அயோர்டிக் வால்வ் ஸ்டீனோசிஸ் எனப்படும் பெருந்தமணி வால்வு சுருக்கத்தை, அந்த வால்வினையே மாற்றிச் சரி செய்யும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, டில்லியில் இருந்து மதியம் 1 மணிக்குச் சென்னை நோக்கிக் கிளம்பியது.
அதுவரை கயலும் பிஸியாகவே தான் இருந்தாள். எல்க்கிடம் கூடச் சரியாகப் பேசவில்லை. தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும் மேலோட்டமாகச் சொன்னாள். முக்கால் வாசி பணத்தினைச் செலுத்தினாள்.
3 மணிக்கு டூட்டிக்குக் கிளம்பி கால்டனுடன் காரில் செல்லும்போது “என்ன பிரச்சினை?” என்று அன்பு நிறைந்த குரலில் கால்டன் கேட்டதும் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டாளே தவிர உண்மையில் அவரிடம் அனைத்தையும் கொட்டித்தீர்த்து அழவேண்டும் போல் தான் இருந்தது அவளுக்கு.
இறங்கும் போது, தன்னால் முடிந்ததைச் செய்யத் தயாராய் இருப்பதாய்க் கால்டன் சொன்னபோது, “பயமா இருக்கு.. பதட்டமா இருக்கு.. ஆறுதலா கூடவே இருக்கிங்களா..” என்று அவரைப் பார்த்துக்கொண்டே மனதுக்குள்
நினைத்தாள். ஆனால் வெளியில் சொல்ல முடியவில்லை. 2 ஆண்டுகளில் வாழ்விலிருந்து தன்னை வெளியேற்றிவிடப் போகும் நபர் என்பது நினைவுக்கு வரவே, அமைதியாகக் காரில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டாள்.
டூட்டியில் கயல் தன் தந்தையின் சிகிச்சை ஏற்பாடுகளைக் கவனிக்க ஏதுவாக அலி பார்த்துக்கொண்டார். மாலை 6.30க்கு மொத்த தொகையையும் கட்டி முடித்தாள். குறித்தபடி சரியாக 7 மணிக்கு சர்ஜரி ஆரம்பமானது.
அனைத்து மன பாரங்களுக்கிடையிலும் தன் கடமையில் சரியாகவே இருந்தாள் கயல். இரவு 9 மணிக்கு டூட்டி முடிந்தது. கிளம்பும் போது அலி வந்தார்.
“சர்ஜரி போயிட்டுருக்கா?”
“ஆமாம் அலி. 7 மணிக்கு ஆரம்பிச்சாச்சு. உங்களுக்கு தெரியுமில்ல.. எக்மோ-ல போட்டு தான் இந்த சர்ஜரி பண்ண முடியும். எக்மோ-ல போட்டாச்சு. இதுவும் 12 மணி நேர சர்ஜரி தான். நாளைக்கு காலையில 7 / 8 ஆகிடும்.”
“ரிஸ்கி சர்ஜரி. கவலைப்படாத. நல்லா ஆகிடுவாரு.”
“வேண்டிக்கிட்டே இருக்கேன்.”
“பணம் கட்டிட்டியா?”
“மொத்த பணமும் கட்டின அப்பறம் தான் சர்ஜரியே தொடங்கியிருக்கு.”
“வெரி குட். பணப் பிரச்சினையும் இப்ப இருந்திருந்தா என்ன ஆகறது!!! நினைச்சுப் பாக்கவே முடியல்ல. யாரு பணம் கொடுத்துருக்காங்களோ அவங்களுக்கு நீ நன்றி சொல்லும் போது என் நன்றியையும் சேர்த்து சொல்லிடு. நாளைக்கு சர்ஜரி முடிஞ்ச உடனே எனக்கும் சொல்லு. ஸீ யூ..” என்று சொல்லிவிட்டு அவள் தோளினைத் தட்டிக்கொடுத்துவிட்டு விடைபெற்றார் ‘நல்ல நண்பரான’ அலி அஸாஃப்.
அலி சொன்ன பிறகு தான் பணம் தந்த கால்டனின் உதவி எப்பேர்பட்டது என்று தோன்றியது கயலுக்கு. சும்மா கொடுக்கவில்லை தான் என்றாலும் சரியான நேரத்தில் தன்னை அவர் தேர்ந்தெடுத்ததும் உடனடியாக, பேசியபடி பணம் கொடுத்ததும் நிஜமாகவே பேருதவிதான் என்றுணர்ந்தாள்.
பணம் இல்லாமல் போயிருந்தால் தற்போதைய சிக்கலில் அடுத்த 2 தினங்களில் அப்பாவை வாரிக் கொடுத்திருக்கவேண்டி வந்திருக்குமே என்று நினைத்த போது உடல் நடுக்கம் கண்டது அந்த மகளுக்கு.
ஆனால் கால்டனிடம் இதுவரை நன்றி சொன்னதே இல்லையே என்று யோசித்தாள். இந்த எண்ணங்களுடனேயே அவள் நடந்து வழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்ததும் கால்டனின் கார் காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே வீடு வந்து சேர்ந்தனர். கால்டன் அவள் சோர்வாக இருப்பதைக் கவனித்து மேற்கொண்டு எதுவும் கேட்காமல் விட்டுவிட்டார். ஆனால் காலையில் என்ன விஷயம் என்பதைக் கேட்டுத் தெரிந்து சரிசெய்துவிடுவது என்று தீர்மானம் செய்துகொண்டார்.
கயல் கண்ணீருடன் அப்பாவுக்காக இரவு முழுதும் தன் அம்மாவிடம் வேண்டிக்கொண்டே இருந்தாள். அவளின் கயல் விழிகள் தலையணைக்கருகே இருந்த கால்டன் பரிசளித்த அந்த ஏஞ்சல் மீனையே பார்த்துக்கொண்டிருந்தன..
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.