதன் முறையாக இருவரும் சகஜமாக உரையாடியிருக்கிறார்கள்.
கால்டனுடன் பேசும்பொழுது கம்ஃபர்டபுளாகவே உணர்ந்தாள் கயல். கால்டனோ கயல் இவ்வளவு பேசுவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதற்குத் தான் அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். மனமகிழ்ச்சியில் திளைத்தார்.
கால்டன் செய்யும் தொழிலில் நேர்த்தியும் பக்தியும் கொண்டவர். வர்க்கஹாலிக். கயலும் தன்னைப்போல் செய்யும் வேலையில் சின்ஸியராக இருக்கிறாள் என்பதை அவள் அறையில் இருந்த அந்த புத்தக வரிசையைப் பார்த்த கணமே எடைபோட்டுவிட்ட கால்டனுக்குக் கயலை இன்னும் பிடித்துப்போனது.
14 மணி நேர சர்ஜரி கயலை நம்பி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து அவள் திறமை எப்படிப்பட்டது என்று கணக்குப் போட்டது அவரது பிஸினஸ் மூளை!!
மொத்தத்தில் கயல் கால்டனை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டாள். ஆனால் இது அவளுக்குத்தான் இன்னும் தெரியாது.
2.12. காதலெனும் கடல்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.