3.9 கயலைக் குழப்பிய கல்யாண நிகழ்வுகள்
3.10- தீர்வு நோக்கி..
கயல் சோர்வாகப் படுத்து உறங்கியதைப் பார்த்த கால்டன் ரொம்பவும் வேதனைப்பட்டார். அவரது அந்த அழகிய தேன் நிறக் கண்கள் கலக்கம் கண்டன. சோர்ந்த அவளின் முகத்தையே இரவின் முக்கால் பொழுது பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு தானும் மற்றொரு சோஃபா நாற்காலியில் சாய்ந்து கால்களை டீ-பாயில் நீட்டி கயலைப் பார்த்துக்கொண்டே உறங்கிப்போனார்.
விடிந்ததும் கண்திறந்த கயல், நாற்காலியில் கால் நீட்டி உறங்கும் கால்டனைப் பார்த்தாள். இளவரசன் போலிருந்தார் அவர். முந்தின நிகழ்வுகள் நினைவுக்கு வரவே, மலர்ந்த அவளது முகம் மீண்டும் வாடியது. குழப்பம் குடியேறியது.
மெதுவாக எழுந்து அமர்ந்தாள். குடும்பத்தையே விலக்கி வைக்கும் அளவு கல்மனமா என்று யோசித்துக்கொண்டிருந்த போது உறக்கம் கலைத்த கால்டன், “இப்ப பரவாயில்லையா?” என்று பதட்டத்துடனும் பாசத்துடனும் கேட்டார்.
அப்போதுதான் கல்மனம் கொண்டவரென நினைத்த கயல், அவரின் குரலில் இருந்த அக்கறையையும் கண்ணில் தெரிந்த பாசத்தையும் கண்டு வியப்பில் குழம்பினாள்.
“பரவாயில்ல..” என்று சொல்லித் தன் அறைக்குச் சென்றாள்.
இருவரும் தயாராகி ஸ்கேன் செய்யக் கிளம்பினர். செல்லும் வழியில் அமைதியே நிலவியது. ஸ்கேனில் எல்லாம் நார்மல் என்று மருத்துவர் சொன்னார். சில சத்து மாத்திரைகள் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வருவது கேட்டு கால்டன் மிகவும் ஆனந்தப்பட்டார். கயலுக்கு என்ன சொல்வது என்ன நினைப்பதென்றே தெரியவில்லை. மன வேதனைப்பட்டாள்.
திரும்பி வரும் வழியில் கயல் முகம் வாடி இருந்தது கண்டு பேச்சைத் துவங்கினார் கால்டன்.
“நேத்துலேருந்து ரொம்ப டல்லா இருக்கிங்க. ஏன்?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே!!”
“நேத்து யாராவது ஏதாவது சொன்னாங்களா?”
“இல்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்..”
“ஓகே. என்கிட்ட சொல்ல வேற ஏதாவது இருக்கா?!”
“ம்..?”
“ஏதோ உங்க மனசுல ஓடுது. சொல்லனுமின்னா சொல்லுங்க..”
“உங்க அம்மாவைப் போய் பார்த்து ரொம்ப நாள் ஆச்சோ?”
“3 மாசமும் 1 வாரமும் ஆகுது. தங்கச்சியை அவளுக்குக் குழந்தை பிறந்த அன்னைக்குப் போய் பார்த்தது. 6 மாசம் ஆச்சு..”
“…”
“ஏன் கேட்டிங்க?”
“சும்மாத்தான் கேட்டேன்..”
“அவங்களைப் போய் நான் ஒரு முறை பார்க்கனுமின்னு நினைக்கிறீங்களா?”
“இல்ல இல்ல.. நான் எப்படி அதெல்லாம் நினைக்க முடியும்? நான் ஒன்னும் நினைக்கல்லை..”
“அவங்களை நான் போய் பார்த்துட்டு வரனுமின்னு நினைக்கறீங்கன்னா போய் பார்த்துட்டு வருவேன். நீங்க அப்படி நினைக்கல்லைன்னா போகல்லை..”
“ஆமா.. ஒருமுறை போய் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லத்தான் நினைக்கறேன்”
அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார். “சரி.. நாளைக்கு உங்களை டூட்டியில டிராப் பண்ணிட்டு போய் பார்த்துட்டு வர்றேன்..”
“3 மணி டூட்டி”
“ஓகே”
திருமணத்தில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்று முன்பே ஊகித்திருந்தார் கால்டன். இப்போது கயல் தன்னை வீட்டுக்கு ஒருமுறை போய்வரச் சொல்வதிலிருந்து நிச்சியம் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று ஊர்ஜிதம் செய்தார். இந்தியர்களின் குடும்பப்பிணைப்பு பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். கயல் தன்னையும் குடும்பத்திடம் தள்ளப்பார்ப்பதை இரசித்தார்.
ஆனால் கயல் கால்டனை வீட்டுக்கு அனுப்ப ஒரே காரணம் தான். வீட்டுக்குப் போனால் எவாஞ்சலினுடனான திருமணப் பேச்சு அவருக்குத் தெரியவர வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கும் இவரின் வாரிசு முயற்சிகள் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. குழப்பம் வந்தால் தான் ஏதேனும் ஒரு தீர்வு வரும் என்ற எதிர்பார்ப்புடன் தான் கால்டனை வீட்டுக்குச் செல்லும்படிக் கேட்டாள் கயல். அவரும் சரியென்று சொன்னதும் நிம்மதியடைந்தாள்.
அன்று மாலை தோட்டவேலை செய்துகொண்டிருந்த கயலுடன் கால்டனும் எல்க்கும் இணைந்துகொண்டனர்.
கிண்டலும் கேலியுமாக மூவரும் சிறு வயதில் தோட்ட வேலை செய்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சிரித்து மகிழ்ந்தனர்.
கயல் நம்மூரில் நாம் தோட்டத்தில் வழக்கமாக அடிக்கும் கூத்துகளைச் சொன்னாள். இப்படியெல்லாம் கூட வாழ்க்கை இருக்கிறதா என்று ஆச்சரியமாய் இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
எல்க் சொன்ன கதைகள் தன் வீட்டில் நிகழ்ந்தவைகள்தானா என்று நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தார் கால்டன்.
அவர்களைப் போல் சொல்வதற்குக் கால்டனிடம் பெரிய அனுபவங்கள் ஒன்றும் இல்லை. ஒன்றிரண்டு பகிர்ந்துகொண்டார் அவ்வளவுதான். ஆனால் கயலும் எல்க்கும் சொன்ன சிறுவயது கதைகள் கேட்டுச் சிரித்து மகிழ்ந்தார்.
முக்கால் மணி நேரங்கழித்து மூவரும் களைத்துப்போயினர். எல்க் ஜூஸ் கொண்டுவருவதாய்ச் சொல்லி சமயலறைக்கு விரைந்தாள். கயல் புல் தரையில் அமர்ந்தாள். கால்டனும் கயலுடன் புல் தரையில் கால் நீட்டி அமர்ந்துகொண்டார்.
இருவரும் ஒருவர்பால் ஒருவர் காந்தமென ஈர்க்கப்பட்டனர். பார்வைகள் கலந்தன.
3.11- வெள்ளைக் காகிதமும் வண்ண ஓவியமும்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.