3.23- முதல் மன்னிப்பு
மனங்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தன. இருவரும் உணவு உண்டு முடித்தனர். கயலுக்கு வழக்கம் போல் வயிறு பிரட்டியது.
“என்னாச்சு.. வாந்தி வருதா!” என்று பதட்டமாகக் கேட்டார் கால்டன்.
“வர மாதிரி இருக்கு. ஆனா வரல்ல!”
“இதுக்கு ஒன்னும் பண்ண முடியாதா?”
“பண்ணலாம். மெடிஸின்ஸ் இருக்கு!”
“அப்ப போட்டுக்கோங்களேன்! எதுக்கு கஷ்டபடனும்?”
“நோ..போட மாட்டேன்”
“ஏன்?”
“வாந்தி எடுக்கறது ஒன்னும் பெரிய கஷ்டமில்ல.”
“எது கஷ்டமில்லையா.. சரியா சாப்பிட முடியல்ல, மெலிஞ்சிட்டிங்க, சோர்ந்து போறீங்க!!”
“பரவாயில்ல..”
“என்ன பிடிவாதம் இது?”
“தேவையில்லாம மெடிஸின்ஸ் வேண்டாம். சமாளிச்சுக்கலாம்.”
“ஒன்னும் சமாளிக்க வேண்டாம். டேக் மெடிஸின்ஸ்”
“முடியாதுன்னு சொல்லிட்டேனே!”
முறைத்தார்.
“3 மாசம் தான் ஆகுது. மெடிஸின்ஸ் போட்டா குழந்தைக்கு பக்க விளைவுகள் வரலாம். அதனால தான் போடமாட்டேன்னு சொல்லறேன். ஒன்னும் கஷ்டமில்ல. கொஞ்ச நாள்-ல நின்னுடும். குழந்தை ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்” என்று சொல்லிவிட்டு தட்டுக்களை எடுத்துக்கொண்டு எழுந்து சமையல் அறைக்குப் போனாள் கயல்.
கால்டன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கயல் குழந்தைக்கு எத்தனை முக்கியத்துவம் தருகிறாளென்றெண்ணி வியந்தார். தாய்மை ஒரு பெண்ணுக்கு எத்தனை சக்திகளைப் பரிசளிக்கிறது என்று ஆச்சரியப்பட்டார். கயல் மீது காதல் பெருக்கெடுத்தது.
திரும்பி வந்த கயல், அலைபேசியை எடுத்து வழக்கம்போல் லீலாவுக்குக் கால் செய்தாள். கால்டன் சமையலறையையும் சாப்பிட்ட இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு வந்தார்.
கயல் தன் தந்தையின் சிகிச்சையில் கண்ணுங்கருத்துமாய் இருப்பதையும், அவளின் ஸின்ஸியாரிட்டியையும், அப்பாவின் மேலிருக்கும் பாசத்தையும் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் இதுவரை கண்டிராத குடும்பப் பிணைப்பல்லவா அது. வித்தியாசமாக வியப்பாக இருந்தது அவருக்கு.
கயல் தன் தந்தைக்காகப் போராட்டமொன்றைத் தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள் என்று புரிந்துகொண்டார். கடைசியாக வழக்கம் போல் சுயநினைவில் இல்லாத தன் தந்தையை வீடியோ காலில் பார்த்துவிட்டு வாடிய முகத்துடனும் கலங்கிய கண்களுடனும் இணைப்பினைத் துண்டித்தாள்.
“எப்படி இருக்காரு!”
“பரவாயில்ல. மெதுவா ரிகவர் ஆகி வராரு.”
“எப்ப சரி ஆகும்!”
“நானும் அதுக்கு தான் காத்துக்கிட்டிருக்கேன். அவர் என்னைப் பாத்து, கூப்பிட்டு, பேசி சிரிக்கிற நாளுக்காகத்தான் நானும் ஏங்கிட்டிருக்கேன்!”
“வேணுமின்னா நேர்ல ஒரு முறை போய் பாத்துட்டு வர்றீங்களா?”
“இந்தியாவுக்கா!!!!!”
“ஆமா!”
“எப்படி.. இந்தியாவுக்கு போகுறது என்ன ஈசியான காரியமா,?”
“என்ன கஷ்டம்? போகனுமின்னா சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்றேன்.”
“…”
“என்னால முடியுமான்னு யோசிக்குறீங்களா?”
“இல்ல இல்ல.. உங்களால ஏற்பாடு பண்ண முடியுமின்னு தெரியும். ஆனா வேண்டாம்.”
“ஏன்?!!”
“அவ்வளவு லாங் டிராவல் செஞ்சா குழந்தைக்கு ரிஸ்க்.”
கயல் இதைச் சொன்னதும் கால்டனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. சிலையாகிப் போனார். கயலின் பக்கத்தில் வந்து நின்றார். அவளின் இரு உள்ளங்கைகளையும் பிடித்தார்.
“சாரி..” என்று சொன்னார்.
அவரின் உள்ளங்கை கதகதப்பாய் இருந்தது. “எதுக்கு சாரி?” என்று அவரின் கைககுக்குள்ளிருந்து தன் கைகளை விடுவித்துக்கொள்ளாமலேயே கேட்டாள் கயல்.
“நீங்க நம்ம குழந்தைக்கு இவளோ முக்கியத்துவம் கொடுக்குறீங்க. இந்த அளவு நேசிக்குறீங்க. இதெல்லாம் புரிஞ்சிக்காம குழந்தை வேண்டாம்மின்னெல்லாம் சொல்லிட்டேன். உங்களுக்கு அது எப்படி கஷ்டமா இருந்திருக்குமின்னு இப்ப புரியுது.” என்று அவள் கண்களோடு உறவாடிக்கொண்டே சொன்னார். அந்த ஹேசல் நிற விழிகள் கலங்கிப்போயின. மீண்டும் சொன்னார், “மன்னிச்சிருங்க..” என்று.
அவளின் வார்த்தைக்களுக்குக் காத்திருக்காமல் “குட் நைட்” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
கால்டனின் பணிவு நிறைந்த குணமும் மன்னிப்புக் கேட்கும் மனமும் கண்டு கயல் நெகிழ்ந்து போனாள். “நம்ம குழந்தை” என்று அவர் சொன்னதை நினைத்துப் பூரித்தாள்.
ஆனால், தான் அவரின் மனைவி இல்லை, காதலி என்றும் அவர் இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை, இப்போதைக்குத் தான் ஒரு வாடகைத் தாய் தான் என்ற எண்ணம் சட்டென்று உதித்தது. அப்பாவுக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன ஆகுமென்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தாள். கால்டனையும் குழந்தையையும் நேசித்துவிடக் கூடாது என்ற முயற்சியில் தோற்றுப்போய் நிற்பதை நன்றாக உணர்ந்தாள். இனி இருவரையும் பிரிவதென்பது இயலாத காரியமாக முன்னால் நிற்கிறதே என்று அங்கலாய்த்தாள். எதை நினைத்து அவள் பயந்தாளோ கடைசியில் அதுவே நிகழ்கிறதே என்று நொந்தாள்.
அலமாரியில் இருந்து தன் அம்மாவின் புடவையை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டே உறங்கியும் போனாள்.
3.24- எவாஞ்சலினைக் கல்யாணம் பண்ணிக்கனும்
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.