3.26- பொழுதுபோக்குறீங்களா?
கயல் அதீத கோபத்தில் இருந்தாள். கால்டன் மீதான கோபம் இல்லை அது, தன் மீதே ஆன கோபம்.
முத்தமிட்டு ஒரு பார்வையும் வீசிவிட்டு மேற்கொண்டு எதுவுமே பேசாமல் கால்டன் தன் அறைக்குள் சென்றுவிட்டார். ஆனால் முத்தம் பெற்ற கயலோ, அங்கேயே நீண்ட நேரம் நின்றிருந்தாள்.
அவளின் அப்பாவும் குழி விழும் இதே இடத்தில் தான் அவளை முத்தமிடுவார். கயலுக்கு அது நியாபகம் வந்தது. தந்தைக்குப் பின் அவள் மேல் இதழ்பதித்தது கால்டன் தான். ஆனால் தந்தையின் முத்தத்துக்கும் தலைவனின் முத்தத்துக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதைக் கயல் உணர்ந்தாள்.
அப்பாவின் முத்தத்தில் பாசமும் ப்ரொடெக்ஷனும் பெருமையும் இருக்கும்; ஆனால் கால்டனின் முத்தத்தில் காதலும் ஆசையும் இருக்கிறது என்பது புரிந்தது அவளுக்கு. அந்த முத்தம் அவளுக்குச் சுகமாகவும், மனக்கவலைகளின் மருந்தாகவும், “நீ நேசிக்கப்படுகிறாய்” என்னும் உணர்வளிப்பதாகவும், பலமாகவும், பிடித்தும் இருந்தது.
உள்ளே சென்று படுக்கையில் விழுந்தாள். அவளுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஏதோ மாயாஜாலம் கண்டது போலிருந்தது. அந்த முத்தம் அவள் உயிரை வருடியது. ஆசை வளர்த்தது. எண்ணங்கள் முழுவதிலும் நிறைந்தார் கால்டன். கயலின் மனதிலுள்ள ‘முன்னிலைப் பட்டியலில்’ ஒரே ஒரு முத்தம் கால்டனைப் பல படிகள் மேலேற்றிவிட்டது. காதல் வினையின் காட்டலிஸ்ட் அல்லவா முத்தங்கள்!
உறக்கம் வரவில்லை அவளுக்கு. நள்ளிரவு தாண்டியதும் கோபம் தலை தூக்கியது. உணர்ச்சிகளிடமிருந்து கட்டுப்பாட்டினைக் கைப்பற்றிக்கொண்டது அறிவு. அப்படியென்றாலே பிரச்சினை தானே!!
“எப்படி என்ன உரிமையில முத்தம் கொடுக்கலாம்?” என்று கோழிமூட்டிவிட்டது கயலின் மூளை.
“காதலிக்கறதா சொன்னாரா? இல்ல.. அப்பறம் என்ன தைரியம்? வீட்டுல கல்யாணம் பேசிக்கிட்டு இருக்காங்க. சரோகேட்டா பணம் கொடுத்து காண்டிராக்ட் போட்டு வீட்டுல வச்சுகிட்டு முத்தம் கொடுக்குறது எத்தனை அயோக்கியத்தனம்! அமெரிக்க புத்தியைக் காட்டுறாரா? என்னை அவளோ சுலபமானவன்னு எடை போட்டிருக்காரா? நான் எப்படி இது நடக்க அலோ பண்ணிணேன்!! எனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. இருக்கட்டும் நாளைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
ஆனாலும் தூங்க முடியவில்லை அவளால். மண்டைக்குள் கால்டன் இருப்பது போலவே தோன்றியது. “இது என்னிக்குமே சரி வராது. அவரை நம்பாத. 2 வருஷம் கழிச்சு டாட்டா காட்டிட்டா என்ன செய்வ? தள்ளியே இரு. அதுதான் உனக்கு நல்லது” என்று அவளது புத்திசாலித்தனம் அவளுக்கு அறிவுரை வழங்கியது. புத்திசாலித்தனத்தை விட காதல் என்னும் அறிவுகெட்டத்தனத்துக்குத்தான் சக்தி அதிகம் என்று புரியாமல் அவளும் மறுநாள் அவரை எச்சரித்து விலக்கி வைத்துவிடுவது என்று தீர்மானம் செய்தாள்.
***
மறுநாள் 3 மணி டூட்டி. அதுவரை கால்டனைப் பார்க்காமல் தவிர்த்து, தன் கோபத்தினை, தீர்மானத்தினை உயிர்ப்புடன் வைத்திருந்தாள். டூட்டிக்குக் காரில் செல்லும் போதும் ஒரு வழியாகக் கோபத்தை மெயின்டேயின் செய்துவிட்டாள். ஒன்றும் பேசவில்லை. கால்டனும் பேச்சுக்கொடுக்கவில்லை. 50 shades of grey படத்தின் “Love me like you do” பாடல் காரை நிரப்பிக்கொண்டிருந்தது.
மருத்துவமனைக்கு அருகில் வழக்கமாக இறக்கிவிடும் இடத்தில் காரை நிறுத்தினார் கால்டன். மழை கொட்டிக்கொண்டிருந்தது.
“9 மணிக்கு பாக்கலாம்..”
“ம்”
“கோவமா இருக்கிங்களா?”
முறைத்தாள்.
“கோவமாத்தான் இருக்கிங்க. ஏன்?”
“…”
“சொல்லுங்க!”
“என்ன தைரியத்துல நேத்து கிஸ் பண்ணினீங்க?”
“பரிசு நல்லா இருந்துது. நன்றி சொன்னேன்.”
“நன்றி வாயால சொன்னா ஆகாதா?”
“எல்லாத்தையும் வார்த்தைகளால புரியவச்சுட முடியாது கயல்!”
“லுக். நான் நீங்க இங்க பாக்குற சில பொண்ணுங்க மாதிரி கிடையாது.”
“தெரியும்! யூ ஆர் யுனீக்!”
“நான் உங்க சரோகேட் தான்-கற விஷயத்தை மறக்காதீங்க. 2 வருஷத்துக்கு அப்பறம் என்னை உங்க வாழ்க்கையிலேருந்து வெளிய அனுப்பப் போறீங்க. அதுவரைக்கும் கன்னியத்தோட தள்ளித்தான் நிக்கனும். திரும்ப இப்படி நடந்துக்கிட்டிங்க அவளோ தான் சொல்லிட்டேன்.” என்று தன்னுடைய அந்தப் பெரிய கண்களில் கோபத்தீப்பொறிகள் பறக்கப் பேசினாள் கயல்.
“அடேங்கப்பா! பயங்கற கோபம் தான் போலையே!” என்று கால்டன் கிண்டலடித்ததும் கோபம் இன்னும் அதிகமானது.
“என்ன உரிமை இருக்கு நமக்குள்ள? காண்டிராக்ட் தான் இருக்கு. நான் உங்க சரோகேட். அவளோ தான். இதைத் தாண்டி நமக்குள்ள என்ன இருக்கு? எப்படி முத்தம் கொடுக்கலாம்? நீங்க என் கூட பொழுதுபோக்குறீங்களா?” என்று கோபத்தில் கண்கள் கலங்க கேட்டாள்.
மறுநொடி தன் சீட் பெல்ட்டினைக் கழட்டிவிட்டுவிட்டு கயலிடம் சாய்ந்து மீண்டும் அதே இடது கன்னத்தில் அதே குழி விழும் இடத்தில் முத்தமிட்டார் கால்டன். இம்முறை ஒன்றல்ல! அழுத்தமாக, சற்றே நீண்ட ஒரு முத்தத்தைத் தொடர்ந்து, குட்டிக்குட்டியாக சத்தமாக நான்கு தொடர் முத்தங்களும் கொடுத்தார். கோபத்திலும் அதிர்ச்சியிலும் கயல் நிலைத்துப்போனாள்.
முத்தமிட்ட கன்னத்தினை மூக்கின் நுனியினால் தடவியவாறே தீவிரப்பட்ட காதலுடன் காதருகே உதடுகள் உரச மெல்லிய குரலில், “நான் உன்கூட பொழுதுபோக்கல்லை கயல்..” என்று சொன்னார்.
கயல் மெதுவாகத் திரும்பி அவரின் கண்களைச் சந்தித்தாள். காதல்வெறி கொண்ட பார்வையை உள்வாங்கியவுடன், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஆனால் கோபமும் குறையவில்லை. கால்டனின் வலது கன்னத்தில் இழுத்து “பளார்..” என்று ஒரு அறை விட்டாள்.
அறை வாங்கிய கன்னத்தைத் தடவிக்கொண்டே புன்னகைத்தார் கால்டன்.
“கோ டு ஹெல்” என்று பல்லைக்கடித்துக்கொண்டு சொல்லிவிட்டுக் குடையை விரித்துக்கொண்டு இறங்கி, காரை முன்புறமாய்ச் சுற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி நடந்தாள். 10 அடி நடந்ததும் கால்டனைத் திரும்பிப் பார்த்து கன்னத்தைத் துடைத்தவாறே முறைத்தாள். அப்போதும் அவர் புன்னகைத்துக்கொண்டுதான் இருந்தார். அந்த ஹேஸல் கண்கள் காதலை வீசிக்கொண்டிருந்தன.
முகத்தைத் திருப்பிக்கொண்டு வேக நடையில் உள்ளே சென்றுவிட்டாள். கால்டனும் புன்னகைத்துக்கொண்டே காரைக் கிளப்பி கம்பெனி சென்றார். தெரெக்கிடம் இரவு 8 மணிக்கு அப்பா அழைத்திருக்கும் விஷயத்தினைச் சொன்னார்.
“எதுக்கு கூப்பிடுறாரு?”
“நோ ஐடியா. நேத்து 6 மணின்னாரு. இப்ப 8 மணின்னு சொல்லியிருக்காரு. நம்மோட ஒரு சைட்டுக்குப் பக்கத்துல தான் அவரு ஷேர் பண்ணியிருக்கற லொக்கேஷனும் இருக்கு. மணி இப்போ 6.30 ஆகுது. சோ நான் இப்ப கிளம்பி நம்ம சைட்டையும் பாத்துட்டு அவரையும் மீட் பண்ணிக்கறேன். அவரும் ஏதோ கட்டுமான சைட்டுக்குத்தான் வர சொல்லிருக்காரு. என்ன சொல்லப்போறாருன்னு பாப்போம். நீ எப்போ கிளம்பற..?”
“நான் 8 மணிக்கு கிளம்புவேன். ரேச்சலை டின்னருக்கு கூப்பிட்டிருக்கேன். அவளும் வரேன்னு சொல்லியிருக்கா. பேசலாமின்னு முயற்சிபண்ணப்போறேன். பட் எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல்ல.”
“என்கிட்ட அட்வைஸ் சொன்னியே.. அதே மாதிரி ஐ லவ் யூன்னு ஆரம்பி. இல்லைன்னா நேரடியா முத்தம் கொடுத்துரு.. என்ன.. அறைவிழும்.. வாங்கிக்கோ.. பட் வர்க் அவுட் ஆகும்!” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
சிறிய சிந்தனைக்குப் பிறகு புரிந்துகொண்ட தெரெக் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தார்.
“கயலை கிஸ் பண்ணி அறை வாங்கினியா?!!!!!!!” என்று கேட்டார். கால்டன் கண்ணடித்துப் புன்னகைத்துவிட்டு வெளியில் செல்லத்துவங்கினார்.
“சொல்லிட்டு போ..” என்று தெரெக் கத்த, விரலால் முடியாது என்று சைகை செய்து புன்னகைத்துவிட்டு வெளியில் தயாராய் இருந்த காரில் ஏறித் தந்தையைச் சந்திக்கப் புறப்பட்டார்.
சீசன் 3 முற்றும்.
4.1 அவசர சிகிச்சையில்
*இனி என்ன ஆகும்?? நல்ல வேகமெடுத்திருக்கும் கால்டன் இனி என்னவெல்லாம் செய்வார் கயலைக் காதலியாக்கிக்கொள்ள?
*கால்டனின் காதலைக் கயல் ஏற்பாளா.. குழப்பிக்கொண்டு சொதப்புவாளா..
*கால்டனின் தந்தை என்ன சொல்லப்போகிறார். மலர்ந்திருக்கும் காதலுக்கு வில்லனாவாரா கெல்லி கூப்பர்?
*கயலின் அப்பாவும் குழந்தையும் என்ன ஆவார்கள்..
சீசன் 4ல் தொடரலாம்..
-வித்யாகுரு
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.