2.24. கண் பா…..ர்வை முதல் நிலையே!!
எப்படி சமாதானப்படுத்தலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் கயல் கிச்சனுக்கு வந்து கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு சென்றாள்.
அவள் மிகச் சாதாரண சுடிதாரில் அள்ளி முடிந்த கொண்டையோடு இருந்ததைப் பார்த்து இன்று விடுமுறை என்பதைத் தெரிந்துகொண்டார் கால்டன். நிம்மதியடைந்தார்.
தன் அறைக்குச் சென்று ஃபிரெஷ் ஆகிவிட்டு ராயல் நீல நிற பேண்டும் சந்தன நிற சர்ட்டும் அணிந்து கொண்டார். தன் அறை சாளரத்திலிருந்து தோட்டத்தில் கயல் இருப்பதைப் பார்த்தார்.
அவர் அறையில் இருந்தும் அந்த தோட்டத்திற்குப் படிகள் இறங்கின. அதன் வழி முதன்முறையாக அந்த தோட்டத்தில் கயலைச் சந்தித்தார்.
2 வாரத்திலேயே தோட்டம் அழகான ஒரு வடிவமைப்புக்கு வந்திருந்தது. ரோஜா செடிகளைக் கயல் ட்ரிம் செய்துகொண்டிருந்தாள். அங்கே ஏற்கனவே 2 பெரிய மரங்கள் இருந்தன. அந்த மரங்களில் பறவைகளின் கிலாங் கிலாங் சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. சில புறாக்கள் கயல் தூவி வைத்திருந்த தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்தன.
“குட் மார்னிங்” என்று துவங்கினார் கால்டன்.
அலட்சியமான பார்வை தான் பதிலாகக் கிடைத்தது.
“குட் மார்னிங் சொன்னா திருப்பி குட் மார்னிங் சொல்லனும்”
“இதுவும் காண்டிராக்ட்-ல இருக்கா!?”
“சாரி. நேத்து நான் காண்டிராக்டை இழுத்ததுக்கு!!”
“சாரி எல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நமக்குள்ள இருக்கற காண்டிராக்டைத் தானே சொன்னிங்க!”
சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
இடுப்பில் கைவைத்து வானத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டார். இது நீளமாகத் தான் போகுமென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். வேக நடையில் தன் அறை வழியே சென்று கிச்சனில் அவளைப் பிடித்தார்.
“இன்னைக்கு லீவா?”
“ஆமா”
“ஏன் லீவ்?”
“லீவ்.. ஏன்னா என்ன சொல்றது?”
“வேணுமின்னா உங்களை அவங்க வீட்டுக்கு கொண்டு போய் விடறேன்”
“எவங்க வீட்டுக்கு?”
“நேத்து இருந்தீங்களே.. அங்க”
முறைத்தாள்.
“இல்ல நேத்து திடீருன்னு கிளம்பி வந்துட்டிங்க. ஸோ இப்ப போகணுமின்னா போகலாம்”
“நான் எங்கையும் போகல்ல. உங்களுக்கு என்ன வேணும்?”
“இல்ல. இன்னிக்கி எல்க் வர மாட்டாங்க. எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு..”
“நீங்க உங்க வேலைய பாருங்க.”
“நீங்க இங்க தனியா என்ன பண்ண போறீங்க?! எதுக்கு இன்னிக்கி லீவ் கொடுத்தாங்க?!”
“ம்…. தலைக்கு குளிச்சு 1 மாசம் ஆகுது. அதுக்கு தான் லீவ் கொடுத்துருக்காங்க.”
“..”
“உங்களுக்கு வேலை இருக்குன்னா போங்க. நான் காண்டிராக்ட் படி இங்க தான் இருப்பேன். நேத்து நீங்கதான் கூட்டிட்டு வந்திங்க. இன்னைக்கு நீங்களே கொண்டு போய் விடறேங்குறீங்க. புரியல்ல எனக்கு.”
“இல்ல தனியா இருக்கனுமேன்னு சொன்னேன்”
“எனக்கு ஒன்னும் பயம் இல்ல. ஆல்சோ எல்க் இன்னைக்கு வருவாங்க” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே எல்க் வந்துவிட்டாள்.
கால்டனுக்கு குட் மார்னிங் சொன்னாள்.
“உங்களுக்கு இன்னைக்கு வார விடுமுறை தானே!”
“ஆமா. பட் கயலைப் பாத்து 2 நாளுக்கு மேல ஆச்சுல்ல அதான் வந்தேன்” என்று சொல்லி கயலைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள். கயலின் கன்னங்களும் குழிந்தன.
“அப்பறம் என்ன?! கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு இரு பெண்களும் பேசத்துவங்கினர்.
கடுப்பாக இருந்தது கால்டனுக்கு. உண்மையிலேயே கயல் தலைக்குக் குளித்து 1 மாதம் தான் ஆகிப்போனது. அத்தனை பிஸியாகி விட்டிருந்தாள். ஆற அமர எண்ணெய் தேய்த்துக் குளித்தாள். ரிலாக்ஸாக இருந்தாள். எல்க் 1 மணி வரை இருந்துவிட்டுக் கிளம்பினாள். அவள் போனதும் மதிய உணவு உண்டு உறங்கினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு பரபரப்பின்றி ஒரு நாள் கிடைத்தது அவளுக்கு. மனம் அமைதியடைந்தது.
கால்டன் சில வேலைகள் இருந்ததினால் கம்பெனி சென்று முடித்துவிட்டு 4 மணிக்கு வீடு திரும்பினார். எல்க் இல்லை. நேராகத் தன் அறைக்குச் சென்று சாளரத்தின் வழி பார்த்தார்.
தோட்டத்தில் கயல்..
இருவர் அமரும் மர சோஃபா ஒன்றில், பக்கவாட்டில் கால்களை மடித்து முட்டியிட்டுத் திரும்பி, முதுகு சாய்க்கும் பலகையில் கைகளை கோர்த்து, குனிந்து, புறங்கையில் முகவாய்கட்டையை வைத்தபடி, கால்டனின் அறையிலிருந்து இறங்கும் படிகளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அவளது அடர்ந்து நீண்ட கார் கூந்தல் விரிந்து முன்பக்கம் பாதி முதுகில் பாதி என்று கிடந்தது. அவளும் சந்தன நிறத்தில் நீல மலர்கள் அச்சிடப்பட்ட இடுப்புயர குர்தாவும், நீல நிறத்தில் சந்தன மாங்காய் பார்டர் அச்சிடப்பட்ட முழு நீள பாவாடையும் அணிந்திருந்தாள்.
தன் அறையில், அகண்ட கண்ணாடி சாளரத்தின் வழியே, பல வண்ண மலர்கள் செடி கொடிகளுக்கிடையே மர சோஃபாவில் வனமோகினி போல் கயல் உட்கார்ந்திருந்த அந்த காட்சியைப் பார்த்த கால்டன் தன் இதயக்கூட்டில் அதைப் படம்பிடித்துப் பதியம்போட்டுக் கொண்டார்.
ரஹ்மானின் “என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே” பாடல் தலையணி கேட்பொறியில் ஒலித்துக்கொண்டிருந்தது. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடல் கேட்டுக்கொண்டிருந்தாள் கயல்.
இசையையும் பாடல் வரிகளையும் இரசித்துக்கொண்டிருந்த போது, கால்டன் படி வழி இறங்கி வந்துகொண்டிருப்பதைப் பார்த்தாள்.
வர்ணஜாலமாய் இருந்த மாலை வானம், ரம்மியமான தோட்டம், அமைதியான மனம், பாடலின் பின்னனி சாக்ஸஃபோன் இசை, இவற்றுக்கிடையில் சந்தன நிற சட்டையில் கச்சித உடற்கட்டுடன் வசீகரிக்கும் வகையில் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் திணித்தவாறு அவளைப் பார்த்துக்கொண்டே நடந்து வந்த கால்டனைக் கண்டதும் சூரைக்காற்றில் சிக்கிய துண்டுக் காகிதமாய் உணர்ந்தாள் கயல்.
அப்போது சரியாக அவள் காதுக்குள் ஒலித்தன,
“கைகள் நான்கும் தீண்டும் முன்னே….
கண்கள் நான்கும் தீண்டிடுமே….
மோகம் கொஞ்சம் முளைவிடுமே…
கண் பா……ர்வை முதல் நிலையே..” என்ற பாடல் வரிகள். பார்வை ஒன்றே போதுமே.. பல்லாயிரம் சொல் வேண்டுமோ??!!
சோஃபா பக்கத்தில் வந்து நின்றார். கயல் கால்களை இறக்கி நிமிர்ந்து அமர்ந்தாள். கண்கள் என்னும் நாணை இழுத்து இருவரும் எய்திக்கொண்ட பார்வை அம்புகள் மோதிக்கொண்டன. பற்றிக்கொண்டன..
பார்வையாலேயே தன்னவளை இறுகக் கட்டியணைத்தார் கால்டன். கயலும் பார்வையாலேயே அந்த கட்டியணைப்புக்குள் தஞ்சமானாள்.
மனம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், சுயம் தடுத்தாலும், காதல் என்னும் அம்பு இதயம் துளைத்து நேராக உயிரில் சென்று குத்தி நிற்கும் சக்தி கொண்டதல்லவா!!. தடுக்கும் கேடயம் ஏது!!??
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.