2.6 மேனர்ஸ் நிறைந்த கால்டன்
அலுவலகம் சென்ற கால்டன் மிகவும் பிஸியாகிப்போனார். சாப்பிடக் கூட நேரமின்றி வேலை பளு அழுத்தியது. நியூயார்க் நட்சத்திர ஹோட்டல் விரிவாக்க வேலைகள் முழு வீச்சில் துவங்கியதோடு, ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் 3 புராஜெக்ட்டுகளும் சேர்ந்துகொண்டன. அத்தனை வேலைகளுக்கு இடையிலும் 4 மணிக்கு டூட்டி முடிந்துவிடும் என்பதைக் கயலிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் கால்டன். தெரெக்கிடம் தான் 3.45க்குக் கிளம்பிவிடுவதாய்த் தெரிவிக்க, “எது? நீ 2 நாள் இங்கையே தங்கப்போறேன்னு சொல்லுவன்னு நினைச்சேன். 3.45-கு கிளம்பறேன்னு சொல்ற. எங்க போற?” என்று கேட்டார்.
“வீட்டுக்குத்தான்”
“அம்மாவைப் பாக்க போறியா”
“என் வில்லாவுக்குப் போறேன். அம்மாவைப் பாக்க போகல்ல.”
“இந்த ட்ராயிங்ஸ் லாம்???”
“வீட்டுல முடிச்சு அனுப்பறேன்”
“ரொம்ப வித்தியாசமா நடந்துக்கற கால்டன்”
“நான் தான் நேத்தே சொன்னேனே. இனிமே இப்படித்தான். ரேச்சலை வச்சு மேனேஜ் பண்ணு. தேவைன்னா சில பேரை வேலைக்கு புதுசா எடுத்துக்கோ”
“வீட்டுல அப்படி என்ன வச்சுருக்க?”
“சொல்ல முடியாது. சரி நான் பேக் பண்ணிக்கிட்டு கிளம்பறேன்” என்று தேவையானவைகளைப் பொறுக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினார் கால்டன்.
சரியாக 4 மணிக்குக் காத்திருந்த கால்டன், கயல் சிரித்த முகத்தோடு அலிக்கு பாய் சொல்லிவிட்டு வருவதைப் பார்த்தார். மீண்டும் கடுப்பானார். கால்டன் காரைக் கண்டதுமே கயலின் முகம் இறுகியது. அமைதியாய்க் காரில் ஏறிக்கொண்டாள். சிறிது நேரத்திலேயே கால்டன் கோபமாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். ஆனால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவள்.
வீட்டிற்கு வந்ததும் எல்க் இருந்தாள். அவளோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள். கால்டன் அலுவலக வேலைகளில் மூழ்கிவிட, கயலும் தன் அறையில் படிப்பில் மூழ்கினாள்.
எல்க் விடைபெற்று வெகு நேரம் கழித்தே சாப்பிட்டாள். சாப்பிட்ட பாத்திரங்களைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் ஹாலில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
கால்டன் தண்ணீர் அருந்த அடுப்பறை சென்ற போது, கயல் அங்கே மறந்து வைத்திருந்த அவளின் அலைபேசி ஒலித்தது. திரையில் ‘அலி அழைக்கிறார்’ என்று அலியின் சிரித்த முகம் தெரிந்தது. ஏற்கனவே கடுப்பில் இருக்கும் கால்டன், அந்த அலைபேசியைத் தானே எடுத்து வந்து கயலிடம் நீட்டினார்.
நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்ட கயல், “டெல் மீ அலி..” என்று ஆரம்பித்தாள். மறு நிமிடமே கட் செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் எதையோ திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். பார்வை ஆச்சரியத்தில் விரிந்தது.
மீண்டும் அழைத்தார் அலி.
“பாத்தியா?”
“இப்படி ஒரு ஸ்மார்ட் ட்யூமரை நான் இது வரை பாத்ததே இல்ல.”
“பெரிய சவாலான கேஸ்.”
“நிச்சியமா. Prof.ஸ்மித் ரொம்ப ஆர்வமாயிடுவாரு இதைப் பாத்தா”
“ஆமா ஆமா. நாளைக்கு நேர்ல டிஸ்கஸ் பண்ணலாம்.”
“குட்னைட் அலி”
“குட்னைட்”
இந்த முழு சம்பாஷனையையும் பக்கத்திலேயே அமர்ந்து கூர்ந்து கேட்டார் மேனர்ஸ் நிறைந்த கால்டன். கயல் அவரை விசித்திரமாய்ப் பார்த்தாள். “என்ன?” என்று கேட்டாள். “ஒன்னுமில்ல” என்று சொல்லிவிட்டு விருட்டென்று எழுந்து போய்விட்டார்.
ஏதும் புரியாமல் விழித்தாள் கயல். தன்னுடைமை, பொறாமை, ஏக்கம், பயம் ஆகிய காதலின் ஆரம்ப கட்ட மனநிலை அனைத்திலும் சிக்கித்தவித்தார் கால்டன்.
தன் அறைக்குச் சென்ற கயல், கால்டன் பரிசளித்த மீனைப் பார்த்தாள்.
“என்னாச்சு உன் பாஸ்ஸுக்கு? ம்..” என்று அதைப் பார்த்துக் கேட்டாள். “உன்னத்தான் காதலிக்கிறார்” என்று வாய் இருந்தால் சொல்லியிருக்கும் அது. ஒரு விரலால் மீன் தொட்டியைத் வருடிவிட்டு உறங்கப் போனாள்.
கால்டனுக்கு இந்த உணர்வுகளெல்லாம் புதிது. எப்படிக் கையாள வேண்டும் என்று பழக்கமில்லை அவருக்கு. ஆனால் காதலில் பிழைகளும் அழகல்லவோ!!
மறுநாள் மருத்துவமனையில் கயலை இறக்கிவிட்டு அலுவலகம் சென்ற கால்டன், பிஸியாகிவிட, கயலும் வழக்கம்போல் மருத்துவமனை வேலைகளில் மூழ்கினாள்.
தீராத தலைவலியுடன் வந்த தமிழ் இளைஞருக்கு ஸ்மார்ட் ட்யூமர் என்ற அரிய வகை ப்ரெயின் ட்யூமர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றித்தான் அலி சொன்னார். அது தொடர்பாகவே அதிக நேரம் செலவிட்டாள் கயல்.
மாலை வரவேண்டிய நேரத்தில் கால்டன் வரவில்லை. 2 நிமிடங்கள் காத்திருந்துவிட்டு ஒரு டாக்ஸியில் ஏறி வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டாள். வீட்டின் ஒரு சாவியை வந்த அன்றே கொடுத்திருந்தார் கால்டன்.
5 நிமிடங்கள் தாமதமாக வந்த கால்டன், கயல் இல்லாதது கண்டவுடன் மெசேஜ் தட்ட, டாக்ஸியில் போய்க்கொண்டிருப்பதாய்க் கயல் பதில் அனுப்பினாள். கடுப்பு அதிகமானது. கயலோடு இருக்கக் கிடைத்த நேரமே காரில் கொண்டுவிட்டுக் கூட்டிவரும் நேரம் தான். அதுவும் இன்று மிஸ் ஆனதும் ஏமாற்றம் அதிகரித்தது. கோபத்தில் காரை அதி வேகத்தில் கிளப்பிக்கொண்டு போனார்.
2.7. காதல் நாடகம்
-வித்யாகுரு