கெண்டக்கியின் பெரும் பணக்காரர்களில் இந்த கூப்பர் தம்பதிகள் முக்கியமானவர்கள். பில்லியனர்கள்.
கெல்லி கூப்பர் ஒரு ஆர்கிடெக்ட் மற்றும் சட்டம் பயின்றவர். கெல்லி கூப்பரின் தந்தையார் பந்தைய குதிரைகள் பன்னை வைத்து வளர்த்து, அதன் மூலம் பொருளாதாரத்தில் உயர்ந்தவர். கெல்லி கூப்பரை நன்கு படிக்கவைத்தார். அவரும் ஒரு வெற்றிகரமான கட்டிடக்கலை நிபுணராக விளங்கி, சொந்த கம்பெனி துவங்கி, நன்றாக சம்பாதித்தார். அவர் தந்தையாரின் பந்தயக் குதிரைகள் பன்னையையும் பெரிதாக வளர்த்தார்.
கெண்டக்கியும் லெக்ஸிங்டனும் குதிரைகளுக்குப் பெயர்போன ஊர்கள். அங்கே பூர்வீகத் தொழிலாக பந்தைய குதிரை வளர்ப்பு தான் இருக்கிறது.
குதிரைப் பன்னையும் கட்டுமான கம்பெனியும் வெகு விரைவிலேயே கெல்லி கூப்பரை மில்லியனர் ஆக்கியது.
ஸெலீனா கூப்பர், அவர் மனைவி. அவரும் மற்றொரு மில்லியனரின் மகள். செலீனா ஒரு ஃபேஷன் டிசைனர். திருமண கவுண் வடிவமைப்பதில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார். இவரும் தனியாக ஒரு கம்பெனி நடத்துகிறார். செலீனா பிரைடல்ஸ் என்பது இவருடைய பிராண்ட். இவர்தான் திருமண கவுண் வடிவமைக்க வேண்டும் என்று காத்திருந்து திருமணம் செய்து கொள்பவர்கள் கெண்டக்கியில் ஏராளம்.
கெல்லி-செலீனா இருவரும் சேர்ந்து பில்லியன்களில் சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். கெண்டக்கியில் மிகவும் செல்வாக்கான குடும்பம் இந்த கூப்பர் குடும்பம்.
இந்த தகவல்கள் மேலோட்டமாக அந்த செய்தித்தொகுப்பில் சொல்லப்பட்டன. இத்தனை விவரமாக காடன் கயலிடம் சொன்னார்.
இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் ஒரு மகள். முதல் மகன் நிக் கூப்பர். இவர் ஒரு முன்னனி கிரிமினல் வக்கீல்.
மகள் ஹன்னா கூப்பர். இவளும் ஃபேஷன் டிசைனர்.
கடைசி மகன் பிராட் கூப்பர். தடகள வீரர்.
இவர்களின் இரண்டாவது மகன் கால்டன் கூப்பர்.
கயலைக் கவர்ந்திருக்கும்,
அவளைத் தன் வாரிசுக்கு வாடகைத்தாயாக்கியிருக்கும்,
உடன்படிக்கை போட்டு அவளைத் தன்னுடன் தன் வீட்டில் வைத்திருக்கும்,
டிரைவர் போல் தினமும் அவளைக் கொண்டுவிட்டுக் கூட்டிவரும் அதே கால்டன் கூப்பர்.
“தந்தையைப் போலவே இவரும் ஒரு கட்டிடக்கலை நிபுணர். தற்போது நியூ யார்க்கில் மிகவும் புகழ்பெற்ற 7 நட்சத்திர ஹோட்டலை விரிவுபடுத்தும் பணி இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பைப் பெறும் கெண்டக்கியைச் சார்ந்த முதல் ஆர்க்கிடெக்ட் இவர்தான் என்பது பெருமைப்பட வேண்டிய செய்தி.
கூப்பர் தம்பதியர் கெண்டக்கி பல்கலைக் கழகத்துக்கு மூன்றாவது முறையாக 1 மில்லியன் டாலர் நன்கொடை அளித்திருக்கிறார்கள்.”
இப்படி முடிந்தது அந்தச் செய்தித் தொகுப்பு. கயலின் கண்கள் நிலைபெற்றன. மனம் கலவரமானது.
கால்டன் ஒரு பணக்காரர் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அவர் இத்தனை பெரிய பணக்காரர் என்பதையோ அவர் குடும்பம் இப்படிப்பட்டது என்றோ அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
2 தினங்களாகத் தன்னையும் மீறி அவருடன் சில வாக்கியங்கள் பேசிவிட்டதே அவரிடம் சற்று நெருக்கிவிட்டது போன்ற உணர்வினை அவளுக்குள் ஊருவாக்கிவிட்டிருந்தது. நெருங்கவே கூடாது என்ற தன் கட்டுப்பாட்டினைத் தன்னை அறியாமல் மீறத் துவங்கியிருந்த நிலையில், அவளின் தீர்மானங்கள் லேசாகத் தளர ஆரம்பித்திருந்த நிலையில், அன்பும் நம்பிக்கையும் கால்டன் மேல் லேசாக அரும்பிய நிலையில், இந்தச் செய்தி அவள் மனதில் இடியாய் இறங்கியது.
நடுத்தர சமூக-பொருளாதார நிலையில் இருப்பவர்களுக்குப் பெரும் பணக்காரர்களைப் பார்த்தால் ஏற்படும் பயமும் நம்பிக்கையின்மையும் விஸ்வரூபம் எடுத்தன அவள் மனதில். அடிவயிறு கலக்கியது. மேற்கொண்டு சிந்திக்கத் திராணியில்லை. மிகவும் அப்செட்டானாள்.