3.1 – கவனித்துக்கொண்ட கயல்
கால்டனின் படுக்கை அறை..
நன்றாக உறங்கிய ஓர் இரவிலிருந்து மெதுவாக இமைகளைத் திறந்து மீண்டார் கால்டன்.
அதிகாலை.. நாளின் ஆரம்ப வெளிச்சம் மங்கலாக அவரின் அறைக் கண்ணாடி சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஒரே பக்கமாக நீண்ட நேரம் படுத்திருந்தால் உடல் வலி பிடிப்பதைப் போல் உணர்ந்தார். எனவே தன் வலப்புறம் மெதுவாக ஒருக்களித்தார்.
அதிர்ச்சியானார்.
வலப்புறத்தில் படுத்திருந்த கயலைப் பார்த்து..
கயல் அவளின் இடப்புறம் ஒருக்களித்துக் கால்டனைப் பார்த்தவாறு படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
அவள் முகம் சோர்வாக இருந்தது.
விடியல் வெளிச்சத்தில் அவள் அத்தனை அழகாக இருந்தாள். ஒருக்களித்துப் படுத்திருந்ததால் அவளது ஒல்லியான தேகத்தின் வளைவுகளும் எழுச்சிகளும் கால்டனைக் கிரங்கடித்தன.
கயல் எப்படி தன் படுக்கையில் இருக்கிறாள் என்று யோசித்தார். ஒன்றும் புரியவில்லை அவருக்கு. எப்படியானால் என்ன, இந்த மொமெண்டை இரசித்துவிடுவது என்று முடிவுகட்டி கயலின் அழகைக் கண்களால் உண்ணத்துவங்கினார்.
10 நிமிடங்களில் தூக்கம் கலைந்து கயல் விழிகள் திறந்தன. கால்டன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்து புன்னகைத்தாள். மறுநொடி சட்டென்று பதறி எழுந்தாள். கால்டனின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். திரும்பி கால்களைத் தொங்கவிட்டுக் கூந்தலை அள்ளி முடிந்து ஒரு கொண்டையைப் போட்டாள். தன் ஃபிலிப் ஃபிளாப்பைப் போட்டுக்கொண்டு எழுந்து படுக்கையைச் சுற்றி நடந்து கால்டன் பக்கம் வந்து அவருக்கு ஏறிக்கொண்டிருந்த குளுக்கோஸை செக் செய்தாள். வெப்பமானி கொண்டு உடல் சூட்டினை அளந்தாள். ஸ்டெத் வைத்து நுரையீரலயும் மூச்சையும் கவனித்தாள். நாடி பிடித்துப் பார்த்தாள். பிறகு குளுக்கோஸைத் துண்டித்து ஐவி வழியில் ஒரு டோஸ் ஆண்டிபயாட்டிக் மருந்தை செலுத்தினாள்.
“என்ன நடக்குது!!”
“ட்ரீட்மெண்ட் நடக்குது. பாத்தா தெரியல்லையா?!”
“அது தெரியுது! என்ன எனக்கு?”
“சின்ன இன்ஃபெக்ஷன்.”
“இன்ஃபெக்ஷன் ஆ..!!”
“ஆமா!! கடைசியா என்ன உங்க நியாபகத்துல இருக்கு!!??”
“ம்… உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னிங்க!”
“அப்பறம்..”
“ம்….. உங்களை மிஸ் பண்ணினதால தான் வீட்டுக்கு கூப்பிட்டு வந்தேன்னு சொன்னேன்”
“அதுக்கு அப்பறம்..”
“எல்க் வந்தாங்க..”
“அப்பறம்..”
“ஹா.. வயிறு வலிச்சுது. வாந்தி, பேதி…”
“ம்… அதுக்கு அப்பறம்..?”
“அப்பறம்…. ரொம்ப டயடா இருந்துது. படுத்தேன்… அதுக்கு அப்பறம்…… நியாபகம் இல்ல.”
“ஓகே.. யோசிக்க வேண்டாம். ஓரளவு சரி ஆகிடுச்சு. சீக்கிரம் முழுசா சரி ஆகிடும்.” என்று சொல்லிப் புன்னகைத்துவிட்டு, அவரின் தலையணை பக்கத்தில் இருந்த மேசையின் இழுப்பறையில் இருந்து அவரது அலைபேசியை எடுத்துக் கொடுத்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் மறைந்ததும் அலைபேசியை ஆன் செய்தார். 4 நாட்கள் ஓடியிருந்தது கண்டு அதிர்ச்சியானார். அவள் தான் தன்னைக் கவனித்திருக்கிறாளென்று புரிந்துகொண்டு ஆச்சரிய ஆனந்தமடைந்தார்.
அப்போது ஒரு நபர் வந்து கால்டனுக்கு உடல் துடைத்துவிட்டு உடை மாற்றிவிட்டுச் சென்றார். எல்க்கும் சீக்கிரமே வந்திருந்தாள். கால்டனின் அறையெங்கிலும் மருத்துவப் பொருட்களாக இருப்பதைப் பார்த்து, கயல் வீட்டையே மருத்துவமனை ஆக்கியிருப்பதை இரசித்தார்.
சிறிது நேரத்தில் எல்க் சூப் கொண்டு வந்தாள். மெதுவாக எழுந்து சாய்ந்தபடி அமர்ந்து அதை அருந்தினார். உடல் மிகவும் சோர்வாக இருந்தது.
“எப்படி இருக்கிங்க?”
“சோர்வா இருக்கு..”
“4 நாளாகுதுல்ல.. கண்டிப்பா சோர்வா இருக்கும்.”
“கயல் தான் பாத்துகிட்டாங்களா?”
“ஆமா. டூட்டிக்கு கூட போகல்ல.”
“நீங்க அம்மா கிட்ட எல்லாம் ஒன்னும் சொல்லல்லையே..”
“சொல்லிட்டேன். ஆக்சுவலி கயல் சொல்ல சொன்னாங்க. நீங்க அதை விரும்பமாட்டிங்கன்னு சொன்னேன். ஆனா அவங்க கேக்கல்ல. ஃபேமிலி டாக்டர் ஒருத்தர் வந்து பாத்துட்டு சாதாரண ஜுரம் தான்னு ஊசி போட்டுட்டுப் போனாரு. பட் இது சாதாரண ஜுரம் இல்லை போல இருக்கு. அதுக்கு அப்பறம் தான் கயலே இறங்கிட்டாங்க.”
“அந்த டாக்டர் கயல் இங்க இருக்கறதைப் பாத்தாரா?”
“இல்ல.”
இவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது தெரெக்கும் கயலும் கலகலவெனச் சிரித்துப் பேசிக்கொண்டே கால்டனின் அறைக்குள் நுழைந்தனர்.
“வெல்கம் பேக் கால்டன்” என்று வழக்கமான உற்சாகத்துடன் ஆரம்பித்தார் தெரெக்.
இருவரையும் ஒன்றாகப் பார்த்ததும் கால்டன் புரிந்துகொண்டார். தெரெக்கிடம் முதன்முறையாக கஷ்டப்பட்டு இத்தனை நாள் தான் மறைத்து வைத்திருந்த விஷயம் வெளிச்சத்தில் வந்துவிட்டதென்று.
-வித்யாகுரு