3.15- ஆர்பரித்து அடங்கிடும் ஆறுகள்.
ஜெசிகா அத்தனை ஆனந்தப்பட்டார் என்றால் அதில் காரணம் இல்லாமல் இல்லை. கால்டனை வளர்த்தவர். அவரை அணு அணுவாகப் புரிந்து வைத்திருக்கும் ஒரே நபர் அவர் தான். கால்டனை நினைத்து அவர் கவலைப்படாத நாளில்லை. குடும்பம், உறவுகள் பற்றி அவரின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல ஒரு வாழ்க்கை அவருக்கு அமைய அமெரிக்காவில், ‘கூப்பர் குடும்பத்தில்’ வாய்ப்பே இல்லை என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
நின்றுபோன அந்தத் திருமணம் கால்டனை எந்த அளவு பாதித்தது என்பதும் அவருக்குத் தெரியும்.
அது பொருத்தமில்லாத திருமணம், நின்றவரை நல்லதுதான் என்று கால்டனுக்குப் புரியவைக்க முடிந்த அவருக்கு, எதிர்பார்ப்பது போல் ஒரு வாழ்க்கைத் துணை நிச்சியம் அமையும் என்று கால்டனை நம்ப வைக்க முடியவில்லை. கால்டனின் சரோகசி முடிவில் அவருக்குத் துளியும் உடன்பாடில்லை. அவசரம் வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால் கால்டனின் பிடிவாதம் உடையவில்லை. அவர் வாழ்வில் நல்லதொன்று நடக்க வேண்டும் என்று அவர் வேண்டாத நாள் இல்லை. இப்போது கால்டன் காதலிப்பதை ஒப்புக்கொண்டதும் அவரின் ஆனந்தம் எல்லை கடந்தது. விவரமாகச் சொல்லும்படி உந்தினார்.
“நீ காதலிக்குற பொண்ணு கர்ப்பமா இருக்காளா?”
“இல்ல.. என் சரோகேட் தான் கர்ப்பமா இருக்காங்க. அவங்களைக் காதலிக்கிறேன்.”
“சரோகேட்ட காதலிக்குற!?”
“ஆமா. ஆனா இதை இன்னும் அவங்க கிட்ட வெளிப்படுத்தல்ல.”
“அந்தப் பொண்ணு உன்னைக் காதலிக்குறாளா?”
“தெரியல்லையே.. நான் என் காதலை வெளிப்படுத்தினாத்தானே அவங்களும் என்னைக் காதலிக்குறாங்களான்னு தெரியும்?”
“அப்ப வெளியிட வேண்டியது தானே. என்ன பிரச்சினை அதுல?”
“பயமா இருக்கு?”
“பயமா இருக்கா!!!!”
“ஆமா. மறுத்துட்டாங்கன்னா?!”
“என்ன பேசுற!! என் கால்டனை மறுக்கற பொண்ணும் இருக்க முடியுமா?”
“அவங்க மறுக்கலாம்!”
“ஏன் அப்படி சொல்லுற? யாரு அந்த பொண்ணு?”
“அவங்க ஒரு இந்தியர்.”
“!!!!! இந்தியப் பெண்ணா?”
“ஆமா. (இதுவரை நடந்த அத்தனையும் சொன்னார் கால்டன்.)”
“பார்க்கனுமே. ஃபோட்டோ இருக்கா?”
“இல்ல மா. எனக்கே இப்ப வரைக்கும் ஃபோட்டோ எடுக்கனுமின்னு தோணல்லை.”
“என்கிட்ட இருக்கு!” என்று எல்க் உள்ளே நுழைந்தாள்.
“ஆ.. எல்க் கிட்ட கண்டிப்பா இருக்கும். 2 பேரும் ரொம்ப ஃப்ரெண்ட்ஸ்.”
“அப்ப உனக்கு எல்லாம் தெரிஞ்சும் என்கிட்ட 1 வார்த்தை கூட சொல்லல்ல இல்ல எல்க்?”
“அம்மா நாந்தான் சொல்ல வேண்டாமின்னு சொன்னேன். அவங்களைக் கோவிச்சுக்காதிங்க.”
எல்க் தன் கைபேசியில் கயலுடன் எடுத்துக்கொண்ட பலப்பல செல்ஃபிக்களைக் காட்டினாள். பார்த்த மறுநொடியே பிடித்துப்போனது ஜெசிகாவுக்கு.
“பேர் என்ன? நீ சொல்லு கால்டன்.”
“கயல்…”
“ரொம்ப அழகா இருக்கா!! எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.”
“எனக்கும் தான் மா. குணத்துல தங்கம்” என்று எல்க் சொல்ல,
“மேற்கொண்டு என்ன பண்ணப்போற?” என்று கால்டனிடம் கேட்டார் ஜெசிகா.
“தெரியல்ல. ஒன்னும் ப்ளான் இல்ல. ”
“என்ன ப்ளான் இல்ல??. நீ தெளிவா இருக்கீல்ல?!”
“எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல..”
“அப்பறம் என்ன? சட்டுன்னு நடவடிக்கை எடுத்துடு.”
“கயலோட அப்பா ஸிக்கா இருக்கும் போது இதைச் சொன்னா அது சரியா இருக்காது. அவ அதை விரும்ப மாட்டா.” என்று எல்க் சொன்னாள். கால்டனும் ஆமோதித்தார்.
“சரி. அப்ப அவளோட அப்பாவுக்கு ஓரளவு சரி ஆன அப்பறம் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துடு. இப்பவே ப்ளான் பண்ணிக்கோ”
“இது வரைக்கும் எல்லாத்தையும் ப்ளான் பண்ணி செஞ்சு எதுவும் உருப்படல்லை. இந்த முறை நான் எந்த ப்ளானும் பண்றதா இல்ல. அது போக்குல போகப் போறேன்.”
“கயல் அடிக்கடி சொல்லுவா. பெருசா எந்த ப்ளானும் பண்ணாம தானா நம்ம வழில அமையறது தான் நமக்கானதுன்னு. கால்டன் சொல்லுறது தான் சரின்னு எனக்கும் படுது.”
“எது எப்படியோ. எனக்கு இப்பவே ஆர்வம் தாங்கல்ல.”
“இருங்க மா. கயல் என் விருப்பத்துக்கு ஒத்துப்பாங்களான்னு இன்னும் உறுதியா தெரியல்ல. நாடு, இதுவரை வாழ்ந்த விதம், மொழி இப்படி எல்லாமே எங்களுக்குள்ள வெவ்வேறையா இருக்கு. எல்லா வேற்றுமைகளையும் கடந்து இது நடக்குமா… தெரியல்ல.. பாக்கலாம்!”
“இரண்டு நதிகள் கலக்கற சங்கமத்தைப் பார்த்துருக்கியா?”
“இல்ல.. பார்த்ததில்ல”
“வெவ்வேற திசையில வெவ்வேறு வேகத்துல வெவ்வேறு சூழ்நிலையில ஓடி வந்த இரண்டு ஆறுகளோட பாதைகள் குறுக்கிடும் போது ரெண்டுமே என்ன செய்யுறது எப்படி நடந்துக்கறதுன்னு தெரியாம பைத்தியம் புடிச்சிட்ட மாதிரி ஆர்பரிக்கும். ஆனா கொஞ்ச தூரத்துல ரெண்டும் ஒன்னா கலந்து தனக்குன்னு ஒரே பாதையை அமைச்சுக்கிட்டு அமைதியா தன் பயணத்தைத் தொடரும். உனக்கும் அவளுக்கும் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுபட வைக்க அன்பு ஒன்னு போதும்.” என்று சொல்லித் தோள் தட்டினார். ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டார் கால்டன்.
3.16- மசக்கைக்காரி
-வித்யாகுரு