கால்டனின் குடும்பம் பற்றி அந்த செய்தித்தொகுப்பில் பார்த்ததும் இடி இறங்கியது போல் இருந்தது கயலுக்கு.
கூகுளில் தேடி,
கூப்பர் குடும்பம்,
அவர்களின் கம்பெனிகள்,
சொத்து மதிப்பு,
அவர்கள் ஒன்றாகக் குடியிருக்கும் அந்த மிகப்பெரிய மேன்ஷன்,
குதிரைப் பன்னை,
திருமணமான நிக் கூப்பர், அவர் மனைவி, மகன்,
தன் தாயின் ஃபேஷன் டிசைன் கம்பெனியைத் தற்போது நிர்வகிக்கும் ஹன்னா கூப்பர், அவள் கணவர், மகள்,
வளர்ந்துவரும் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் வீரரான பிராட் கூப்பர், அவரின் காதலி
என அனைவரைப் பற்றியும் தெரிந்துகொண்டாள்.
2 ஆண்டுகளுக்கு முன் இந்த குடும்பத்தில் இருந்து கால்டன் மட்டும் பிரிந்து தனியாக வசிக்கத் துவங்கியுள்ளதாகவும், தனியாக ஆர்க்கிடெக்சர் கம்பெனி நடத்தி, தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் தன் திறமையால் மெதுவாக முன்னேறுவதாகவும், இதற்கு காரணம் நின்று போன அவரின் திருமணம் என்று சொல்லப்படுவதாகவும் ஒரு தகவல் கிடைத்தது அவளுக்கு.
மிகவும் குழம்பிப் போனாள்.
மதிய உணவு தயாரானதும் ஜெனிஃபர்-காடன் தம்பதியருடன் சாப்பிட்டாள். அவர்களிடம் தன் குழப்பங்களை, கவலைகளைக் காட்டிக்கொள்ள விருப்பமில்லை அவளுக்கு. எனவே சகஜமாகவே இருந்தாள். இடையே கால்டனிடமிருந்து வந்து சேர்ந்துவிட்டதாக ஒரு மெசேஜும் கம்பெனி வந்துவிட்டதாக ஒரு மெசேஜும் வந்தது. ரிப்ளை ஒன்றும் அனுப்பவில்லை அவள்.
சாயுங்காலம் 4.30க்கு மீண்டும் கால்டனின் குறுஞ்செய்தி வந்தது.
“வேலை முடிஞ்சிருச்சு. கிளம்பறேன். 10 நிமிஷத்துல வந்துருவேன். ரெடியாகுங்க” என்று.
“நான் இன்னைக்கு இங்க இருக்க விருப்பப்படறேன். நாளைக்கு சாய்ந்தரம் பிக் அப் பண்ணிக்கோங்க. இது என்னோட ரிக்வெஸ்ட்” என்று கயல் பதில் அனுப்பினாள்.
அவளுக்குச் சற்று இடைவேளை வேண்டும் போல் தோன்றியது. ஆனால்
பதில் வரவில்லை கால்டனிடமிருந்து. 5 நிமிடம் கழித்து “சரி” என்று பதில் வந்தது. “தேங்க்ஸ்” என்று சொன்னாள்.
அவளுக்குப் பிடித்த அவர்களின் வீட்டுப் பூங்காவில் தான் அன்று அதிக நேரம் அமர்ந்திருந்தாள். நிறைய எண்ணங்கள் ஓடின அவள் மனதுக்குள்.
குழம்பின குட்டை கொஞ்ச நேரத்தில் தானாகத் தெளிவது போல் தானே மனதும்!! சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு அவளே ஒரு தெளிவுக்கு வந்தாள்.
“இதுல குழம்ப ஒன்னுமே இல்ல. 2 வருஷம் முடிஞ்சதும் நம்ம ப்ளான் படி இந்தியா போறோம். அப்பா அதுக்குள்ள ஓரளவு சரி ஆகிடுவாரு. மிச்ச காலம் அவரைப் பாத்துகிட்டு மருத்துவரா வேலை செஞ்சிக்கிட்டு இருந்திடலாம். கால்டன் யாரா இருந்தா என்ன இப்ப?!!” என்ற ஒரு தீர்மானத்துக்கு வந்தாள்.
இரவு உணவு முடித்து கயல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். மணி 9.30. அவளின் அலைபேசி ஒலித்தது. காதுகளில் கேட்டதே அன்றி அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. அடித்து ஓய்ந்து போனது. பிறகு மீண்டும் ஒலித்தது. சமாளித்துக்கொண்டு கண்களைத் திறக்காமல் ஆன் செய்து காதில் வைத்தாள்.
“நான் வெளியில இருக்கேன். நீங்க வெளிய வர்றீங்களா நான் உள்ள வரட்டுமா” என்று கால்டன் பேசினார். அரை தூக்கத்தில் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.
“வாட்..?” என்று கேட்டாள்.
“நான் கால்டன். நீங்க இப்ப வெளிய வர்றீங்களா நான் உள்ள வரட்டுமான்னு கேட்டேன்” என்று சற்று குரல் உயர்த்தி கடுகடுப்பாய்க் கேட்டார் கால்டன். சட்டென்று விழித்த கயல் குதித்தெழுந்து படுக்கையில் அமர்ந்தாள். அதிர்ச்சியானாள்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.