3.14- கருத்தில் நிறைந்தவள்
செலீனாவிடமிருந்து விடைபெற்ற கால்டன் மணியைப் பார்த்தார். 5.15 தான் ஆனது. 15 நிமிடங்கள் அம்மாவிடம் தொடர்ந்து பேசிவிட்டோமா என்று ஆச்சரியப்பட்டார்.
தங்கை ஹன்னா 6 மணிக்குத் தான் நேரம் வழங்கியிருக்கிறாள் என்பதால் இடையில் இருந்த 45 நிமிடங்களில் மேன்ஷனை ஒரு வட்டமடித்தார். குதிரைகளைப் பார்த்தார். பிறகு குழந்தைகளின் நர்சரி பூங்கா பக்கம் போனார்.
தன் அண்ணனின் மகனை நானி விளையாட விட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். தான் வளர்ந்ததைப் போலவே இன்னொரு தலைமுறை உருவாவதைக் கண்டு வேதனைப்பட்டார்.
கிட்டே சென்று தன் அண்ணன் மகனுடன் பேசப்போனார். அந்தப் பிள்ளைக்கு சொந்த சித்தப்பாவையே அடையாளம் தெரியவில்லை.
அவர் அந்த வீட்டில் இல்லை என்பதனால் அல்ல. அந்த வீட்டில் உள்ள ஒருவரையும் அந்த குழந்தைக்குத் தெரியாது. நானிகளும் வீட்டுப்பள்ளிக்காக பாடமெடுக்க வரும் ஆசிரியர்களுமே அக்குழந்தைக்குத் தெரிந்த நபர்கள். அம்மா அப்பா கூட பார்வையாளர்கள் தான்.
நல்ல வேளை இந்தச் சூழலில் இந்த முறையில் தன் குழந்தை வளரப்போவதில்லை என்று நிம்மதியடைந்தார்.
இந்த வாரிசு உருவாக்கும் முயற்சியின் துவக்கத்தில், குழந்தையைத் தான் மட்டும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசமும் அக்கறையும் நேரமும் தந்து நன்முறையில் வளர்த்தெடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால் இப்போது ‘கயல்’ அவர் கருத்தில் நிறைந்தவள் ஆகிப்போகவே, அவளுடன் இணைந்து தன் குழந்தையை வளர்த்தெடுக்க அவர் மனதில் ஆசை வளர்ந்திருந்தது.
கயல் எப்படிப்பட்ட சிறந்த தாயாக இருப்பாள் என்று ஐயந்திரிபின்று உணர்ந்திருந்தார் அவர். ஆனால் தன் எண்ணங்கள் பலிக்குமா என்று நினைத்தார். கயல் மனதில் வேறு ஒருவரும் இல்லை என்று அவருக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஆனால் அவள் மனதில் அவர் இடம்பிடித்திருக்கிறாரா என்று உறுதியாகத் தெரியவில்லை அவருக்கு. இன்னும் 2 ஆண்டுகள் நேரமிருக்கிறது, இந்த விஷயத்தைப் பொறுமையாக அதன் போக்கில் விட்டுவிடுவதென்று முடிவு செய்தார்.
இருவரும் பதின் பருவத்தினர் அல்லரே!! வளர்ந்து ஆளுமையுடன் இருப்பவர்கள். கால்டன் ஒரு கட்டிடக்கலை வல்லுநர், கயல் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். இருவரும் உறுதியானவர்கள். டஃப் பர்சனாலிட்டீஸ். அதனால் குழந்தைத்தனமாக இந்தக் காதலை இருவராலுமே கையாள முடியாது. எனவே போக்குடன் போவதெனத் தீர்மானித்தார் கால்டன்.
எப்படியாயினும் சுவாசம் நிறுத்தும் நொடி வரை கயலை விடுவதில்லை என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். கயல் – அவளைத் தன் கருத்தில் நிறைத்தார், காதல் கொண்டார், கனவுகள் வளர்த்தார்.
மணி 6 ஆனது. ஹன்னாவின் வசிப்பிடத்திற்குச் சென்றார். வாஞ்சையுடன் கால்டனை வரவேற்றாள் ஹன்னா கூப்பர். இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர். இத்தனை நாள் வராதது குறித்துக் கால்டனைக் கடிந்து கொண்டாள் ஹன்னா. இருவரும் நலம் விசாரித்துக்கொண்டனர். அவளின் 6 மாத பெண் குழந்தையைப் பார்த்தார். இரசித்தார். ஹன்னாவின் கணவர் கால்டனின் நண்பர். இருவரும் ஒரே போல் வளர்ந்தவர்கள். பெரும் பணக்காரர்களுக்கான பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். மேற்படிப்பில் இருவரும் வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தனர். அவர் நட்சத்திர ஹோட்டல் வைத்து நிர்வகிக்கிறார். எனவே அவரைப் பற்றியும் விசாரித்தார் கால்டன். சாதாரணமாக இருவரும் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். தாயாரைச் சந்தித்தது பற்றியும் சொன்னார். அவர் பேச்சிலிருந்து திருமணத்தைப் பற்றி செலீனா வாயைத் திறக்கவில்லை என்று புரிந்துகொண்டாள் ஹன்னா. 20 நிமிடங்களில் விடைபெற்றார் கால்டன்.
நேராக மீண்டும் எல்க் வீட்டிற்குச் சென்றார். எல்க் இல்லை. அவள் கால்டனின் அப்பார்ட்மெண்ட் சென்றிருந்தாள். எல்க்கின் தாயார் கால்டனுக்கு டின்னர் தயார் செய்து வைத்திருந்தார். கால்டனுக்குப் பிடித்த எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்து அவருக்கு அன்புடன் பரிமாரி அவர் பசியாறுவதை இரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ஜெசிகா.
“எல்க் சமையலும் அப்படியே உங்களுடையது மாதிரியே இருக்கு அம்மா.. நீங்க செய்யல்ல.. அது மட்டும் தான் வித்தியாசம்.”
“சாப்பிடு பா.. இனிமே இப்படி 3 மாச இடைவெளி எல்லாம் விடக் கூடாது. ஒவ்வொரு மாசமும் 1 நாளாவது வரனும். நான் எதிர்பார்ப்பேன்.”
“கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் மா. இனிமே ஒவ்வொரு மாசமும் வர்றேன்.”
“அப்பறம். என்கிட்ட சொல்ல எதாவது இருக்கா?”
“ஆக்சுவலி இருக்கு.”
“சொல்லு.”
“ஒரு குழந்தைய எதிர்பாக்குறேன்..”
(ஆச்சிரியம், அதிர்ச்சி,..)
“என்ன மா அப்படி பாக்குறீங்க!?”
“நீ எதிர்பார்த்த மாதிரி வாடகைத் தாய் கிடைச்சுட்டாங்களா?!!!!!”
“ஆமாம் மா!!”
“தனியா குழந்தையை வளர்க்க நிஜமாவே தயார் ஆகிட்டியா!” (கவலையுடன் கேட்டார் ஜெசிகா)
“தயார் ஆகித்தான் ஏற்பாடு செஞ்சேன். ஆனா இப்ப தயார் இல்ல.”
“குழந்தையை எதிர்பார்க்குறேன்னு சொல்லுற. ஆனா தனியா குழந்தையை வளர்க்க தயாராகல்லைங்கற. புரியல்ல எனக்கு. 1 வருஷம் பாலூட்டி முடிஞ்சதும் சரோகேட்ட அனுப்பிடுவேன்னு தானே 3 மாசம் முன்ன வந்த போது சொல்லிட்டுப் போன. இப்ப தனியா வளக்க முடியாதுன்னா குழந்தையை என்ன செய்யப் போற? இது விளையாட்டு இல்ல கால்டன்” என்று படபடத்தார் ஜெசிகா.
“இருங்க இருங்க மா. என்ன முடிக்க விடுங்க. குழந்தையைத் தனியா வளர்க்கப் போகறது இல்ல. என் குழந்தையோட அம்மாவோடையே சேர்ந்து வளர்க்க போறேன்.”
கால்டன் சொன்னது முதலில் புரியவில்லை அவருக்கு. ஆனால் சில நொடிகளில் புரிந்துகொண்டார். கண்கள் சிரிக்க வாயைப் பிளந்தார். கால்டனின் தோளைப் பிடித்து உலுக்கினார். கன்னத்தைக் கிள்ளினார். அத்தனை சந்தோஷப்பட்டார்.
“ஸோ.. ஒரு வழியா.. காதல்ல விழுந்துட்ட.. இல்லியா!!!” என்று எக்கச்சக்க ஆர்வத்தில் ஆனந்தத்தில் கேட்டார் கால்டனின் வளர்ப்புத் தாய் வெள்ளந்தியான ஜெசிகா. முதன்முறையாக சிறு வெட்கத்துடன் முகமெங்கும் சந்தோஷம் பரவ இதழ் மலர்ந்த புன்னகையுடன் மண்டையை ஆட்டி ஆமோதித்தார் கால்டன்.
3.15- ஆர்பரித்து அடங்கிடும் ஆறுகள்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.