“சாப்பிடறதே தரையில உட்கார்ந்து தான். பூமியும் ஒரு அம்மா தானே. பூமியில உட்கார்ந்தா அம்மா மடியில உட்கார்கிற மாதிரி. மனசுக்கு நிம்மதியா இருக்கும். அப்படியே தரையில படுத்து வானத்தைப் பார்த்தா, மனசுல இருக்குற எல்லா குழப்பமும் காணாம போயிடும். ஒரு நீர்நிலையும் காத்தும் சூரிய ஒளியும் கூட இருந்தா இன்னும் சுகம் தான்.”
“இங்க இது எல்லாம் 2 மாசம் தான் கிடைக்கும். அப்பறம் எல்லா மரமும் இலைகளைக் கொட்டி மொட்டையா தனியா நிக்கும். அதுக்கு அப்பறம் பனி கொட்டி எல்லாம் ப்ளைன் பேப்பர் மாதிரி ஆகிடும்.”
“அதுவும் ஒரு அழகு தான்..”
“எது? இலைகள் இல்லாம தனியா நிக்குற மரமா?”
“அதை அப்படிப் பார்க்கக் கூடாது. இலைகள் வேணுமின்னா உதிர்ந்து போயிருக்கலாம். மரமும் கிளைகளும் அங்கையே தானே இருக்கு. புது இலைகளை வரவேற்க வேர்கள் இன்னும் பலமாகுது. அவ்வளவு தான். வெள்ளை காகிதத்துல தானே வண்ண ஓவியங்களை வரைய முடியும்.!”
“எப்படி எல்லாத்தையும் பாஸிட்டிவா பாக்குறிங்க!!”
“அப்பா சொல்லிக் கொடுத்தது..”
“க்ரேட்!! அப்பா எப்படி இருக்காரு?!”
“நல்லா இருக்காரு. புது பின்னடைவு ஒன்னும் இல்ல. அதே நேரம் பெரிய முன்னேற்றமும் இல்ல.”
“ஓ..”
“நல்லா ஆகிடுவாரு!”
“நிச்சியமா. இப்படி ஒரு பொண்ணை விட்டுட்டு போயிட முடியுமா!!”
பார்வைகள் சந்தித்தன மீண்டும்.. “2 வருஷம் கழிச்சு நான் எப்படி விடப்போறேன்!!??” என்று கால்டனும், “2 வருஷம் கழிச்சு நீங்க விட்டு போகத்தானே போறீங்க” என்று கயலும் மனதுக்குள் நினைத்துக்கொண்டனர்.
எல்க் ஜூஸுடன் வந்து இடையில் நுழைந்தாள். பெண்கள் இருவரும் அங்கேயே அமர, கால்டன் டம்ளருடன் தன் அறைக்குச் சென்றார்.
அவர் போனதும், “கால்டன் இவ்வளவு சந்தோஷமா பேசி நான் இப்பத்தான் பார்க்குறேன்.” என்றாள் எல்க். கயல் எல்க்கின் வாயைப் பிடுங்கினாள்.
“ஏன் அப்படி சொல்லுறீங்க?”
“பணக்கார வாழ்க்கை கயல். அவரோட அப்பா அவர்கிட்ட 34 வர்ஷத்துல மொத்தமா ஒரு அரை மணி நேரம் பேசியிருப்பாரு அவ்வளவு தான். அம்மாவும் பிஸி தான். 4 பசங்களையும் நானி தான் வளர்த்தாங்க. என் அம்மா தான் கால்டனோட நானி. எல்லா வசதியும் இருக்கு. மத்த பசங்களுக்கு அதுவே போதுமா இருந்துது. சந்தோஷமா வளர்ந்தாங்க. கால்டன் மட்டும் கொஞ்சம் வித்தியாசம். அவருக்குப் பணம், வசதி தேவைப்படல்ல. ஸிம்பிளா இருக்கத்தான் விருப்பப்பட்டாரு. பாசமும் பெத்தவங்க கூடப்பொறந்தவங்களோட நேரமும் தான் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனா ரெண்டும் கிடைக்கவே இல்ல. உண்மையில அவர் தனிமை விரும்பி இல்ல. கூட்டமா இருக்கத்தான் அவருக்கு ஆசை. ஹன்னா மட்டும் தான் இவரோட நேரம் செலவிடுவா.. மத்தவங்க தங்களோட வேலை வாழ்க்கையில தான் பிஸி. வெறுத்துப் போய், ஒரே வீட்ல தனித்தனியா இருக்கறதுக்கு தனியா வேற வீட்டுலையே இருந்துக்கலாமின்னு இங்க வந்துட்டாரு.” என்று சொல்லி காலியான டம்ளர்களை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் எல்க்.
கால்டன் மேல் கயலுக்குப் பரிதாபமும் நல்ல அபிப்ராயமும் வந்தது. அவர் கல்மனம் கொண்டவரல்ல என்று புரிந்துகொண்டாள். கால்டனின் அறைப்பக்கம் அவளது கயல்விழிகள் சென்றன..
கால்டன் விரக்தியில் தான் தனிமையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரே தவிர வெறுப்பில் அல்லவென்று எல்க் சொன்னவைகளிலிருந்து புரிந்துகொண்டாள் கயல். ஒரு குழந்தை பெற்றுத் தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்க அவர் நினைப்பது மட்டும் ஏனென்று விளங்கவில்லை அவளுக்கு.
கால்டனின் அழகுக்கும் பணத்துக்கும் குணத்துக்கும் எத்தனையோ பெண்கள் கிடைப்பார்களே; ஆனால் இவர் ஒரு துணையைத் தேடாமல் ஒரு குழந்தையை மட்டும் உருவாக்க நினைப்பது ஏனென்று சிந்தித்தாள். லாஜிக்கான ஒரு காரணமும் தோன்றவில்லை அவளுக்கு! ஒருவேளை நின்று போன திருமணத்தின் மணப்பெண்ணைக் காதலித்து, அவள் போனபின்பு வேறொருத்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படிச் செய்கிறாரோ என்று யோசித்தாள். ஆனால் ஹன்னா சொன்னதை வைத்துப் பார்த்தால் இந்தக் காரணமும் சரியானதாய்த் தோன்றவில்லை அவளுக்கு. இதற்குக் கால்டனிடம் மட்டுமே நிஜமான காரணம் உண்டென்று தன் சிந்தனைகளைக் கைவிட்டாள்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.